Friday, December 6, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !

இங்கிலாந்து கிளாக்ஸோ மருந்து கம்பெனியின் சீன ஊழல் !

-

ங்கிலாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனமான கிளேக்ஸோ ஸ்மித் கிளைன் (ஜிஎஸ்கே) பயண முகவர்கள் (டிராவல் ஏஜன்சிகள்) உதவியுடன் மருத்துவர்களுக்கு சீனாவில் சுமார் 500 மில்லியன் டாலர்கள் (3,000 கோடி ரூபாய்) லஞ்சம் கொடுத்திருப்பது அம்பலமாகி உள்ளது.

உலகின் மிக முக்கிய மருந்து தயாரிக்கும் நிறுவனமான கிளாக்ஸோ ஸ்மித் கிளைன் வருடத்திற்கு சுமார் ஆண்டுக்கு 4.7 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் நிறுவனம். உலகம் முழுவதிலும் பரந்து விரிந்து கிடக்கும் இந்த நிறுவனத்திற்கு சீனாவில் மருந்து தயாரிக்கும் தொழிற்சாலைகள், மருத்துவ ஆய்வுக் கூடங்கள் இருக்கின்றன. இந்த நிறுவனத்திற்கான போக்குவரத்துச் சேவையை பல்வேறு சீன பயணச் சேவை நிறுவனங்கள் வழங்குகிறார்கள்.

ஜிஎஸ்கே - ஷாங்காய்
ஷாங்காயில் உள்ள கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஆராய்ச்சி மையம்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் பல்வேறு பயண முகவர்களை கண்காணித்ததில், அளவுக்கு அதிகமாக வரவு வருவதும், அதற்கு நிகரான பயணச் சீட்டுக்கள் விற்கப்படாமல் இருப்பதையும் சீன பொருளாதார குற்றவியல் துறை கண்டுபிடித்தது. குவா ஃபெங் எனும் அதிகாரி தலைமையில் நடந்த விசாரணையில், பல்வேறு பயண முகவர் நிறுவனங்கள் ஜிஎஸ்கேவிற்கு உதவியாக லஞ்ச ஊழலில் ஈடுபடுவதை கண்டுபிடித்தார்.

ஜிஎஸ்கே நிறுவனம் அதிக லாபம் ஈட்டவும், அதிக விலையில் தன் மருந்துகளை விற்கவும், சீனாவில் உள்ள மருத்துவர்கள், மருத்துவமனைகள் போன்றவற்றிற்கு லஞ்சம் வழங்கியுள்ளது. ஒரு கார்ப்பரேட் நிறுவனத்திற்கே உரிய கச்சித ஒழுங்கு முறையில் சீனா முழுவதும் லஞ்சம் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெரிதும் உதவியது பயண முகவர்கள் தான்.

ஜிஎஸ்கே மருந்துகளை அதிகம் பரிந்துரைக்கும் மருத்துவருக்கு சாதாரண செமினார்களுக்கு அதிக பணம் வழங்குவது, டம்மி மருத்துவ மாநாடுகள், கூட்டங்கள் நடத்தி அதிக பணம் வழங்குவது, 60 பேர் கலந்து கொண்ட கூட்டத்திற்கு 100 பேர் கலந்து கொண்டார்கள் என கணக்கு காட்டி ஜிஎஸ்கேவிடமிருந்து பணத்தை பெற்று குறிப்பிட்ட மருத்துவர்களின் கடன் அட்டைகளுக்கு லஞ்ச பணத்தை செலுத்திவிடுவது என நேர்த்தியாக லஞ்சத்தை விநியோகித்துள்ளனர்.

இவற்றை கண்காணித்து கண்டுபிடித்துள்ள குவா ஃபெங் இதை பற்றி விளக்குகையில் “குற்றங்களுக்கான கும்பல்களுக்கு ஒரு பாஸ் இருப்பான், மருத்துவ லஞ்ச ஊழலுக்கு ஜிஎஸ்கே தான் பாஸ்” என குறிப்பிடுகிறார். ஜிஎஸ்கேவின் இந்த ஊழலை மாஃபிய கும்பலுடன் உவமைப் படுத்துவது சரியானதே.

மக்களின் அத்தியவசிய மருந்துகள், மிகவும் கொடிய நோய்களுக்கான மருந்துகளை தயாரிக்கும் ஜிஎஸ்கே சந்தையில் சக போட்டியாளர்களை மிஞ்சவும், அதிக லாபமீட்டவும், மருந்துகளின் விலையை கூட்டி லாபம் பார்க்கவும் செயற்கை தேவையை உருவாக்க லஞ்சப் பணத்தை வாரி இறைத்துள்ளது. 120 கோடிக்கும் அதிகமான மக்கள் வாழும் சீனாவின் மிகப்பெரும் சந்தையை தன் வசம் கைப்பற்றுவதற்கான போட்டியில் ஜிஎஸ்கேவின் இந்த நடவடிக்கைகள் அம்பலப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஜிஎஸ்கேவின் லாப வேட்டை சீன அரசின் இன்னொரு பயத்தால் தவிடு பொடியாக்கப்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாகவே உயர்ந்து வரும் பால் சம்பந்தமான பொருட்களின் விலையைப் பற்றி ஒரு ஊழல் சமீபத்தில் மக்கள் முன் அம்பலமாகியது. பல்வேறு பால் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் ரகசியமாக தமக்குள் கூட்டணி அமைத்து விலையை முடிவு செய்வது (Price Fixing) வெளிவந்தது. இதன்படி விலை கூடலாம் ஆனால் குறைந்த பட்ச விலை இவ்வளவு தான் இருக்கும் என தனியார் நிறுவனங்கள் தங்களுக்குள் முடிவு செய்து கொள்கின்றன.

இதனால் பால் பொருட்களின் விலை கணிசமாக உயர மக்கள் அதிருப்தி அடைந்தனர். மக்களின் அதிருப்தி போரட்டமாக வெடிக்கும் சூழ்நிலை வரவே சுதாரித்த அரசு பல்வேறு நிறுவனங்களை கண்காணிக்கத் தொடங்கியது. சந்தை விலையேற்றங்களை கண்காணித்து விலைவாசியை கட்டுப்பாட்டில் வைக்க முடிவு செய்தது. அந்த கண்காணிப்பின் விளைவாகத்தான் ஜிஎஸ்கேவின் இந்த ஊழல் அம்பலமாகியுள்ளது. ஜிஎஸ்கே நிறுவனத்தை சேர்ந்த முக்கிய மேளாலர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதன் முக்கிய முதன்மை அலுவலர் மார்க் ரெய்லி கடந்த மாதம் 27-ம் தேதி சீனாவை விட்டு வெளியேறியுள்ளார்.

இதைப் பற்றி ஜிஎஸ்கேவின் தலைமையகம் அவசர அவசரமாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது, “நாங்கள் ஏற்கனவே சீன நிறுவனத்தில் தனிப்பட்ட முறையில் ஒரு விசாரணையை நடத்தினோம் அதில் இந்த லஞ்ச ஊழல் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. அதனால் சீனாவின் மேலாளர்கள் குற்றமற்றவர்கள். நாங்கள் நேர்மையானவர்கள். இருந்தும் எங்கள் நிறுவனம் சீன அரசின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கும்” என தெரிவித்துள்ளது.

மறுபுறம் ஏற்கனேவே சீனாவில் போய் தோல்வி முகம் கண்டு வரும் இந்திய மருந்து தயாரிக்கும் நிறுவனக்களுக்கு ஜிஎஸ்கேவின் சந்தை இழப்பு நல்ல எதிர்காலத்தை கொடுக்குமா என இந்திய முதலாளிகள் தம் பகல் கனவை கான ஆரம்பித்துவிட்டனர்.

சுதந்திரச் சந்தையில் பல்வேறு போட்டியாளர்கள் உற்பதியில் ஈடுபடுவார்கள், உற்பத்தி அதிகமானால் விலை குறையும், உற்பத்தி குறைந்தால் விலை ஏறும், இதனால் மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைப்பதுடன் ’போட்டி’ புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கும் என்று முதலாளித்துவத்தின் போற்றி பாடுபவர்களுக்கு, இன்றைய நடைமுறையில் விரல் விட்டு எண்ணக் கூடிய பன்னாட்டு பெருநிறுவனங்கள் ஒவ்வொரு துறையிலும் தமது ஏக போகத்தை நிலைநாட்டி மக்களை சுரண்டுகின்றன என்பதை இந்த சம்பவம் மூலம் நாம் குட்டி காட்ட விரும்புகிறோம்.

செயற்கை பற்றாக்குறை ஏற்படுத்துவது, அதற்காக உற்பத்தி செய்ததை அழிப்பது, லஞ்ச ஊழல்கள் உட்பட எதையும் செய்து செயற்கையாக தேவையை பெருக்குவது, இப்படித் தான் லாபத்தை மையமாக வைத்திருக்கும் தனியார் நிறுவனங்கள் செயல்படுகின்றன, அது போலத் தான் ஜிஎஸ்கே செயல்பட்டிருக்கிறது.

இது ஒன்றும் புதிதல்ல, தனி இயல்பிலானதும் அல்ல. இப்படி மாட்டிக்கொள்வதும் பின்பு இவை மூடி மறைக்கப்படுவதும் இயல்பானது தான். சீன அரசு மக்களுக்கு பயந்து சில நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் முதலாளித்துவத்தின் முதுகெலும்பாக உள்ள மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்வதை தடுக்க முடியாது.

மேலும் படிக்க

  1. // ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் லாபம் ஈட்டும் நிறுவனம்

    “வருமானம் (revenue)” என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். 40 பில்லியன் டாலர் லாபம் என்பது மிக அதிகமாக தெரிகிறது. சரி பாருங்கள்.

  2. மன்னிக்கவும். 4.7 பில்லியன் டாலர் லாபம் என்பது 40 பில்லியன் என்று வெளியாகி விட்டது. திருத்தி விட்டோம். நன்றி.

  3. மருத்துவர்களுக்கும் ஆஸ்பத்திரிகளுக்கும் மருந்துக் கம்பெனிகள் கமிஷன் கொடுப்பது என்னமோ சீனாவில் மட்டும்தான் என்பது போல இருக்கிறது உங்கள் கட்டுரை..??

    இதுபோன்ற லஞ்ச லாவண்யம் இந்திய மருத்துவத் துறையில் புரையோடிப் போய், சீழ் வடிந்து கிடக்கிறது…

    இதை, வெகு விளக்கமாக சில வருடங்களுக்கு முன்னர், ஜூனியர் விகடன் பத்திரிகை தொடர் கட்டுரையாக வெளியிட்டது…

    மருத்துவத் துரையின் எல்லாத் துறையிலும் – எல்லா ஸ்டேஜிலும் இந்த கமிஷன் பிசினஸ் இருக்கிறது…

    டாக்டர்கள் குறிப்பிட்ட மருந்துகளை – குறிப்பிட்ட லேப்களை – குறிப்பிட்ட ஸ்கேன் சென்டரை பரிந்துரைப்பது – எல்லாமே கமிஷன் அடிப்படியில்தான்…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க