privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்வீரப்ப மொய்லி - அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?

வீரப்ப மொய்லி – அமைச்சரா, அம்பானியின் அடியாளா ?

-

குருதாஸ் தாஸ்குப்தா
வலது கம்யூனிஸ்ட் கட்சியின் குருதாஸ் தாஸ்குப்தா (படம் : நன்றி தி ஹிந்து)

“கிருஷ்ணா-கோதாவரி படுகையிலிருந்து இயற்கை எரிவாயு எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தவற விட்டதற்கான அபராதம் 100 கோடி டாலரை (ரூ 5,800 கோடி) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸிடமிருந்து வசூலிப்பதற்கான மத்தியஸ்தர் நடவடிக்கைகளுக்கு பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சர் வீரப்ப மொய்லி வேண்டுமென்றே முட்டுக் கட்டைப் போட்டு வருகிறார்” என்பதை போட்டுடைத்திருக்கிறார் வலது கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் குருதாஸ் தாஸ்குப்தா.

பெட்ரோலிய அமைச்சகம் சென்ற ஆண்டு ஜெய்பால் ரெட்டியின் பொறுப்பிலிருந்து வீரப்ப மொய்லியிடம் ஒப்படைக்கப்பட்ட பிறகு ரிலையன்சின் கிரிமினல் குற்றங்களை கண்டு கொள்ளாமல் விடுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராதத்தை வசூலிக்கவோ, அடுத்தடுத்த ஆண்டுகளில் ஒப்பந்தப்படியான உற்பத்தி இலக்கை நிறைவேற்றாததற்கு புதிய அபராதங்கள் விதிப்பதற்கோ எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

ஹைட்ரோகார்பன்கள் தலைமை இயக்குனரகம் கிருஷ்ணா கோதாவரி படுகையில் ரிலையன்சுக்கு அளிக்கப்பட்டுள்ள டி-6 தொகுப்பின் 86 சதவீதத்தை ஒப்பந்ததாரர் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது. தலைமை தணிகை அலுவலகமும் (சிஏஜி) இதே போன்ற குறிப்புகளை பதிவு செய்திருக்கிறது. ஆனால், அமைச்சர் மொய்லி சிஏஜி பரிந்துரைகளை புறக்கணிப்பதோடு ஹைட்ரோகார்பன்கள் இயக்குனரகத்தின் அறிக்கைக்கு எதிராக செயல்படுகிறார். “அபராதத் தொகையை வசூலிப்பதற்கான மத்தியஸ்த நடவடிக்கைகள் பலனற்றவை என்று குறிப்பு எழுதுமாறு அதிகாரிகள் வற்புறுத்தப்படுகின்றனர். இவை அனைத்தையும் முழுமையாக விசாரித்து உண்மையை கொண்டு வர ஒரு நீதிமன்ற விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கோருகிறார் குருதாஸ் தாஸ்குப்தா.

கிருஷ்ணா-கோதாவரி படுகையிலுள்ள இயற்கை எரிவாயு வயல்களைக் குத்தகைக்கு எடுத்த ரிலையன்ஸ் நிறுவனம், உற்பத்திச் செலவு யூனிட்டுக்கு ரூ 100-ஐ விட குறைவாக ஆகும் நிலையில், 17 ஆண்டுகளுக்கு யூனிட்டுக்கு ரூ 126 விலையில் இயற்கை வாயுவை விற்பதாக ஒத்துக் கொண்டிருந்தது. ஆனால், ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாகவே அப்போது பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த தனது தரகர் முரளி தியோரா மூலம், உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலோடு விலையை ரூ 226 ஆக உயர்த்தி வாங்கியது.

அபராதம்
2011-12க்கான அபராதம் = 100 கோடி டாலர்
2012-13க்கான அபராதம் = 417 கோடி டாலர்
2013-14க்கான அபராதம் = 300 கோடி டாலர்
(படம் : நன்றி – தி ஹிந்து)

அந்த சமயத்தில் 2014-ம் ஆண்டு முடிய எரிவாயுவின் விலையை இதற்கு மேல் உயர்த்தக் கூடாது என நிபந்தனை விதித்து, அரசு ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தது. ஆனாலும், ரிலையன்ஸ் நிறுவனம் கடந்த இரண்டு ஆண்டுகளாக இயற்கை எரிவாயுவின் விலையை ரூ.756/- ஆக உயர்த்த வேண்டுமெனச் சண்டித்தனம் செய்து உற்பத்தியை குறைத்து வருகிறது.

அப்போதைய பெட்ரோலியத் துலை அமைச்சர் ஜெய்பால் ரெட்டி இவ்விலை உயர்வுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டதோடு, ரிலையன்ஸ் நிறுவனம் குத்தகை ஒப்பந்தத்தில் கூறப்பட்ட அளவிற்கு எரிவாயுவை உற்பத்தி செயாமல் குறைந்த அளவிற்கே உற்பத்தி செய்து வருவதால், 2011-12 ஆம் நிதியாண்டில் 100 கோடி அமெரிக்க டாலர்களை அரசிற்கு அபராதமாகச் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார்.

குறிப்பிட்ட அளவு உற்பத்திக்கான முதலீடு செய்யப்பட்டு அந்த அளவு உற்பத்தி நடக்கவில்லை என்றால் செலவை திரும்பப் பெறுவதும் வீதாச்சரப்படி குறைக்கப்பட வேண்டும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் 100 கோடி டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. “அதே கோட்பாட்டின்படி 2012-13 ஆண்டில் ஒத்துக் கொள்ளப்பட்ட அளவை விட உற்பத்தியில் ஒரு நாளைக்கு 5.5 கோடி கன அடி உற்பத்தி குறைவான உற்பத்திக்கு 417 கோடி டாலர் (சுமார் ரூ 24,000 கோடி) அபராதம் விதிக்கப்பட வேண்டும். இப்போதைய உற்பத்தி நிலவரத்தின்படி இந்த ஆண்டிலும் 300 கோடி டாலர் (சுமார் ரூ 17,400 கோடி) அபராதம் விதிக்கப்பட வேண்டும். இவை தொடர்பாக ரிலையன்சுக்கு எந்த நோட்டிசும் அனுப்பப்பட வில்லை என்று குருதாஸ் தாஸ்குப்தா குற்றம் சாட்டுகிறார்.

கிருஷ்ணா கோதாவரி பேசினில் தான் முதலீடு செய்த 550 கோடி டாலர்களை (ரூ 31,900 கோடி) ரிலையன்ஸ் ஏற்கனவே திரும்ப எடுத்து விட்டது. அபராதத்தை வசூலிக்க மறுப்பதன் மூலம் அரசுதான் 100 கோடி டாலர் இழப்பை சந்தித்திருக்கிறது.

தனியார் நிறுவனங்கள்தான் திறமையாக, குறைந்த செலவில் நிறைந்த உற்பத்தியை தரும் என்ற அடிப்படையில் தனியார் மயத்தை அமல்படுத்தி வருகின்றன மத்திய மாநில அரசுகள். ஆனால், இந்தியாவின் தனியார் நிறுவனங்களுக்கெல்லாம் முன்னணியில் இருக்கும் ரிலையன்ஸ் கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை எரிவாயுவை எடுப்பதில் உற்பத்தி இலக்குகளை தொடர்ந்து தவற விடுவதோடு, மேலும் மேலும் செலவுக் கணக்கை அதிகரித்து, விலை அதிகம் வைத்து நாட்டை கொள்ளை அடித்து வருகிறது என்பதுதான் தனியார் மயத்தின் நிகர விளைவு.

இடையில் வீரப்ப மொய்லி போராளி வேடமெல்லாம் போட்டார். அதாவது பெட்ரோலை இறக்குமதி செய்யும் சக்திகள் பெட்ரோலியத்துறை அமைச்சர்களை மிரட்டுகின்றன என்றெல்லாம் கதை விட்டார். இந்தியாவில் எண்ணையை இறக்குமதி செய்வது பொதுத்துறை நிறுவனங்கள்தான். இவை எப்படி அமைச்சரை பயமுறுத்தும்? உண்மையில் ரிலையன்ஸ்சுக்கு ஆதரவாக செயல்படும் வீரப்ப மொய்லி அதை மறைப்பதற்கு நடத்திய நாடகம்தான் இந்த போராளி வேடம்.

ரிலையன்சுக்கு ஆதரவாக வீரப்ப மொய்லி தனிப்பட்ட முறையில் நடந்து கொள்கிறார் என்பது சரியல்ல. காங்கிரஸ் அரசாங்கத்தின் விருப்பத்தின் அடிப்படையில்தான் மொய்லி செயல்படுகிறார். அப்படி யாராவது செயல்பட மறுத்தால் அவர்கள் மாற்றப்படுவார்கள். ஜெய்பால் ரெட்டி விவகாரத்தில் அதுதான் நடந்தது. இந்திய அரசு அம்பானிகளின் கையில்தான் இருக்கிறது என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்?

மேலும் படிக்க