privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காதலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !

தலித் மக்களைக் காயடிக்கும் தலித் முதலாளிகள் திட்டம் !

-

சேகர் குப்தா
சேகர் குப்தா

சேகர் குப்தா என்பவர் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் தலைமை ஆசிரியர். அவர் என்டிடிவி தொலைக்காட்சிக்காக “வாக் த டாக்” (பிரபலங்களுடன் நடந்து கொண்டே பேசும் நிகழ்ச்சி) என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். நாட்டில் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் பெரிய மனிதர்களுடன் பேச்சு கொடுத்து அவர்களுடைய கருத்துக்களை மக்களிடம் திணிப்பதுதான் அவரது பணி.

சுவாமிநாதன் அங்கேஷ்வர் அய்யர் என்று ஒரு பத்தி எழுத்தாளர் இருக்கிறார். பொருளாதாரம் படித்து ‘தேர்ந்த’ அவர் ஒவ்வொரு பத்திக்கும் ஒரு பொருளை எடுத்துக் கொண்டு இருண்டு போன முதலாளித்துவ உலகிற்கு ஒளிவட்டம் போட்டுக் காட்டும் திருப்பணியைச் செய்து வருகிறார்.

ப. சிதம்பரம் என்ற செட்டிநாட்டு கோமான் இருக்கிறார். இந்தியாவையும் இந்திய மக்களையும் எவ்வளவு குறைந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்க முடியும் என்பதை தீர்மானித்து செயல்படுத்துவதற்கு கடந்த 30 ஆண்டுகளாக அல்லும் பகலும் பாடு பாட்டு வருபவர்.

டாடா குழுமம் என்று ஒன்று இருக்கிறது 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிலிருந்து சீனாவுக்கு கஞ்சா வியாபாரம் செய்வதில் ஆரம்பித்து, மகாராணி மில்ஸ் என்று பேரரசி விக்டோரியாவுக்கு விசுவாசமாக துணித் தொழிலில் இறங்கி, அடுத்தடுத்து வந்த ஆட்சியாளர்களுடன் தம்மை இணைத்துக் கொண்டு எஃகு முதல் மென்பொருள் வரை வளர்த்துக் கொண்ட பெருமகன்கள் அவர்கள்.

இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு கோஷ்டி கானம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். “சாதியை ஒழிப்பதில் மார்க்சையும் மாயாவதியையும் விட மார்க்கெட்தான் சிறப்பாக செயல்படுகிறது’. மனுவின் எதிரியாகவும், ஆடம் ஸ்மித்தின் நண்பராகவும் மான்டேக் சிங் அலுவாலியா இருப்பதால் அவர்தான் தலித் மக்களின் உற்ற நண்பன்” என்பது அந்த பாட்டின் பல்லவி.

சுவாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யர்
சுவாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யர்

தலித் இந்தியன் சேம்பர் ஆப் காமர்ஸ் & இண்டஸ்ட்ரி (இந்திய தலித் வர்த்தக, தொழில் கூட்டமைப்பு) என்ற தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு ஒன்றை மிலிந்த் காம்ப்ளே என்பவர் உருவாக்கியிருக்கிறார். சுமார் 3,000 தலித் முதலாளிகள் அதில் உறுப்பினர்களாக இருக்கிறார்களாம். இந்தியாவின் சிறு-குறு-நடுத்தர நிறுவனங்களில் 10 சதவீதம் தலித் முதலாளிகளால் நடத்தப்படுபவையாம். அதாவது சுமார் 1.64 லட்சம் தலித் முதலாளிகள் நாடு முழுவதும் இருக்கிறார்களாம். அவர்களை எல்லாம் திரட்டி தலித் முதலாளிகள் சங்கத்தை வலுப்படுத்துவதும், ரூ 500 கோடி முதலீட்டு நிதியம் மூலமாக தலித் மக்களின் தொழில் முனைவை ஊக்குவிப்பதும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மிலிந்த் காம்ப்ளேவின் திட்டம். இந்த முதலாளிகள் சங்கத்திற்கு ஆலோசகராக இருப்பவர் உத்தர பிரதேசம் அசம்கரைச் சேர்ந்த சந்த்ர பான் பிரசாத் என்ற எழுத்தாளர்.

இந்த நிதியத்துக்கு ப சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் இந்திய சிறு தொழில் வளர்ச்சி வங்கி (SIDBI) ரூ 10 கோடி முதல் முதலீட்டை வழங்கியிருக்கிறது. இன்னும் பொதுத் துறை வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களை இந்த நிதியத்தில் பணம் போடும்படி வலியுறுத்தப் போவதாக ப சிதம்பரம் உறுதி அளித்திருக்கிறார். இந்த நிதியத்தில் முதலீடு செய்யும் முதலாளிகளுக்கு 25% லாபம் கிடைக்கும் என்று உத்தரவாதம் அளிக்கப்படுமாம். இந்த நிதியத்திலிருந்து தலித் மற்றும் பழங்குடி தொழில் முனைவோருக்கு தொழில் நடத்த நிதி வழங்கப்படுமாம்.

ரூ 5.5 லட்சம் கோடி மதிப்புடைய டாடா குழுமத்தின் 21-ம் நூற்றாண்டின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள சைரஸ் மிஸ்திரி சந்தன் & சந்தன் இண்டஸ்ட்ரீஸ் என்ற தொழிற்சாலை தலைக் கவசம் (industrial helmet) உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் 33.3% பங்குகளை வாங்கியிருக்கிறாராம். அந்த நிறுவனத்தின் முதலாளி நந்த் கிஷோர் சந்தன் எஞ்சிய 66.6% பங்குகளை வைத்திருப்பார். முக்கியமான இந்த முதலாளி சந்தன் ஒரு தலித். சந்தன் தொழிற்சாலையிலிருந்து டாடா குழும தொழிற்சாலைகளுக்கு தேவையான தலைக்கவசங்களை வாங்க ஆர்டர் கொடுத்திருக்கிறார்கள். டாடா குழும நிறுவனங்கள் இன்னும் பல தலித் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாக திட்டமிட்டுள்ளன.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி

இந்த நிகழ்வுகள் இந்திய தலித் வரலாற்றில் ஒரு மைல் கல் என்று கொண்டாடுகிறார்கள் ஷேகர் குப்தாவும், ஸ்வாமிநாதன் அங்கலேஷ்வர் அய்யரும். ‘மார்க்சையும், மாயாவதியையும் மார்க்கெட் தோற்கடித்து விட்டது’. ‘அம்பேத்கர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாததை முதலாளித்துவ சந்தை சாதித்து வருகிறது’ என்று பஜனை பாடுகிறார்கள். ‘அமெரிக்காவில் கருப்பின முதலாளித்துவத்தைப் போல இந்தியாவில் தலித் முதலாளித்துவம் தழைக்க வேண்டும்’. ‘கருப்பின மக்கள் அமெரிக்க வால் வீதியில் நுழைந்ததன் மூலம் ஒபாமா அமெரிக்க அதிபர் ஆனது போல, இந்திய தலித் மக்களை தலால் வீதியில் நுழைய வைத்து சமூக அடிமைத்தனங்களிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்று திட்டம் வகுத்துக் கொடுக்கிறார்கள்.

முதலாளிகளின் கூட்டம் தம் பணப்பையோடு ஒரு இடத்துக்கு வந்து பையை திறந்து, கரன்சியை எடுத்து விட ஆரம்பித்தால் அதற்குப் பின்னால் நீண்ட திட்டமிடலும், ஆழமான தயாரிப்பும் இருக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவுக்குள் வர்த்தகர்களாக வந்த ஆங்கிலேய முதலாளிகள், கிட்டத்தட்ட 200 ஆண்டுகள் ஆதிக்கம் செலுத்தினார்கள். 100 ஆண்டுகளுக்கு மேல் நாடு முழுவதையும் தம் நிர்வாகக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். அவர்களது முதலாளித்துவமும் சந்தையும் தீண்டாமையை ஒழித்து தாழ்த்தப்பட்ட மக்களை ஏன் விடுவிக்க முடியவில்லை?

ஆயிரக் கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களை மேற்குத் தொடர்ச்சி மலைகளுக்கும், அஸ்ஸாமுக்கும், இலங்கைக்கும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகவும், தென் ஆப்பிரிக்கா, பிஜி தீவுகளுக்கும் கொத்தடிமைகளாக அழைத்துப் போனதுதான் ஆங்கிலேய முதலாளித்துவத்தின் சாதி ஒழிப்பு சாதனை. கொள்ளை நோய்களுக்கும், அடி உதைகளுக்கும் பலியான தாழ்த்தப்பட்ட மக்களின் எண்ணிக்கைதான் சாதியை ஒழிப்பதில் ஆங்கிலேய முதலாளிகளுக்கு இருந்த ஆர்வத்தை பதிவு செய்து வைத்திருக்கிறது. பழங்குடி மக்களை வேரோடு அழித்து அவர்களது நிலங்களை கைப்பற்றிக் கொண்டதும் காலனிய முதலாளித்துவத்தின் சாதனைதான்.

காலனிய அடிமைத்தனம்
முதலாளித்துவம் உருவாக்கிய காலனிய அடிமைகள்

ஆப்பிரிக்காவிலிருந்து கருப்பு இன மக்களை கடத்திச் சென்று அடிமைகளாக அமெரிக்காவிலும், மேற்கு இந்திய தீவுகளிலும் விற்றதும் ஐரோப்பிய அடிமை வர்த்தக முதலாளிகள்தான். 200 ஆண்டுகளுக்கு மேல் அவர்களை அடிமைகளாக வேலை வாங்கி, சுரண்டி, கொள்ளை லாபம் சம்பாதித்தனர் 19-ம் நூற்றாண்டில் அடிமை முறையை ஒழித்த பிறகு, பல தலைமுறைகளாக சுரண்டப்பட்ட கருப்பின மக்களுக்கு எந்த நிவாரணமும் வழங்காமல், சுமார் 4 கோடி கறுப்பு இன மக்களை சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்களாக வைத்து சுரண்டி வருகின்றனர். இன்று கருப்பு இன முதலாளித்துவம் தளைக்கிறது என்று இந்த பாணபத்திர ஓணாண்டிகள் சொல்லும் அமெரிக்காவில் 25% கருப்பு இன மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவிலும் ஜிம்பாப்வேயிலும் கருப்பின மக்களை அடிமைப்படுத்தி நிறவெறி அரசுகளை ஏற்படுத்தி நிறத்தின் அடிப்படையிலான நவீன சாதியத்தை ஏற்படுத்தியது ‘சமூக நீதி’ போராளிகளான ஐரோப்பிய முதலாளிகள். தற்போதும் இதே ஐரோப்பா, அமெரிக்காவில் கருப்பின மக்கள் ஏழைகளாகத்தான் காலம் தள்ளுகிறார்கள்.

இதுதான் முதலாளித்துவமும் சந்தையும் ஒடுக்கப்பட்ட, அடிமைப்படுத்தப்பட்டு சுரண்டப்பட்ட மக்களை விடுவிக்க செய்த சாதனைகள்.

சமூக பொறுப்புணர்வுடன் ஒடுக்கப்பட்ட பிரிவினரின் நிறுவனங்களில் முதலீடு செய்யப் போவதாகச் சொல்லும் இதே முதலாளிகள் அவர்களது நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை முழு மூச்சுடன் எதிர்த்தார்கள். ‘தனியார் நிறுவனங்களில் சாதி பார்க்க முடியாது, எல்லாமே மெரிட்தான்’ என்று சாதித்தார்கள். இப்போதும் தமது நிறுவன ஊழியர்களில் அரசு பதவிகளைப் போல அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 20% தாழ்த்தப்பட்ட, பழங்குடி மக்களுக்கு ஒதுக்குவதை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை இவர்கள்.

தொழிலாளர்களும் உழைப்பாளிகளும் தொழிற்சங்கம் அமைத்து தமது உரிமைகளுக்காக கூட்டாக பேரம் பேசுவதை பயங்கரவாதமாக சித்தரித்து அரசு எந்திரத்தை ஏவி விடுபவர்களும் இதே முதலாளித்துவ ‘சமூக நீதி போராளிகள்தான்’.

ஆனால், தமக்கு லாபம் சம்பாதித்துத் தர, தமது நேரடி ஈடுபாடு இல்லாமல் குறைந்த செலவில் பொருட்களை உற்பத்தி செய்து தர படித்த, நடுத்தர வர்க்க தலித் மக்களை கங்காணிகளாக ஆக்க முயல்கிறார்கள்.

மிலிந்த் காம்ப்ளே
தலித் முதலாளிகள் சங்கமும் மிலிந்த் காம்ப்ளேவும்

தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (தலித் முதலாளிகளின் கூட்டமைப்பு) தலைவர் மிலிந்த் காம்ப்ளே கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ளாராம்.

“மகாராஷ்டிராவில் உங்களது குடும்பப் பெயர் உங்கள் சாதியை காட்டிக் கொடுத்து விடுகிறது. என் பெயரைப் பாருங்கள் : மிலிந்த் காம்ப்ளே. காம்ப்ளே என்பது அனைவருக்கும் தெரிந்த தலித் குடும்பப் பெயர். நான் ஈடுபட்டுள்ள கட்டுமானத் துறையில் 80 சதவீதத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் தாழ்த்தப்பட்ட சாதியினர், பழங்குடியினர். அந்த வேலையில் கடும் உழைப்பு தேவைப்படுகிறது. அது எங்களால் மட்டுமே முடியும். அதனால் என்னுடைய தொழிலில் சாதீய பாகுபாடு காரணமாக ஒதுக்கப்படுவது இல்லை”.

இன்னும் டாடா நேனோ காருக்கு உதிரி பாகங்கள் தயாரிக்கும் கமானி டியூப்ஸ் நிறுவன முதலாளி கல்பனா சரோஜ், தொழில் முனைவர், ஹீரோ பைக்குக்கு ஸ்டேண்ட் தயாரிக்கும் காசியாபாத்தைச் சேர்ந்த சுசில் குமார், டாடா இண்டிகோ காருக்கு பாகங்கள் தயாரிக்கும் கோகுல் கெய்க்வாட் என்று தமது உழைப்பையும், நூற்றுக்கணக்கான தொழிலாளர்களின் உழைப்பையும், சிறிதளவு மூலதனத்தையும் பெரு நிறுவனங்களின் சுரண்டலுக்கு வழங்கும் சுமார் 3,000 தலித் முதலாளிகள் தொழில் செய்கின்றனர்.

பெரு நிறுவனங்கள் நேரடியாக முதலீடு செய்யாமல், தொழிலாளர் நலத் திட்டங்களை செயல்படுத்தாமல், மலிவான விலையில் சிறு நிறுவனங்களிடமிருந்து தமக்குத் தேவையான பொருட்களை வாங்க ஏற்பாடு செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் 100 தலித் கோடீஸ்வரர்களை உருவாக்கப் போகிறார்களாம். எல்ஐசி, சிட்பி போன்ற பொதுத் துறை நிறுவனங்களின் முதலீடுகளை தலித் முதலாளிகள் பயன்படுத்துவார்களாம். பிறகு இந்த தலித் முதலாளிகள் டாடா முதலான கார்ப்பரேட்டுகளுடன் வர்த்தகம் புரிந்து கோடிஸ்வரராக மாறுவார்களாம். அதாவது டாடா போன்ற பெரு நிறுவனங்கள் இந்த தலித் முதலாளிகளை வைத்து 1,000 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதன் மூலம் 100 தலித் முதலாளிகளை கோடீஸ்வரர்கள் ஆக்கப் போகிறார்களாம். இதுதான் சமூக நீதி சூத்திரம்.

இப்போது இந்த சூத்திரத்தின் அடிப்படையில் தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் என்ற பெயரில் திடீரென்று பணப்பைகள் திறக்கப்படுவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. முதலாவதாக, பொதுத்துறை நிறுவனங்கள், அரசு துறைகள் தமது தேவைகளில் 4% தாழ்த்தப்பட்ட சாதி/பழங்குடி தொழில் முனைவோர் நடத்தும் நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட வேண்டும் என்று சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரண்டாவதாக, சத்தீஸ்கர், ஒடிசா, ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களின் நிலங்களை கைப்பற்றி, அவர்களை விரட்டி விட்டு, இயற்கை வளங்களை கைப்பற்றுவதில் பன்னாட்டு, இன்னாட்டு பெருமுதலாளிகள் தற்காலிகமாக பின்னடைவு கண்டுள்ளனர். அரசு எந்திரம், சல்வா ஜூடும் போன்ற கூலிப்படை உத்திகள் மக்கள் படையின் முன்பு தோல்வியடைந்து முட்டுச் சந்தில் நிற்கின்றனர்.

எனவே தலித் தொழில் முனைவர்கள் மூலம் தலித் மக்களின் உழைப்பையும், பழங்குடி தொழில் முனைவர்கள் மூலம் இயற்கை வளங்களையும் சுரண்டி லாபம் சம்பாதிக்க திட்டமிடுகின்றனர். தேயிலைத் தோட்டங்களுக்கு கொத்தடிமை உழைப்பாளிகளாக பிடித்துச் சென்ற தலித் மக்களை திரட்டுவதற்கு தலித் கங்காணிகளை பயன்படுத்தியது போல இன்றைய இந்தியாவின் உழைக்கும் மக்களை திரட்டித் தருவதற்கு தலித் தொழில் முனைவோர் என்ற கவர்ச்சியை முன் வைக்கின்றனர். கங்காணிகளுக்கு முன்பணம் கொடுக்க நிதி அளித்தது போல, கோடிக்கணக்கான உழைக்கும் தலித்/பழங்குடி மக்களின் உழைப்பையும், பழங்குடி மக்களின் நிலங்களையும் கைப்பற்றி பெருநிறுவனங்கள் லாபம் சம்பாதிப்பதற்கான டிரோஜன் குதிரைதான் இந்த தலித் தொழில் முனைவு நிதியம்.

இப்போது புரிகிறதா சோழியன் குடுமி ஏன் ஆடுகிறது என்று?

தலித் சிறுவர்கள்
இந்தியாவின் தலித் மக்களுக்கு முதலாளித்துவம் தருவது நவீன அடிமைத்தனம்.

இதன் மூலம் இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கும், 10 கோடி பழங்குடி மக்களுக்கும் என்ன கிடைக்கும்? 200 ஆண்டுகள் முதலாளித்துவ ஆட்சிக்குப் பிறகு இந்தியாவின் 20 கோடி தலித் மக்களுக்கு சொந்த நிலமில்லை, தலித் குழந்தைகள் ஊட்டச் சத்துக் குறைவால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு மாறாக, ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் உண்மையான மக்கள் விடுதலைக்கு மார்க்சியம் சாதித்ததை பார்ப்போம்.

1917 நவம்பர் புரட்சிக்குப் பிந்தைய ரஷ்யாவில் பண்ணை அடிமை முறையை கட்டோடு ஒழித்துக் கட்டியது சோசலிசம். இன்றைய ரஷ்யாவிலும் முன்னாள் சோவியத் குடியரசு நாடுகளிலும் பண்டைக்கால பண்ணையாரின் நிலத்தில் கட்டாய வேலை செய்ய பணிப்பது, பெண் அடிமைத்தனம், மதகுருக்களின் ஆதிக்கம், போன்ற நிலப்பிரபுத்துவ சாதீய கூறுகள் சுவடே இல்லாமல் துடைத்து எறியப்பட்டுள்ளன. அரை நிலப்பிரபுத்துவ நாடாக விளங்கிய சீனாவில் 1949 புரட்சிக்குப் பிந்தைய 30 ஆண்டுகளில் கிராமப்புற ஜமீன்தார்களும், நிலப்பிரபுக்களும் அடக்கப்பட்டு கூலி விவசாயிகளும், அடிமைகளும் நிலவுடமையாளர்கள் ஆக்கப்பட்டார்கள். சோசலிசத்தின் பின்னடைவுக்குப் பிறகு முதலாளித்துவ சந்தைப் பொருளாதாரம் புகுத்தப்பட்ட பிறகும் கூட பிற்போக்கான நிலவுடமை சமூகத்தின் சுவடுகள் துளிர்க்க முடியாமல் அவை துடைத்தொழிக்கப்பட்டுள்ளன.

ஆனால், முதலாளித்துவ பொருளாதாரம் நவீன தீண்டத்தகாதவர்களையும் கொத்தடிமைகளையும் உருவாக்கி நகர்ப்புற சேரிகளிலும், தொழிற்சாலைகளிலும் குவித்துள்ளது.

காரல் மார்க்ஸ்
காரல் மார்க்ஸ்

ஒரு திறமையான இருதய அறுவை சிகிச்சை மருத்துவர் போல சந்தையின் செயல்பாட்டையும், முதலாளித்துவத்தையும் அறுத்து, ஆராய்ந்து அதன் கொடூரங்களை அம்பலப்படுத்தியவர் மார்க்ஸ். நிலப்பிரபுத்துவ சாதீய அடிமைத்தனத்திலிருந்து மக்களை விடுவிக்கும் பாத்திரத்தை முதலாளிகள் இழந்து விட்டார்கள் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலம் நிரூபித்துக் காட்டியவர் லெனின். ஒடுக்கப்படும், சுரண்டப்படும் அனைத்து மக்களின் விடுதலையும் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான அரசில்தான் சாத்தியமாகும் என்பதை அறிவியல் ரீதியாக மார்க்சிய ஆசான்கள் நிருபித்திருக்கின்றனர்.

மார்க்சியம் சாதித்ததை, சாதிக்கவிருப்பதை தனி நபர் லாபத்தின் அடிப்படையிலான, தனி நபர் சொத்துரிமை அடிப்படையிலான முதலாளித்துவம் ஒரு போதும் நெருங்கக் கூட முடியாது என்பதுதான் நிதர்சனம்.

இந்நிலையில் தலித் முதலாளிகள் எனும் இந்த இந்திய அரசு, தரகு முதலாளிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவன அறிவாளிகளின் திட்டம் தாழ்த்தப்பட்ட மக்களைப் பொறுத்தவரை ஒரு துரோகத் திட்டமாகும். நிலமற்ற விவசாயிகளாக கிராமத்திலும், உதிரிப்பாட்டாளிகளாக நகரத்திலும் இருக்கும் தலித் மக்களின் விடுதலை என்பது உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் முழக்கத்திலும், உழைப்பவனுக்கே அதிகாரம் எனும் முழக்கத்திலும் மட்டும்தான் அடைய முடியும்.

இதன்றி முதலாளிகள் போன்ற சுய முன்னேற்றத் திட்டங்கள் சாதியின் பெயரில் தலித் மக்களை மேலும் சுரண்டுவதற்கே பயன்படும். நாட்டில் உள்ள 20 கோடி தலித் மக்களில் 200 பேரை முதலாளிகளாக்கினால் அது தலித்துக்களை விடுதலை செய்ததாக ஆகும் என்பது மோசடியில்லையா? தலித் முதலாளிகள் என்ற சாதிய அடையாளத்தை முன்வைத்து தலித் முதலாளிகளும், அரசும், தரகு முதலாளிகளும் தலித் மக்களைத்தான் மேலும் சுரண்ட இருக்கிறார்கள். இது ஆதிக்க சாதி முதலாளியை விட தலித் முதலாளியை வைத்து சுரண்டுவது சுலபம் என்ற தந்திரமே ஆகும்.

படித்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த தலித் மக்களை இப்படி அரசியல் ரீதியாக காயடிப்பதற்குத்தான் இந்த தலித் முதலாளி திட்டம் பயன்படும். ஏற்கனவே இட ஒதுக்கீடு மற்றும் உரிமைகளால் முன்னுக்கு வந்த தலித் நடுத்தர வர்க்கம் தனது உயர்வை வைத்து கீழே இருக்கும் தலித் மக்களுக்காக அரசியல், சமூக ரீதியாக போராட முன்வருவதில்லை. இவர்கள் தலித்துகளுக்குள் ஒரு மேட்டுக்குடி வர்க்கமாக மாறுகிறார்கள். இவர்களே தலித் கட்சிகளின் தலைமைகளாகவும் இருக்கிறார்கள். சுருக்கமாக ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக தங்களை ஒப்படைத்துக் கொள்கிறார்கள்.

தேஜஸ்வினி திட்டத்தின் மூலம் பழங்குடி பெண்களை போராளிகளாக மாற்றினோம் என்று கதை விட்ட டாடா நிறுவனம் இப்போது தலித்துக்களை விடுவிப்பதற்காக இந்தத் திட்டத்தை ஆதரிக்கிறது. தலித் மக்களும், தலித் விடுதலை பேசுவோரும் இந்த சதிகளை எதிர்க்க வேண்டும். புரட்சிகர அமைப்புகளோடு தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்ள வேண்டும். கீழிருந்து, பார்ப்பனிய நிலவுடமை சமூக அமைப்பிலிருந்து தலித் மக்களை விடுவிப்பதற்க்கான பார்வையையும், நடைமுறையையும் மாக்சிய லெனினிய அமைப்புகள் மட்டுமே கொண்டிருக்கின்றன. மாறாக தலித் அமைப்புகளும், தலித் முதலாளியமும் அத்தகைய விடுதலைப் போராட்டத்திற்கான தடையாக, தீர்வைத் தடுக்கும் சமரச சக்திகளாக, சமயத்தில் ஆளும் வர்க்கங்களின் கேடான நோக்கங்களுக்கும் பயன்படுகின்றன.

_______________________________________________

– பண்பரசு

_______________________________________________