தன் உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் அமெரிக்க அரசின் ஒட்டுக் கேட்பு மற்றும் இணைய கண்காணிப்பு சதித்திட்டத்தை 29 வயது இளைஞர் எட்வர்டு ஜோசப் ஸ்னோடன் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த ஒட்டுக் கேட்பு திட்டத்தில் ஏதோ அமெரிக்க மக்கள் மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள பல நாட்டு மக்களும் சிக்கியிருக்கிறார்கள்.
அமெரிக்காவின் கண்காணிப்பு வலையில் இந்தியா 5-வது இடத்தில் உள்ளது. கார்டியன் பத்திரிகை தகவல் படி ஒரு மாதத்தில் மட்டும் இந்திய மக்களுடைய 6.3 பில்லியன் இணைய தகவல்கள் அமெரிக்க அரசால் சேகரிக்கப்பட்டுள்ளன. தனது நாட்டு மக்களுடைய ஜனநாயக உரிமை இப்படி மலிவாக கொல்லப்படுகிறதே என்ற கவலை கூட இந்திய அரசுக்கு இல்லை. அமெரிக்காவின் இந்த உளவு வேலைகள் பொதுவில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும், விரிவான தகவல்கள் வந்ததும் விசாரிக்கிறோம் எனவும் இந்திய அரசின் வெளிவிவகாரத்துறை தெரிவித்திருக்கிறது. அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலேயே நாட்டின் இறையாண்மையை மலிவாக கொடுத்தவர்கள் மக்களது உரிமை பறிபோவதற்கா குரல் கொடுப்பார்கள்?
ஒருவருடைய செல்பேசி மற்றும் மின்னஞ்சல், கடவுச் சொல், கடன் அட்டை உள்ளிட்ட அனைத்து இணைய பயன்பாடுகளது தகவல்களை சேகரிப்பதால், அல்லது நவீன தொழில்நுட்பங்களின் உதவியுடன் சமூக நடவடிக்கைகளை மேற்கொள்ளும் ஒரு குடிமகனது துல்லியமான டைரிக்குறிப்பை அரசு பதிவு செய்வதால் என்ன பிரச்சினை ஏற்படும்?
அமெரிக்க அரசோ இல்லை இந்திய அரசோ தீவிரவாதிகளது தாக்குதல்களை முறியடிக்க வேண்டுமானால் இத்தகைய கண்காணிப்பு தேவைதானே என்று பலர் இயல்பாகவே நியாயப்படுத்தலாம். ஸ்னோடனின் அம்பலப்படுத்தல் வந்த பிறகு அமெரிக்க மக்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கருத்துக்கணிப்பில் 26% மக்கள் அரசின் கண்காணிப்பை ஆதரித்தும், 59% மக்கள் எதிர்த்தும் தெரிவித்திருக்கின்றனர். மற்றொரு கருத்துக் கணிப்பில் 56% மக்கள் தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் (என் எஸ் ஏவின்) கண்காணிப்பை அங்கீகரித்திருக்கின்றனர்.
இந்தியாவிலும் கூட இத்தகைய கண்காணிப்பு தேவையா என்று கேட்டால் மோடியை ஆதரிக்கும் ‘இந்து’ நடுத்தர வர்க்கம் தேவைதான் என்று சட்டென்று கூறிவிடும். இவர்களைப் பொறுத்தவரை முசுலீம்கள் அனைவரும் கண்காணிக்கப்படவேண்டியவர்கள், தங்களைப் போன்ற பாரத தேசத்தை நேசிக்க கூடியவர்களை கண்காணிப்பதால் எந்த இழப்பும் இல்லை என்று நியாயப்படுத்துவார்கள். இதையே நாட்டின் பாதுகாப்புக்கு இத்தகைய தனிநபர் அந்தரங்கங்களை விட்டுக்கொடுக்கும் தியாகம் தேவை என்று அமெரிக்க அதிபர் ஒபாமாவும் கூறியிருக்கிறார்.
தனி நபரை விட தேசம் பெரிது, தனி நபரது அந்தரங்கம் பறிபோவதை விட தேசத்தின் பாதுகாப்பு காக்கப்பட வேண்டியது எனவும் இதைப் புரிந்து கொள்ளலாம். தங்களுக்கு ஜனநாயகம், மற்றவர்களுக்கு சர்வாதிகாரம் என இந்தியாவிற்கு ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள்தான் தேவை என்றும் இவர்கள் வாதிடுவார்கள். இந்த வாதங்களைப் போல இத்தகைய கண்காணிப்பு ‘தீவிரவாதிகள், பயங்கரவாதிகளை’ மட்டும்தான் குறிவைக்கின்றதா?
தீவிரவாதிகளை பிடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பு தனது தோற்றத்தை நியாயப்படுத்திக் கொள்கிறது. பயங்கரவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்த வகையான, ஏன் ஜனநாயக ரீதியான அரசு எதிர்ப்பு கூட இடம்பெறக்கூடாது என்பதே இந்த கண்காணிப்பின் இறுதி நோக்கம். 21-ம் நூற்றாண்டில் மேற்கு மற்றும் கிழக்கு நாடுகளின் அரசுகள் மென்மேலும் பாசிசமயமாகி வரும் காலத்தில்தான் அமெரிக்காவின் இந்த கண்காணிப்பு அடக்குமுறை அமலுக்கு வந்திருக்கிறது என்பதை சேர்த்துப் பார்க்க வேண்டும்.
மேற்கத்திய நாடுகளுக்கு பயங்கரவாதிகளிடமிருந்து வரும் அச்சுறுத்தலை விட பொருளாதார நெருக்கடி தோற்றுவிக்கும் முதலாளித்துவ எதிர்ப்பு போராட்டங்கள்தான் அபாயகரமாக தோன்றுகின்றன. குண்டு வைக்கும் ஒன்றிரண்டு பயங்கரவாதிகளை பிடித்து அழிப்பது சுலபம். ஆனால் நாடு முழுக்க திரண்டு வரும் மக்கள், முதலாளித்துவ அமைப்பிற்கு எதிராக போர்க்குணமிக்க போராட்டங்களை தொடர்ந்து நடத்தும் போது அரசுகளுக்கு சமாளிப்பது பிரச்சினையாகிறது.
தனிநபர் சுதந்திரம், அந்தரங்க உரிமை என்று மட்டும் இந்தக் கண்காணிப்பை எதிர்க்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள். ஒரு குடிமகனது பாலியல் உரிமைகள் கூட கண்காணிப்படுகிறது என்று செக்ஸ் ஸ்பெசலிஸ்ட்டுகளான சில பின் நவீனத்துவ அறிஞர்கள் கவலைப்படலாம். அநேக ‘ஆண்கள்’ கூட இதை ஒத்துக் கொள்ளலாம். அதாவது ஒருவர் 2,3 பெண்களை காதலிப்பது, போர்னோ படங்களை பார்ப்பது, கள்ள உறவுக்கு முயற்சி செய்வது எல்லாம் அமெரிக்காரன் பார்க்கிறானே, நாளை பின்னே இதை நமது மனைவியிடமோ, குடும்பத்தினரிடமோ போட்டுக் கொடுத்து விட்டால் என்ன ஆவது என்று அவர்கள் கவலைப்படலாம். இவர்களைப் பொறுத்தவரை அந்தரங்க உரிமை பறிபோவது என்பது இதுதான்.
ஆனால் இத்தகைய ‘உரிமை’களை அமெரிக்காவோ, இந்திய அரசோ தடுக்கப் போவதில்லை என்பதோடு உற்சாகப்படுத்தவும் செய்யும். 70களில் வியட்நாம் மீது அமெரிக்கா போர் தொடுத்த போது பண்பாட்டு ரீதியாக வியட்நாம் இளைஞர்களை சீரழிப்பதற்கு நீலப்பட கேசட்டுகள், மஞ்சள் இலக்கியங்களை டன் கணக்கில் இறக்கியது. இதே வேலையை வடகிழக்கு மாநிலங்களில் இந்திய அரசும் செய்திருக்கிறது. போர்னோவின் மெக்காவான அமெரிக்கா ஒரு போதும் இத்தகைய பாலியல் ‘உரிமைகளை’ தடை செய்யாது என்பதோடு அது வளருவதற்கு தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்யும்.
சினிமா, செக்ஸ், மொக்கை போன்ற விசயங்கள் இணையத்தில் அதிகம் செல்வாக்கு செலுத்துவது பொருளாதார ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதாயம். பிறகு எதற்காக கண்காணிக்கிறார்கள்?
ஏற்கனவே சொன்னது போல முதலாளித்துவ அமைப்பின் கட்டமைப்பு நெருக்கடிகள் மேற்கு உள்ளிட்டு உலகம் முழுவதும் மக்களை சொல்லணாத் துயரத்தில் ஆழ்த்தும்போது இயல்பாக வரும் எதிர்ப்புணர்வை காயடிப்பதுதான் அவர்களது நோக்கம். இதற்கு பழைய பாணியிலான சிறை, கைது, தண்டனை போன்ற மரபார்ந்த முறைகளை விட இந்த கண்காணிப்பு சிறந்த முறையில் பலனளிக்கும்.
அரசை எதிர்ப்பவரை சிறையன்றி வேறு எந்த விதத்தில் ஒடுக்க முடியும் என்றொரு கேள்வி உங்களுக்குத் தோன்றலாம். அதற்குப் பதில் உங்களது சமூக பொருளாதார வாழ்க்கையை முடக்குவது என்பதே. அதற்கு தொழில் நுட்பப் புரட்சி வழங்கியிருக்கும் இந்த “பிக் டேட்டா” கண்காணிப்பு முறை எண்ணிறந்த முறையில் உதவி செய்யும்.
சமீபத்திய இலண்டன் கலவரம் குறித்து கேள்விப்பட்டிருப்பீர்கள். அதில் குற்றம் சுமத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கருப்பின இளைஞர்கள் சில பல மாதங்கள் சிறை வாழ்க்கைக்குப் பிறகு வெளியே வந்தாலும் அவர்களுக்கு எங்கேயும், எப்போதும் வேலை கிடைக்காது. வாழ்நாள் முழுக்க வேலையற்ற உதிரிகளாக அல்லது ஊதியம் குறைந்த கடுமுழைப்பு வேலைகள் மட்டும்தான் அவர்கள் செய்ய முடியும். லண்டன் போலிசார் இவர்களைப் பற்றிய அடையாளங்கள் படங்களோடு அனைத்து அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் அனுப்பிய பிறகு முடிந்தது அவர்களது வாழ்க்கை.
சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் ஈழத்தமிழருக்காக மாணவர்களிடம் போராட்டம் பரவிய நேரத்தில் க்யூ பிரிவு போலிசார் அளித்த அறிக்கைய நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அதாவது போராட்டத்தில் முன்னணியாக இருக்கும் மாணவர்களைப் பற்றிய விவரங்களை சேகரித்து அதை போலீஸ் டேட்டா பேசில் பதிவு செய்து பின்னர் எந்தப் போராட்டம் வந்தாலும் அவர்களை பின் தொடர்வது, அவர்களைப் பற்றிய விவரங்களையும் நிறுவனங்களிடம் பகிர்ந்து கொள்வது என்று போலிசார் கூறியிருந்தனர். அதன் பொருள் அந்த மாணவர்கள் தமது அரசியல் உணர்வை துறக்க வேண்டும் அல்லது சொந்த வாழ்க்கை நலன்களை துறக்க வேண்டும்.
ஆகவே ஒருவருக்கு வேலை கிடைக்காமல் செய்து விட்டால் அதை விட என்ன பெரிய தண்டனை இருக்கப் போகிறது? அமெரிக்கா ‘சாதனை’ படைத்திருக்கும் இந்த இணைய, செல்பேசி கண்காணிப்பு அனைவரையும் 24 மணிநேரமும் பின் தொடரும் உளவாளி என்பதால் இது விரைவிலேயே மற்ற நாட்டு அரசுகளாலும் ஏற்கப்பட்டு அமல்படுத்தப்படும் சாத்தியங்கள் நிறையவே இருக்கிறது. அப்படி நடந்தால் எப்படி இருக்கும்?
கோடிக்கணக்கான மக்களது பில்லியன் கணக்கிலான தகவல்களை சேகரித்து பயன்படுத்துவது சாத்தியமா என்று தோன்றலாம். இதெல்லாம் ஆள் போட்டு செய்ய வேண்டிய வேலையில்லை. ஒரு திறமையான மென்பொருள் அரசுக்கும், போலீசுக்கும் தேவையான விவரங்களையும், நபர்களையும் சடுதியில் தந்து விடும்.
ஈழத்தமிழருக்கான மாணவர் போராட்டத்தை ஆதரித்தும், பங்கேற்றும், லைக் செய்தும், ஷேர் செய்தும் முகநூல், டிவிட்டரில் இயங்கியவர்கள் யார், புலிகள், பிரபாகரன், ஈழம், இலங்கை, தனி ஈழம் போன்ற குறிச்சொற்களை யார் அதிகம் பாவிக்கிறார்கள் என்பதை வைத்தும் ஒரு மாணவர் ஈழப் போராட்டத்தில் ஈடுபாட்டுடன் எந்த தரவரிசையில் இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். பிறகு நாளையே ராஜபக்சே போயஸ் தோட்டம் வந்து ஜெயாவுடன் தேநீர் விருந்தில் பங்கேற்கும் போது இந்த மாணவர்களை முன்னெச்செரிக்கையாக கைது செய்வதில் பிரச்சினை இல்லை.
15 வயது முதல் செல்பேசி, இணையம் பயன்படுத்தும் மாணவர் ஒருவர் 25 வயதில் வேலைக்கு போகும் போது இந்த பிக் டேட்டாவின் உதவியுடன் அவர் இந்த 10 ஆண்டுகளில் என்ன செய்தார் என்று கண்டுபிடிக்க முடியும். அவரது அரசியல் ஆர்வம் போராடும் அளவுக்கு இல்லை என்று அந்த விவரங்கள் சொல்லும் பட்சத்தில் அவருக்கு எச்சரிக்கையுடன் வேலை கிடைக்கலாம். இதே போல ஹூண்டாய் தொழிற்சாலையில் வேலைக்கு போகும் ஒரு தொழிலாளி அவர் மாணவராக இருந்த காலத்தில் என்ன செய்தார் என்பதை வைத்து அவரது வர்க்க உணர்வு ஆபத்திற்குரியதா என்று ஹெச் ஆர் கங்காணிகள் முடிவு செய்வார்கள்.
தற்போதே ஐ.டி துறை மனிதவளத்துறை கங்காணிகள் ஒரு ஊழியர் புதிதாகவோ இல்லை வேறு நிறுவனத்திலிருந்து வரும் போது அவர்களுடைய புகைப்படம் மற்றும் பெயரை வைத்து முகநூலில் ஆய்வு செய்கிறார்கள். அலுவலகத்தில் இருந்து இவர்கள் இணையத்தில் என்ன பார்க்கிறார்கள் எனவும் மதிப்பீடு செய்கிறார்கள். பிக் டேட்டா என்பது இதனுடைய முழுமையான தகவல் வங்கி. அதை வைத்து ஒரு தனிநபருடைய ‘ஜாதக’த்தையே எழுத மட்டுமல்ல, தீர்மானிக்கவும் முடியும்.
இணையத்தில் மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஒருவர் தொடர்ந்து கருத்தளவில் ஆதரித்தார் என்பதை வைத்து அவருக்கு கடன் கிடையாது என்று வங்கி மேலாளர்கள் முடிவு செய்யலாம். ஈழ அகதிகளுக்கு ஒருவர் நன்கொடை கொடுத்தார் என்பதை வைத்து அவரது வங்கிக் கணக்கு முடக்கி வைக்கப்படலாம். பையன் கம்யூனிஸ்டு என்பதால் அப்பா ஆர்.எஸ்.எஸ் ஆக இருந்தாலும் அவரது ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்படலாம். மகஇக போராட்டத்தில் கைது செய்யப்பட்டார் என்ற ஒரு காரணத்திற்காகவே ஒருவருக்கு அரசு நலத்திட்டங்கள் மறுக்கப்படலாம்.
நேபாளத்தில் மன்னராட்சியை எதிர்த்து, மாவோயிஸ்டுகள் போராட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக ஒருவரது பாஸ்போர்ட் முடக்கப்படலாம். பாலச்சந்திரன் படத்தை கூகிள் பிளசில் ஷேர் செய்தார் என்பதற்காக ஒரு ஐடி ஊழியரின் ஊதிய உயர்வு நிறுத்தப்படலாம். வினவில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் அனைத்தையும் படித்திருக்கிறார் என்பதற்காக ஒருவரை தனது நாட்டில் நுழைவதற்கு அமெரிக்கா தடை செய்யலாம்.
இப்படி எண்ணிறந்த முறையில் அடக்குமுறைகள் வரும். இவை எதிலும் கைது, சிறை இல்லை என்பதையும் குறிப்பிட்ட நபர்களது சமூக வாழ்க்கையை ஆதரவு இன்றி முடக்க முடியும் என்பதையும் நினைவில் கொள்க.
இது வேகமாக வேகமாக பரவும் பட்சத்தில் அரசியல் உணர்வும், ஈடுபாடும், பங்கேற்பதும் கூட மாபெரும் பயங்கரவாதச் செயல்கள் போல பாவிக்கப்படும். அப்படி ஒரு சூழ்நிலையை நினைத்துப் பாருங்கள்! மாணவர்கள், தொழிலாளிகள், பெண்கள் என அனைத்துப் பிரிவினரும் போராடாமல், அடிமைத்தனத்தோடு மட்டும் வாழவேண்டும் என்றால் அந்த உலகம் எவ்வளவு கொடூரமாக இருக்கும்?
ஏகாதிபத்தியங்கள் தொழில்நுட்ப புரட்சியின் உதவியினால் உருவாக்கியிருக்கும் இந்த பிக் டேட்டா கண்காணிப்பு இப்படி சிறையில்லாமலே ஒருவரை சிறையில் அடைப்பது போன்ற வாய்ப்புகளை வழங்குகிறது. நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்க வேண்டும் என்ற எண்ணமே தோன்றி விடாமல் குடிமக்களை முடக்கி விடுவதுதான் இத்தகைய கண்காணிப்புகளின் நோக்கமும் கூட.
ஆக ஒரு மனிதனின் தனிநபர் – அந்தரங்க உரிமைகளில் அரசியல் உரிமையே தலையாயதும், முதன்மையானதும் ஆகும். அந்த உரிமையை தடை செய்வதற்காக நமது சமூக பொருளாதார உரிமைகளில் கை வைப்பதற்கு இந்த கண்காணிப்பு பயன்படுகிறது. ஒரு மனிதனின் பொருளாதார வாழ்வை முடக்குவதாக மிரட்டினால் எத்தனை பெரியவரும் சடுதியில் சோர்ந்து சரணடைந்து விடுவார்கள். இதுவே ஒரு சமூகத்தின் யதார்த்தமாக மாறும் போது வரலாற்றின் பக்கங்களில் புதையுண்டிருக்கும் அடிமைகளது வாழ்க்கை மீண்டு வரும். மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் மெஷின்கள் உலகைக் கட்டுப்படுத்துவது போல இங்கு ஏகாதிபத்தியங்களும், முதலாளிகளும் கட்டுப்படுத்துவார்கள்.
ஆகவே இந்த கண்காணிப்பு சதித்திட்டத்தை நாம் எண்ணிறந்த முறையில் எதிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உலக அளவில் வளர்ந்து இணைய, செல்பேசி நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவிலும், தொழில் நுட்ப முறையில் இந்தக் கண்காணிப்பு முறைகளை தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பரவலாக்கும் முறைகளிலும் வளர வேண்டும்.
(ஒரு அரசு தனது சொந்த குடிமக்களை கண்காணிக்காமல் ஆள முடியாதா என்று ஒரு தோழர் கேட்டிருந்தார். அதற்கான பதிலை அடுத்த பதிவில் வெளியிடுகிறோம்.)
do you know anything about “great firewall of China”? Internet is monitored and censored in China in a greater level than in US. But you never write anything critical of Chinese censorship and monitoring of Internet but shout at America. unakku vantha retham, Americakaranukku vantha thakkali chutney?
China monitoring Chinese citizens only, but America monitors rest of the world people.
அப்படியா!!!
அமெரிக்கா பல வருடங்கலாக இதை செய்து வருகிறது. இதனை யாரும் தடுக்க முடியாது என்பதே உண்மை. இன்னும் சொல்ல போனால், உஙகளோட இந்த இணையப் பக்கம். என் இந்த மறுமொழி அனைத்தையும் படித்து புரிந்து கொள்ளும் திறன் அவர்களிடம் உள்ளது.
//
ஆகவே இந்த கண்காணிப்பு சதித்திட்டத்தை நாம் எண்ணிறந்த முறையில் எதிர்க்க வேண்டும். இந்த விழிப்புணர்வு உலக அளவில் வளர்ந்து இணைய, செல்பேசி நிறுவனங்களுக்கும், அரசுகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அளவிலும், தொழில் நுட்ப முறையில் இந்தக் கண்காணிப்பு முறைகளை தகர்க்கும் அறிவியல் கண்டுபிடிப்புகளை பரவலாக்கும் முறைகளிலும் வளர வேண்டும்.
//
இதனை தடுக்கநினைப்பது சும்ம ஆகாத காரியம் எனப்படுகிறது. இப்பொ வெளியெ வந்துள்ள விவரம் எல்லாம் சீக்கிரமெ அடங்கிபோயிடும் என்பதே உண்மை. 🙂
சோசலிச அரசுகள் அவர்களிடமிருந்த கண்காணிப்பு தொழில்நுட்பங்களைக் கொண்டு அன்று செய்தார்கள்.இன்று முதலாளித்துவ நாடுகள் அதே போல் வேறு விதமாகச் செய்கின்றன.
எதிர்க்கப்பட வேண்டியது கண்காணிக்கும் அரசமைப்பு.இதில் சோசலிசம்,முதலாளித்துவ வேறுபாடு இல்லை.சோசலிச அரசுகளில் ஸ்னோடன்கள் விசாரணையின்றி கொல்லப்பட்டிருப்பார்கள் அல்லது போலி விசாரணையில் மரண தண்டனை அல்லது ஆயுள் கடுங்காவல் தண்டனை வழங்கப்படிருப்பார்கள்
மாவோவின் சீனம்,ஸ்டாலினின் ரஷ்யாவில் இதெல்லாம் நடக்கவில்லையா.அதெல்லாம் தவறு என்பதை என்றாவது நீங்கள் ஒப்புகொண்டிருக்கிறீர்களா.
மக்களின் நடவடிக்கைகள் எப்படி கண்காணிக்கப்பட்டன? சும்மா ஏதாவது சொல்லிக் கொண்டிருக்கக் கூடாது. சோவியத் ரஷ்யா குறித்து அப்போது நிலவிய பெருவாரியான தப்பெண்ணங்கள் அறியாமையின் அடிப்படையிலானது. மேற்குலகம் திறந்த மனதுடன் சோவியத்தை அணுக முயற்சிக்கவில்லை. பெர்ட்ரான்ட் ரஸ்ஸல் ரஷ்யாவை காண விரும்பி சென்ற போது அவருக்கு மிகுந்த வரவேற்பு கொடுத்து தோழர்கள் அழைத்து சென்றதை குறிப்பிட்டுள்ளார். அன்னா லூயி ஸ்ட்ராங் ஒரு ஐரோப்பிய பத்திரிக்கையாளர். அவர் சோவியத் ரஷ்யாவுக்கு சென்ற போது தனது அனுபவத்தை தாம் பணிபுரிந்த பத்திரிகையில் எழுத முற்பட்ட போது, பத்திரிகை ஆசிரியர் தடுத்துள்ளார்.
ஸ்டாலினை மிக அணுக்கமாக தெரிந்த அன்னா லூயி, ஒரு சாதாரண பத்திரிகை சந்திப்புக்கு கூட முன்னரே தோழர்களுடன் உரையாடிய பின்னரே கருத்துக்களை சொல்வார், என்கிறார். ஸ்டாலின் மேற்குலகத்திற்கு தான் அன்னியமாகியிருந்தரே தவிர சோவியத் மக்களுடன் அல்ல; அவர் இருபது கோடி மக்களுடன் உறவாடியபடியே இருந்துள்ளார், என்கிறார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தங்களை தற்காத்துக் கொள்ள மேம்பட்ட வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
Stalin from Heaven
நம்பாளை இன்னுமா ஊர் நம்புது?
//நம்பாளை இன்னுமா ஊர் நம்புது?//
நிகழ்கால நிகழ்வையே(gujaraath) மறுத்து நம்பும்போது கடந்தகால நிகழ்வை நம்புவது ஒன்றும் சுவராஸ்யமானதல்ல.
சோவியத் யூனியன் குறித்து, தோழர் ஸ்டாலின் குறித்தும் பத்திரிக்கையாளர் அன்னா லூயி ஸ்டாரங்க் எழுதிய ஸ்டாலின் சகாப்தம் நூலில் இருந்து:
**********************
கடந்த காலத்தைத் திரும்பிப் பார்க்கும் போது மக்கள் அதனை “ஸ்டாலின் சகாப்தம்” என்று சொல்லக் கூடும். கோடிக்கணக்கான மக்கள் உலகத்தின் முதல் சோசலிச நாட்டை நிர்மாணித்தார்கள். ஆனால் அந்த வேலைக்குப் பொறியாளராக இருந்தவர் அவர்தான். விவசாய நாடாகிய ருஷ்யா இதைச் செய்ய முடியும் என்ற சிந்தனையை முதன் முதல் ஒலித்தவர் அவர்தான். அது முதற் கொண்டே அனைத்தின் மீதும் – எல்லா நன்மைகள் மீதும் எல்லாத் தீமைகள் மீதும் அவரது முத்திரை பதிந்தது.
அந்த சகாப்தத்தைத் தொகுத்துச் சொல்லும் நேர வந்து விடவில்லை. ஆயினும் அந்த முயற்சியை செய்து பார்க்கத்தான் வேண்டும். ஏனென்றால் அது குறித்து சர்ச்சை கிளம்பியுள்ளது. உலகெங்கிலும் பலருடைய நம்பிக்கைகள் சிதைந்து கொண்டிருக்கின்றன. முதன் முதலாக சோசலிசம் நிர்மாணிக்கப்பட்ட காலத்தில் ஆயிரக்கணாக்கான கொடிய அநீதிகளும், கடுமையான அடக்கு முறைகளும் நேரிட்டன என்று குருஷ்சேவ் வெளிப்படுத்தியுள்ள செய்திகளால் நல்ல நெஞ்சங்கள் கலக்கமடைந்துள்ளன. அவர்கள் கேட்கிறார்கள்; இது அவசியம்தானா? எப்போதுமே அதுதான் சோசலிசத்திற்கான பாதையா? அல்லது ஒரு நபரின் மதிதானா இது?
ருஷ்யர்கள் இப்படி கேட்பதில்லை என்று நினைக்கிறேன். மனிதகுல முன்னேற்றம் அனைத்தும் அதிக விலை கொடுத்து வாங்கப்படுவதுதான்; போரில் வீரர்கள் இறப்பது மட்டுமல்ல, அநியாய மனிதச் சாவுகளும் அதற்கு விலையாகின்றன என்பது அவர்களுக்கு ( ருஷ்யர்களுக்கு) தெரியும்.
ஸ்டாலின் தலைமையில் சோசலிசத்தைக் கட்டிக் கொண்டிருந்தபோது அனுபவித்த தீமைகள் முழுவதும் – அவை நேரிட்டது அவசியத்தாலென்றாலும், பிழையாலென்றாலும், குற்றத்தாலென்றாலும் – தலையீட்டுப் போர்களில் மேற்கத்திய உலகத்தின் முரட்டுப் பிடிவாதத்தாலும், இட்லர் படையெடுப்பாலும் தாங்கள் அனுபவித்த தீமைகளைவிட மிகக் குறைவே, “இரண்டாவது போர் முனையைத்” துவக்குவதாக அளித்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அமெரிக்கா செய்த தாமதத்தினால் தாங்கள் அனுபவித்த தீமைகளைவிடவும் கூட மிகக் குறைவே என்பதும் அவர்களுக்குத் தெரியும்.
எனது மேலையுலக நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வேன்; வரலாற்றின் மாபெரும் செயலூக்கமிக்க சகாப்தங்களில் ஒன்றாக அது திகழ்ந்ததுல் ஒருக்கால் அவற்றிலேயே ஆகச் சிறந்ததாய் அது இருக்ககூடும். ருஷ்யாவின் வாழ்க்கையை மட்டுமல்ல, உலகத்தின் வாழ்க்கையே அது மாற்றியது. அதனைப் படைத்தவர்களில் யாரையும் அது மாற்றாமல் விடவில்லை. கோடானு கோடி வீரர்களையும், சில சைத்தான்களையும் அது பிரசிவித்தது. சிறிவர்கள் இப்போது அதனைத் திரும்பிப் பார்த்து, அதன் குற்றங்களுக்குப் பட்டியல் தயாரிக்கலாம். ஆனால் போராட்டத்தினூடே வாழ்ந்தவர்கள் – அதனால் இறந்த பலரும் கூட- நடந்து கொண்டிருந்த கட்டுமானப் பணிக்கான செலவின் ஒரு பகுதியாகக் கருதித் தீமையை ஏற்றுக் கொண்டனர்.
இட்லரை எதிர்த்து நிற்க முடியாமல் பிரான்ஸ் நாட்டுப் படை பதினோரே நாட்களில் மண் கவ்வியதே ஆயிரமாண்டுகள் நீடிக்கக்கூடிய புதிய இருண்ட காலம் வந்து விடுமென்று ஐரோப்பா அஞ்சிக் கொண்டிருந்ததே, அந்த 1940-ஆம் வருட ஐரோப்பாவை மறப்போமா ? அடிமை இனங்களுக்கெல்லாம் தாங்களே ஆண்டை இனமென்று முரசு கொட்டியவர்கள் மனித குலம் முழுவதன் மீதும் நடத்திய கொடுந்தாக்குதலையும், ஸ்டாலின் கிராடின் ஆண்களும் பென்களும் இந்தத் தாக்குதலை முறியடித்த விதத்தையும் மறப்போமா? அவர்கள் அசுர வேகத்தில் நிர்மாணித்தார்கள், நிறைய விரயங்களோடு நிர்மாணித்தாரகள்; ஆனால் அவர்கள் நிர்மாணித்த வலிமைதான் உலகமே சுருண்டு கொண்டிருந்த போது நிமிர்ந்து நின்றது. இதற்காக உலகம் இன்று அவர்களுக்குக் கடனாளியாகி விட்டது.
இதற்காக மட்டுமல்ல, ஸ்டாலின் சகாப்தம் உலகத்தின் முதல் சோசலிச நாட்டையும், இட்லரைத் தடுத்து நிறுத்திய வலிமையையும் நிர்மாணித்தது மட்டுமல்ல. மனித குலத்தில் மூன்றிலொரு பங்கான சோசலிச நாடுகள் உருவாக்கி அனைத்துக்குமான பொருளாதார அடித்தளத்தை நிர்மாணித்தது.
அந்த சகாப்தத்தின் தீமைகளுக்குப் பல காரணங்களுண்டு. ருஷ்யாவின் கடந்த காலப் பழக்கங்கள், விரோதமான சுற்றி வளைப்பின் நெருக்குதல், இட்லரின் ஐந்தாம் படை போன்ற ஒரு காரணங்களுண்டு. முதற்பெரும் காரணம் என்னவென்றால் , மேலையுலகின் ஜனநாயகத் தன்மையுள்ள, தொழில் நுட்பத்தில் வளர்ச்சி பெற்ற தொழிலாளி வர்க்கம் சோசலிசத்தை முதன் முதலில் கட்டுகின்ற பணியை எழுத்தறிவற்ற, தொழில் நுட்பத்தில் பிற்பட்ட ஒரு விவசாய மக்கள் சமூகத்திடம் விட்டுவிட்டது என்பதே; இப்பணிக்குத் தாங்கள் தயாராயில்லை என்பது அம்மக்களுக்குத் தெரிந்திருந்தது; ஆயினும் அவர்கள் அதனைச் செய்து முடித்தனர்.
அன்னா லூயி ஸ்ட்ராங்
**********
நூலின் பெயர்: “ஸ்டாலின் சகாப்தம்”
..
அன்னா லூயி ஸ்ட்ராங்
.
தமிழில் தியாகு.
வெளியீடு
சென்னை புக்ஸ்
************
நூல் குறித்து புத்தகப்பிரியன் தளத்தில் வந்த பதிவு:
http://puthagapiriyan.blogspot.in/2007/08/blog-post_4583.html
அசோக்,
ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்துமே பொய்யாக கட்டியமைக்கப்பட்டவை என்கிறீர்களா?
பசுமைவேட்டை – மாவோஸ்ட்டுகளை ஒழித்தல் என்ற பெயரில் அரசு பழங்குடி மக்களை அப்புறப்படுத்துவது கொலை செய்து வருவது போல பயங்கரவாதிகளை கண்காணிக்கிறோம் என்ற பெயரில் உலகமய கொள்கைக்கு எதிராக போராடும் மக்களை ஆரம்பத்திலேயே களையெக்கும் என்பதையும் அதனை எப்படி அரசு மேற்கொள்ளும் என்பதையும் கட்டுரை மிகத்தெளிவாக, எளிமையாக படம் பிடித்து காட்டுகிறது.
போராடும் உலகத்தில் விரைவில் நாம் நுழையப்போகிறோம் எனப்தை அறிய முடிகிறது.
20 ஆம் நூற்றாண்டில் அடித்து சாகாமல் தப்பித்த ஏகாதிபத்தியம் 21ஆம் நூற்றாண்டில் உழைக்கும் மக்களால் சாகடிக்கபடுவது நிச்சியம்.
A man with ‘no job’ means he can become a criminal easily. Mao people can approach that man before he become criminal and use him for a ‘genuine’ purpose.
உலகத்திற்கு சமாதானத்தையும் ஐனநாயகத்தையும் போதிக்கிற அமெரிக்காவும் பிற ஏகாதிபத்தியங்களும் இளம் சோசலிச சோவியத் ஒன்றியத்தை ஒழித்துக் கட்ட என்னென்ன அக்கிரமங்களிலும் அருவருக்கத்தக்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டன என்பதை அடுக்கடுக்காக அம்ப்லப்படுத்திக் காட்டுகிறது, கிடைத்தற்கரிய இச்சிறிய நூல்.
நூலின் பெயர்: மாபெரும் சதி
ஆசிரியர்:
மைக்கேல் சேயர்ஸ்
ஆல்பர்ட் இ.கான்
வெளியீடு: புதிய ஜனநாயகம்
இந்நூல் குறித்த சிறிய அறிமுகம் இந்த இணைப்பில் உள்ளது.
http://puthagapiriyan.blogspot.in/2007/03/blog-post.html
//கணினிகளைக் கண்காணிப்பதற்கென சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நச்சு நிரல்களையும் உளவுபார்க்கும் நிரல்களையும் அரசுகளே தயாரித்து விநியோகித்திருப்பதற்கான சான்றுகள் பல இன்று கிடைக்கின்றன. அமெரிக்காவின் FBI நிறுவனம் கணினிகளைக் கண்காணிப்பதற்காக Magic Lantern எனும் உளவுபார்க்கும் நிரலினை தயாரித்துப் பயன்படுத்தியமை இதற்கு நல்லதொரு எடுத்துக்காட்டாகும்.
இதுதவிர கணினியின் வேறு மென்பொருட்களும் இயங்குதளங்களும் கூட பயனர் பற்றிய தகவல்களை அவர் அறியாமலே வேறொரு நிறுவனத்துக்கோ தனி நபருக்கோ அனுப்பக்கூடியவண்ணம் உருவாக்கப்பட முடியும். //
http://circlelk.blogspot.com/2013/02/blog-post_10.html
இந்தியாவிலும் கூட இத்தகைய கண்காணிப்பு தேவையா என்று கேட்டால் மோடியை ஆதரிக்கும் ‘இந்து’ நடுத்தர வர்க்கம் தேவைதான் என்று சட்டென்று கூறிவிடும்” –> நடுத்தர வர்க்கம் Thaan Indiavai India vaga Vaithirukkum Sakthi da loosu Paiyalae Idiot.
“மோடியை ஆதரிக்கும் இந்து நடுத்தர வர்க்கம்”
என்றுதான் கொடுக்கப்பட்டுள்ளது.பொதுவாக நடுத்தரவர்க்கம் என்றல்ல. கட்டுரையை நன்றாக படியுங்கள்