அமெரிக்காவில் 50% அளவிற்கு விரயமாகும் உணவு, திடக்கழிவுக்கு முக்கிய காரணமாகி நிலத்தின் தன்மையை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வருகிறது. இயற்கை வளங்கள் பாதுகாப்பு கவுன்சிலின்படி நான்கு நபர்களை கொண்ட சராசரி அமெரிக்க குடும்பம் வருடத்திற்கு 2,275 டாலர்களை (அதாவது இந்திய மதிப்பில் சுமார் 1,32,000 ரூபாய்கள்) உணவுப் பொருட்களுக்காக செலவழிக்கின்றது.
பிரிட்டனைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு 7 மில்லியன் டன் உணவுப் பொருட்கள் வீடுகளில் இருந்து தூக்கியெறியப்படுகின்றன. சராசரியாக ஒவ்வொரு குடும்பமும் வருடத்திற்கு £480 அதாவது 44,000 ரூபாய் மதிப்புள்ள உணவு பொருட்களை வீணடித்து வீசுகிறது. வாழ்நாள் முழுவதும் அதன் மதிப்பினை கணக்கிட்டால் £15,000- £ 24,000 அதாவது 13 லட்சம் முதல் 22 லட்சம் ரூபாய் மதிப்பிலான உணவு குப்பைத்தொட்டியில் இடப்படுகிறது. இதில் கொடுமை என்னவென்றால் ஒரு பில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங் (சுமார் ரூ 9,000 கோடி) மதிப்பிலான உணவுப் பொருட்கள் பயன்படுத்தும் தேதி முடிவதற்கு முன்னும், சாப்பிடுவதற்கு நல்ல தரத்துடன் இருக்கும் போதே வீசப்படுகின்றன.
இவ்வாறான உணவு விரயத்தை தடுத்து நிறுத்த, நுகர்வு ஊக்கத்திற்காக வழங்கப்படும் ஒன் பிளஸ் ஒன் சலுகைகளை தடை செய்யும் திட்டம் ஒன்றை அமலாக்க பரிசீலித்து வருகிறது ஐரோப்பிய ஒன்றியம். வால்மார்ட் போன்ற பேரங்காடிகள் தங்களது பேக்கேஜ் நிர்ணயத்துக்கு ஏற்றதாகவும், காட்சிப் பொருளாக வைக்க கவர்ச்சியாகவும் தரம், வடிவம், நிறம் மற்றும் அளவு போன்ற ஒப்பனை அளவுகோல் மூலம் சுமார் 30% உணவுப்பொருட்களை நிராகரித்து விரயமாக்குகின்றன.
இத்தகைய ‘உயர்ந்த’ அமெரிக்க, ஐரோப்பிய வாழ்க்கையை நகலெடுப்பதையே மேன்மையாக கருதும் இந்திய மேட்டுக்குடியினர் உணவுப் பொருட்களின் நுகர்வையும் விரயத்தையும் அதிகரித்து வருவதோடு மட்டுமில்லாமல் கழிவுப் பிரச்சினையையும் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கின்றனர். இந்தியாவின் நகர்ப்புறங்களில் வசிக்கும் குடும்பங்கள், ஒரு நபருக்கு தலா 100 கிலோ உணவு பொருட்களை வீணாக்குவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நவீன வாழ்க்கை முறையும், கையிருப்பில் இருக்கும் பொருட்கள் மீது நிலவும் கவனமற்ற போக்கும் தான் இந்த விரயங்களுக்கான அடிப்படை காரணங்கள்
”ஒரு லிட்டர் பால், நார்த்தங்காய் இலைகள் கொண்ட பாக்கெட் ஒன்று, 2-3 எலுமிச்சம் பழங்கள், ஒரு மாங்காய் மற்றும் கொஞ்சம் கத்திரிக்காய்கள்”……….ஏதோ கடையில் வாங்குவதற்கான பொருட்களின் பட்டியல் என்று நினைத்துவிடாதீர்கள். இது புது டில்லியில் உள்ள மயூர் விஹாரில் வசிக்கும் ராதிகா என்ற பெண் பத்திரிகையாளர், திங்களன்று குப்பையில் எறிந்துள்ள பொருட்களின் பட்டியல். இதற்கு முதல் நாள், கெட்டுப்போன குழம்பு, ஒர் பெரிய துண்டு பன்னீர் (பாலாடைக்கட்டி) மற்றும் பாதி ரொட்டிப் பாக்கெட்டை குப்பைத் தொட்டிக்கு சொந்தமாக்கியிருக்கிறார்.
“முதல் நாளன்று இரவு வாங்கி வந்த பாலை ஃபிரிட்ஜில் வைக்க மறந்து விட்டேன். தாய்லாந்து உணவு வகையை சமைப்பதற்காக வாங்கி வந்த நார்த்தங்காய் இலைகளை மீதம் வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. எலுமிச்சையும், கத்திரிக்காயும் பிரிட்ஜில் அடித்தளத்தில் நிறைய நாள் இருந்து வாடிவிட்டன, அதனால் அவற்றை எறியவேண்டியதுதான்” என்று தான் குப்பையில் போட்ட பொருட்களைப் பற்றி விவரிக்கிறார் ராதிகா. இவற்றைத் தாண்டி, சமையல் அறை அலமாரியில் கிலோ கணக்கில் மாவு வகைகள் கெட்டுப் போன நிலையில் வைத்திருப்பதாகவும், ஒர் புட்டிநிறைய ஆலிவ் எண்ணெயும் உள்ளது என்று சர்வ சாதாரணமாக குறிப்பிடுகிறார் ராதிகா.
அவர் வசிக்கும் மயூர் விகார் பகுதியிலிருக்கும் பிற குடும்பங்களும் ஏறத்தாழ இதே அளவிற்கு உணவுகளை குப்பைத் தொட்டிக்கு ஊட்டியுள்ளன. பிளாஸ்டிக் மலைகளுக்கு மத்தியில், பாக்கெட்களில் நூடுல்ஸ்கள், நொறுக்குத் தீனிகள், பெரிய பாக்கெட்களில் வகை வகையான மாவுகள், ஐஸ்கீரிம் டப்புகள், கிலோ கணக்கில் அழுகிப் போன காய்கறிகள், பழங்கள், பழத்தோல்கள், ஒரு பாதி தர்பூஸ் பழம், ஒரு அன்னாசிப் பழம் மற்றும் சப்பாத்திகள் என்று சகல உணவுப் பொருட்களும் கேட்பார் அற்று குப்பைத் தொட்டிகளில் நாறிக் கொண்டிருக்கின்றன.
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம், பல விதங்களில் தள்ளுபடி, 20% எக்ஸ்ட்ரா இலவசம், செய்தித் தாளின் விளம்பரப் பகுதியை வெட்டி எடுத்து வந்து இலவசமாக வாங்கிச் செல்லுங்கள், காலி பாக்கெட்டுகளை சேர்த்து இலவசத்தினை பெற்றிடுங்கள், இத்தனை ரூபாய்க்கு மேல் வாங்கினால் இலவச பரிசுகள், கடன் அட்டையில் வாங்கினால் ரிவார்டு பாயிண்டுகள் மற்றும் கேஷ் பேக், சுற்றுலா பரிசு, கார் பரிசு, பம்பர் பரிசு போன்ற பரிசுகளும், சூதாட்டங்களும் விளம்பரங்களில் வலம் வந்து நுகர்வோரைத் தாக்கி, தேவைக்கு மீறிய நுகர்தலை ஊக்குவிக்கின்றன, இங்கேயே உறுத்தலின்றி அதை வீணாக்கும் பண்பும் துவங்குகின்றது.
“ஆமாம் நானும் அனேகமாக சிறிது கூடுதலாக வாங்கும் பழக்கத்தை பின்பற்றி வருகிறேன். எப்போதாவது வரும் விருந்தினருக்காக பொருட்களை வாங்கி வைக்கிறேன், பின்னர் அதை உபயோகிக்க வழியில்லாமல் வீணாக்கி குப்பைக்கு சொந்தமாக்குகிறேன்” என்று தான் செய்யும் தவறுக்கு பொறுப்பேற்கிறார் ராதிகா.
குர்கானை சேர்ந்த நிக்கில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), ஒரு மக்கள் தொடர்பு அதிகாரி, அவருடைய பெற்றோர்கள் திடீரென வருகை தந்த போது, அவர் இரு நபர்களுக்கு எப்போதும் வாங்கும் காய்கறி மற்றும் மளிகை சாமான்களின் அளவே, நான்கு பேருக்கும் நிறைவாக இருந்தது என்பதை உணர்ந்ததாகவும், இதுவரை அவரும் அவருடைய மனைவியும் சேர்ந்து, ஒன்று அதிகப்படியாக சாப்பிட்டோ, அல்லது அதிகமாக விரயம் செய்ததோ வாழ்ந்திருக்கிறோம் என்பது தனக்கு அப்போதுதான் விளங்கியது என்று கூறுகிறார்.
கணவன், மனைவிக்கு பெரும்பாலும் அவர்களுக்கு சமைக்க வேண்டிய உணவின் அளவு, அவர்கள் மால்களில் வாங்கி வந்து குவித்துள்ள மளிகை மற்றும் உணவு பொருட்களின் அளவு, பயன்பாடு பற்றிய கவனமும், அக்கறையும் இருப்பதே இல்லை.
“வாரத்துக்கு ஒரு நாள் ஷாப்பிங் செய்வோம், பிறகு வார இறுதியில் பிர்ட்ஜை காலி செய்துவிட்டு மீண்டும் அடுத்த வாரத்திற்கு மளிகை, காய்கறி, பழம், இதர உணவுப்பொருட்கள் வாங்கி நிரப்புவோம்” என்கிறார் நிக்கில்.
ரேஷனில் மணிக்கணக்கில் நின்று பொருட்கள் வாங்க வழியில்லாமல் தவிக்கும் மக்கள் இருக்கும் இதே நாட்டில்தான், மால்களிலும், சூப்பர் மார்க்கெட்டிலும், கூடைகள் பிதுங்கும் அளவிற்கு தேவைக்கு அதிகமாக வாங்கும் மேட்டுக்குடியினரும் உள்ளனர்.
ஐ.டி.துறை ஊழியர்களுக்கு, சம்பளத்தில் ஒரு பகுதி கூப்பன்கள் அல்லது கார்டுகளாக தரப்படுகிறது. இவை மூலம் சாதாரண அண்ணாச்சி கடைகளில் ஏதும் வாங்க முடியாது, சூப்பர் மார்க்கேட், மால்கள், உயர் தர ஓட்டல்களுக்கு சென்றால் தான் அவற்றை பயன்படுத்த முடியும். கைக்காசை எண்ணி வைப்பதில் உள்ள ‘சிரமங்களை’ இது ஒரேயடியாக தீர்த்து வைப்பதினால், திட்டமிடாத ‘இம்பல்ஸ் பர்சேஸ்’ (தோன்றியதை தோன்றியவுடன் திடுமென வாங்குவது) அதிகரிக்கின்றது. தானாக பேரங்காடிக்கோ மால்களுக்கோ போகாதவரைக் கூட அங்கு தள்ளி விடுவதன் விளைவாக இலக்கற்ற நுகர்வும் தடையில்லாத கழிவும் என நச்சுச்சூழல் நிலை கொள்கிறது
வெளிநாட்டு உணவு வகைகளை வீட்டில் தயாரிக்க முயல்வது மேட்டுக்குடியினர் மத்தியில் பரவி வருவதால், அவற்றின் தயாரிப்புக்கு பிரத்தியேகமாக தேவைப்படும் ஏகப்பட்ட பொருட்களை வாங்குவதும், பின்னர் அவைகளின் பயன்பாடு இல்லாதபோது அவற்றை வீசியெறிவதும் சர்வ சாதாரணமாக நடக்கின்றன.
ஆலிவ் எண்ணெய் இத்தாலியின் தட்டப வெப்ப சூழலுக்கு அம்மக்களின் வாழ்வுடன் ஒன்றாக கலந்துள்ளது. ஹெல்தியான எண்ணெய் என்று விளம்பரப்படுத்தப்படும் ஒரே காரணத்திற்காக விலை பல மடங்கு அதிகமாகவும், நம் ஊர் உணவில் சேர்க்க முடியாமல், சுவையில் முன்னும் பின்னுமாக இருக்கும் அந்த ஆலிவ் எண்ணெயை வாங்கித் தள்ளுகின்றனர். சில நாட்கள் பொம்மை போல அது சமையற்கட்டில் குடியிருக்கும், பின்னர் தூக்கியெறியப்படும்.
ஆலிவ் எண்ணெயை போல், பிட்சா தயாரிப்புக்கு தேவைப்படும் பொருட்களும், பாஸ்தா, நூடுல்ஸ், சோயா சாஸ், மயொனிஸ் சாஸ், ஆரிகனோ என்ற மசாலா பொருள், நட்டெல்லா என்ற சாக்லேட் ஸ்ப்ரெட் என்று பல தரப்பட்ட உணவு பொருட்களுக்கும் இதுதான் கதி. ‘டயட் உணவு, ஆர்கானிக் உணவு’ என்று முத்திரை குத்தப்பட்டால் உடனே அதன் தேவை அறியாமலேயே வாங்கி வீணாக்குவது தனிக்கதை.
இலக்கற்ற நுகர்வு அதிகமாக அதிகமாக அதை சேமித்து வைக்கும் ஃபிரிட்ஜ்களும் 2 டோர், 3 டோர் என பெரிதாகி தற்போது கோட்ரெஜ் அலமாரி அளவுக்கெல்லாம் பல அடுக்குகளுடன் வாங்கக் கிடைக்கின்றன. இதுபோன்ற ராட்சத அளவிலான பிரிட்ஜூகளையும், பல அறைகள் கொண்ட அதி நவீன மாடுலர் சமையலறைகளையும் நிரப்புவதற்கே வரம்பற்ற நுகர்வு பயன்படுகிறது.
குறைந்த அளவில் உணவுப் பொருட்கள் தேவையிருக்கும் வீடுகளில் இந்நிலையென்றால், அதிக அளவில் தேவைகள் இருக்கும் திருமணங்கள், ஓட்டல்கள் பற்றி கேட்கவேண்டிய அவசியமே இல்லை.
ஆடம்பர வக்கிரங்கள் நிறைந்த இந்தியத் திருமணங்களில் பஃபே முறையில் பல விதமான உணவு வகைகளை விருந்து வைத்து வீணாக்குவது முதல் பிளேட் ரூ 1000 – ரூ 2000 என விற்கும் ஓட்டல்கள் வரை இதுதான் கதி. ஏழை மாநிலமான ஒடிசாவில் வளர்ந்து வரும் நகரமான புவனேஸ்வரில் கூட வருடத்திற்கு 26,000 டன் உணவுப் பொருட்கள் ஓட்டல், உணவு அங்காடிகள், பார்ட்டிகள் மற்றும் கேளிக்கைகளில் வீணாக்கப்படுகின்றன. அதாவது ஒரு நாளுக்கு 70 டன் உணவு பொருட்கள் குப்பையில் கொட்டப்படுகின்றன. இதிலிருந்து ஒவ்வொருவருக்கு குறைந்தபட்சமாக 275 கிராம் என்ற விதத்தில் பாங்காக உணவு வழங்கினாலும் 95,000 மக்களுக்கு உணவளிக்க முடியும். உதாரணமாக மும்பையில் நடந்த ஓரு திருமண பார்ட்டி ஒன்றில் மிதமான உணவுகளை சேகரித்த ஒரு தொண்டு நிறுவனம், அதைக்கொண்டு 70 – 80 பேருக்கு உணவு வழங்கியுள்ளது.
இந்தியாவின் 110 கோடி மக்கள் தொகையில், பெரும்பான்மை மக்கள் ஒரு பொழுது உண்டும், கிட்டத்தட்ட 25% மக்கள் முழுப் பட்டினியின் பிடியில், பரிதவித்து, பசியிலேயே உறங்கி, கண் விழித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். இப்பேற்பட்ட உலகின் பட்டினியின் தலைநகரமான இந்தியாவில்தான் இத்தனை உணவு விரயமும் நடக்கின்றது. மிச்ச மீதியை வீட்டுச் செல்ல பிராணிகளுக்கு கூட போடாமல், அவற்றுக்கு உலக பிராண்ட் உணவு வழங்குவதுதான் ஸ்டேட்டஸ் என்று கருதும் மேட்டுக்குடியினருக்கு வீணாக்குவதைப் பற்றி துளியும் குற்ற உணர்ச்சியில்லை.
அண்ணாச்சிக்கடை போன்ற சில்லறை வணிகத்தில்தான் விரயம் அதிகம், வால்மார்ட் போன்ற பேரங்காடிகள் வந்தால் உணவு விரயம் குறைந்து விடும் என்று பிரச்சாரம் செய்கின்றனர் உலகமய ஆதரவாளர்கள். ஆனால், சூப்பர் மார்க்கெட் சந்தைப்படுத்தலும், கொள்முதலும்தான் பெருமளவு உணவுப் பொருட்களை வீணாக்குகின்றன என்பதும், இந்தியாவின் உணவுப் பொருட்கள் வினியோக மேம்பாட்டுக்கு ஊதாரித்தனத்தை ஊக்குவிக்கும் இந்த லாப கொள்ளையர்கள் எந்த விதத்திலும் பயன்படப் போவதில்லை என்பதும் அமெரிக்க, ஐரோப்பிய உதாரணங்களிலிருந்து தெரிய வருகிறது.
ஆனால், இல்லாதவர்கள் பட்டினியால் சாகட்டும், இருப்பவர்கள் கையில் பொருட்களை குவித்து விரயமாக்குவோம் என்பதுதான் உலக முதலாளித்துவம் உருவாக்கியிருக்கும் நச்சு சூழலின் சாதனை !
____________________________________
– ஜென்னி
_________________________________________
மேலும் படிக்க
I see a new trend in the past few years in Chennai suburban locality.
IT women have stopped cooking. They come around 7-8pm, buy some Biryani (mostly Chicken) for dinner.
If you are a guy and your wife doesn’t cook,please cook for the sake of everyone’s health.
dont fall for this bad food.
இந்தியாவின் 110 கோடி மக்கள் தொகையில், பெரும்பான்மை மக்கள் ஒரு பொழுது உண்டும், கிட்டத்தட்ட 25% மக்கள் முழுப் பட்டினியின் பிடியில், பரிதவித்து, பசியிலேயே உறங்கி, கண் விழித்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்………………..
சும்மா லூசுத்தனமா ஏதாவது எழுதாதே….. பெரும்பான்மைக்கு அர்த்தம் தெரியுமா….இன்னைக்கு தேதியில் பிச்சைக்காரன் கூட இரண்டு வேளை தின்றான்…. கட்டுரை ஆசிரியருக்கு சந்தேகம் இருந்தால் லுங்கியும்,முண்டா பனியனும் போட்டுகிட்டு….எங்கேயாவது சும்மா நின்னா கூட நாலு பேர் ஏதாவது வாங்கி குடுப்பான்… சும்மா எல்லாத்துக்கும் பில்டப் பண்ணி உலக மகா அறிவாளி மாதிரி கிறுக்காம… வேற வேலையப்பாரு…….
அருமை…
நி சும்மா லூசுத்தனமா ஏதாவது எழுதாதே…..
//பெரும்பான்மைக்கு அர்த்தம் தெரியுமா//
இந்தியாவில் பெரும்பான்மை மக்களை பிச்சைக்காரர்களாகத்தான் வைத்திருக்கிறீர்களா?
VISIT this Link:
http://tamil.gizbot.com/camera/kevin-carter-photography-and-death-005456.html
This is a very good essay. If women are given this awareness surely they would reduce wastage of
food