ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் நீதிமன்றமும் அரசியல் உள்நோக்கத்தோடும், தி.மு.க.வைப் பலியிட வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடும்தான் 2ஜி ஊழல் வழக்கை அணுகி வருகின்றன என்பதை ஏற்கெனவே பல்வேறு ஆதாரங்களை முன்வைத்து நாம் அம்பலப்படுத்தி இருக்கிறோம். இந்நிலையில் கெய்ர்ன் இந்தியா என்ற கார்ப்பரேட் நிறுவனம் தனது 60 சதவீதப் பங்குகளை வேதாந்தா நிறுவனத்திற்கு விற்றது குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் அளித்துள்ள தீர்ப்பு, பொதுச் சொத்துக்களைத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அரசு பட்டா போட்டுக் கொடுப்பதை உச்ச நீதிமன்றம் பாரபட்சமாகவும் ஆளுக்குத தக்கப்படியும்தான் அணுகி வருகிறது என்பதை இன்னும் துலக்கமாக எடுத்துக்காட்டியிருக்கிறது.
மைய அரசின் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் இராசஸ்தான் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட எண்ணெய் வயல்களிலிருந்து கச்சா எண்ணெய் எடுத்து விற்கும் உரிமத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த தொழிற்கழகமான கெய்ர்ன் நிறுவனத்திற்கு வழங்கியிருந்தது. இந்த உரிமத்தின் 70 சதவீதப் பங்குகளை கெர்ன் இந்தியா நிறுவனமும் 30 சதவீதப் பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகமும் உடைமையாகக் கொண்டிருந்தன.
கெய்ர்ன் இந்தியா எண்ணெய் வயல் உரிமத்தைப் பெற்ற சில நாட்களிலேயே தனது வசமிருந்த 70 சதவீதப் பங்குகளில் 60 சதவீதப் பங்குகளை இங்கிலாந்தைச் சேர்ந்த தேசங்கடந்த தொழிற்கழகமான வேதாந்தா நிறுவனத்திற்கு (தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளருக்கு) 42,500 கோடி ரூபாய்க்கு விற்றது. இதனை ஆய்வு செய்த தணிக்கைத் துறை, கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திற்கு எண்ணெய் வயல்களை ஒதுக்கீடு செய்திருப்பதில் சட்டத்திற்குப் புறம்பாகப் பல்வேறு விதமான சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், பங்கு விற்பனையால் அரசிற்கு ஏறத்தாழ ஒரு இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மதிப்பிட்டு அறிக்கை அளித்தது.
இதன் அடிப்படையில் பெங்களூருவைச் சேர்ந்த அனில் குமார் அகர்வால் என்ற வழக்குரைஞர் இந்த விற்பனை ஒப்பந்தத்தை ரத்துசெய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தார். இத்தனியார்மய நடவடிக்கையில் மோசடியும் ஊழலும் பின்னிப் பிணைந்திருப்பது கண்கூடாகத் தெரிந்தபோதும், பங்குகள் விற்கப்பட்டதை அங்கீகரித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருக்கிறது.
2ஜி ஒதுக்கீடில் அரசிற்கு 1.76 இலட்சம் கோடி ரூபாய் உத்தேச இழப்பு ஏற்பட்டதாகக் கூறிய தணிக்கைத் துறையின் அறிக்கையை உச்சந்தலையில் வைத்துக் கொண்டாடி வரும் உச்ச நீதிமன்றம், இவ்வழக்கிலோ தணிக்கைத் துறையின் அறிக்கைக்கு ஒரு காகிதக் கட்டு என்பதற்கு மேல் எந்தவிதமான மதிப்பையும் தர மறுத்துவிட்டது.
“தணிக்கைத் துறை சுயேச்சையான, மதிப்புக்குரிய அரசு அமைப்பு என்றபோதும், அதனின் அறிக்கையை ஆண்டவனின் வேதவாக்கைப் போலக் கருத வேண்டியதில்லை” எனத் தமது தீர்ப்பில் உபதேசித்துள்ள உச்ச நீதிமன்ற நீதிபதிகள், “தணிக்கைத் துறையின் அறிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அமைச்சகம் தெரிவிக்கும் கருத்துக்களைப் பரிசீலனை செய வேண்டும்; நாடாளுமன்றத்தால் அமைக்கப்படும் பொது கணக்குக் கமிட்டிக்கு தணிக்கைத் துறையின் அறிக்கையை நிராகரிக்கும் உரிமையுண்டு; தணிக்கைத் துறையின் அறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்” என்றெல்லாம் வாதங்களை அடுக்கி, தணிக்கைத் துறையின் மதிப்பீடை இறுதியானதாகவோ, முடிவானதாகவோ எடுத்துக்கொள்ளத் தேவையில்லை எனக் கூறிவிட்டனர்.
உச்ச நீதிமன்றத்தின் இந்த வாதங்களை 2ஜி ஒதுக்கீடு குறித்த தணிக்கைத் துறையின் அறிக்கைக்குப் பொருத்தினால், அது குப்பைக்கூடையில் போடுவதற்கு மட்டுமே தகுதியுடையதாக ஆகிவிடும். ஏனென்றால், 2ஜி ஒதுக்கீடில் 1.76 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உத்தேச இழப்பு ஏற்பட்டுள்ளது என்ற தணிக்கைத் துறையின் மதிப்பீடைத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சகம் ஏற்றுக்கொள்ளவில்லை. தணிக்கைத் துறை அறிக்கையைப் பரிசீலனை செய்த நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழுவின் தலைவர் முரளி மனோகர் ஜோஷி, ஆ.ராசாவையும், மன்மோகன் சிங்கையும் அந்த ஊழலுக்குப் பொறுப்பாக்கித் தயாரித்த வரைவு அறிக்கையை, அக்குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர்.
அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் ஆ.ராசா விதிமுறைகளை மீறி, சில நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்துகொண்டார் எனக் குற்றஞ் சுமத்தப்பட்டுள்ளது. ஏறத்தாழ அதேபோன்ற விதிமுறை மீறல்தான் கெய்ர்ன் இந்தியா பங்கு விற்பனையிலும் நடந்துள்ளது. இராசஸ்தான் எண்ணெய் வயல் ஒப்பந்த விதிகளின்படி, கெய்ர்ன் இந்தியா தனது பங்குகளை எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்திடம்தான் விற்க முடியும்; இயற்கை எரிவாயுக் கழகம் அப்பங்குகளை வாங்க மறுத்தால்தான் வேறு தனியார் நிறுவனங்களுக்கு விற்க முடியும். தனியொரு பன்னாட்டு நிறுவனத்திற்குச் சாதகமாக இந்த ஒப்பந்த விதி மீறப்பட்டுள்ளது என்பதுதான் இந்த வழக்கின் மையமான குற்றச்சாட்டு.
அலைக்கற்றைகள் முன்பின் அனுபவமில்லாத நிறுவனங்களுக்கு விற்கப்பட்டதைப் போலவே, எண்ணெய் வயல் பங்குகள் எண்ணெய் துரப்பணவுத் தொழிலில் முன்பின் அனுபவமில்லாத வேதாந்தா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன. அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வதில் “லாபியிங்” நடந்ததைப் போலவே, கெய்ர்ன் நிறுவனத்தின் பங்குகள் வேதாந்தாவிற்கு விற்கப்படுவதை உடனடியாக அனுமதிக்கும்படி பிரிட்டன் நாட்டு பிரதமர் கேமரூன், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நிர்பந்தம் கொடுத்திருக்கிறார். 42,500 கோடி ரூபாய்க்கு இப்பங்குகளை வாங்கியுள்ள வேதாந்தா நிறுவனத்திற்கு, போட்ட மூலதனத்திற்கு மேல் 60,000 கோடி ரூபாய் அளவிற்கு இலாபம் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
650 கோடி பேரல்கள் இருப்பு கொண்ட எண்ணெய் வயல்கள் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்குத் தூக்கிக் கொடுக்கப்பட்டிருப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அறச்சீற்றம் கொள்ளவில்லை. மாறாக, “பொது நல நோக்கத்தின் காரணமாகவே கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் பங்குகள் வேதாந்தா நிறுவனத்திற்கு விற்கப்பட்டுள்ளன” என விளக்கமளித்து, இந்த விற்பனையை அங்கீகரித்தது. “பொது நல நோக்கத்தின் காரணமாகவே அலைக்கற்றைகளைக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செய்தேன்” என்ற ஆ.ராசாவின் வாதத்தை 2ஜி வழக்கில் ஒதுக்கித் தள்ளிய உச்ச நீதிமன்றம், இவ்வழக்கில் அதற்கு நேர்எதிராக, வெளிப்படையாகவே பாரபட்சமான முறையில் தீர்ப்பளித்திருக்கிறது.
2ஜி அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் அரசுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய ஆ.ராசா வழங்கிய 122 உரிமங்களை அடியோடு ரத்து செய்த உச்ச நீதிமன்றம் இந்த வழக்கிலோ, “அரசின் பொருளாதார முடிவுகள் பரிசோதனையின் அடிப்படையில்தான் எடுக்கப்படுகின்றன. எடுக்கப்பட்ட முடிவு அரசிற்கு இழப்பீடைக்கூட ஏற்படுத்தலாம். அம்முடிவு சட்டத்திற்குப் புறம்பாகவும் உள்நோக்கத்தோடும் எடுக்கப்பட்டிருந்தால் மட்டுமே நீதிமன்றம் தலையிடுமே தவிர, அரசு எடுக்கும் ஒவ்வொரு பொருளாதார முடிவு குறித்தும் நாங்கள் தீர்ப்பு அளிக்க முடியாது” எனக் கூறி இந்த விற்பனையையும், அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள ஒரு இலட்சம் கோடி ரூபாய் இழப்பையும் நியாயப்படுத்தியிருக்கிறது.
தனியார்மயம் என்பதே பொதுச் சோத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிப்பதற்கு வழங்கப்படும் லைசென்சுதான் எனும்பொழுது, அதில் முறைகேடுகள் நடந்துள்ளதா, இல்லையா என ஆராய்ச்சி நடத்துவதற்கு எந்தவொரு அடிப்படையும் கிடையாது. பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டா கொடுப்பதில் ஆளுக்குத்தக்கபடி நடந்து கொள்வதற்காகவே, நீதிபதிகளும் பத்திரிகைகளும் அப்படிபட்ட வேறுபாடு இருப்பதாக ஒரு கற்பிதத்தை வலிந்து உருவாக்கி வருகின்றன. இராசஸ்தான் எண்ணெய் வயல்கள் வேதாந்தா நிறுவனத்திற்கும், கிருஷ்ணா-கோதாவரி எண்ணெய் வயல்கள் அம்பானிக்கும், நிலக்கரி வயல்கள் பல்வேறு தரகு முதலாளிகளுக்கும் பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டிருப்பதை நீதிமன்றமும் பத்திரிகைகளும் எதிர்க்கட்சிகளும் அணுகும் விதமே இவற்றின் இரட்டை வேடத்தையும், இவை ஆ.ராசா விசயத்தில் உள்நோக்கத்தோடு நடந்துவருவதையும் அம்பலப்படுத்திக் காட்டுகின்றன.
– ரஹீம்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூன் 2013
________________________________________________________________________________
திமுக தான் பலியிடப்படுவதற்கு முன் அனைத்து உண்மைகளையும் பகிரங்கமாக அம்பலப்படுத்தி மக்களின் முன் அப்ரூவர் ஆவதே சரியானது. நீதிமன்றங்களில் அல்ல.
திருதிராஷ்டிரன் செய்ய மாட்டான்.
சிதம்பரம் செட்டியார் இருக்கிறவரை இந்த மலை முழுங்கி கம்பெனிக்கு பிரச்சினை இல்லை. 1950 களில் ஊறுகாய் பாட்டில் வாங்க ஆரம்பித்த இந்த நீதியரசர்கள்[பயபுள்ளைகளுக்கு கெளரவம் ஒரு கேடு] இன்னைக்கு பங்கு வாங்குர அளவு வளர்ந்தாச்சு. ஓட்டு போடும் மகாஜனங்களே உங்க டவுசர் பத்திரம்.
பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பட்டா கொடுப்பதில் ஆளுக்குத்தக்கபடி நடந்து கொள்வதற்குத்தான் அரசோடு நீதிமன்றமும் நீதிபதிகளும் இருக்கிறார்கள்
ராசா தலித் என்பதனால்தான் அவதூறு செய்கிறார்கள் எனக் கூறப்பட்டது உண்மைதானோ!
கசப்பான உண்மை. தமிழன், தாழ்த்தப்பட்டவன், முதல் தலைமுறை பட்டதாரி-வேதனையாக இருக்கிறது. ஆனால் சேர்ந்த இடம், செய்த செயல், இன்றும் பொய்களின் மூலம் தன்னை காப்பாற்ற முயல்வது-அவருக்கு அனுதாபத்தை பெற்று தராது. அரசுக்கு இழப்பு என்பது வெற்று வாதம். இவர்கள் எவ்வளவு சுருட்டினார்கள் என்பதே முக்கியம். பிணையில் வெளிய வர இயலாத நிலையில் இருந்தார் என்பதும் உண்மைதானே?