‘புரட்சித் தலைவி’ ஆட்சியில் மது விற்பனையில் மட்டுமல்ல சாலை விபத்துக்களிலும் இந்திய அளவிலேயே முதல் இடத்தை பெற்றிருக்கிறது தமிழகம். 2003-ம் ஆண்டில் 51,000 விபத்துக்களைச் சந்தித்த தமிழகம் 2012-ம் ஆண்டில் 68,000 விபத்துக்களை கண்டிருக்கிறது. தேசிய குற்றப்பதிவு நிறுவனம் அளித்திருக்கும் இந்த புள்ளி விவரங்களின் படி கடந்த 10 ஆண்டுகளாக சாலை விபத்துக்களில் தமிழகம் முன்னணியில் இருக்கிறதாம்.
இந்தியாவில் நடக்கும் விபத்துக்களில் 15 சதவீதத்தை தமிழகம் வைத்திருக்கிறது. ஒரு மணிநேரத்திற்கு எட்டு விபத்துக்களை சந்திக்கும் சூழலில் தமிழ்நாடு உள்ளது. கடந்த வருடம் 16,175 மக்கள் இங்கே சாலை விபத்துக்களில் கொல்லப்பட்டுள்ளனர். அதன்படி தினமும் 44 பேர்கள் இறக்கிறார்கள். சென்ற வருடம் தமிழகத்தில் நடந்த 4.4இலட்சம் விபத்துக்களில் 1.4 இலட்சம் விபத்துக்கள் மரணத்தை ஏற்படுத்தும் தீவிர விபத்துக்களாகும்.
இந்த புள்ளிவிவரங்களின் படியே 53 பெருநகரங்களில் அதிகம் விபத்துக்கள் நடக்கும் நகரம் சென்னையாகும். இங்கு 9,663 விபத்துக்களும் அதில் 1,401 மரணத்தை ஏற்படுத்தும் விபத்துக்களாகவும் இருந்தன. புது தில்லியும், பெங்களூருவும் சென்னைக்கு அடுத்த் இடங்களில் இருக்கின்றன.
இப்படி விபத்துக்களில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு என்ன காரணம்?
விவசாயம் அழிக்கப்பட்டு, கிராமப்புறங்கள் சுருங்கி, நகரங்கள் அதிகமாகியும், வளர்ந்தும் வருவது ஒரு காரணம். இதன்படி தமிழகத்தில் வேலை நிமித்தம், பிழைப்பு தேடி தினமும் பயணம் செய்வது அதிகரித்திருக்கிறது. அதிக மக்கள் பயணம் செய்வதற்கேற்ப வாகனங்களின் போக்குவரத்தும் அதிகரிக்கிறது. இதற்கேற்ப சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. இத்தகைய சங்கிலித் தொடர் விளைவுகளால் விபத்துக்கள் அதிகரிக்கின்றன.
அடுத்து இரு சக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் விற்பனையும் அதிகரித்து வருகிறது. பொதுப்போக்குவரத்தை விடுத்து இத்தகைய சொந்த வண்டிகள் மூலம் சென்று வருவதை ஆட்சியாளர்களும், முதலாளிகளும் விரும்புகிறார்கள். நகரங்களில் அதிகம் வண்டிகள் இருப்பதும், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதும், அதனாலேயே விரைவாக போக வேண்டிய நிர்ப்பந்தம் எல்லாம் சேர்ந்து விபத்துக்களை தோற்றுவிக்கின்றன.
அங்கிங்கெனாதபடி இருக்கும் டாஸ்மார்க் கடைகள் ஒரு முக்கிய காரணம், வேலைக்குச் செல்லும் ஆண்களில் கணிசமானோர் அன்றாடம் மது குடிப்பதும், குடித்து விட்டு வண்டிகள் ஓட்டுவதும் இங்கே சாதாரணமாக இருக்கிறது. விபத்துக்களில் மது குடித்து ஓட்டுவது கணிசமாக பங்கைக் கொண்டிருக்கிறது.
இதன்றி தண்ணிர் தனியார் மயத்தினால் தண்ணீர் வண்டிகள், ஐ.டி நிறுவனங்களால் டாக்சி வண்டிகள், அருகாமை பள்ளி, கல்லூரிகளை அரசு புறக்கணிப்பதால் தனியார் கல்வி முதலாளிகளின் பள்ளி, கல்லூரி வண்டிகள், போதுமான நகர அரசுப் பேருந்துகள் இல்லாமல் இருப்பதால் அதிகரிக்கும் ஆட்டோ சவாரி, நுகர்வுக் கலாச்சார மோகத்தினால் விற்கப்படும் ஸ்போர்ட்ஸ் பைக்குகள், வேகமாக ஓட்டும் கலாச்சாரம், ஓட்டுநர் வயது, உரிமம் எடுப்பதற்கு முன்பேயே வண்டிகள் ஓட்டும் மாணவர்கள் எல்லாம் சேர்ந்து விபத்துக்களை ஏற்படுத்தும் சூழ்நிலையை தோற்றுவிக்கின்றன.
சுருங்கச் சொன்னால் விவசாயம்- கிராமங்களின் அழிவு, தனியார் மயம், நுகர்வுக் கலாச்சாரம், பொதுப்போக்குவரத்து மங்குதல், எல்லாம் சேர்ந்து தமிழகத்தை முதல் இடத்தில் வைத்திருக்கின்றன. தனியார் மயத்திற்கு ஆண்டு தோறும் 15,000 மக்க்களை நரபலி கொடுத்து திருப்திப் படுத்துகிறது தமிழகம்.
அரசியல், சமூக, பொருளாதார திட்டங்களில் தமிழக மக்களது நலனை முதன்மையாக வைத்து போடப்படும் மையப்படுத்தப்பட்ட திட்டங்கள் இல்லாத வரை இத்தகைய விபத்துக்களை குறைக்க முடியாது.
மேலும் படிக்க
//அங்கிங்கெனாதபடி இருக்கும் டாஸ்மார்க் கடைகள் ஒரு முக்கிய காரணம், வேலைக்குச் செல்லும் ஆண்களில் கணிசமானோர் அன்றாடம் மது குடிப்பதும், குடித்து விட்டு வண்டிகள் ஓட்டுவதும் இங்கே சாதாரணமாக இருக்கிறது. விபத்துக்களில் மது குடித்து ஓட்டுவது கணிசமாக பங்கைக் கொண்டிருக்கிறது.//நூறு சதவிகிதம் உண்மை! குடி குடியை கெடுக்கும் என்று கேலியாக பேசிக்கொண்டே குடிக்கிரார்கள்! குடி,சிகரெட்,கஞசா போன்றவற்றால் அய்ம்பது சதவிகித இளைஞ்ர்கள் பாதிக்கப்படுகிறார்கள்! குடிக்கவேண்டாம் என்று காலில் விழுந்து கேட்டுக்கொள்ளும் , கந்தியவாதி பெரியவர் சரவணபெருமாள்? காலில் விழ ஆசை!
இதெல்லாம் ஒரு பெரிய விஷயமே இல்லை. கண் மண் தெரியாமல் ஜனத்தொகை பெருத்துக்கொண்டே போகிற அளவுக்கு ரோட்டை, நிலத்தை, பூமியை பெருக்க வைக்க முடியுமா ? அதனால இதுவும் நடக்கும் போக போக இன்னும் அதிகரிக்கும். இது மட்டும் இல்லை, கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ள உறவு, கடத்தல் இதிலேயும் தமிழகம் தான் முன்னணியில இருக்கும். வீணாய் பெருகும் ஜனத்தொகை என்னென்ன பயங்கர விளைவுகளை இனி ஏற்படுத்த போகிறது பொருத்திருந்து பார்ப்போம்.
என் வேலையில் பயணம் என்பது மிக குறைவு. ஆனாலும், இரண்டு நாளைக்கு ஒரு விபத்தை சாலையில் பார்க்கிறேன்.
இங்கு மனித உயிர்கள் எவ்வளவு மலிவாக போய்விட்டது. கட்டுரை அதற்கான காரணங்களை பொறுப்புடன் சொல்லிருக்கிறது. வாழ்த்துக்கள்.
முண்டியடித்துக் கொண்டு வேகமாகப் போகிறவனெல்லாம் ஏன் போகிறான், போய் என்னத்தை சாதிக்கப் போகிறான் என்று ஆய்வு செய்தால் வாழ்க்கை வெறுத்துவிடும்..