privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாஇலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !

இலங்கையில் 50% மின் கட்டண உயர்வு !

-

லங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் மின் கட்டணங்கள் 50% உயர்த்தப்பட்டுள்ளன. 5 அல்லது 10 சதவீத உயர்வை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் அரை மடங்கு உயர்வு என்பதை இலங்கைதான் சாதித்திருக்கிறது. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யும் நிலக்கரி, எண்ணெய் போன்றவற்றை நம்பி இருப்பதால் மின் உற்பத்தி செலவுகள் அதிகமாகியிருக்கின்றன எனவும் அரசு நிறுவனமான மின்சார வாரியம் பெருமளவு நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும் அந்த நஷ்டங்களை சரிக்கட்ட மின் கட்டணத்தை உயர்த்தியே தீர வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.

பல்ப்கொழும்பில் வசிக்கும் 61 வயதான எஸ் பி சமரதாச என்பவர் தனக்கு வந்த மின்கட்டண பில் தொகை வழக்கத்தை விட அதிகமாக இருப்பதை பார்த்து ஆச்சரியமடைந்திருக்கிறார். அது குறித்து விளக்கம் கேட்பதற்காக மின்சார வாரிய தலைமை அலுவலகத்திற்கு ஜூன் 28-ம் தேதி போயிருக்கிறார். அவரது பில் தொகை சரியானதுதான், ஏப்ரல் முதல் உயர்த்தப்பட்டுள்ள புதிய கட்டணத்தின் படி கணக்கிடப்பட்டுள்ளது என்று மின்வாரிய ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அதைக் கேட்டதும் பெரிதும் அதிர்ச்சியடைந்த சமரதாச, அருகில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார். அவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போது, அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மின்கட்டண உயர்வைக் கேட்கும் நமக்கே அதிர்ச்சி ஏற்படும் போது அதை நேரடியாக சந்திக்கும் இலங்கை மக்களின் அவலம் குறித்து சொல்லத் தேவையில்லை.

இலங்கையில் மின் கட்டணம் ஒரு யூனிட்டுக்கு ரூ 47 (இந்திய ரூபாய் ரூ 22) வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்போது இலங்கை ரூபாய் சுமார் 10,000 கோடியாக உள்ள மின்வாரியத்தின் நஷ்டம், சுமார் 4,000 கோடியாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் சிங்கள இனவெறி ராஜபக்சே அரசு, இந்தியா, பாகிஸ்தான், சீனா, அமெரிக்கா போன்ற அரசுகளின் துணையோடு வடக்கு, கிழக்கு பகுதிகளில் வசிக்கும் தமிழர்களுக்கு எதிராக பெருமளவிலான போரை நடத்தியது. நாட்டில் ‘அமைதி’யை நிலைநாட்டி விட்டதாக மார் தட்டியது. ஆனால் போரை சாக்கிட்டு இலங்கையின் பொருளாதாரத்தில் கணிசமான பங்கு இராணுவத்திற்கு செல்கிறது. மேலும் தற்போதைய துருப்புகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இந்த இராணுவ அச்சுறுத்தலை தமிழ் மக்கள் சந்திக்கும் போது இதற்கான பொருளாதார நட்டத்தை எல்லா மக்களும் சுமக்க வேண்டியிருக்கிறது.

இந்தியா, இலங்கை ஒப்பந்தம்
2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவும் இலங்கையும் திரிகோணமலையில் 500 மெகாவாட் அனல் மின் நிலையம் அமைப்பதற்கான ஒப்பந்தம் போட்டுக் கொண்டன.

இதன்படி இலங்கையில் சிங்கள இனவெறி என்பது அங்குள்ள எல்லா தேசிய இன மக்களுக்கும் துன்பத்தையே தரும் என்பதை இந்த மின்கட்டண உயர்வை வைத்தும் புரிந்து கொள்ளலாம்.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை பொருளாதாரத்துக்கு வெளிநாடுகள் ஏராளம் நிதி உதவிகள் வழங்குவதாக சொல்லப்படுகிறது. ஆனால், நடைமுறையில் ஆளும் வர்க்கத்தால் மக்கள் மீது நடத்தப்படும் இராணுவ தாக்குதல்களைத் தொடர்ந்து பன்னாட்டு நிதி நிறுவனங்களின் பொருளாதாரத் தாக்குதல்களும் நடக்கின்றன என்பதுதான் இந்த மின்கட்டண உயர்வின் பொருள். சர்வதேசக் கடனும், ஏனைய நிதி உதவிகளும் அரசுக்கு இத்தகைய நிபந்தனையை போட்டுக்கொண்டுதான் வருகின்றன.

தமிழர்கள்தான் இலங்கையின் முன்னேற்றத்துக்கு எதிரானவர்கள், தமிழர்களின் உரிமைப் போராட்டங்கள்தான் நாட்டை பின்தங்கிய நிலையில் வைத்திருக்கின்றன என்று பெரும்பான்மை சிங்களர்கள் மத்தியில் இனவெறியைத் தூண்டி விட்ட ஆளும் வர்க்கங்கள் தாம் அனைத்து மக்களுக்கும் எதிரானவர்கள் என்ற நிரூபித்துக் கொண்டிருக்கின்றன. உலகளாவிய ஏகாதிபத்திய நிதி நிறுவனங்களின் உத்தரவுப் படி செயல்படுத்தப்படும் தனியார்மய, தாராளமய, உலக மய பொருளாதரக் கொள்கைகளை அமல்படுத்தி மக்கள் மீது பொருளாதார சுமைகளை ஏற்றி வைக்கின்றன.

ராஜபக்சே அரசு தமிழ் மக்களை மட்டுமல்ல சிங்கள மக்களையும் சேர்த்தே வதைத்து வருகிறது என்பதற்கு இந்த மின்கட்டண உயர்வு ஒரு எடுத்துக்காட்டு. இனி காசு உள்ளவன்தான் அங்கே மின்சாரத்தை பயன்படுத்த முடியும். இந்தியாவிலேயே பல நகரங்களில் இந்த நிலைமையை பார்க்க முடியும். தில்லி, மும்பை போன்ற நகரங்களில் மின்கட்டணம் என்பது அதிகம். ஆனாலும் தெற்காசிய நாடுகளில் இலங்கையில்தான் மின் கட்டண உயர்வு மிக அதிகம்.

இன உரிமைக்காக போராடும் ஈழத்தமிழ் மக்கள் இத்தகைய பொருளாதார அடக்குமுறைக்கு எதிராக சிங்கள உழைக்கும் மக்களையும் இணைத்துக் கொண்டு போராட வேண்டும். அப்படி போராடும் சிங்கள மக்களையும் ஆதரிக்க வேண்டும். இறுதியில் இன உரிமையின் நலன் என்பது பொருளாதார விடுதலையில்தான் அடங்கியுள்ளது என்பதோடு, குறிப்பிட்ட பிரிவு மக்களின் துன்பத்தை மற்ற பிரிவு மக்களுக்கு இத்தகைய போராட்டங்களே அடையாளம் காட்டி இணைய வைக்கும்.

மேலும் படிக்க

 1. துரதிட்டமான ஒரு உண்மை: நீண்டகால யுத்தத்தால் மனம் மரத்துப் போன நிலையிலும் மாறி மாறி பல ஆள்பவர்களின் கட்டளைகளிற்குக் கீழ்ப்படிந்தே வாழ்ந்ததினாலும் இதற்கெல்லாம் குரல் எழுப்பும் நிலையில் நாங்கள் இல்லை.
  யாரோ ஒரு பல்கலைக்கழக மாணவன் 1986-1990 களில் எழுதிய கவிதையின் சில வரிகள் இவை:
  எங்களை ஒன்றும் சொல்லாதே நண்பா
  நாங்கள் மேசை மீது ஓங்கிக் குத்திவிட்டு
  ஓய்தலுற விதிக்கப்பட்டோம்

  இந்த நிலையில் தான் இலங்கை மக்கள் இருக்கிறார்கள். தலைமை தாங்கவும் சரியான கட்சிகள் இன்னமும் வெளித்தெரியுமளவு வளரவில்லை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க