முகப்புஅரசியல்ஊடகம்விகடனை ஏமாற்றிய வீரப்ப மொய்லி !

விகடனை ஏமாற்றிய வீரப்ப மொய்லி !

-

ஜூன் 26 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் “மிரட்டலும் துரோகமும்” என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வந்திருக்கிறது. அதில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மிரட்டல் லாபி குறித்து எழுதியிருக்கிறார்கள்.

மொய்லி
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

அதாவது, “நமது நாட்டுக்குத் தேவையான பெட்ரோலிய வளம் நம்மிடமே நிலத்தடியில் தாராளமாகத் தேங்கிக் கிடக்கிறதாம். ஆனால், அதை முழுமையாக எடுக்க முடியாதபடி அதிகார வட்டாரமும், முகம் தெரியாத ஒரு கூட்டமும் தடை போடுகிறதாம். ‘பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் அந்த முகம் தெரியாத கூட்டம் முட்டுக்கட்டை போடுகிறது’ என்று சொல்கிறாரே தவிர, அந்தக் கூட்டத்தை அடையாளம் காட்ட மறுக்கும் மொய்லி, ‘எனக்கு முன் இருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்களுக்கும் அந்த லாபியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது’ என்று கூடுதல் தகவல் சொல்கிறார். ஆனால், முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் இதே துறையின் அமைச்சராக இருந்த ராம் நாயக், ‘அப்படி எல்லாம் மிரட்டல் எதுவும் வந்தது கிடையாது’ என்று போட்டு உடைத்துவிட்டார்.” என்று எழுதியிருக்கிறது விகடன்.

இறுதியாக, ” ஆள்வோரே… மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள்… மிரட்டலுக்கு அஞ்சுகிற ரகமா நீங்கள்? நீதிமன்றத்திடம் இருந்தும், எதிர்க் கட்சிகளிடம் இருந்தும், நேரடியாகவே மக்களிடம் இருந்தும் இதுவரை கிளம்பிய மிக நியாயமான மிரட்டல்களுக்கு எல்லாம் துளிகூட அசைந்து கொடுக்காத உங்களையா ஒரு லாபி மிரட்டிவிட முடியும்? ஒரு சின்னஞ்சிறு கூட்டத்தின் லாபத்துக்காகத்தான், 120 கோடி மக்கள் தாள முடியாத சுமையில் தடுமாறுகிறார்கள் என்பது உண்மையானால், அதைப் பார்த்துக் கொண்டு அரசாங்கம் சும்மா இருப்பதை விட மாபெரும் துரோகம் வேறென்ன இருந்துவிட முடியும்? ” என்று அறம் பாடி முடித்திருக்கிறது விகடன்.

விகடனின் தலையங்கக் கருத்து என்ன? வீரப்ப மொய்லி தமது துறை அமைச்சர்களை பெட்ரோலை இறக்குமதி செய்யும் லாபி மிரட்டுகிறது என்கிறார். எனில் அது யார் எனச் சொல்வதுதானே என்று கேட்கும் விகடன் அப்படியெல்லாம் உங்களை மிரட்டி விட முடியுமா என்று கேட்கிறது. ஒரு வேளை அந்த மிரட்டல் உண்மையானால் அதை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது மாபெரும் துரோகமில்லையா என்றும் கேட்கிறது.

ஆனந்த விகடன் ஆசிரியர்கள் எவருக்கும் சம கால அரசியல், செய்தி, நிகழ்வு குறித்து எதுவும் தெரியாது போலும். முதலில் வீரப்ப மெய்லியின் இந்த மிரட்டல் செய்தியே ஒரு அப்பட்டமான நாடகமாகும். ஜெய்பால் ரெட்டிக்கு பிறகு அமைச்சரான இந்த புண்ணியவான் அம்பானியின் அடியாளாக பணிபுரிந்து வருகிறார். இந்த அடியாள் வேலைக்காகவே அவர் மன்மோகன்-சோனியா கும்பலால் தெரிவு செய்து கொண்டு வரப்பட்டிருக்கிறார்.

vikatanஇது குறித்து நேற்றும் (அதற்கு முன்பும்) வினவில் ஒரு கட்டுரையை விவரங்களுடன் வெளியிட்டிருந்தோம். அதில் வலது கம்யூனிஸ்டு தலைவர் குருதாஸ் குப்தா குறிப்பாக அளித்திருக்கும் ஆதாரங்கள், விவரங்கள் படி மொய்லி யார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதன்படி இயற்கை எரிவாயுவை எடுக்கும் அடக்கச் செலவை விட பலமடங்கு கட்டணத்தை அரசிடம் ரிலையன்ஸ் கேட்பது, அதற்கு வீரப்ப மொய்லி ஆதரவாக நடந்து கொள்வது, அதிக விலை கிடைக்காத காரணத்தால் உற்பத்தியை முடக்கிய அம்பானிக்கு அரசு போடவேண்டிய அபராதத் தொகையை கட்டவிடாமல் உதவி செய்வது இதெல்லாம்தான் அவர் அம்பானிக்கு அடியாளாக வேலை செய்த சமீபத்திய நடவடிக்கைகள்.

இதையெல்லாம் குருதாஸ் குப்தா ஆதாரங்களுடன் வெளியிட்ட பிறகு வீரப்ப மொய்லியை எல்லோரும் அம்பானியின் தரகர் போல பார்க்கிறார்கள். அந்த இமேஜை திசை திருப்புவதற்கு மொய்லி நடத்தும் டிராமாதான் இந்த மிரட்டல் நாடகம். அதிலும் ஒழுங்காக திரைக்கதை எழுதாததால் நாடகம் செல்ஃப் எடுக்கவில்லை.

வீரப்ப மொய்லி குறித்து தலையங்கம் எழுதினால் அதில் அவர் அம்பானி அடியாளாக இருப்பது குறித்தும், அபராதமாக வரவேண்டிய மக்கள் பணம் 5000 கோடி ரூபாயை அம்பானி ஆட்டையைப் போட்டது குறித்தும் எழுத வேண்டும். அது தொடர்பாகவே வழக்கமான பிளேடாக இருந்தாலும் அறமும் பாடி முடிக்க வேண்டும்.

ஆனால் விகடனோ மொய்லியின் நாடகத்தை உண்மை என நம்பி வீட்டுப் பெரிசு அட்வைசு சொல்லி மொக்கை போடுவது போல எழுதுகிறது.

17 ரூபாய் கொடுத்து விகடனை வாங்கிப் படிக்கும் வாசகர்கள் அனைவரும் முட்டாள்கள் என்று விகடன் முதலாளி கருதுவதால்தான் விகடன் ஆசிரியர்கள் இப்படி ஒரு தலையங்கத்தை எழுதுகிறார்கள். சினிமா துணுக்கு மூட்டையாக பிதுங்கி வழியும் விகடனில் இப்படி அபத்தமாக எழுதப்படும் தலையங்கங்களை ஒரு சடங்காக வைத்திருக்கிறார்கள். இதற்கு நேரடியாக பிள்ளையார் சுழி மட்டும் போட்டு விட்டு தலையங்கத்தை எடுத்து விடலாம்.

எனினும் 17 ரூபாய் கொடுத்து ஏமாறும் அப்பாவிகள் தாம் இப்படி மலிவாக ஏமாற்றப்படுகிறோம் என்பதை யோசிப்பார்களா?

 1. எனக்கென்னமோ,நீர் விடாம் கும்தம் ஆனந்த விகடன், ரிப்போர்ட்டர், ஜுவி……போன்ற பல மொக்கைகளை காசு கொடுத்து விடாமப்படிக்கும் ஒரு விடலையைப்போல் தெரிகிறீர்….

  • பிறகு உம்மைப் போல வினவை மட்டும் படித்துவிட்டு ‘அறிவாளி’யாகிவிட முடியுமா?

   • அதாவது அந்தப் பத்திரிக்கைக்கென்று ஒரு ஆடியன்ஸ் உண்டு…னீர் எதிர்பார்க்குற விசயம் ரிப்போர்ட்டர், ஜுவியில் வரும்….ஆனா ஒன்னு பேச்சு வாக்குல வினவை மட்டும் படிச்ச்சா ‘அறிவாளி’யாகிவிடலாம் என்ச்சொல்லுவது என்ன கொடும வினவு சார்????

 2. தலையங்கத்தை படித்ததில் இந்த மிரட்டல் நாடகத்தை விகடனும் நம்பவில்லை என்பதே எனது புரிதல் (“உங்களையா ஒரு லாபி மிரட்டிவிட முடியும்?”). “நமது நாட்டுக்குத் தேவையான பெட்ரோலிய வளம் நம்மிடமே நிலத்தடியில் தாராளமாகத் தேங்கிக் கிடக்கிறதாம். ஆனால், அதை முழுமையாக எடுக்க முடியாதபடி” போனதற்கு இந்த மிரட்டல் நாடகம் காரணம் அல்ல, வேறு ஊழல் காரணம் உள்ளது என்பதே தலையங்கத்தின் மையப்பொருளாக நான் புரிந்து கொள்கிறேன்.

  அந்த பின்னணி ஊழலின் மூலவர் அம்பானி என்பதை வேறொரு கட்டுரையில் நீங்கள் எழுதியுள்ளீர்கள். இதை நேரடியாக கூற விகடனுக்கு விருப்பமோ, திராணியோ, நேர்மையோ, ஏதோ ஒன்று இல்லை என்பது சரியானதே.

  • //விகடனின் தலையங்கக் கருத்து என்ன? வீரப்ப மொய்லி தமது துறை அமைச்சர்களை பெட்ரோலை இறக்குமதி செய்யும் லாபி மிரட்டுகிறது என்கிறார். எனில் அது யார் எனச் சொல்வதுதானே என்று கேட்கும் விகடன் அப்படியெல்லாம் உங்களை மிரட்டி விட முடியுமா என்று கேட்கிறது. ஒரு வேளை அந்த மிரட்டல் உண்மையானால் அதை அரசு பார்த்துக் கொண்டு சும்மா இருப்பது மாபெரும் துரோகமில்லையா என்றும் கேட்கிறது.//

 3. இந்த main stream ஊடகங்களும் கார்பொரெட் லாபியை சேர்ந்தவர்கள் தானே…

 4. விகடன் வெறும் பொழுதுபொக்கு பத்திரிகை மட்டுமே! பார்ப்பன குடும்ப பத்திரிகைகளிடம் இதற்கு மேல் அரசியல் ஆராய்ச்சி எதிர்பார்க்க முடியாது! அவ்வப்பொது இது போன்று தத்து பித்தென்று எழுதி, தஙகள் எஜமான விசுவாசத்தை காட்டுவார்கள்! மேலங்கியை கழற்றி வீசி ஆர்ப்பாட்டம் பண்ணிய அரைகிறுக்க்ர் ஜெய்ராம் ரமேஷை பாராட்டும் இவர்கள், உண்மையை விண்டுரைத்த மொயிலியை சாடுவதற்கு வெறு என்ன காரணம்? எல்லாதுறையிலும் லாபிக்கள் மூலம் அம்பானிகளும், டாடா வுமே ஆதிக்கம் செலுத்துகின்றனர்! மொயிலி ஒப்புக்கொண்டார்! மற்றவர்கள் ஒப்புகொள்ளவில்லை அதுதான் வித்தியாசம்!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க