privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !

ஐரோப்பிய பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !

-

இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் : பகற்கொள்ளைக்குப் பச்சைக்கொடி !

காட் ஒப்பந்தம் உருவான பின்னர், உலக நாடுகளிடையே தடையற்ற வர்த்தகத்தை ஏற்படுத்திடும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதுதான் உலக வர்த்தகக் கழகம். ஏற்கெனவே உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளால் திறந்துவிடப்பட்ட பொருளாதாரத்தின் காரணமாக ஏழை நாடுகளின் உள்நாட்டு சிறுதொழில்களும் விவசாயமும் நசியத் தொடங்கிப் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் கொழுத்த ஆதாயமடைந்தன. இதனால் உலக வர்த்தகக் கழகத்தில் ஏழை நாடுகளுக்கும் வளர்ச்சியடைந்த ஏகாதிபத்திய நாடுகளுக்குமிடையே முரண்பாடுகள் முற்றின.

ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்
இந்திய- ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்காக டெல்லியில் கடந்த பிப்ரவரியில் நடந்த மாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் ஹெர்மன் வான் ரோம்புய் (இடது), ஐரோப்பிய ஒன்றியக் கமிசனின் தலைவர் ஜோஸ் பர்ரோசா (வலது) ஆகியோரை வரவேற்கும் மன்மோகன் சிங்.

மேற்கத்திய ஏகாதிபத்திய நாடுகளில் மானியம் அளித்து உற்பத்தி செய்யப்படும் விவசாய விளைபொருட்கள் சர்வதேச சந்தைக்கு வரும்போது, அவற்றின் விலை ஒப்பீட்டு ரீதியில் குறைவாக இருப்பதால், ஏழை நாடுகளின் பொருட்களுக்கு அதிக விலையின் காரணமாகப் போதுமான சந்தை கிடைக்காத நிலை ஏற்படுகிறது என்றும்; இதனால் தமது நாட்டின் வர்த்தகம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவதாகவும் வாதிடும் ஏழை நாடுகள், மேலைநாடுகள் தமது நாட்டு விவசாயத்துக்கு அளிக்கும் மானியத்தைக் குறைக்க வேண்டுமென்று கோருகின்றன. கடந்த 2001-இல் இதையொட்டியும், வர்த்தகம் தொடர்பான இதர விதிகள் பற்றியும் கத்தார் நாட்டின் தலைநகரான தோஹாவில், உலக நாடுகளுக்கிடையே பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டன. 2005-க்குள் நிறைவடைய வேண்டுமெனத் தீர்மானித்திருந்த போதிலும் இப்பேச்சுவார்த்தைகள் இன்னும் முடிவடையவில்லை. நாடுகளுக்கு இடையிலான பொது உலக வர்த்தக விதிகள் மற்றும் நிபந்தனைகளை உருவாக்கவும் முடியவில்லை.

இதனால், தமது வர்த்தகமும் ஆதிக்கமும் கொள்ளையும் பாதிக்கப்படுவதாலும், ஏற்கெனவே பொருளாதார நெருக்கடிகளில் சிக்கித் தவிப்பதாலும், ஏகாதிபத்திய நாடுகள் ஒரு புதிய தந்திரத்தை மேற்கொள்ளத் தொடங்கின. அதுதான் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம். இது, இரு நாடுகளுக்கிடையிலானதாக அல்லது பன்னாடுகளுக்கிடையிலானதாக இருக்கும். தோஹாவில் தொடங்கிய பேச்சுவார்த்தைகள் முடிவுக்கு வருவதற்கு முன்னரே, கொல்லைப்புறமாக இப்படியொரு ஏற்பாட்டை ஏகாதிபத்தியங்கள் உருவாக்கியுள்ளன. இந்த ஒப்பந்தங்கள் உலக வர்த்தகக் கழகத்தின் விதிகள் மற்றும் நிபந்தனைகளைவிடக் கடுமையாக இருப்பதால் – அதாவது, ஏகாதிபத்திய நாடுகளுக்குக் கூடுதலாகச் சலுகைகள் தரப்படுவதால், இதனை “உலக வர்த்தகக் கழகம் பிளஸ்” என்றும் குறிப்பிடுகின்றனர். தோஹா சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்கான வர்த்தக அமைச்சர்களின் மாநாடுகள் மற்றும் கூட்டங்களில், நாட்டின் நலனுக்காக நிற்பதைப் போலவும், ஏகாதிபத்தியங்களை எதிர்ப்பதாகவும் சவடால் அடிக்கும் இந்திய அமைச்சர்கள், இத்தகைய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை இரகசியமாகப் போட்டுக் கொண்டு நாட்டை மேலும் அடிமையாக்குவதில் குறியாக இருக்கின்றனர்.

இலங்கை, தாய்லாந்து மற்றும் தெற்காசிய நாடுகளுடன் ஏற்கெனவே சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களைப் போட்டுக் கொண்டுள்ள இந்தியா, 2005-இல் முதன் முதலாக சிங்கப்பூருடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டது. 27 ஐரோப்பிய நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடன் தற்போது பிரஸ்செல்ஸ் நகரில் இந்திய- ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இரகசியமாக நடந்து வருகின்றன. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைக்கு வந்துவிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிய நேரடி முதலீடு மற்றும் வர்த்தகத்துக்கான கட்டுப்பாடுகள் அனைத்தையும் நீக்கிவிட்டு முற்றாக ஐரோப்பிய ஒன்றிய கார்ப்பரேட் நிறுனங்களுக்கு நாட்டைத் திறந்துவிடுவதுதான் இந்திய-ஐரோப்பிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் சாரம். இது ஏதோ வழக்கமானதொரு வர்த்தக ஒப்பந்தம் அல்ல; இது, நாட்டின் அரைகுறை இறையாண்மையையும் முற்றாக துடைத்தெறிந்துவிட்டு, கோடானுகோடி மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்து அவர்களை வீதிகளில் வீசியெறியும் ஒரு பேரழிவுக்கான தயாரிப்பு.

மணிப்பூர் பேரணி
இந்திய – ஐரோப்பிய ஒன்றிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி மணிப்பூர் மாநில வர்த்தகர்களும் உழைக்கும் மக்களும் இணைந்து கடந்த பிப்ரவரியில் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி.

ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களை இந்திய முதலீட்டாளர்களைப் போலச் சமமாக நடத்த வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான விதியாகும். அதாவது, இந்திய முதலீட்டாளருக்கு அரசு அளிக்கும் சலுகைகள் அனைத்தும் ஐரோப்பிய கார்ப்பரேட் முதலீட்டாளருக்கும் சமமாக வழங்கப்படும். இந்திய முதலீட்டாளர்கள் விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்கி வீட்டுமனையாக்குவதைப் போல, ஐரோப்பிய கார்ப்பரேட் முதலீட்டு நிறுவனமும் இந்தியாவில் விவசாய நிலங்களை வாங்கலாம், தேவையானதைப் பயிரிட்டு ஏற்றுமதி செய்யலாம் அல்லது வீட்டு மனையாக்கலாம்; அதற்கு எவ்விதத் தடையோ, கட்டுப்பாடுகளோ இருக்கக் கூடாது என்கிறது, இந்த ஒப்பந்தம்.

இதன் விளைவாக, பயிரிடப்படும் நிலங்களை ஐரோப்பிய முதலீட்டாளர்கள் மொத்தமாகக் கைப்பற்றி, அவற்றைத் தமது ஏற்றுமதிக்கும் கொள்ளை லாபம் தரக்கூடிய பணப்பயிர் உற்பத்திக்கானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும். இதனால், இந்தியாவில் உணவு உற்பத்தி நாசமாக்கப்பட்டு, இனி உணவுக்கு ஐரோப்பிய எஜமானர்களின் தயவை எதிர் நோக்கியிருக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்படும்.

ஒரு ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனம் ஒரு ஊரில் விவசாய நிலங்களை கணிசமான அளவுக்கு வாங்கி, அதில் மிகப் பெரிய பண்ணையை நிறுவி அதற்காக ஆழ்குழாய் கிணறுகளை அமைத்து வரைமுறையின்றி நீரை உறிஞ்சி விவசாயம் செய்யலாம். இதனால், அருகிலுள்ள சிறு விவசாயிகளின் பாரம்பரியமான கிணறுகள் வற்றிப்போனால், அந்த விவசாயி அருகிலுள்ள ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனத்தின் அடாவடித்தனத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. அவர் அந்த நிலத்தை அடிமாட்டு விலைக்கு ஐரோப்பிய நிறுவனத்துக்கு விற்று விட்டு, தனது நிலத்திலேயே ஐரோப்பிய பண்ணையின் கூலியாக வேலைக்குச் செல்வதைத் தவிர வேறு வழியில்லாமல் போகும்.

05-eu-4ஐரோப்பிய நாடுகளில் விவசாயம் மற்றும் பால் உற்பத்திக்கு அரசின் மானியம் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு அளிக்கப்படுகிறது. இதனால், ஐரோப்பிய விவசாய மற்றும் பால் பொருட்கள் சர்வதேசச் சந்தையில் ஒப்பீட்டு ரீதியில் விலை மலிவானதாகவும், இந்திய விவசாய மற்றும் பால் பொருட்களின் விலை அதிகமானதாகவும் இருக்கிறது. மேலும், இந்த ஒப்பந்தப்படி இறக்குமதித் தீர்வை 90 சதவீதம் அளவுக்கு 7 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படுவதால், இந்தத் தாராளச் சலுகையின் காரணமாக ஐரோப்பிய கார்ப்பரேட் நிறுவனங்களின் மலிவான விவசாய மற்றும் பால் பொருட்களும், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும். குளிர்பானங்களும் இந்தியாவில் மலை போலக் குவியும். இதனால், மலிவான ஐரோப்பிய உணவுப் பொருட்களின் விலைக்கு உள்நாட்டில் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களை விற்க முடியாமல், உள்நாட்டு விவசாயமும் பால் உற்பத்தியும் நாசமாக்கப்பட்டு, இவற்றில் ஈடுபட்டுள்ள கோடானு கோடி விவசாயிகளும், சிறுவீத உற்பத்தியாளர்களும் ஓட்டாண்டிகளாகிப் போவார்கள்.

இறக்குமதித் தீர்வை பெருமளவில் குறைக்கப்படுவதால், ஐரோப்பிய தானியங்கி வாகன உற்பத்தியாளர்கள் உதிரிப் பாகங்களை இந்தியாவுக்குப் பெருமளவில் ஏற்றுமதி செய்வார்கள். இந்தியாவில் சிறுதொழில் உற்பத்தியாகத் தயாராகும் உதிரிப் பாகங்களை விட, அவை ஒப்பீட்டு ரீதியில் மலிவானதாக இருக்கும் என்பதால், உள்நாட்டு உதிரிப் பாக உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்படும். இதனால் பொருளுற்பத்தித் துறையும், வேலை வாய்ப்பும் நாசமாகும்.

மேலும், இந்திய உற்பத்திப் பொருட்களின் தரத்தை ஏற்காமல் நிராகரிக்க ஐரோப்பிய நாடுகளுக்கு முழு உரிமை உண்டு என்று என்று இந்த ஒப்பந்தத்தில் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஒரு இந்திய நிறுவனம் இந்தியாவில் விளையும் மாம்பழத்தையோ,வாழைப்பழத்தையோ ஏற்றுமதி செய்தால், அது தரமானதல்ல என்று ஐரோப்பிய நாடுகள் நிராகரிக்கலாம். இதை ஏன் என்று இந்தியா கேட்கக் கூடாது. இதுதான் இந்த ஒப்பந்தத்தின் மகிமை.

இந்த ஒப்பந்தப்படி ஐரோப்பிய உயிரித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் தரப்படும். இதன்படி, ஐரோப்பிய நிறுவனங்கள் தனது தானிய விதைகளை இந்திய விவசாயிகளிடம் விற்கலாம். அதற்குரிய ராயல்டியும் பெறலாம். இதன் விளைவாக, இந்திய விவசாயிகள் தங்களது பாரம்பரிய விதைகளைச் சேமித்து வைக்கவோ, பரிமாறிக் கொள்ளவோ முடியாமல் போகும். ஏற்கெனவே பி.டி. பருத்தி விதைகளால் பாரம்பரிய பருத்தி விவசாயம் நாசமாகி, இந்திய விவசாயிகள் பல்லாயிரக் கணக்கில் தற்கொலை செய்து கொண்டுள்ள நிலையில், இப்போது அதே பாதையில் ஐரோப்பிய எஜமானர்களுக்குக் கதவை அகலத் திறந்துவிட்டுள்ளது, ஆளும் கும்பல்.

இவை தவிர, விவசாயப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஏகபோகமாக உள்ள கேர்ஃபோர், டெஸ்கோ போன்ற நிறுவனங்கள் இனி தாராளமாக உள்ளே நுழைய ஏற்பாடாகியுள்ளது. கொள்முதல் செய்வதிலிருந்து விற்பனை வரை அனைத்தையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனங்கள் கொண்டு வந்து விடும் என்பதால், இதன் விளைவாக இலட்சக்கணக்கான சில்லறை வணிகர்கள் வாழ்விழப்பார்கள்.

உலகளாவிய நிதி நெருக்கடியால், உள்நாட்டில் பெற்ற ஆதாயத்தைவிட இந்தியாவில் அதிக ஆதாயத்தை ஐரோப்பிய வங்கிகள் அடைந்துள்ளதால், அவை மேலும் விரிவடையும் வகையிலும், நிதித்துறை சேவை நிறுவனங்களிலும் வங்கித்துறையிலும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தாராளமாக நுழைய இந்த ஒப்பந்தத்தில் ஏற்பாடாகியுள்ளது. ஐரோப்பிய வங்கித்துறையை ஒப்பிடும்போது, இந்திய வங்கித்துறையானது அதைவிட வலுவானதாக உள்ள நிலையில், இந்த ஒப்பந்தப்படி மேலும் தாராளமயமாக்கப்பட்டால், ஒட்டுமொத்த வங்கித்துறையும் சிதைந்து நாசமாக்கப்படும். இது தவிர அந்நிய நேரடி முதலீடுகள், பங்குகள், டிபென்சர்கள், கடன்கள், வட்டிகள், வர்த்தகச் சலுகைகள், அசையும் மற்றும் அசையாச் சோத்துகள் முதலான அனைத்திலும் ஐரோப்பிய நிதி நிறுவனங்கள் தாராளமாக நுழைய அனுமதிக்கப்படுவதால், நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் உலக நிதிமூலதனத்தின் இரும்புப் பிடியில் சிக்கிவிடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த ஒப்பந்தம் பற்றி நாட்டு மக்களிடம் தெரிவிக்காமல், நாடாளுமன்றத்திலோ அல்லது அரசியல் கட்சிகளிடமோ தெரிவிக்காமல், மாநில அரசுகளைக் கலந்தாலோசிக்காமல் அனைத்தையும் திரைமறைவில் இரகசியமாகவே செயல்படுத்தி வருகிறது ஆளும் கும்பல். “சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிரான முன்னணி” என்ற விவசாயிகள் சங்கங்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பானது, இக்கொடிய ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரி நூற்றுக்கணக்கான கடிதங்களை அரசுக்கும் அரசுத்துறை நிறுவனங்களுக்கும் அனுப்பியுள்ளபோதிலும்; இந்த ஒப்பந்தத்தைக் கிழித்தெறியுமாறு அனைத்திந்திய வர்த்தகர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ள போதிலும்; வர்த்தகம் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு இந்த ஒப்பந்தம் பற்றிய தனது பரிசீலனை அறிக்கையை இன்னமும் இறுதியாக்காத போதிலும்; இவற்றையெல்லாம் அலட்சியப்படுத்திவிட்டு ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில்தான் கைக்கூலி மன்மோகன் அரசு குறியாக இருக்கிறது. இந்த ஒப்பந்தம் பற்றி நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோருவதற்கு மேலாக வேறெதையும் செய்யத் திராணியற்ற போலி கம்யூனிஸ்டுகளைத் தவிர, வேறெந்த ஓட்டுக் கட்சியும் இந்த அடிமைச் சாசனத்துக்கு எதிராக வாய் திறக்காமல், கள்ள மவுனம் சாதித்துக் கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே தாராளமய-உலகமயத் தாக்குதலால் நாடு அடிமையாக்கப்பட்டு, நாட்டு மக்கள் மரணப் படுகுழியில் வீழ்த்தப்பட்டுள்ள நிலையில், ‘அந்நிய மூலதனத்தைக் கவர்ந்திழுப்பது; வளர்ச்சியைச் சாதிப்பது’ என்ற பெயரில் இத்துரோக ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டு நாட்டையும் மக்களையும் பேரழிவுக்குள் வேகமாகத் தள்ளிவிடத் துடிக்கிறது, ஆளும் கும்பல். இந்தக் கொடூரத்துக்குப் பெயர்தான் மறுகாலனியாதிக்கம். இதனை முறியடிக்கத் தேவைப்படுவது முன்னிலும் வீரியமிக்க விடுதலைப் போராட்டம்.

– பாலன்
_______________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
_______________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க