முகப்புமறுகாலனியாக்கம்கல்விகடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !

கடலூர்: அடக்குமுறைக்கு அஞ்சாத மாணவர் போராட்டம் !

-

கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட பு.மா.இ.மு.

hand-cuff
படம் : மாலை மலர்

ல்வியில் கடலூர் மாவட்டத்தை கடைசி இடத்துக்கு தள்ளிய முதன்மை கல்வி அலுவலர், அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தனியார் கல்வி கொள்ளையர்கள் பிள்ளைகளை பணயக் கைதிகளாக்கி பெற்றோர்களிடம் கொள்ளையடிப்பதை கண்டித்தும் 27.6.2013 அன்று காலை 10.00 அளவில் புரட்சிகரமாணவர் – இளைஞர் முன்னணி தோழர்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

காலை 9.30 மணியளவில் புரட்சிகர மாணவர் இளஞர் முன்னணியின் அலுவலகத்திற்கு வந்த காவல்துறை ஆய்வாளர், “கடலூரில் 144 தடை உத்தரவு உள்ளது. முற்றுகை அனுமதி இல்லை, ஊர்வலமாக வந்து அரை மணி நேரம் முழக்கமிட்டு பத்திரிகை செய்தி கொடுத்து கலைந்து விடுங்கள்” என்றார்.

தோழர்கள் ஏற்கனவே திட்டமிட்டபடி ஊர்வலமாக சென்று முழக்கம் போட்டு பேட்டி கொடுத்தனர். “அரை மணி நேரம் ஆகி விட்டது. கலைந்து போங்கள்” என்றதும், தோழர்கள் முழக்கமிட்டபடியே முன்னேறி சென்றதை தடுக்கப் பார்த்த காவல் துறையினர் எரிச்சலடைந்தனர். தோழர்கள் சாலையில் அப்படியே அமர்ந்தும், படுத்தும் மறியல் செய்ய காவல்துறை இழுக்க, தோழர்கள் இழுக்க என்று தள்ளுமுள்ளுவுடன் போர்க்களம் போல புழுதி பறந்தது. முதலில் செயலரை தூக்கி வேனில் சுழற்றி அடித்ததும் மற்ற தோழர்கள் நான்கு, நான்கு பேராக சங்கிலி போல பிணைத்து கொண்டு இருந்தனர். 6 பெண்கள், 2 குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்து வேனில் ஏற்ற காவல் துறைக்கு அரை மணி நேரம் ஆனது.

அனைத்து ஊடகங்களும் பேட்டி எடுத்ததையும், போராட்ட காட்சிகளையும் படத்துடன் செய்திகள் வெளியிட்டன. அன்று மாலைச் செய்தியிலேயே வந்தது. டி.வி. சேனல்களில் தொடர்ச்சியாக ஒளிபரப்பானது.

திருமண மண்டபத்தை சிறப்பு பயிற்சி முகாமாக்கிய தோழர்கள்

கைது செய்து மண்டபத்தில் அடைத்தவுடன், மாணவர்களுக்கான பயிற்சி முகாமில் ஈடுபட்ட தோழர்களை பொறுப்பாளர்களாக்கி அவர்களைக் கொண்டு பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. எங்கிருந்தாலும் அரசியல் பயிற்சி கொடுத்த வண்ணம் இருக்கிறார்களே என்று காவல் துறையை கலங்கடிக்கும் விதமாக பயிற்சி வகுப்பு சிறப்பாக நடந்தது. நாடகம், பாடல் வார்த்தை விளையாட்டு, பேச்சு என்று உற்சாகத்துடனேயே தோழர்கள் இருந்தனர்.

ஆனால் தமது நலனை மட்டும் சிந்தித்த காவல் துறையினர் ஒருவருடன் ஒருவர் மனம் விட்டு பேசிக் கொள்ளாமலேயே இருந்தனர். ஒரு உதவிக்காவல் துறை ஆய்வாளர் நம் தோழரிடம், “நீங்கள் செய்த போராட்டம் நியாயமானது. ஆனாலும் இவங்க உங்களை உள்ளேயே உடல. இது சரியில்ல. நீங்க செய்தது சரியே” என்றார். ஒரு கீழ் நிலை பெண் போலீஸ் “உங்களுடைய போராட்டம் அனைத்தையும் கவனித்துக் கொண்டிருக்கிறேன். நியாயமானவர்களுக்கு இந்த நாட்டில மதிப்பே இல்ல” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

மாலை 6.00 மணியானதும் “வெளியேறுங்கள், உங்களை விடுதலை செய்யச் சொல்லி விட்டார்கள்” என்று காவல்துறை வந்து கூறும் வரை பயிற்சி வகுப்புகள், போராட்ட அனுபவங்களை பகிர்ந்தல் என்று தோழர்கள் உற்சாகமாக இருந்தனர். இறுதியில் தோழர்கள் போராட்டம், கைது, பற்றிய தமது அனுபவ தொகுப்பை கூறினார்கள்.

சில தோழர்கள் காவல்துறை அடித்து ஏற்றியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்றும், அடுத்த முறை அதிகப்படியாக கலந்து கொள்ள வேண்டுமென்றும், மக்களுக்காக இரத்தம் சிந்துவது பெருமையானது என்றும் கூறினார்கள். ஒரு மாணவி, “வீட்டில் இருந்தால் டி.வி பார்த்துக் கொண்டு வெட்டியாக பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பேன். உங்கள் கூடவே இருக்க வேண்டும் போல உள்ளது” என்று பிரிய மனமில்லாமல் பிரிந்து சென்றார்.

போராட்டத்தைப் பார்த்த பெரியவர் ஒருவர், “இவனுங்க பிள்ளைங்க தனியார்ல படிக்குது, அரசாங்க பள்ளி மாணவர்கள் வாழ்க்கையைப் பற்றி இவனுங்களுக்கு என்னத் தெரியும்” என்று காவல் துறையினரை தனது ஆத்திரம் பொங்க திட்டித் தீர்த்து அமைப்புக்கு ஆதரவு அளித்தார்.

அங்கிருந்த மக்கள் அனைவரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து சில மணி நேரம் கூடியிருந்தனர். பலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைப்புக்கு ஆதரவு கூறி வாழ்த்து தெரிவித்தனர்.

இந்தக் கிளர்ச்சிகரமான போராட்டம் தோழர்களை மட்டுமல்ல, பகுதி மக்களையும் உற்சாகமாக்கியுள்ளது என்றால் அது மிகையல்ல.

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, கடலூர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க