மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் போராட்டத்திற்கு வெற்றி! பணிந்தது கட்டணக் கொள்ளையடித்த திருச்சி பாய்லர் பிளாண்ட் நர்சரி பள்ளி!
திருச்சியை அடுத்துள்ள கைலாசபுரத்தில் பாய்லர் பிளாண்ட் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் 5-வது வரையுள்ள வகுப்புகளில் சுமார் 1200 குழந்தைகள் படித்து வருகிறார்கள். திருச்சி பாய்லர் தொழிற்சாலையால் கட்டிடம் கட்டித் தரப்பட்டு திருப்பராய்த்துறை ராமகிருஷ்ணா தபோவன மடத்தின் நிர்வாகத்தின் கீழ் இப்பள்ளி இயங்கி வருகிறது. அனைத்து வகுப்புகளிலும் அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தைவிட அதிகம் வசூலிப்பதாக நமக்கு தகவல் கிடைத்தது. அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்த போது அச்செய்தி உண்மையென்று தெரிந்தது.
ஏற்கனவே கடந்த ஜூலை மாதம் 1-ம் தேதி அரை நாள் பள்ளி செயல்படுவதாக அறிவித்திருந்தது. நாம் போராடுவோம் என்று அறிந்து நம் போராட்டத்தை சீர்குலைக்க நிர்வாகம் முழுநாள் பள்ளி செயல்படும் என்று திடீரென மாற்றியது. அன்று காலை 9 மணியளவில் மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்களும் தோழர்களும் அப்பள்ளி வாசலில் கூடினோம். தங்கள் குழந்தைகளை பள்ளிக்குள் அனுப்பிவிட்டு பள்ளி முடிந்தவுடன் தங்கள் குழந்தைகளை திரும்ப அழைத்துச் செல்லலாம் என்று வெளியில் பெற்றோர்கள் அமர்ந்திருந்தனர். அவர்களை சந்தித்து இணையம் மூலம் எடுக்கப்பட்ட கட்டண பட்டியலை காட்டி, கூடுதல் கட்டணம் வசூல் செய்யக்கூடாது என்றும் அவ்வாறு ஏற்கனவே கூடுதலாக வசூல் செய்த கட்டணத்தை திரும்ப பெற போராட வாருங்கள் என்றும் அழைத்தோம்.
தாங்கள் பள்ளியை எதிர்த்து போராடினால் தங்கள் குழந்தைகளை பழி தீர்த்துவிடுவார்கள் என்று அஞ்சி பெரும்பான்மை பெற்றோர்கள் பயந்தார்கள். பலரும் ”நாம போராடிருவோம் சார். அது நம்ம புள்ளைங்களத்தானே பாதிக்கும்”, என்று சொல்லி நம் அழைப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. நாம் அவர்களிடம், ”கொள்ளையடிக்கிற பள்ளி நிர்வாகிகள் தைரியமா இருக்காங்க, பாதிக்கப்பட்ட நாம் ஏன் பயப்படணும்”, என்று தெம்பூட்டினோம். பெற்றோர்கள் ஒருவருக்கொருவர் விவாதித்தனர். தயங்கியவர்கள் ஒவ்வொருவராக நம் தோழர்களை நோக்கி வந்தார்கள்.
குற்றத்தை தடுக்கவென்று நியமிக்கப்பட்டுள்ள பெல் விஜிலன்ஸ் அதிகாரிகளுக்கு அப்பள்ளியின் பகல் கொள்ளை கண்ணுக்கு தெரியவில்லை. ஆனால், கட்டணக் கொள்ளை என்ற குற்றத்தைத் தடுக்க பெற்றோர்களை போராட அணி திரட்டிய நம்மை போலிசோடும், செக்யூரிட்டிகளோடும் வந்து மிரட்டிப்பார்த்தார்கள். பணியாத காரணத்தால் நம்மை அப்பள்ளி தலைமை ஆசிரியையிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு கூறி அழைத்துச் சென்றார்கள்.
ஆரம்பத்தில், ”இந்தி சொல்லித் தரோம். கம்ப்யூட்டர் சொல்லித் தரோம். அந்த டீச்சருக்கெல்லாம் எப்படி சம்பளம் தர்றது”,என்று நம்மிடமே நியாயம் கேட்டார் தலைமை ஆசிரியை. நம் தோழர்கள், ”நீங்க ஆயிரம் ரூபாய் சம்பளம் கொடுத்துவிட்டு, டீச்சருக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுத்தேன்னு கணக்கு சொல்லிதானே, இந்த கட்டணத்தை நீதிபதி சிங்காரவேலு நிர்ணயம் செய்தார். திரும்பவும் தனியா ஏன் ஹிந்தி டீச்சருக்கு, கம்யூட்டர் டீச்சருக்குன்னு காசு பிடுங்கிறீங்க?” என்று கேட்டோம். தான் சொன்ன பொய் அம்பலப்பட்டு போன பின்னர் அத்தலைமை ஆசிரியை, ”கட்டணத்தை குறைக்கும் அதிகாரம் எனக்கில்லை. தபோவன சாமியார்கள்தான் தீர்மானிப்பார்கள்”, என்று சொல்லி தப்பிக்கப் பார்த்தார். போலிசாரும் தபோவன சாமியாரை பார்த்து பேசச் சொன்னார்கள்.
மறுத்து விட்டு வெளியில் வந்த நாம் அப்பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களுடன் சேர்ந்து அப்பள்ளியை முற்றுகையிட்டோம். கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டுமென்றும் கல்வியை கடைச் சரக்காக்க விடமாட்டோம் என்றும் முழக்கமிட்டோம். பேச்சு வார்த்தை நடத்த சாமியார் வருவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் மழலையர் மற்றும் தொடக்கக் கல்வி உதவி அலுவலர் ஜகனாதன் வந்து சேர்ந்தார். கட்டணக் கொள்ளையடித்த போது தடுக்க வராதவர் அப்பள்ளியை முற்றுகையிடப்பட்ட பின்னர் பள்ளியை காக்க பறந்து வந்தார். என்னே கடமை உணர்ச்சி!
பேச்சுவார்த்தையில் நாம் கட்டணக் கொள்ளைக்கு எதிராக விடாப்பிடியாக இருந்த காரணத்தால் வேறு வழியின்றி அவர் நமது வழிக்கு வந்தார். தலைமை ஆசிரியையிடம், ”அரசு நியமித்த கமிட்டி நிர்ணயித்த கட்டணத்திற்கு அதிகமாக வசூல் செய்யப்படமாட்டாது”, என்றும், ”கூடுதலாக வசூலித்த கட்டணம் பெற்றோர்களுக்கு திருப்பித் தரப்படும்”, என்றும், ”அரசு நிர்ணயித்த கட்டண விபரங்கள் தகவல் பலகையில் எழுதிப் போடப்படும்”, என்றும் எழுதி நம்மிடம் கொடுக்கச் சொன்னார். எழுதிக் கொடுத்த அக்கடித்ததில் அந்த அதிகாரியும் சாட்சிக் கையெழுத்துப் போட்டார்.
அக்கடித்ததை அனைத்துப் பெற்றோர்களிடமும் காட்டினோம். தடுப்பது சாத்தியமில்லை என்று கருதிய கட்டணக் கொள்ளையை மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைமையில் திரண்டு போராடி தடுத்துவிட்டோம் என்று மகிழ்ந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் நம்பிக்கையோடு மாணவர்களின் கல்வியுரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் உறுப்பினரானார்கள். நம் போராட்டத்தைத் தடுக்க வந்த பெல் செக்யூரிட்டிகளில் சிலரும் அச்சங்கத்தில் உறுப்பினரானார்கள்.
விரைவில் திருச்சியில் உதயமாகப் போகிறது பெற்றோர் சங்கம் – கல்வி தனியார்மயத்திற்கெதிராக.
இந்த திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவனம் என்பது காலஞ்சென்ற சித்பவானந்தா எனும் சாமியாரால் துவங்கப்பட்டது. சி.சுப்ரமணியத்தின் உறவினரான இந்த சாமியார் ஆர்.எஸ்.எஸ்-ன் புரவலராகவும் இருந்தார். இவருக்கு சொந்தமான பள்ளி, கல்லூரிகளில் இந்துமதவெறியர்களின் முகாம்கள் நடக்கும். ஆக முற்றும் துறந்த சாமியார்கள் என்றாலும் கல்விக் கொள்ளை என்று வரும் போது இவர்களும் ஏனைய முதலாளிகளுக்கு சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்டுகிறார்கள். நம்மைப் பொறுத்தவரை கல்விக் கொள்ளையடிப்பதில் சாமியார், சம்சாரி என்ற வேறுபாடெல்லாம் இல்லை. வேண்டுமானால் குடும்பம் வைத்திருக்கும் ரவுடி, ஆசிரமம் வைத்திருக்கும் ரவுடி என்று பிரிக்கலாம். மற்றபடி இவர்களது கொள்ளையடிக்கும் கீதைக்கு எதிராக போராட்டம் எனும் விளக்கத்தை நாம் தொடர்ந்து எழுத வேண்டும்.
தகவல்
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்-தமிழ்நாடு,
திருச்சிக் கிளை
திருப்பராய்த்துறை தபோவனம் சித்பவானந்தருக்குப் பிறகு சீர்கெட்டுப்போய் விட்டது.இவர்களின் அரசியல் இருக்கிறதே இந்திய அரசியல்வாதிகளை விட மிகக் கொடூரமானவர்கள். இரக்கம், பண்பு எதுவும் இல்லாத அரக்க குணம் படைத்தவர்கள் இந்த தபோவனத்து சில சாமியார்கள். இதை நான் அங்கு இருந்தபோது அனுபவபூர்வமாக அறிந்ததால் எழுதுகிறேன்.
இந்த மடத்தின் பள்ளிகள் மாணவர்களை மூளை சலவை செய்து அடி முட்டாள்களாக, சுயநலவாதிகளாக வெளியே அனுப்புகிறது. சமூகத்தில் எந்த ஒரு உரையாடலுக்கும் பங்கு கொள்ள மறுப்பது என்பது இந்த பள்ளி மாணவர்களின் சிறப்பு.இவை சமூகத்தால் ஒதுக்கப்பட வேண்டிய பள்ளிகள். சமயம்,ஆன்மிகம் கற்று தருகிறார்கள் என்று பெற்றோர் தவறாக நினைக்கிறார்கள். தயவு செய்து ஒரு உளவியல் நிபுணருடன் இந்த பள்ளியில் பயின்ற முன்னால் மாணவர் ஒருவரை உரையாட சொல்லி கவனியுங்கள்-விபரீதம் உங்களுக்கு புரியும். இவர்கள் இலவசமாக கற்று கொடுத்தாலும் உங்கள் பிள்ளைகளை அனுப்பாதீர்கள்.
அரசு உத்தரவுக்கு மாறாக, பெற்றோர்களிடம் அதிக கட்டணம் பெற்றதற்காக,நிவாகிகளின் மீது கிரிமினல் வழக்கு போடப்படுமா? பெல்நிறுவனம் இலவச கட்டிடம் கட்டிகொடுத்து ,நிர்வாக குழுவிலும் உப னிர்வாகியாக உள்ளதே ! இப்பொதுள்ள நிர்வாகியை நீக்குமா?
மக்கள் சேவை செய்வதாக கூறுபவர்கள் இப்படி கல்வி கொள்ளை அடிப்பது காலித்தனம். இவர்களது இணைய தளத்தில் இப்பள்ளி பற்றி குறிப்பேதும் இல்லையே. இதில் ஏதேனும் சூட்சுமம் உள்ளதா? (http://rktvm.com/abouttapovan.php)
இந்த பள்ளியை ஒதுக்கி விட்டு புரிந்து கொள்வதற்காக சில அடிப்படை கேள்விகள். உணவு, உடை, உறைவிடம், மருத்துவம் என அடிப்படை தேவைகள் அனைத்தும் கடைச்சரக்காக இருக்கும் போது, கல்வி கடைச்சரக்காவதை மட்டும் குறிப்பாக ஏன் எதிர்க்கிறீர்கள்? கட்டணக் கல்வி என்ற கருத்தையே நீங்கள் எதிர்க்கிறீர்கள். அதை விட்டு விடுவோம். இந்த விஷயத்தில் அரசு/சட்டம் என்ன சொல்கிறது? கொள்ளை லாபம் என்றில்லாமல், சாதாரண லாபம் என்ற வகையில் பள்ளி நடத்த அரசு/சட்டம் அனுமதிக்கிறதா? அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தில் பள்ளி நடத்தினால் கட்டுப்படி ஆகுமா? ஒரு பள்ளி நடத்துவதில் உள்ள வரவு, செலவுகளை பொருளாதார நோக்கில் ஆராயும் கட்டுரை நீங்களோ, மற்றவரோ எழுதி உள்ளனரா?