privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !

சரிதா நாயர் கும்பலின் 10,000 கோடி கேரள ஊழல் !

-

கேரள அரசியல் தமிழ்நாடு போல இல்லை. போலி கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி எளிமையாக இருப்பார்கள், ஊழல் செய்ய மாட்டார்கள் என்று முன்பெல்லாம் சில அறிஞர் பெருமக்கள் பேசுவார்கள். அவர்களை கிண்டல் செய்யும் வண்ணம் சமீப காலமாக ஏராளமான ஊழல் செய்திகள் கேரளத்தில் பொங்கி வழிகின்றன.

லாட்டரி சீட்டு அதிபர் மார்ட்டினிடம் 2 கோடி ரூபாய் நன்கொடை பெற்ற சிபிஎம்மின் பினரயி விஜயன் முதல் இப்போது சரிதா நாயர் என்ற தொழில் முனைவரிடம் பல்லிளித்து நிற்கும் காங்கிரஸ் தலைவர்கள் வரை கேரளமும் மைய நீரோட்டத்தில் இணைந்திருப்பதை தனியார் மயமாக்கலின் சாதனை என்று சொல்லலாம்.

சரிதா எஸ் நாயர்
சரிதா எஸ் நாயர்

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க பேனல் அமைப்பது, காற்றாலை அமைப்பது போன்ற மாற்று மின் உற்பத்திக்கான வழிமுறைகளின் பெயரால் சரிதா நாயரும் அவரது கூட்டாளிகளும் கேரள மாநிலத்தில் அரங்கேற்றிய மிகப்பெரிய நிதி மோசடி ஆளும் காங்கிரசு கூட்டணியை சந்தி சிரிக்க வைத்துள்ளது.

ஆலப்புழை, செங்கனூரிலுள்ள சாதாரண குடும்பத்தை சேர்ந்த சரிதா எஸ் நாயர் கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு திருமணம் செய்து கொள்கிறார். கேரள ஹவுசிங் ஃபைனான்சு என்ற தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சேரும் சரிதா உதவி மேலாளர் பதவி வரை எட்டுகிறார். 2004-ல் பண மோசடி செய்ததாக அந்த நிறுவனத்திலிருந்து நீக்கப்படுகிறார்.

2006 துவக்கத்தில் தனது முதல் கணவருடன் விவாகரத்து பெற்றுவிட்டு தனது நண்பர் அரசு அதிகாரியான பிஜூ ராதாகிருஷ்ணனுடன் சேர்ந்து வாழத் துவங்குகிறார். சரிதாவுடன் வாழ்வதற்காக தனது முன்னாள் மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டில் பிஜூ கைதாகி ஜாமீனில் வெளியில் வந்து புதிய வாழ்க்கையை தொடருகிறார்.

இவர்கள் இருவரும் காற்றாலை உற்பத்தியில் முதலீடு செய்யக் கோரி கேரள, தமிழக தொழிலதிபர்களை அணுகி இலட்சக் கணக்கில் பணம் திரட்டுகின்றனர். பிறகு காற்றாலை அமைத்துத் தராமல் கம்பி நீட்டுகின்றனர். வடவள்ளி, நீலகிரி எனத் தொடர்ந்து இந்த மோசடிகளில் ஈடுபட்ட அவர்கள் 2008-ல் பிடிபட்டனர்.

ஜாமீனில் வெளி வந்த பின்னர் சோலார் பேனல் வைத்து தருவதாக கேரளாவில் பணம் திரட்டத் தொடங்கினர். இப்போது மோசடி கோடிக் கணக்கான ரூபாய்களில் நடந்தது. தொழிலதிபர்களையும் நடுத்தர வர்க்கத்தையும் நம்ப வைக்க அப்போது ஆட்சியிலிருந்த இடது முன்னணி மற்றும் இப்போது ஆட்சியிலிருக்கும் காங்கிரசு என எல்லோரையும் பயன்படுத்திக் கொண்டார்கள்.

  • 2011-ல் துவங்கிய டீம் சோலார் என்ற பெயரிலான இவர்களது நிறுவனத்தை கோட்டயத்தில் திறந்து வைத்தவர் காங்கிரசைச் சேர்ந்த கேரள கலாச்சார அமைச்சர் கே.சி. ஜோசப்.
  • மத்திய புதுப்பிக்கத்தக்க எரிபொருள் துணை அமைச்சரான கே.சி.வேணுகோபாலுடன் சரிதாவின் இரவு நேர உரையாடல்கள் வெளியாகியிருக்கின்றன.
  • தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிஜூ கடந்த செப்டம்பரில் தான் முதல்வரை சந்தித்து கேரள வன, சுற்றுச்சூழல் துறை முன்னாள் அமைச்சர் கே பி கணேஷ்குமார் மற்றும் சரிதாவின் முறைகேடான உறவு பற்றி முறையிட்டதாக சொல்லி இருக்கிறார்.
  • உம்மன் சாண்டியின் நெருங்கிய நண்பரான தாமஸ் குருவில்லா கடந்த டிசம்பர் 12-ல் டெல்லியில் நடந்த விஞ்ஞான் பவன் நாரில் சரிதாவை சாண்டியுடன் சந்திக்க தான் ஏற்பாடு செய்ததாக டிவி பேட்டி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
  • எதிர்க்கட்சி துணைத்தலைவர் கொடியேறி பாலகிருஷ்ணனை மாமா என்று கூப்பிடுமளவுக்கு அவருடன் சரிதா எஸ்.நாயர் நெருக்கமாம்.

இரண்டு ஆண்டுகளுக்குள் சரிதா நாயர், பிஜூ தம்பதியினர் செய்த மோசடி ரூ 10 ஆயிரம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

தங்களிருவரையும் ஆசிய வளர்ச்சி வங்கியின் செயல் திட்ட அலுவலர் மற்றும் ஆடிட்டர் என்றும் சொல்லி கடன் பெற்றுத்தர முன்வைப்புத் தொகை வசூலித்திருக்கிறார்கள். ஒரு கட்டட நிபுணரிடம் ரூ 40 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

கைது செய்யப்படும் சரிதா நாயர்
கைது செய்யப்படும் சரிதா நாயர்

சரிதா-பிஜூ ஜோடியினர் டீம் சோலார் நிறுவனத்தை மக்களிடம் விளம்பரப்படுத்த ஷாலு மேனன் என்ற நடிகையை ஏற்பாடு செய்திருந்தார்களாம். ஷாலு மேனன் வீட்டில் சோலார் பேனல் பதிக்கிறோம் எனக் கூறி ரூ. 20 லட்சம் வாங்கியிருக்கிறார்கள். இப்போது போலீசு விசாரணையில் ஷாலு மேனனை ஏமாற்றும் எண்ணம் இல்லை என்றும், ஷாலுவை தான் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாகவும் பிஜூ கூறியிருக்கிறார்.

கே. சஜ்ஜத் என்ற தொழிலதிபரிடம் ரூ 40 லட்சத்தை சுவாகா செய்வதற்கு முதல்வர் உம்மன் சாண்டியின் ஆலோசகர் என்று லெட்டர் பேட் கொண்டு வந்துள்ளார் பிஜூ.

பணம் தந்த பிறகும் வேலை நடைபெறுவது போல தெரியாத காரணத்தால் போலீசில் புகார் தெரிவித்தார் சஜ்ஜத். ஜூன் 13-ம் தேதி கைதான சரிதா நாயர் என் கணவர் பிஜூ நாராயணன் சொன்னதன் பேரில்தான் அனைத்தையும் செய்தேன் என வாக்கு மூலம் கொடுத்துள்ளார். ஆனால் கைதாவற்கு முன்பு அவரது செல்போனிலிருந்து செய்யப்பட்ட 70 அழைப்புகளும் முதல்வர் உம்மன் சாண்டியின் உதவியாளர் டென்னி ஜேப்பன் மற்றும் பாதுகாவலர் சலீம் குமாருக்கு போயிருப்பது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டாலும், அவர்களது செல்போனை வழக்கமாக பயன்படுத்துவதே உம்மன் சாண்டிதான் என்று காங்கிரஸ் கட்சிக்காரர்களே சொல்கிறார்கள்.

17-ம் தேதி கோவை ராம்நகர் பகுதியில் பதுங்கியிருந்த பிஜூவை போலீசார் கைது செய்தனர்.

“இதை நாங்கள் சும்மா விட மாட்டோம், உம்மன் சாண்டி கட்டாயம் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவர் வி.எஸ். அச்சுதானந்தன் மீசை முறுக்கினாலும் கேரள முதல்வர் உம்மன் சாண்டி முதல் எதிர்க்கட்சியான மார்க்சிஸ்டுகள் வரை அனைவரும் இந்த மோசடிக்கு துணை போனவர்கள்தான்.

ரியல் எஸ்டேட், பங்குச்சந்தை, புதிய துறைகளில் தொழில் முனைவு என்று உழைக்காமல் பணம் பண்ணக் கூடிய வாய்ப்புகளை உலகமயமாக்கல் சமூக விரோதிகளுக்கு வழங்கியிருக்கிறது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க திட்டமிடும் சரிதா, பிஜூ போன்றவர்கள் அதிகார வர்க்கத்தையும் அரசியல்வாதிகளையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். எளிய பின்னணி கொண்ட இத்தம்பதியினர் மிகச் சாதாரணமாக பத்தாயிரம் கோடி ரூபாய் வரை மோசடி செய்யுமளவுக்கு அதிகார வர்க்க உதவி கிட்டியிருக்கிறது.

சூரியனையும், காற்றையும் வைத்தே ஒரு மோசடித் தம்பதியினர் சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை திரட்டி பட்டை நாமம் போட முடியுமென்றால் நிலம், கனிம வளம் போன்ற உடனடி பலன்களில் இவர்களைப் போன்றவர்கள் எவ்வளவு கொள்ளையடிப்பார்கள் என்பதை விரிக்கத் தேவையில்லை. மதுரை கிரானைட் கொள்ளையன் பிஆர்பி மீதான வழக்குகள் ஆர்ப்பாட்டமாக ஆரம்பித்து தற்போது அமுங்கிய வரலாறும் நமக்குத் தெரியும்.

இன்றைய அரசியல் அமைப்பும், உலகமயமாக்கமும் இத்தகைய ஒட்டுண்ணிகளை ஏராளம் பெற்றெடுத்து உலவ விடுகிறது. அரசியல் கட்சிகளும், அதிகார வர்க்கமும், தொழில்முறை முதலாளிகளும் சேர்ந்துதான் இத்தகைய கொள்ளைகளை நடத்துகின்றனர். படிப்பறிவில் முன்னணி வகிக்கும் கேரளாவும் இதற்கு விதிவிலக்கு அல்ல.

– வசந்தன்

  1. குற்றவாளிகளுக்கு மதமோ, ஜாதியோ, கட்சியோ கிடையாது என்பதை இப்போதாவது உணர்ந்துகொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன். குற்றவாளிகளை குற்றவாளி என்று மட்டும் எழுதவும். ஜாதி, மதம், கட்சிகளைக் குறிப்பிடவேண்டாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க