privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !

தனியார் பள்ளியை பணிய வைத்த பெற்றோர்கள் !

-

சேத்தியாதோப்பு பூதங்குடி உட்பட எஸ்.டி. சியோன் மெட்ரிக் பள்ளிக்கு, வடலூர், சோழத்தரம், ஆகிய ஊர்களில் நான்கு கிளைகள் உள்ளன. துண்டு சீட்டில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அரசு கட்டணத்தை மூன்று மடங்காக்கி அதில் ஒரு பகுதியை முதல் தவணையாக வசூலிக்கிறார்கள். ரெசீது கேட்கும் பெற்றோர்களை, கேள்வி கேட்கும் பெற்றோர்களை டி.சி.கொடுத்து விடுவேன் என மிரட்டுகின்றனர். அரசு கட்டணத்தை அறிவிப்பு பலகையில் ஒட்டவில்லை.

ஆனால், இன்று பெற்றோர்கள் போலீசு பாதுகாப்புடன் அரசு கட்டணத்தை கட்டினர். அது நீண்ட போராட்டத்துக்குப் பிறகுதான் சாத்தியமானது.

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் சேத்தியாதோப்பு கிளை சார்பில் அரசு கட்டண விபரங்கள் அச்சிட்ட பிரசுரமாக பள்ளி வளாகம் முன்பு விநியோகிக்கப்பட்டது. பள்ளி முதலாளியின் மகன் பிரசுரங்களை பிடுங்கிக் கொண்டு ஓடிவிட்டான்.

முதலாளி நமது அமைப்பாளர் பாலு மகேந்திரனை,”வாங்க உட்கார்ந்து பேசலாம்” வாங்க என கையை பிடித்து இழுத்தார்.

“வரமுடியாது, கோரிக்கையை நிறைவேற்று, தனியே பேச முடியாது” என மறுத்ததுடன், பள்ளி முதலாளியின் மகன் மீது போலீசில் புகார் மனு எழுதி கொடுத்தார்.

சேத்தியாதோப்பு ஆய்வாளர், “பஸ்டாண்டில் கொடுக்க வேண்டியதுதானே, பள்ளி வளாகத்தில் முன்பு ஏன் கொடுத்தாய்? உன்னை ரிமாண்ட் செய்யட்டுமா? பணம் கேட்டு மிரட்டினாய் என வழக்கு போட்டுவிடுவேன்” என அச்சுறுத்தினார்.

நமது மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் ஆய்வாளரிடம், “அரசு உத்திரவை மீறி பல மடங்கு பெற்றோர்களை ஏமாற்றி பணம் வசூலிக்கும் பள்ளி தாளாளரை கைது செய்வீர்களா?” எனக் கேட்டனர்.

ஆய்வாளர், “நான் பள்ளியில் விசாரித்தேன் அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கிறேன் எனக் கூறினார் ரசீது புத்தகத்தையும் காட்டினார்” என நற்சான்று கொடுத்தார்.

“திருடன் குற்றத்தை ஒப்புக் கொள்ள வில்லை என்றால் விட்டு விடுவீர்களா?” என திருப்பிக் கேட்டதும் “நான் என்ன செய்ய முடியும்?” என்று நழுவினார்.

எஸ்.டி எஸ். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைமீது நடவடிக்கை எடுக்காத கல்வி துறை அதிகாரிகளை கண்டித்து சேத்தியாதோப்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தோம். அதற்கு சேத்தியாதோப்பு ஆய்வாளர் “எஸ்.பி. பள்ளி நிர்வாகத்திடம் எங்களையே பேசி சரிபண்ணச் சொல்லியுள்ளார். அதோடு ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியும் மறுக்க சொல்லி எஸ்பி சொல்லிட்டாங்க” என பதிலளித்தார்.

28 -6-13 அன்று மாலை சேத்தியாதோப்பில் அரங்கு கூட்டம் நடத்தினோம். அரங்கு கூட்டத்தில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் கலந்து கொண்டனர். பிறகு பெற்றோர்கள் கும்பலாக சென்று அரசு கட்டணத்தை செலுத்துவது, அதற்கு போலீஸ் பாதுகாப்பு பெறுவது என முடிவு செய்யபட்டது.

போலீஸ் வாக்குவாதம்
போலீஸூடன் வாக்குவாதம்.

திட்டமிட்டபடி சங்கப் பெற்றோர்கள் அனைவரும் 1-7-2013 அன்று காலை 9-00 மணிக்கே திரண்டனர். ”அரசு கட்டணத்தை மட்டும் ரசீது பெற்று செலுத்துவோம்” என கையில் அட்டையை பிடித்து கொண்டு சக பெற்றோர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்து கொண்டே பணம் செலுத்தினர். 100-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அரசு கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றனர்.

டியூசன் பீஸ் என எழுதியதை ”இயர்லி பீஸ்” என மாற்றி எழுதி வாங்கினர். முழுத் தொகை கட்டினால்தான் வாங்குவேன் என முரண்டு பிடித்த பள்ளி நிர்வாகத்திடம் நமது அமைப்பாளர்கள்  ”கொடுக்கும் பணத்தை வரவு வைத்து கொண்டு பாக்கியை குறித்து கொடு” என வாதிட்டு அதையும் நடைமுறையும் படுத்தினர்.

பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் கூட்டமாக வெளியே வந்து, “கூட்டமாக நிற்காதீர்கள் வெளியே போங்கள்” என பெற்றோர்களை விரட்ட முயன்றனர்.

அதற்கு பெற்றோர் ஒருவர் ”உன் வேலை பாடம் நடத்துவது, அதை போய்ப் பார். நிர்வாகத்திற்கு ஆதரவாக கூட்டம் கூட்டினால் நாங்களும் இன்னும் அதிகமான பெற்றோர்களை வெளியில் இருந்து வரவழைப்போம்” என்றதும் அனைவரும் வாயை பொத்திக்கொண்டு சென்றனர்.

இரண்டு எஸ்பி சிஐடி, இரண்டு காவலர்கள், ஒரு துணை ஆய்வாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

பள்ளி தாளாளர், அவர் மனைவி, மகன், முதல்வர் என அனைவரும் அடுத்து சுற்றில் பெற்றோர்களை தவிர சங்க நிர்வாகிகள் யாரும் இருக்ககூடாது என நிபந்தனை விதித்தனர்.

போராடிய பெற்றோர்
போராடிய பெற்றோர்

நமது சங்க நிர்வாகிகள் பாதுகாப்புக்கு நின்றிருந்த காவல்துறை துணை ஆய்வாளரிடம்

”காசாளரை தவிர நிர்வாகிகள் யாருக்கும் இங்கு வேலையில்லை அவர்களை போகச்சொல்லுங்கள். நாங்கள் இல்லையென்றால் அரசு கட்டணத்தை வாங்கமாட்டார்கள், ரசீதும் கொடுக்க மாட்டார்கள். மேலும் எங்கள் வழக்கறிஞர்களுடன் இரண்டு நாட்களுக்கு முன்பே நாங்கள் அனைவரும் டி.எஸ்பி.யை பார்த்து பேசிவிட்டோம். எந்த பிரச்சினையும் வராமல் இருக்கவே நாங்கள் இருக்கிறோம்” என்று விளக்கியதும்,  நியாயத்தை வேறு வழியில்லாமல் போலீசார் ஏற்று கொண்டனர்.

பள்ளி முதலாளி பல அடியாட்களை இறக்கியிருந்தார். ஒரு பக்கம் காவல்துறை, மறுபுறம் வலிமையான உள்ளுர் பெற்றோர்கள் இருந்ததால் மோதல் ஏற்படாமல் அரசு கட்டணத்தை பெற்றோர்கள் மகிழ்ச்சியாக கட்டினர்.

நாம் பலமுறை சொல்லியும் பத்திரிக்கையாளர்கள் யாரும் வந்து செய்தி சேகரிக்க மறுத்துவிட்டனர். இதற்கு முன்னதாக நாம் எஸ்.டி.எஸ்.மெட்ரிக் பள்ளிக்கு எதிராக போஸ்டர், பிரசுரம், அரங்கு கூட்டம், ஆர்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு, சங்கத்தை வலுப்படுத்த உறுப்பினர் சேர்க்கை என தொடர்ந்து போராடி, மக்கள் மத்தியில் கருத்து ஆதரவு வளர்ந்து வருவதால், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளிக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீசார் பாதுகாப்பிற்கு நின்றிருந்தனர்.

மேலும் டி.எஸ்.பி. தலைமையில் இரண்டு எஸ்.ஐ. நான்கு காவலர்களுடன் பள்ளி முதலாளியிடம் ”மரியாதையா அரசு கட்டணத்தை வாங்கு, அதற்கு ரசீது கொடு, உன்னால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரக்கூடாது” என மிரட்டி விட்டு வந்தனர்.

சங்கத்தினரும், வழக்கறிஞர்களும். பெற்றோர்களும், “அரசு கட்டணத்தை வாங்கினால் நாங்கள் ஒத்துழைப்போம், இல்லையென்றால் போராடுவோம், உரிய அதிகாரிகள் பிரச்சினையை தீர்க்கட்டும். காவல்துறை அதை தடுக்கக் கூடாது. கல்வி உரிமைக்காக போராடுவது எங்களின் ஜனநாயக உரிமை” என வாதிட்டோம்.

அதன் விளைவாகத்தான் இன்று கிடைத்த மேற்படி ஆரம்ப வெற்றி. இது நிரந்தரமாக அனைத்து பெற்றோர்களுக்கும் கிடைக்கும் வரை மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் போராட்டம் தொடரும். நமது பெற்றோர் சங்க நடவடிக்கைகளுக்கு காரணம் கல்வித்துறையின் கையாலாகத்தனமும், தனியார் பள்ளி முதலாளியின் பணத்திமிரும்தான். கல்வி, கட்டணம் என்பதை தாண்டி பள்ளி முதலாளி பெற்றோர்களுக்கு இழைக்கும் அவமரியாதைதான் பெற்றோர்களுக்கு ஆத்திரத்தை வரவழைக்கிறது.

தகவல் : மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம்