25 வயதான லீனா மரியா பால் ஒரு மலையாள திரைப்பட நடிகை. கடந்த மே 28 அன்று தெற்கு டெல்லியில் உள்ள பண்ணை வீடு ஒன்றில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் இரு தொழிலதிபர்களை ஏமாற்றியதாக 3 பிரிவுகளின் கீழ் அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது நண்பர் பாலாஜி என்ற சுகாஸ் சந்திரசேகர் தப்பி விட்டிருக்கிறார்.
அந்த பண்ணை வீட்டிலிருந்து ஒன்பது விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ், ஆடி ரக கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. அவற்றின் மதிப்பு ரூ 19 கோடி. இத்துடன் தலா ரூ 1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புடைய உயர் ரக கைக்கடிகாரங்கள் 80-ம் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வீட்டுக்கு முன்னாள் ராணுவத்தினர் மூவர் உள்ளிட்ட 6 பேர் கொண்ட பாதுகாப்புப் படை இருந்ததாம். அவர்களில் நால்வர் வைத்திருந்த ஆயுதங்களுக்கு முறையான லைசென்சு வேறு கிடையாதாம். கடந்த மே 12 அன்று இந்த வீட்டை வாடகைக்கு எடுத்துள்ள இவர்கள் அதற்கு தரும் மாத வாடகை மட்டும் ரூ. 4 லட்சம்.
தப்பி விட்ட சுகாஸ் சாதாரண நபரல்ல
- அவர் மீது சிந்தாதிரிப்பேட்டை காவல்நிலையத்தில் 2009-ல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி என்று கூறி ஆள் மாறாட்டம் செய்ய முயன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெங்களூருவை சேர்ந்த சுகாஸ் தனது நண்பரும் முன்னாள் முதல்வர் குமாரசுவாமியின் மகனுமான நிகில் கவுடா என தன்னை சொல்லிக் கொண்டு ஒரு தொழிலதிபரிடம் ரூ. 1 கோடியை ஏப்பம் விட்டிருக்கிறார்.
ஒரு பரிமாற்றம் நடந்த பிறகு தனது பெயரையும், சிம் கார்டையும் மாற்றிவிடும் சுகாஸ் தனது இருப்பிடத்தை வேறு மாநிலத்துக்கு மாற்றிக் கொள்வார்.
திரைப்பட வாய்ப்பு தருவதாக சொல்லி ஏமாற்றி மரியா பாலை ஒரு ஆடம்பர வாழ்க்கைக்கு பழக்கப்படுத்தியிருக்கிறார் சுகாஸ். சொகுசு வாழ்க்கையும், அது தரும் சுகமும் அதற்காக மோசடியில் ஈடுபடுவது தவறில்லை என்ற நிலைக்கு மரியா பாலை மாறச் செய்கிறது. பின்னர் நடந்த மோசடிகளில் மரியா பால் சம பங்காளியாக மாறி விடுகிறார். இருவரும் திருமணமும் செய்து கொள்கின்றனர்.
- கொச்சியை சேர்ந்த இமானுவேல் சில்க்ஸின் உரிமையாளரிடம் அவரது கடைத் திறப்பு விழாவுக்கு பிரபல நடிகைகளைக் கூட்டி வருவதாகச் சொல்லி பணம் வாங்கி விட்டு கம்பி நீட்டியிருக்கின்றனர்.
- ஒப்பந்த அடிப்படையில் உடைகள் தைத்து தருவதாக பத்திரிகைகளில் விளம்பரம் செய்திருந்தத சென்னையைச் சேர்ந்த ஸ்கைலாக் நிறுவன உரிமையாளர் சக்கரவர்த்தியை சுகாஸ் கர்நாடக மாநில ஐ.ஏ.எஸ் அதிகாரி ஜெயக்குமார் என்றும், மரியா பால் அவரது உதவியாளர் என்றும் நடித்து தொலைபேசி வழியாக தொடர்பு கொள்கிறார்கள். கர்நாடக அரசின் போக்குவரத்து, உள்ளாட்சித் துறை ஊழியர்களுக்கு சீருடை தைப்பதற்கான ரூ 400 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாகச் சொல்லி அதற்கு முன்வைப்புத் தொகையாக தான் சொல்லும் வங்கிக் கணக்கில் ரூ.62,47,016 ஐ கட்டச் சொல்லி உள்ளார். பணத்தை கட்டிய பிறகு எந்த ஒப்பந்தமும் நடக்கவில்லை.
- சென்னை அம்பத்தூரை சேர்ந்த சானிடரி நாப்கின் தயாரிக்கும் எந்திரங்களை விற்பனை செய்யும் பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் தம்பதியிடம் ரூ.360 கோடி மதிப்பிலான கர்நாடக மாநில பெண்களுக்கான இலவச நாப்கின் வழங்கும் திட்டத்திற்கான ஒப்பந்தத்தைப் பெற்றுத் தருவதாக கூறி அதற்கு வைப்பு நிதியாக ரூ.19 கோடி கேட்டிருக்கிறார் சுகாஸ்.
நம்பிக்கையை பெறுவதற்காக இவர் கர்நாடக மாநில தலைமைச் செயலகம் அமைந்துள்ள விதான் சௌதா பகுதியை சேர்ந்த லேண்ட்லைன் ஃபோனில் வருவாராம். மறுமுனையில் அரசு அலுவலகம் என்று உறுதி செய்யும் மரியா பால் இணைப்பை ஐ.ஏ.எஸ் அதிகாரியாக நடிக்கும் சுகாஸுக்கு மாற்றித் தருவாராம். இதை நம்பிய பாலசுப்ரமணியமும் பணத்தை தர முன்வந்திருக்கிறார்.
ஆனால் கொடுக்கும் அளவுக்கு அவரிடம் பணம் இல்லை. சூழலைப் புரிந்துகொண்ட சுகாஸ் அம்பத்தூர் கனரா வங்கியின் மேலாளரை தொலைபேசியில் அழைத்து பாலசுப்ரமணியத்துக்கு கடன் வழங்கச் சொல்லி இருக்கிறார். வங்கி மேலாளரால் ரூ 50 லட்சத்துக்கு மேல் கடனுக்கு ஒப்புதல் வழங்க இயலாது என்ற போதிலும் அவரை தனது பேச்சு வசியத்தால் மாற்றி இருக்கிறார் சுகாஸ். போதாத குறைக்கு வங்கி மேலாளரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பரிந்துரைக்க வைத்துள்ளார். அரசு ஒப்பந்தம்தானே, லோன் கொடுங்கள் என வீட்டாரைப் பேச வைத்துள்ளார் சுகாஸ்.
கனரா வங்கி துணைப் பொது மேலாளர் இம்மோசடியை புரிந்துகொண்டு புகார் கொடுத்திருக்கிறார். வங்கிக் கணக்குகளை முடக்குவதற்குள் ரூ 12 கோடியை ஆட்டையைப் போட்டு முடித்திருந்தார் சுகாஸ்.
வங்கி நிர்வாகம் கொடுத்த புகாரின்பேரில் வங்கி மேலாளர் ஜெகதீஷ், கடன் வாங்கிய பாலசுப்ரமணியம், சித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் மார்ச் 20-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அப்போதும் தன்னுடன் ஃபோனில் பேசியவர் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரிதான் என உறுதியாக சொல்லிக் கொண்டிருந்தார் வங்கி மேலாளர். அவரது புகைப்படத்தை காட்டி, துரை தயாநிதி பெயரால் ஏமாற்றியதை எல்லாம் போலீசார் சொன்ன போதும் கூட அவர் நம்பத் தயாராக இல்லை.
ஆட்டையைப் போட்ட பணத்துடன் டெல்லிக்குப் போய் பண்ணை வீடு, ஆடம்பர கார், கேளிக்கைகள் என வாழத் துவங்கிய பிறகு இருவரது கையும் அரிக்கத் துவங்கியது. அங்கும் ஒரு ஏமாற்று வேலையை துவங்கினர். ஏமாந்தவர் பணத்தை திரும்பப் பெற முயன்ற போது போலீசுக்கும் தகவல் தந்து விட்டார். போலீசார் சுகாஸைப் பிடிக்க திட்டமிட்டனர். கடைசி நேரத்தில் அவருக்கு போலீசிலிருந்தே தகவல் கசியவே மரியா பாலை அம்போவென விட்டுவிட்டு தப்பி விட்டார்.
ஒரு இண்டர்காம் போர்டும், பெண் உதவியாளரும் இருப்பதாக காட்டிக் கொண்டு ஐ.ஏ.எஸ் என ஒரு முதலாளியை மட்டுமின்றி வங்கி மேலாளரையும் நம்ப வைத்து ஏமாற்றியுள்ளான் விகாஸ். விவசாயக் கடனுக்கோ, கல்விக் கடனுக்கோ ஒரு சில லட்சங்களை வாங்குவதற்கே அதைக் கொண்டு வா, இதைக் கொண்டு வா என அலைக்கழிக்கும் வங்கி நேரில் பார்க்காத ஒருவனை நம்பி ரூ 19 கோடி கடன் கொடுத்துள்ளது என்றால் அதிகார வர்க்கத்தின் சட்ட திட்டங்களின் லட்சணத்தை புரிந்து கொள்ளலாம். சக்கரவர்த்தி, பாலசுப்பிரமணியன் போன்ற முதலாளிகள் அரசு ஒப்பந்தம் என்ற பெயரால் கொள்ளை லாபம் பார்க்கலாம் என்ற நப்பாசையில் விழுந்திருக்கின்றனர்.
சினிமா உலகில் சம்பாதிப்பதைக் காட்டிலும் ஏமாற்றி சம்பாதிப்பது எளிது என்பதைப் புரிந்துகொண்ட லீனா பால் அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
தனியார்மயம் வந்த பிறகுதான் இதுபோன்ற மோசடிகளுக்கு வாய்ப்பே வழங்கப்பட்டுள்ளது. சீருடை தைப்பது அல்லது நாப்கின் தயாரிப்பது என எல்லாவற்றையும் அரசே ஒரு பொதுத்துறை நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தால் இந்த மோசடி எப்படி நடந்திருக்க முடியும்?
இராணுவத்திற்கு தேவையான ஹெலிகாப்டர்கள் துவங்கி அரசுப்பணியாளர் சீருடை வரை தனியார் முதலாளிகள் இப்படித்தான் இலஞ்சம் கொடுத்து ஆர்டர் பெறுகின்றனர். முதலாளிகள் வளைப்பதற்கும், அவர்களுக்காக வளைந்து கொள்வதும்தான் நமது ‘ஜனநாயகத்தின்’ அழகு. அந்த அழகுதான் இத்தகைய மோசடி சீமான்களையும் சீமாட்டிகளையும் பெற்றுப் போடுகிறது.
ஒரு தொலைபேசி, ஒரு பெண் குரல், ஒரு நுனி நாக்கு ஆங்கிலம் மூன்றும் இருந்தால் போதும். கொள்ளையை நீங்கள் கோடிகளில் நடத்தலாம்.
இந்த மரியா பால் ஒரு பல் மருத்துவர். கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு பல் மருத்துவம் பயில வரும் பெண்களில் இருவது சதம் பேர் படிக்கிற காலத்திலேயே தவறான வழிகளில் ஈடுபடுவதை கண்டு அதிர்ச்சி கொண்டு முடிந்தவரை அவர்களை காப்பாற்ற முயன்றிருக்கிறேன். பெரும்பாலும் அது தோல்வியில் முடிய அவர்களின் பெற்றோரே காரணமாக இருந்தனர்.நடுத்தர வர்க்க கனவுகளின் தாக்கத்தால் தற்கொலை அதிகமாக இருந்த கேரளத்தில் இப்போது அது குறைந்து விட்டது. காரணம் மக்கள் வரம்புகளை மீறி வாழ துணிந்து விட்டனர். தங்கள் குழந்தைகளையும் வரம்புகளை மீற பழக்கிவிட்டனர். குடும்பம் மற்றும் சமூக அமைப்பு சிதைவின் விளிம்பில் நிற்கிறது. நுகர்வு கலாச்சாரம் தன் விஷத்தை நன்றாகவே மக்களின் உதிரத்தில் செலுத்தி விட்டது.
//சீருடை தைப்பது அல்லது நாப்கின் தயாரிப்பது என எல்லாவற்றையும் அரசே ஒரு பொதுத்துறை நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தால் இந்த மோசடி எப்படி நடந்திருக்க முடியும்?///
முயற்சி செய்து பார்த்தால் தான் இந்த மோசடி வேறு எப்படி நடந்திருக்கம் என்று புரியும். எல்லாவற்றையும் பொது துறையே செய்தால் எப்படி இருக்கும் என்பதை ’அனுபவித்தால்’ தான் புரியும்.
//சீருடை தைப்பது அல்லது நாப்கின் தயாரிப்பது என எல்லாவற்றையும் அரசே ஒரு பொதுத்துறை நிறுவனம் தொடங்கி தயாரித்திருந்தால் இந்த மோசடி எப்படி நடந்திருக்க முடியும்?///
ஆக, அம்மா இட்லி , காய்கறி கடை போல எல்லா தொழிலையும் அரசாங்கமே நடத்த வேண்டும். பிரமாதம்! நீங்கள் ஏன் நார்த் கொரியா சென்று வரக்கூடாது