privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு ! வறண்டு போனது குடிநீர் !

-

தடையின்றி பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு!
தவிச்சவாய்க்கு தண்ணீரில்லை திருச்சி மக்களுக்கு!

டந்த சில மாதங்களாக திருச்சியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள், திருச்சி புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் என்பது மிக குறைக்கப்பட்டு மக்கள் குடிப்பதற்க்கும் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்க்கும் தண்ணீரின்றி மிக அல்லல் படுகின்றனர். இன்னொரு புறம் குழாய்களில் வரும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் வருகிறது, அதை வடிகட்டி பயன்படுத்தும் நிலையில் இன்று இருக்கின்றனர்.

DSC07999காவிரியின் மடியில் குடியிருக்கும் திருச்சி மக்கள் சாக்கடை நீரையும், மஞ்சள் நிற தண்ணீரையும் பயன்படுத்தும் அவலத்தைப்  பொறுத்து பொறுத்து பார்த்தும் எந்த தீர்வும் கிடைக்கவில்லை.  உறையூர் 59,60 வது வார்டு கல்லறைமேட்டு தெரு மக்கள் சட்டென்று முடிவெடுத்தனர், வீதியில் திரண்டனர். 2000-க்கு மேற்பட்ட வீடுகள் உள்ள அப்பகுதி மக்கள்  “தண்ணீர் 2 வேளையாவது வந்தால்தான் நெருக்கடி தீரும், தமது கோரிக்கையை கட்சிகாரர்களிடம் சொல்லியும் ஆளும்கட்சி என ஓட்டு வாங்கிய எவனும் வரவில்லை” என மறியலில் குதித்தனர். பகுதி இளைஞர்கள், பெண்கள் முதியவர் என கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் 2 மணி நேரம் சாலையை மறித்தனர், அருகாமை உறையூர் காவல்நிலைய காவலர்கள் அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என பட்டாளமே இறங்கியது, இதைப் பார்த்த ‘அந்தோனியார் தெரு’ மக்கள் தமக்கும் தண்ணீர் நெருக்கடி தீரவேண்டும் என அவர்களும் மறியலில் கலந்து கொண்டனர்.

பீதியுற்ற காவல்துறை “ஓரமா போ, அடிச்சி ஏத்திடுவேன்” என மிரட்ட அங்கு இருந்த பெண்கள் “சிறைக்கு கொண்டு போ, அங்காவது தண்ணி, சோறு கிடைக்கும்” என தைரியமாக பேசினர். போலீசு மக்கள் கோபத்தை கண்டு பின்வாங்கியது, போராட்டத்தை தொடர்ந்து நடத்தினர். போராட்டம் நடக்கும் போதே தண்ணி லாரியும், குழாயில் தண்ணீரும் வந்து சேர்ந்தன. களத்தில் இறங்கி போராடி மக்கள் வெற்றி பெற்றனர்.

“போராடினதால்தான் தண்ணி கிடைச்சது, குழாயிலயும் நல்லா வருது, லாரியிலயும் கொண்டு வந்து ஊத்துறான். மறியல் பண்ணியும் தண்ணி தரலன்னா கலெக்டர் ஆபிசை முற்றுகையிட இருந்தோம், கோரிக்கையை நிறைவேற்றிட்டான். மறுபடியும் எதாவது சிக்கல் பண்ணினா மீண்டும் போராடுவோம்” என கூறிய மக்கள்

“திருச்சி நகரையே சுத்தம் செய்யுறோம், ஆனா எங்க தெரு சாக்கடைய எடுக்க யாரும் வர்றதில்லை, அந்த வேலையச் செய்திட்டு இங்க வந்து மூஞ்சி கையி கழுவ தண்ணி இல்லன்னா என்ன நிலமை ஆகும் சொல்லுங்க” என்றனர்.

இந்த போராட்டச் செய்தி கிடைத்ததும் செம்பட்டு, விமான நிலையம், மாத்தூர், மணப்பாறை, துறையூர் போன்ற பகுதிகளில் பரவலாக தண்ணிருக்காக சாலை மறியல்கள் திடீர் திடீரென  நடந்தன.

காலிக் குடங்களுடன் மறியல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது டெம்போக்களில் கேன் தண்ணீர் தலை நிமிர்ந்து சென்று கொண்டிருக்கிறது, தெருவுக்குள்ளேயே புலம்பிக் கொண்டிருந்தால் இந்தத் தீர்வு கிடைத்திருக்குமா? வெளியே வீதியில் திரண்டவுடன் நாம் கேட்டது நிறைவேறுகிறது, ஆக நாம் பெற வேண்டுயதை கேட்கும் விதத்தில் கேட்டால் கிடைக்கும் என்பதை மக்கள் மிக வேகமாக அனுபவத்தில் உணர்கின்றனர்.

போராடுகிற மக்கள் தான் உரிமையை பெற முடியும் என்பதை உழைக்கும் மக்கள் மீண்டும் நிருபித்துள்ளனர். இந்த தண்ணீர் பற்றாக்குறை, அதன் பின்னால் உள்ள அரசு மற்றும் தண்ணீர் கொள்ளையர்களின் கூட்டுச் சதியை அம்பலப்படுத்தி திருச்சி நகரம் முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

தடையின்றி பெருக்கெடுக்குது டாஸ்மாக் சரக்கு!
தவிச்சவாய்க்கு தண்ணீரில்லை திருச்சி மக்களுக்கு!

தமிழக அரசே!

  • மழைஇல்லை, காவேரி வறண்டு கிடக்கு, கடல் நீரை குடிநீராக்குகிறோம் என ஏய்க்காதே!
  • தண்ணி கம்பெனிகாரனுக்கு வற்றாத நீருற்று அரசு கிணறு மட்டும் வறண்டது எப்படி?
  • உயிரின் ஆதாரமான தண்ணீரை விற்பனைச் சரக்காக மாற்றி, மக்களை வஞ்சிக்காதே!
  • நீர்வளத்தை சுரண்டும் பன்னாட்டு கார் கம்பெனி
  • உள்ளிட்ட நிறுவனங்களை தடைசெய்!
  • தடையற்ற குடிநீரை மக்களுக்கு வழங்கு!

உழைக்கும் மக்களே,

  • தண்ணீர் கொள்ளையர்களை ஒழிக்காமல் நம் தாகம் தீராது! போராட வாரீர்!

என பெண் தோழர்கள் பகலில் நடந்து சென்று நகரம் முழுவதும் இம்முழக்கங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டினர், மக்கள் நின்று ஆதரித்தனர். இதனை தொடர்ந்து மக்கள் மத்தியில் பிரச்சார இயக்கமாக கொண்டு செல்லும் விதமாக தெருமுனைக்கூட்டங்கள், பிரசாரம், ஆர்ப்பாட்டம் போன்ற வடிவங்களில் செயல்பட முடிவு செய்துள்ளோம்.

[படங்களை பெரிதாக பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி : பெண்கள் விடுதலை முன்னணி, திருச்சி.