privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கார்ப்பரேட் முதலாளிகள்முதலாளித்துவ பயங்கரவாதம் - புஜதொமு கருத்தரங்கம் !

முதலாளித்துவ பயங்கரவாதம் – புஜதொமு கருத்தரங்கம் !

-

தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கத்தான் ஆலைகளைத் துவக்குவதாக பசப்புகின்றனர், முதலாளிகள். ஆனால், உண்மை அதுவல்ல. தொழிலாளர்களாகிய நம்முடைய உழைப்பை சுரண்டுவது மூலம் கோடிக்கணக்கான ரூபாயை சுருட்டிக் கொள்வதற்காகத்தான் தொழில்களைத் துவக்குகின்றனர்.

தொழிலாளர்லாப வெறியுடன் அலைகின்ற முதலாளித்துவமானது, தனது லாபத்தை அதிகப்படுத்தி, தன்னுடைய மூலதனத்தை மேலும், மேலும் பெருக்கிக் கொள்வதற்கு பல்வேறு சுரண்டல் முறைகளைக் கையாளுகின்றது. ஒரே வேலையைச் செய்கின்ற நம்மை டிரெய்னிங், கேசுவல், கான்ட்ராக்ட் என்ற பெயரில் பிளவுபடுத்தி, பல வருடங்கள் நிரந்தரம் செய்யாமல் வைத்துள்ளனர். மேலும், குறைவான சம்பளம் கொடுத்து ஒட்ட, ஒட்டச் சுரண்டுகின்றனர், முதலாளிகள். 10-12 மணி நேரத்துக்கு வேலை நேரத்தை அதிகப்படுத்துவது, விடுமுறை நாட்களில் வேலைக்கு வருமாறு கட்டாயப்படுத்துவது, நவீன கருவிகளைப் புகுத்துவது போன்ற எண்ணற்ற வழிகளில் நம்முடைய உழைப்புச் சக்தியை துளிகூட விடாமல் உறிஞ்சிக் கொள்கின்றனர். நெஞ்சைப் பிளக்கும் வேலைச் சுமையை சுமத்தி நம்மை சக்கையாகப் பிழிந்து கொள்வதோடு, ஓய்வு-உறக்கத்தையும் பறித்துக் கொள்கின்றனர்.

சிறு வயதிலேயே, அதாவது 17 முதல் 24 வயதுக்குள்ளாகவே, ஆற்றல் முழுவதையும் உறிஞ்சி எடுத்துவிட்டு, தேவையற்றவர்களாக வீதியில் வீசி எறிகின்றனர். வேலை நிரந்தரம் மறுப்பது, லீவு மறுப்பது, பாதுகாப்பான வேலை நிலைமைகளை மறுப்பது போன்ற எண்ணற்ற வழிகளில் நாம் அடக்கு முறைக்கு ஆளாகின்றோம். வெறிகொண்டு அடிப்பதும், ஆபாசமாக திட்டுவதும் கூட நடக்கிறது. பெண் தொழிலாளர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதும், ஆண் தொழிலாளர்களுக்கு இணையாக வேலை செய்கின்ற இடத்தில் சமமான ஊதியம் மறுக்கப்படுவதும் நடக்கிறது. இக்கொடுமைகளில் இருந்து விடுதலை பெறவும், நியாயமான உரிமைகளை அடையவும் சங்கம் துவங்க முயற்சி செய்தால் பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு, சங்க முன்னணியாளர்களைப் பணியவைக்க முயலுகின்றனர், முதலாளிகள். அற்ப காரணங்களைக் கூறி சஸ்பெண்ட் செய்வது, தொலைதூரத்துக்கு கட்டாய இடமாற்றம் செய்வது, போலீசை வைத்து மிரட்டுவது, வீட்டிற்கு போய் பெற்றோர் அல்லது மனைவியிடம் அச்சுறுத்தும் வகையில் பேசுவது என தினம் தினம் துன்புறுத்துகின்றனர். இதற்கும் பணியாவிட்டால் வேலையை விட்டே துரத்துகின்றனர்.

சங்கம் துவங்க நாம் செய்கின்ற முயற்சிகளை முறியடிக்க, தொழிலாளர்களில் ஒரு சிலரை அச்சுறுத்தியோ, ஆசை காட்டியோ கருங்காலிகளாக மாற்றுகின்றனர், முதலாளிகள். இந்த ஒருசிலரைப் பயன்படுத்தி “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்ற பெயரில், முதலாளிகளது உத்திரவுக்குத் தலையாட்டும் கமிட்டியை உருவாக்குகின்றனர். இந்த கமிட்டிக்கு பெயரளவில் அங்கீகாரம் கொடுத்து, தொழிற்சங்கம் கட்டும் முயற்சிக்கு வேட்டு வைக்கின்றனர்.

அதிகாரிகளுக்கு சங்கம் வைக்க சட்டப்படி உரிமை இல்லை. இதையே கேடாகப் பயன்படுத்தி தொழிலாளர்களுக்கு சூப்பர்வைசர், டீம் லீடர், கேப்டன் என்று பெயர் வைத்து, பெயரளவில் அதிகாரிகளாக அறிவிக்கின்றனர். சங்கம் அமைக்கின்ற முயற்சியை கருவிலேயே அழிக்கின்றனர்.

கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் நம்முடைய ஒவ்வொரு நடவடிக்கைகளையும் கண்காணிக்கின்றனர். போதாக்குறைக்கு நம்முடைய சக தொழிலாளியுடன் பேசவும், பழகவும் விடாமல் எந்திரத்தோடு எந்திரமாக வாழ்கின்ற நிலைக்கு தள்ளி உள்ளனர். நம்மை, சக தொழிலாளியுடன் ஒட்டுறவுகள் ஏதுமில்லாத உழைப்புப் பிண்டங்களாக்கி, ஒட்டு மொத்த தொழிற்சாலையையே சித்திரவதை கூடமாக்கி வருகின்றனர்.

உழைப்புச் சுரண்டல், அடக்குமுறை, உயிருக்கும், உடல் உறுப்புகளுக்கும் பாதுகாப்பு இல்லாத வேலை நிலைமை ஆகியவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக வேலை செய்கிறோம். குறைவான கூலியில் குடும்பத்தை நடத்த போராடுகிறோம். ரேசன் அரிசி, இலவச மருத்துவம், இலவச கல்வி, இலவச குடிநீர், பென்சன் போன்ற பல்வேறு சமூகப் பாதுகாப்புகளை அரசு கொடுத்து வந்தது. இவை அனைத்தும் அரை குறையாக தரப்பட்ட போதிலும், பற்றாக்குறையிலிருந்து மீள்வதற்குப் பயன்பட்டது. ஆனால், இப்போது இவை அனைத்துக்கும் அரசே வேட்டு வைத்து வருகிறது.

தொழிலாளர்உணவுப்பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்து, ரேசன் கடைகளை மூடி, மலிவு விலையில் கிடைத்த உணவுப் பொருட்களுக்கும் உலை வைக்கப் போகிறது. ரேசன் பொருட்கள் அனைத்தும் மார்கெட் விலைக்கு வாங்கினால், பெருமளவு சம்பளத்தை இழக்க நேரிடும்; கூடுதலாகவும் உழைக்க வேண்டியிருக்கும். மேலும், தினசரி ஏறிவரும் விலைவாசி நமது கழுத்தையே நெரிக்கும்.

தனியார்மயமானது, குடிநீரை காசாக்கி, தவித்த வாய்க்கு தண்ணீர் இல்லாமல் செய்து விட்டது. கல்வியிலும் தனியார்பள்ளி – கல்லூரிகளை பெருக்கி இலவச கல்வியே இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறது, அரசு.

நாம் அனுபவித்து வருகின்ற ஈ.எஸ்.ஐ திட்டமானது, மருத்துவ வசதியோடு – விபத்துக்கான காப்பீட்டையும் கொடுத்து வந்தது. ஊதிய உச்சவரம்பு காரணமாக பலருக்கு ஈ.எஸ்.ஐ இல்லாமல் போய்விட்டது. ஈ.எஸ்.ஐ வசதி இல்லாத போது, அரசு மருத்துவமனைகளில் இலவசமாக மருத்துவம் கிடைத்தது. மருத்துவ சேவையில் தனியார்மயத்தைப் புகுத்தி இலவச மருத்துவத்தையும் இல்லாமல் செய்து வருகிறது, அரசு.

பிள்ளைகளின் மேற்படிப்பு – திருமணம் போன்றவற்றுக்கு நாம் இதுவரை சேர்த்து வைத்த பி.எஃப் பணம்தான் கைகொடுத்தது. இதை பன்னாட்டு – உள்நாட்டு நிதியாதிக்கக் கும்பலிடம், அரசு ஒப்படைத்துள்ளது. இந்த சூதாட்டக் கும்பலிடம் சிக்கியுள்ள நமது சேமிப்பு பணம் திரும்ப கிடைப்பதற்கு எவ்விதமான உத்திரவாதமும் இல்லை. மேலும், புதிய பென்சன் திட்டத்தின் மூலம் ஏற்கனவே கிடைத்து வந்த ஓய்வு ஊதியத்திற்கும் உலை வைத்துவிட்டது.

தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்கிற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் பொதுத்துறை நிறுவனங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக புதிய ஆளெடுப்பு நின்று விட்டது. இதன் விளைவாக வேலையில்லா திண்டாட்டம் பெருகி வருகிறது.

நம்முடைய வேலைப்பாதுகாப்பு, உழைப்புக்கேற்ற ஊதியம், 8 மணிநேர வேலை, சங்கம் அமைக்கிற உரிமை, கவுரவமான-பாதுகாப்பான வாழ்க்கை ஆகிய அனைத்தையும் முதலாளித்துவம் பறித்து விட்டது. அரைகுறை உதவியாக இருந்த சமூகப்பாதுகாப்பு திட்டங்களையும் அரசு பறித்து வருகிறது.

நாட்டின் இயற்கை வளங்கள் அனைத்தையும் பன்னாட்டு முதலாளிகளும், இந்தியத் தரகு முதலாளிகளும் வரம்பின்றி சூறையாடுகின்றனர். சமூகத்துக்குச் சொந்தமான கடல்வளம், கனிமவளம், காட்டுவளம், நீர்வளம் ஆகிய அனைத்தும் முதலாளிகளின் சொத்தாகி வருகின்றன. இயற்கைக்கு மாறான வகையில், வரம்புக்கு மீறி இயற்கைச் செல்வங்கள் சுரண்டப்பட்டதால் காற்று, நீர் ஆகிய அனைத்தும் மாசுபட்டு விட்டன. இதனால் பல்வேறு விதமான நோய்களும், சிக்கல்களும் ஏற்பட்டு மக்கள் அவதியுறுகின்றனர்.

தினசரி பெருகி வரும் ஊழல்கள், கலாச்சாரச் சீரழிவுகள், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஆகிய அனைத்துக்கும் தனியார்மய – தாராளமய – உலகமயக் கொள்கைகளே காரணம். இந்தக் கொள்கைகளால் தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமை மட்டுமின்றி, விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுவணிகர்கள், சிறு-குறுந் தொழில் செய்வோர் ஆகிய அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையையும் பறித்து வருகிறது. பன்னாட்டு முதலாளிகளும், உள்நாட்டு தரகு முதலாளிகளும் வைத்ததே நாட்டின் சட்டமாகி விட்டது. இதனைத் தான் மறுகாலனியாக்கம் என்கிறோம்.

மறுகாலனியாக்கக் கொள்கையால் வாழ்விழந்துள்ள பல தரப்பு மக்களும் போராடத் துவங்கி உள்ளனர். எதிர்காலத்தில் இத்தகைய போராட்டங்கள் தீவிரமடையாமல் தடுப்பதற்காகவே, ஆதார் அடையாள அட்டை என்கிற ஆள்காட்டி அட்டை தரப்படுகிறது. இந்த அட்டையில் பதியப்படும் விபரங்களை வைத்து, ஒருவரது நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவரது செல்பேசி உரையாடலை ஒட்டுக்கேட்டு பதிவு செய்யவும் முடியும். இதன் மூலமாக போராடும் மக்களையும், புரட்சிகர, ஜனநாயக அமைப்புகளையும் கண்காணித்து அடக்க முடியும். இதன்மூலம் முதலாளிகளின் அடியாள் தான் அரசு என்பதை மேலும், மேலும் நடைமுறையில் அப்பட்டமாக நிருபித்துக் கொண்டு வருகிறது.

இத்தனை சுரண்டல்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றை இனியும் சகித்துக் கொண்டு வாழ முடியாது. இதுவரை தொழிலாளி வர்க்கம் பெற்ற உரிமைகள் அனைத்தையும் போராடித்தான் பெற்று இருக்கிறது. தொழிலாளி வர்க்கம் தன்னுடைய உரிமைக்காக மட்டுமின்றி, ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் உரிமைகளுக்காகவும் போராட வேண்டும். அதற்கான தகுதியும், ஆற்றலும் தொழிலாளி வர்க்கத்துக்கு மட்டுமே உள்ளது.

அனைத்து ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறிக்கும் மறுகாலனியாக்கத்தையும், நம்மை அச்சுறுத்திப் பணிய வைக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும் எதிர்த்து போராடுவதைத் தவிர,வேறு குறுக்கு வழி எதுவும் இல்லை. இந்தப் போராட்டத்தில் நாம் வெற்றி பெற, முதலாளிகள் நம்மிடையே உருவாக்கி உள்ள நிரந்தரத் தொழிலாளி – ஒப்பந்தத் தொழிலாளி-கேசுவல் தொழிலாளி போன்ற பிரிவினைகளைத் தகர்ப்போம். தொழிலாளி வர்க்கமாய் ஒன்றிணைவோம். புரட்சிகர அரசியலைக் கொண்டுள்ள தொழிற்சங்கத்தைக் கட்டியமைப்போம். முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்.

மத்திய – மாநில அரசுகளே,

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்ற “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!
  • எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.15,000 நிர்ணயம் செய்!
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத, மறுகாலனியாக்கக் கொள்கைகளை கைவிடு!
  • மக்களை உளவு பார்க்கும் ஆதார் அடையாள அட்டையை ரத்து செய்!

தோழர் அ.முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024.
தொ.பே: 94448 34519

பிரச்சார இயக்கம்தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் கருத்தரங்கங்கள் விபரம்

05.07.2013 சிவகங்கை
சி.வெற்றிவேல்செழியன, அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
காளியப்பன், இணைச் செயலாளர்,  ம.க.இ.க. – தமிழ்நாடு

06.07.2013 புதுச்சேரி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர்,  பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.
அசோக் ராவ் தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி

06.07.2013 அம்பத்தூர்
மா.சி.சுதேஷ் குமார், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
மாருதி சுசுகி தொழிலாளர் சங்க இணைச் செயலாளர் நிர்வாகிகளில் ஒருவர்

07.07.2013 கோவை
பா.விஜயகுமார்,  பொருளாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
வழக்குரைஞர் பாலன், கர்நாடகா உயர்நீதிமன்றம்

07.07.2013 மதுரை
சி.வெற்றிவேல்செழியன், அமைப்புச் செயலாளர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

07.07.2013 திருச்சி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு
அசோக் ராவ், தலைவர், தேசிய அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு (NCOA), புதுதில்லி

13.07.13 கும்மிடிப்பூண்டி
சுப.தங்கராசு, பொதுச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு
பிரதீப், பொதுச் செயலாளர், இந்திய தொழிலாளர்கள் கூட்டமைப்பு , (IFTU), ஐதராபாத்

14.07.13 ஓசூர்
மா.சி.சுதேஷ் குமார், இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு.
வழக்குரைஞர் ராஜூ, மாநில ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மனித உரிமைப் பாதுகாப்பு மையம், தமிழ்நாடு

14.07.13 கோத்தகிரி
அ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு

16.07.13 ஆம்பூர்
அ.முகுந்தன், தலைவர், பு.ஜ.தொ.மு. – தமிழ்நாடு
காளியப்பன், இணைச் செயலாளர், ம.க.இ.க. – தமிழ்நாடு

தகவல் :
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி