privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

வன்னியர் சங்கம் உள்ளிட்ட ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய் !

-

1. திருச்சியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம்

இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவின் வன்னிய சாதி வெறியர்களே! என்ற தலைப்பில் திருச்சியில் 06.07.2013 மாலை 6 மணி அளவில் இரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் முன்பு ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய அமைப்பை சேர்ந்த தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள். திருச்சி பகுதி ம.க.இ.கவின் தோழர்.ஜீவா தலைமையேற்று நடத்தினார்.

இவ்வார்ப்பட்டத்தில் இளவரசனின் மரணத்துக்கு காரணமான குற்றவாளிகள் பா.ம.கவைச் சேர்ந்த இராமதாசு, அன்புமணி, காடுவெட்டி குரு ஆகியோரை வன்கொடுமை கொலைக்குற்றத்தின் கீழ் கைது செய்து கடுமையான தண்டனை வழங்கக் கோரியும் வன்னியர் சங்கத்தை தடை செய்யக் கோரியும் இதை உடனடியாக செய்யாவிட்டால் இன்னும் ஆயிரம் ஆயிரம் இராமதாசுகள் சாதிய கொலை வெறியோடு முளைத்துக் கொண்டே இருப்பார்கள் என்றும் இதற்க்கு சாதியை மறுத்து உழைக்கும் மக்கள் ஓர் அணியில் அணிதிரண்டு போராட அறைகூவல் விடுக்கப்பட்டது.

இவ்வார்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்ப்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். பெருவாரியான மக்கள் ஆர்வத்தோடு நின்று கருத்துக்களை கவனித்தனர். மையக்கலைக்குழுவினரின் ஆயிரம் காலம் அடிமை என்றாயே ! அரிசனன்னு பேரு வைக்க யாருடா நாயே ! என்ற பாடல் நின்று கவனித்துக்கொண்டிருந்த மக்களிடம் ஆர்வத்தை தூண்டும் விதமாக இருந்தது.

இவ்வார்ப்பாட்டத்தில் போடப்பட்ட முழக்கங்கள்:

கைது செய்! கைது செய்!
இளவரசன் மரணத்துக்கு
காரணமான குற்றவாளிகள்
பா.ம.க சாதிவெறியர்களை
வன்கொடுமை சட்டத்தின் கீழ்
கைது செய்! கைது செய்!

தடை செய்! தடை செய்!
சாதிவெறியை மூட்டிவிடும்
வன்னிய சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
தடை செய்! தடை செய்!

ஒழித்துக் கட்டுவோம்! ஒழித்துக் கட்டுவோம்!
சாதிவெறியர்களை ஒழித்துக் கட்டுவோம்!
சாதிய குப்பையை தூக்கியெறிந்து
உழைக்கும் வர்க்கமாய் ஒன்றினைவோம்!

விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!
குச்சி கொளுத்தி ராமதாசை,
காடுவெட்டி கயவாளியை,
சாதிவெறி பயங்கரவாதிகளை
விரட்டியடிப்போம்! விரட்டியடிப்போம்!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி : ம.க.இ.க.திருச்சி

2. விழுப்புரம்

விழுப்புரத்தில் 05.07.13- வெள்ளி   மாலை மிகச் சரியாக ஐந்து மணிக்கு கலெக்டர் அலுவலக வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் வி.வி.மு சார்பில் ஒன்பது பேரும், புமாஇமு  சார்பில் இருபது பேரும் கலந்து கொண்டனர்.

காவல் அனுமதி வாங்காமல், அனைத்து பத்திரிக்கை/ தொலைக்காட்சிகளுக்கு முறையாக தகவல் தந்தோம். திடீரென கலெக்டர் அலுவலக வாயிலில் கூடி முழக்கங்களை எழுப்பினோம். ஏப்ரல் 25 அன்று ராமதாசுக்காக போட்ட144 தடையுத்தரவை இரண்டு மாதங்களுக்கு பிறகு மிகசரியாக ஐந்து நாட்களுக்கு முன்னர்தான் வாபஸ் பெற்றார்கள். மாவட்ட ஆட்சியர் collector அலுவலக வாயில் சமீப காலமாக யாருக்கும் கூட்டங்களுக்கு அனுமதியும் தருவதில்லை. இச்சூழலில் நாம் திடிரென ஆர்ப்பாட்டம் நடத்தியதும், முதலில் திகைத்த போலீஸ் சுதாரித்துகொண்டு நம்மை மிரட்ட ஆரம்பித்தனர். “அனுமதி இல்லாமல் நீங்கள் எப்படி இங்கு வந்தீர்கள், உங்களை சும்மா விடமாட்டேன், உடனே கலைந்து செல்லைவில்லை எனில் கடும் நடவடிக்கை எடுப்பேன்…ஆ,ஊ..” என சத்தம் போட்டு பார்த்தார் காவல் ஆய்வாளர். பதிலுக்கு நாமும் முழக்கத்தை நிறுத்தாமல்,  “நடவடிக்கை எடுப்பதாக இருந்தால் ராமதாஸ்,  அன்புமணி, காடுவெட்டி குரு போன்றோர் மீது நடவடிக்கை எடு! வன்னியர் சங்கத்தை தடை செய்! ” என்று   வாதம் செய்துகொண்டே ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தோம். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளும் திமு திமுவென்று குவிந்து செய்தி சேகரிக்க. வழக்கத்திற்கு மாறாக மக்கள் அதிகளவில் கூட ஆரம்பித்தனர்.

பீதியடைந்த போலீசு வலுக்கட்டாயமாக தோழர்களை இழுத்து கைது செய்தது. கைது செய்யப்பட்ட தோழர்களை ஜிப்பிலும், ஷேர் ஆட்டோவிலும் தாலுக்கா ஸ்டேஷன் அழைத்து சென்றார்கள். ஜீப்பில் முழக்கம் போடும்போது, “உங்களை கைது செய்துள்ளோம். என் கஸ்டடியில் உள்ளீர்கள், முழக்கமெல்லாம் போடக்கூடாது” என்று மிரட்ட தொடங்கினார் ஆய்வாளர். முன்பை விட அதிக சத்தத்துடன் முழக்கம் எழுப்பி எங்கள் உரிமையை நிலைநாட்டினோம். ஜீப்பில் இருந்து இறங்கி ஸ்டேஷன் வாசலில் நின்று முழக்கம் போட்டதும் அவரின் கோபம் உச்ச கட்டத்தை அடைந்து காச்சு, மூச்சு என்று கத்த ஆரம்பித்தார். நாம் அப்போதும் நிறுத்தாமல் உள்வரை  முழக்கம் எழுப்பியபடியே சென்றோம். உங்களை கட்டாயம் ரிமாண்டில் அடிப்பேன் என்று எகிற ஆரம்பித்தார். அது பற்றி எல்லாம் நாம் கவலைபடாமல் நங்கள் செய்தது சரிஎன்று வாதிட்டு வென்றோம். மூணு மணிநேரம் வைத்திருந்து விட்டு ஒன்பது மணிக்கு சொந்த ஜாமீனில் வெளியிட்டார்கள்.

எங்களை கைது செய்து அழைத்து வந்த பிறகும் ஆர்ப்பாட்டம் நடந்த இடத்தில் கூடிய கூட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் கலையவில்லையாம். போலிசை குவித்து மக்களை மிரட்டி கலையவைத்துஉள்ளார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக சக்திகள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விழுப்புரம்

3. மதுரை

துரையில் 6/7/13 அன்று மாலை 5 மணிக்கு தலைமை தபால் நிலையம் அருகில் ம.க.இ.க.,புஜதொமு, விவிமு, புமாஇமு ஆகிய அமைப்புகள் சார்பில் “இளவரசனின் மரணத்திற்கு காரணமான பாமக, வன்னிய சாதி வெறியர்களை வன்கொடுமை, கொலை வழக்கில் சிறையிலடை” என்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்திற்கு மகஇக அமைப்பாளர் தோழர். இராமலிங்கம் தலைமை தாங்கினார். விவிமு தோழர். ஆசை மனித உரிமை பாதுகாப்பு மையம் மாவட்ட கிளை செயலர் தோழர்.லயனல் அந்தோனிராசு ஆகியோர் கண்டன உரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில் சுமார் 25 பேர் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : மக்கள் கலை இலக்கியக் கழகம், மதுரை

4. உசிலை (கூடுதல் படங்கள்)

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் : விவசாயிகள் விடுதலை முன்னணி, உசிலை

5. தருமபுரி, விழுப்புரம் போஸ்டர்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

6. பத்திரிகைச் செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]