அஸ்கர் அலி எஞ்சினியர்
அஸ்கர் அலி எஞ்சினியர் : துயரம் நிறைந்த இழப்பு.

அஸ்கர் அலி எஞ்சினியர் : இந்து – முஸ்லீம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

1980-களில் தீவிரம் பெற்ற பார்ப்பன இந்து மதவெறியையும் அதற்கு எதிர்வினையாக வலுப்பெற்ற இசுலாமிய மதவெறியையும் எதிர்த்துப் போராடிய அறிவுத் துறையினரில் எஞ்சினியர் மிகவும் முக்கியமானவர். இந்து மதவெறியை மட்டுமின்றி, இசுலாமிய மதவெறி, கடுங்கோட்பாட்டுவாதத்தை எதிர்ப்பதற்கும் அவரது எழுத்துகள் பெரிதும் பயன்பட்டன.

ஷியா இசுலாமின் ஒரு உட்பிரிவான தாவூதி போஹ்ரா சமூகத்தில் பிறந்தவர் அஸ்கர் அலி எஞ்சினியர். சையத்னா என்ற தலைமை மதகுருவின் சர்வாதிகாரத்திற்கு பெயர் போனது இந்த உட்பிரிவு. சையத்னா மொகியுத்தீன் என்ற தலைமை மதகுருவை வணங்க மறுத்து, தன் இளம் வயதிலேயே கலகத்தைத் தொடங்கியவர் அஸ்கர். 70-களில் சையத்னாவின் சர்வாதிகாரத்தை அம்பலப்படுத்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டில் ஒரு கட்டுரை எழுதியதைத் தொடர்ந்து இவர் சமூக நீக்கம் செய்யப்பட்டு, சொந்த தாயைக் கூடப் பார்க்க முடியாமல் தடுக்கப்பட்டார். ஆறு முறை அஸ்கரின் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தினர் சையத்னாவின் கூலிப்படையினர். அவருடைய வீடும் அலுவலகமும் சூறையாடப்பட்டு தரை மட்டமாக்கப்பட்டது. ஆனால், அஸ்கர் அலி எஞ்சினியர் இறுதிவரை பணியவில்லை..

அஸ்கர் இறை நம்பிக்கையாளர். நாத்திகக் கோட்பாடு என்ற காரணத்தினால் மார்க்சியத்தை ஒதுக்கியதாகவும், பின்னர் மார்க்சியம் தன்னை வென்றெடுத்துவிட்டதாகவும் அவர் சொல்வாரென்று குறிப்பிடுகின்றனர் அவரது நண்பர்கள். “ஒடுக்கப்பட்டோரின் ஏக்கப் பெருமூச்சு, இதயமற்ற உலகத்தின் இதயம்” என்ற கோணத்தில் மதத்தின் பாத்திரத்தை முதன்மைப்படுத்தி மதிப்பிட்ட அஸ்கர், மத நிறுவனங்களின் பிடியிலிருந்து மதத்தை விடுவிக்க வேண்டுமெனக் கருதினார்.

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உருவான இசுலாமை, பிரபுக்குலத்தினர் தம் வர்க்க நலனுக்கேற்ப வளைத்ததையும், பெண்ணுரிமையைப் பறித்ததையும், துணைக்கண்டத்தில் அஷ்ரப், அஜ்லப் என்ற மேல்சாதி – கீழ்சாதி பிரிவினை பேணப்பட்டதையும் அவர் அம்பலப்படுத்துகிறார். காலனியாதிக்க எதிர்ப்பிலும் கூட, ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த ஏழை முசுலீம்களும் உலமாக்களும்தான் முன் நின்றனரேயன்றி, மேட்டுக்குடி முஸ்லிம்கள் அல்ல என்பதையும் தனது ஆய்வுகளில் ஆதாரபூர்வமாக அவர் விளக்குகிறார்.

1980-களில் ஷா பானு வழக்கில், குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி அந்த மூதாட்டிக்கு ஜீவனாம்சம் வழங்கப்பட்டதை எதிர்த்தும், முஸ்லிம் பெண்களின் மணவிலக்கு வழக்குகள் ஷரியத்தின்படி மட்டுமே தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்றும் இசுலாமிய மதவாதிகள் எழுப்பிய கோரிக்கையை எதிர்ப்பதில் அஸ்கர் முன்னணியில் நின்றார். இந்தப் போராட்டம் இந்து மதவெறி சக்திகளை வளர்த்து விடுவதற்குத்தான் உதவும் என்று சாடினார்.

இந்து மதவெறியின் எதிர்விளைவாகத்தான் இசுலாமிய கடுங்கோட்பாட்டுவாதமும், தீவிரவாதமும் வலுப்பெற்றன என்ற போதிலும், சிறுபான்மை மதவெறியை அவர் மென்மையாக அணுகவில்லை. மதவெறியினால் ஏற்படும் பாதிப்புகளை, இந்து-முஸ்லிம் என்ற சட்டகத்திற்கு அப்பாற்பட்டு, உழைக்கும் வர்க்கத்துக்கு ஏற்படும் பாதிப்பு என்ற கோணத்திலேயே அவர் முதன்மையாக அணுகினார்.

“பதிலடி தரவேண்டும் என்று சில முஸ்லிம் இளைஞர்கள் கருதுவது நியாயமாகவே தெரிகிறது” என்று பிவாண்டி கலவரத்தைப் பார்த்த பின்னர் அஸ்கரிடம் தான் கூறியதாகவும், அதை அவர் கடுமையாக மறுத்ததாகவும் நினைவு கூர்கிறார், பத்திரிகையாளர் ஜோதி புன்வானி. 1993-இல் மும்பையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருந்த அச்சுறுத்தும் சூழலில், மும்பையின் குடிசைப் பகுதிகள் முழுவதிலும் அவர் முன்நின்று நடத்திய நல்லிணக்க பேரணியில் அஸ்கர் ஆற்றிய உரைகள் வர்க்க ஒற்றுமையைத்தான் வலியுறுத்துகின்றன.

மதக் கலவரங்கள் தொடர்பான அஸ்கரின் ஆய்வுகள் முன்மாதிரியானவை. ஜபல்பூர் கலவரத்தில் தொடங்கி வட இந்தியாவில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட கலவரங்களை அவர் நுணுக்கமாக ஆய்வு செய்திருக்கிறார். ஒவ்வொரு பிரச்சினையிலும் என்ன விதமான வர்க்க முரண்பாடுகள் அல்லது சமூக பொருளாதாரக் காரணிகள் எப்படி மத முரண்பாடுகளாகத் திரிக்கப்பட்டன என்பதை அவர் நிறுவுகிறார்.

“நாலு பெண்டாட்டி, முஸ்லிம் வாக்கு வங்கி, மதமாற்றம்” என்பன போன்ற இந்துத்துவ சக்திகள் பரப்பிய இசுலாமிய எதிர்ப்பு புனைவுகளுக்கும் அரை உண்மைகளுக்கும் சராசரி இந்துக்கள் எனப்படுவோர் பலியாகியிருந்த சூழலில், அவற்றை முறியடிப்பதற்கு நமக்கு ஆதாரங்கள் தேவைப்பட்டன. அவற்றை அரும்பாடுபட்டுத் திரட்டி நம் கையில் ஆயுதமாக வழங்கியவர்களில் முக்கியமானவர் அஸ்கர்.

இந்தியாவின் வரலாற்றையே இந்து-முஸ்லிம் மோதலின் வரலாறாகத் திரித்துக் காட்டும் சதியை இந்துத்துவ சக்திகள் மிகத் தீவிரமாக அரங்கேற்றி வந்த காலத்தில், ஆதாரபூர்வமாக அவற்றை மறுக்கும் எழுத்துகள் அஸ்கரிடமிருந்து வந்தன. மன்னர்களை அவர்களுடைய வர்க்க நலன்தான் இயக்கியதேயன்றி, மதமல்ல என்பதை அவர் வரலாற்று ஆதாரங்களுடன் நிறுவினார். மத வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு உழைக்கும் வர்க்கத்திடம் நிலவி வந்த ஒற்றுமையின் சான்றாக, சுஃபி மற்றும் வட இந்திய பக்தி இயக்க மரபுகளிடையே காணப்படும் ஒற்றுமையை அவர் வரலாற்றிலிருந்து எடுத்துக் காட்டினார்.

இசுலாமிய சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், எப்போதும் அவர் மதச்சார்பற்றவர்களுடன்தான் இணைந்து நின்றார். இறந்த பின்னரும் முற்போக்காளர்கள் துயிலும் இடுகாட்டில் தன்னைப் புதைக்க வேண்டும் என்றே அவர் விரும்பினார். “கொள்கையைக் கடைப்பிடிப்பதில் பாறை போன்ற உறுதியைக் கொண்டவர்” என்று தனது தந்தையை நினைவு கூர்கிறார் அவரது மகன் இர்பான் எஞ்சினியர்.

எனினும், மதவெறியை எதிர்த்த போராட்டத்திற்கே தனது வாழ்நாளை அர்ப்பணித்த அந்த மனிதர், குஜராத் படுகொலை பற்றிய செய்திகளை மட்டும் கேட்க விரும்பவில்லை என்று கூறுகிறார் அவரது நண்பர் ஜாகிர் ஜன்முகமது. “அதில் அவருக்கு அக்கறையில்லை என்பதல்ல; எல்லா மனிதர்களுமே அடிப்படையில் நல்லவர்கள்தான் என்பது அஸ்கர் கொண்டிருந்த நம்பிக்கை. அவருடைய அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதத்தில் இருந்தன குஜராத்திலிருந்து வந்த செய்திகள்” என்று குறிப்பிடுகிறார் ஜன்முகமது

மனிதர்கள் அடிப்படையில் நல்லவர்கள் என்பன போன்ற அரூபமான நம்பிக்கைகள் தகர்வது தவிர்க்கவியலாததுதான். இருப்பினும், “பழகிய அண்டை வீட்டாரே கொலை செய்வது, வீடு புகுந்து சூறையாடுவது, கடைகளை அபகரித்துக் கொண்டு அகதிகளாகத் துரத்தியடிப்பது, கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து சிசுவைக் கொல்வது” போன்ற குஜராத் இனப்படுகொலையின் கொடூரங்களைக் கேட்டு அஸ்கரின் நல்லெண்ணமிக்க இதயம் நடுங்கியிருக்கக் கூடும்.

தனது ஆதாரமான நம்பிக்கை நழுவியதால் அவரை அழுத்தியிருக்கக் கூடிய துயரத்தின் சுமை, பொருள் முதல்வாதிகளாகிய நம் மீதும் இறங்குகிறது. அவரது மறைவு தோற்றுவிக்கும் துயரத்தைக் காட்டிலும் இது கனமானது.

– சூரியன்
_____________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_____________________________________________________________________