சல்வாஜுடும் கொலைப்படைத் தலைவன் மகேந்திர கர்மா முதல் அவசரநிலைக் காலக் கொடுங்கோன்மையின் தளபதி வி.சி.சுக்லா வரையிலான மக்கள் விரோதிகளுக்குப் பதிலடி கொடுத்த மாவோயிஸ்டுகளின் பஸ்தார் தாக்குதலைத் தொடர்ந்து, சர்வகட்சிஓட்டுப் பொறுக்கிகளும் குமுறி எழுந்துள்ளனர்.
“மாவோயிஸ்டுகளுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” என்றும் “அதற்கு எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்று திரள வேண்டும்” என்றும் அறைகூவியிருக்கிறது ‘மார்க்சிஸ்டு’ கட்சி. அது மட்டுமல்ல, “மாவோயிச சவாலை நாங்கள் அரசியல் ரீதியில் எதிர்கொள்வோம்” என்று ஒரு பேச்சுக்கு சொல்லி வந்த மார்க்சிஸ்டுகள், இப்போது சோ மற்றும் பாரதிய ஜனதாவைப் போல வெறித்தனமாகப் பேசத் தொடங்கி விட்டார்கள்.
“பழங்குடி மக்கள் யார், மாவோயிஸ்டுகள் யார் என்று பிரித்தறிய முடியாத காரணத்தினால்தான் மக்கள் போலீசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக நேரிடுகிறது” என்றும், மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கும், சல்வாஜுடுமின் எதிர்வன்முறைக்கும் (counter violence unleashed by Salwa Judum) இடையே பழங்குடி மக்கள் சிக்கித் தவிப்பதாகவும் கூறி, பிஜாபூரில் சாதாரண பழங்குடி மக்கள் துணை இராணுவப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தியிருக்கிறார்கள் (பீப்பிள்ஸ் டெமாக்ரசி, மே 27 – ஜூன் 2). அது மட்டுமல்ல, “மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு எதிர் வன்முறையாகத்தான் சல்வாஜுடும் தோன்றியது” எனக் கேடுகெட்ட முதலாளித்துவப் பத்திரிகை கூட கூறத்துணியாத பொயை பீப்பிள்ஸ் டெமாக்ரசி கூறுகிறது.
அக்கட்சியின் தமிழக எம்.எல்.ஏ. வான பாலபாரதிமஞ்சள் பத்திரிகையான குமுதம் ரிப்போர்ட்டரில் (6.6.2013) மகேந்திர கர்மாவின் புகழ் பாடுகிறார். சல்வா ஜுடும் என்பது மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்டவர்களை வைத்து மகேந்திர கர்மா உருவாக்கிய ஆயுதம் ஏந்திய அமைதிப்படையாம். முள்ளை முள்ளால் எடுப்பது போல அந்தப் படையில் பழங்குடியினருக்கு அவர் முக்கியத்துவம் கொடுத்தாராம். அதுதான் மாவோயிஸ்டுகளின் கோபத்தை கிளறிவிட்டதாம்! சல்வா ஜுடும் என்பது பழங்குடி மக்களை விரட்டியடித்து, அவர்களுடைய கிராமங்களைப் பிடுங்கிக் கொள்வதற்காக, டாடா நிறுவனம் சட்டீஸ்கரில் மட்டும் உருவாக்கிய கூலிப்படை என்று நாம் எண்ணிக் கொண்டிருந்தோம். தமிழகத்திலிருந்து சீறுகிறார், பால பாரதி.
“மார்க்சிஸ்டுகளின் இந்த அறச் சீற்றம்” ஒருபுறமிருக்க, பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கும் மேதா பட்கர் முதலானோரும், பி.யு.சி.எல். போன்ற சிவில் உரிமை அமைப்புகளும் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை வன்முறை என்றே சாடுகின்றனர். “மாவோயிஸ்டு அபாயத்தை எதிர்கொள்வது எப்படி? மாவோயிஸ்டுகளிடமிருந்து பழங்குடிகளை மீட்பதெப்படி?” போன்ற கேள்விகளை எழுப்பி அறிவுத்துறையினர், சமூகவியலாளர்கள், இராணுவ வல்லுநர்கள், முன்னாள் போலீசு, இராணுவ அதிகாரிகள், ஓட்டுக்கட்சிப் பிரதிநிதிகள் போன்றோர் ஆங்கிலத் தொலைக்காட்சிகளில் மாறிமாறி விவாதங்கள் நடத்துகின்றனர்; விதவிதமாக ஆய்வுக் கட்டுரைகள் எழுதுகின்றனர்.
எல்லோருமே இந்த சமூக அமைப்பின் ஒவ்வொரு மயிர்க்காலிலும் ஊடுருவியிருக்கும் உழைக்கும் மக்களுக்கு எதிரான வன்முறையின் பல்வேறு வடிவங்களையும் வசதியாகப் புறக்கணித்துவிட்டு, மறுகாலனியாக்க கொள்கைகளின் அமலாக்கத்தைத் தொடர்ந்து இவ்வன்முறைகளும் சுரண்டலும் தீவிரமான பரிமாணத்தைப் பெற்றுவருவதையும் புறக்கணித்து விட்டு, மாவோயிஸ்டுகளின் வன்முறையை தனித்தவொரு பிரச்சினையாகக் காட்டி, அதனைக் கையாள்வது குறித்துப் பேசுகின்றனர்.
அதே நேரத்தில், இவ்வாறு பேசுபவர்கள் அனைவரும், “மாவோயிஸ்டு பிரச்சினையை வெறும் சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்க்கக்கூடாது; இது ஒரு சமூகப் பொருளாதாரப் பிரச்சினை” என்று வலியுறுத்துவதன் மூலம் தங்களை முற்போக்காளர்களாகவும், மனிதாபிமானிகளாகவும் காட்டிக் கொள்கின்றனர்.
சமூகப் பொருளாதாரப் பிரச்சினை என்று இவர்கள் கூறுவதன் பொருள் என்ன? நாட்டின் ஆகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள் மீது இந்த அரசமைப்பு திணித்திருக்கும் சமூகப் பொருளாதார ஒடுக்குமுறையை அவர்கள் குறிக்கவில்லை. மாறாக, நாட்டின் பிற பகுதிகளைப் போலன்றி, பழங்குடி மக்கள் வாழும் வனப்பகுதிகளுக்குச் சாலை, மின்சார வசதி, தொலைத்தொடர்பு இல்லாமையையும், அம்மக்களின் மிக மோசமான ஏழ்மை நிலையையும், போலீசு உள்ளிட்ட அரசு எந்திரத்தின் நிர்வாகத்தின் கீழ் பழங்குடி மக்களின் கிராமங்கள் கொண்டு வரப்படாததையுமே அவர்கள் குறிப்பிடுகின்றனர். அரசின் எதிர்த்தரப்பு போல நின்று கொண்டு இவர்கள் எதைக் கூறுகிறார்களோ, அதையேதான் அரசும் கூறுகிறது.
“மாவோயிஸ்டு பிரச்சினை என்பதே சாராம்சத்தில் பழங்குடியினர் பிரச்சினைதான். இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல அவை முன்னேறாத காரணத்தினால்தான் பழங்குடி மக்கள் மத்தியில் மாவோயிஸ்டுகள் எளிதில் ஊடுருவ முடிந்திருக்கிறது. நூறு நாள் வேலை போன்ற அரசின் வளர்ச்சித் திட்டங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்றவை பழங்குடி மக்களைச் சென்றடைந்து விட்டால், தானாகவே அம்மக்கள் மாவோயிஸ்டுகளைப் புறக்கணித்து விடுவார்கள். இந்த அச்சத்தின் காரணமாகத்தான் தங்கள் செல்வாக்குப் பகுதிக்குள் அரசின் வளர்ச்சித் திட்டங்களை நுழைய விடாமல் மாவோயிஸ்டுகள் தடுக்கிறார்கள்” என்பதுதான் ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோரின் வாதம்.
மாவோயிஸ்டுகளின் வன்முறைக்கு எதிர் வன்முறைதான் சல்வாஜுடும் என்ற மார்க்சிஸ்டு கட்சியின் கருத்துக்கும், “மாவோயிஸ்டுகளை அகற்றினால்தான் வளர்ச்சி சாத்தியம்; அதனால்தான் வேறு வழியில்லாமல் படைகளை அனுப்ப வேண்டியிருக்கிறது” என்ற ப.சிதம்பரத்தின் கருத்துக்கும் வேறுபாடு இல்லை. சொல்லப்போனால், மார்க்சிஸ்டுகளின் கருத்து சிதம்பரத்தின் கருத்தைக் காட்டிலும் வெறித்தனமானது.
சல்வாஜுடும் என்ற சட்டவிரோதப் படையைக் கலைக்க வேண்டும் எனக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்தவர் ராமச்சந்திர குஹா. பஸ்தார் தாக்குதலுக்குப் பின், “தொடர்கிறது பழங்குடி மக்களின் துயரம்” என்ற தலைப்பில் இந்து நாளேட்டில் (மே – 28, 2013) அவர் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
“நக்சலைட்டுகள் வன்முறையை வழிபடுபவர்கள். ஜனநாயகத்துக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் எதிரானவர்கள். ஆனால், ஜனநாயக பூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இவர்களை எப்படிக் கையாண்டிருக்க வேண்டும்? புத்திசாலித்தனமான போலீசு நடவடிக்கைகள் மூலம் நக்சலைட்டு தலைவர்களைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு அவர்களது நிலம் மற்றும் காடுகளின் மீது அரசியல் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை நேர்மையான முறையில் அமல்படுத்தி, கல்வி – சுகாதாரம் போன்ற சேவைகளையும் மேம்படுத்தியிருக்க வேண்டும்.
சட்டீஸ்கர் அரசு இரண்டையும் செயவில்லை. அங்கே ஆயிரக்கணக்கான மக்களின் வெளியேற்றமும், அவர்கள் மீது ஏவப்பட்ட சித்திரவதைகளும் எனக்கு இராக்கையும் ஆப்கானையும் நினைவூட்டின. தந்தேவாடாவில் நான் பார்த்தவை குறித்து புவனேஸ்வரில் ஒரு கூட்டத்தில் விளக்கினேன். ஒரிசா முதல்வரும் கூட்டத்தில் அமர்ந்திருந்தார். சல்வாஜுடுமுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதை சட்டீஸ்கர் அரசு லட்சியமே செயவில்லை. சல்வாஜுடுமை வேறு பெயரில் இயக்கியது. இது தொடர்பாக பிரதமர், உள்துறை அமைச்சர், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எல்லோரையும் பார்த்து விட்டோம். அவர்களுடைய அலட்சியம் சகிக்கவொண்ணாததாக இருந்தது.”
– என்று தனது அனுபவத்தைக் கூறிவிட்டு, பிரச்சினையைத் தீர்ப்பதற்கு தனது ஆலோசனையையும் கூறுகிறார்.
“பிரதமரும் சோனியாவும் சேர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குப் பயணம் மேற்கொள்ள வேண்டும். பழங்குடி பகுதிகளில் சுரங்கங்களுக்குத் தரப்பட்டுள்ள உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். பழங்குடி மக்களுக்கு அரசியல் சட்டத்தின் 5-வது ஷெட்யூல் வழங்கியுள்ள நில உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்படவேண்டும். நக்சலைட்டுகளை ஒடுக்க விமானப்படையை அனுப்புவதைக் காட்டிலும், இதுதான் பயனுள்ள நடவடிக்கையாக இருக்கும்.”
பழங்குடி மக்களோடு மக்களாக இருக்கும் மாவோயிஸ்டு தலைவர்களைத் தனிமைப்படுத்தி ஒழிக்க வேண்டுமாம். சோனியாவும் மன்மோகன்சிங்கும் பஸ்தாருக்கு விஜயம் செய வேண்டுமாம். ஏனென்றால், மாவோயிஸ்டுகளுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை கிடையாதாம். பழங்குடி மக்களின் நிலங்களைப் பிடுங்கி கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்ப்பவரும், சல்வாஜுடும் கொலைப்படைக்கு ஆசி வழங்கியவருமான மன்மோகன் சிங் ஜனநாயகவாதியாம். கார்ப்பரேட்டுகளின் உள்ளூர் அடியாள் மகேந்திர கர்மாவுக்கு மாற்று, கார்ப்பரேட்டுகளின் தேசிய அடியாள் மன்மோகன்சிங்காம்!
பிரதமர் பஸ்தாருக்கு விஜயம் செய்தால் பழங்குடி மக்களுக்கு என்ன பயன் விளையும்? விதர்பா விவசாயிகளுக்கு மன்மோகன் சிங்கின் விஜயம் விளைத்த பயன் என்ன என்பதை பத்திரிகையாளர் சாய்நாத் எழுதவில்லையா? “எஸ்.பி.ஓ. என்ற பெயரில் 1500 ரூபாய் மாதச் சம்பளம் வாங்கி வந்த சல்வா ஜுடும் படையினரின் பெயர் மாறியதும், மாதச்சம்பளம் 7000 ரூபாயாக உயர்ந்ததும்தான் உச்ச நீதிமன்றத்தில் நாங்கள் தொடுத்த பொதுநல மனுவின் பயன்” என்று குஹாவுடன் சேர்ந்து மனுச்செய் பேராசிரியை நந்தினி சுந்தர் மனம் நொந்து கூறவில்லையா?
எந்த ஜனநாயக அமைப்பு முறையின் தோல்வி குறித்து தனது கட்டுரையின் முதற்பகுதியில் அங்கலாக்கிறாரோ, அதனிடமே கடைசிப் பத்தியில் சரணடைகிறார் குஹா. ராமச்சந்திர குஹா மட்டுமல்ல, முன்னாள் எல்லை பாதுகாப்புப் படை டி.ஜி.பி .ராம் மோகனும் அதைத்தான் கூறுகிறார். “அரசியல் சட்டத்தின் ஐந்தாவது அட்டவணையின்படி, தங்களுடைய நிலங்களைச் சுரங்கத்துக்கு தருவதா, இல்லையா என்று முடிவு செயும் அதிகாரம் முதல்வருக்கோ வனத்துறை அமைச்சருக்கோ கிடையாது, பழங்குடி மக்கள்தான் அதை முடிவு செயவேண்டும்” என்கிறார்.
மெத்தப்படித்த மேதாவிகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுமான இவர்கள் அசட்டு முட்டாள்களா? அல்லது முட்டாள்களைப் போல நடிக்கிறார்களா? அங்கே பழங்குடி மக்களுக்கு எதிராகக் களத்தில் நிற்பவர்கள் டாடா, ஜிண்டால், வேதாந்தா, போஸ்கோ, ரியோ டின்டோ, எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் என்பது இவர்கள் அறியாத இரகசியமா?
“கொலம்பஸுக்குப் பின்னர் நடைபெறும் பழங்குடி மக்களுக்கு எதிரான மிகப்பெரிய நில அபகரிப்பு” என்றும், “டாடா ஸ்டீல், எஸ்ஸார் ஸ்டீல் நிறுவனங்கள் உயர்தர இரும்புக் கனிமங்கள் நிறைந்த 14 கிராமங்களையும் சுற்றுவட்டாரங்களையும் விழுங்குவதற்கு திட்டமிட்டு வேலை செகிறார்கள்” என்றும் மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் நியமித்த நிலச்சீர்திருத்தங்களை ஆராவதற்கான துணைக்குழு தனது நகல் அறிக்கையில் (2009) வெளிப்படையாகவே குற்றம் சாட்டவில்லையா?
தங்களுடைய இலாபவெறிக்காக எந்தச் சட்டத்தையும், எந்த மரபையும், எந்த அரசையும் வளைக்கவும் தகர்க்கவும் விலைபேசவும் தயங்காதவர்கள் இந்த முதலாளிகள் என்பதும், சல்வாஜுடும் என்ற கூலிப்படையைப் பூசை போட்டுத் துவக்கி வைத்ததே டாடா தான் என்பதும் இவர்கள் அறியாத உண்மைகளா?
“மத்திய, மாநில அரசுகள் அரசியல் சட்டத்தின்படி நடந்து கொண்டிருந்தால், முதலாளிகள் பேராசை கொள்ளாமல் இருந்திருந்தால், அதிகாரிகள் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டிருந்தால், நக்சல்களின் வலையில் பழங்குடி மக்கள் சிக்க நேர்ந்திருக்காது என்ற மாபெரும் உண்மை”யைத்தானே இவர்கள் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கிறார்கள்.
2006-இல் குஹாவின் உரையைக் கேட்ட பிறகுதான் ஒரிசா முதல்வர், போலி ஆவணங்கள் தயார் செய்து போஸ்கோவுக்காக விவசாயிகளின் நிலங்களைப் பறித்துக் கொடுக்கிறார். பிரதமர் அலுவலகமே போஸ்கோவுக்காக நிலப்பறிப்பு நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறது. நாராயணபட்னாவில் அமைதிவழியில் போராடிய மக்களின் தலைவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்.
1984 சீக்கியப் படுகொலை, 1985 போபால் படுகொலை, 1992 பாபர் மசூதி இடிப்பு, 1993 மும்பை படுகொலை, 2002 குஜராத் படுகொலை, 2005 சல்வா ஜுடும் படுகொலைகள் – என எல்லாப் படுகொலைகளுக்கும் துணைநின்ற இந்த அரசுக்கு வன்முறையைப் பற்றிப் பேசவும் அருகதை உண்டா என்ற கேள்வியை இவர்கள் எழுப்புவதில்லை.
மாவோயிஸ்டுகளின் தாக்குதலை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்றும், வன்முறை என்றும் சித்தரிப்பவர்கள், மக்களின் உரிமைகள் மீதும் உடைமைகள் மீதும் வாழ்க்கையின் மீதும் இந்த அரசும் ஆளும் வர்க்கங்களும் நடத்துகின்ற தாக்குதல்களை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்களாகவோ வன்முறையாகவோ கருதுவதில்லை. இந்த அரசமைப்பில் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகம் இல்லை என்ற உண்மையையும் கண் திறந்து பார்ப்பதில்லை.
பஸ்தாரைப் போலன்றி, “பன்னாட்டு நிறுவனங்களும் அதிநவீன மால்களும் நிறைந்திருக்கும் வளர்ச்சியடைந்த பகுதியான” குர்கானின் மாருதி உள்ளிட்ட ஆலைகளில் நிற்கும் தனியார் பாதுகாப்புப் படையினர் நகர்ப்புற சல்வாஜுடும்தான் என்று அவர்களுக்குத் தோன்றுவதில்லை. சட்டபூர்வமான வழிகளிலேயே மக்கள் கொள்ளையிடப்படுகையில், அவர்கள் தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழிதான் என்ன என்ற கேள்விக்குள்ளேயே இந்த அறிவாளிகள் செல்வதில்லை.
தோற்றுவிட்ட இந்த அரசமைப்பின் மீது, தமக்கு எதிரானதென்று மக்கள் தம் சொந்த அனுபவத்திலேயே அன்றாடம் புரிந்து கொண்டு வரும் இந்த அரசமைப்பின் மீது, இவர்கள் மீண்டும் மீண்டும் பிரமையை உருவாக்குகிறார்கள். அதோடு மட்டும் நிற்பதில்லை; பிரமையைக் கலைக்க முயற்சிப்பவர்களை நக்சலைட்டுகள் என்று எச்சரித்து ஒடுக்கச் சொல்கிறார்கள்.
“இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பன்றித்தொழுவம் என்று கூறுகிறார்கள் மாவோயிஸ்டுகள். இன்று பலரும் இதனை ஏற்றுக் கொள்ளக்கூடும்… இந்திய அரசு மற்றும் சமூகத்தின் மீதான மாவோயிஸ்டுகளின் விமர்சனங்களும் பொய்யானவை அல்ல. ஆனால், அவர்கள் கூறும் தீர்வுதான் கற்பனையானது, அடைய முடியாதது” என்று கூறிவிட்டு, மாவோயிஸ்டுகளை நசுக்குவதற்கான வழிகளை விவரிக்கிறார் மோதல் மேலாண்மைக் கழகத்தின் (Institute of conflict managemtnt) இயக்குநர் அஜ சாஹ்னி.
“மாவோயிஸ்டுகளைப் போல கேஜ்ரிவாலும்தான் இந்த அரசமைப்பின் மீது ஏமாற்றம் கொண்டிருக்கிறார். அவரும் இது ஊழலானது, மோசடியானது என்றுதான் கருதுகிறார். மாவோயிஸ்டுகளும் கேஜ்ரிவாலைப் போல ஏன் தேர்தலில் நிற்கக் கூடாது?” என்று என்.டி.டி.வி தொலைக்காட்சி பேட்டியில் கேள்வி எழுப்பினார் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்.
இந்தக் கேள்விதான், மாவோயிஸ்டுகள் மீது ஏவப்படும் ஒடுக்குமுறைக்கான விடை.
– சூரியன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________
இன்னும் இரண்டு வருடத்தில் மாவோயிஸ்டுகள் யாரும் இருக்க மாட்டார்கள்…இந்திய அரசு திட்டமிட்டு அவர்களை அழித்து வருகிறது….. வினவு மாதிரி ஒரு சில பேர் வேண்டுமானால் இதை மறுக்கலாம்.. ஆனால் இது நடந்தே தீரும்… எழுதப்படிக்கத் தெரியாத பழங்குடி மக்களை வைத்து பிழப்பு நடத்தும் மாவோயிஸ்ட்டுகள் கடைசி வரை அவர்கள் கொள்கை வெற்றி அடையப்போவது இல்லை….
உலகம் முழுவதும் ஆளுவோர் எல்லாம் அடக்குமுறைகளுக்குநியாயப்படுத்த அப்பாவி மக்களையும் பயஙகரவாதிகள் எனக்க்கூறி கொன்று ஒழிப்பதை கானமுடிகிறது. இன்னும் இருபது வருடங்களில் மக்கள்நல அமைப்புகள் இல்லாது அழிக்கப பட்டுவிடும்
// பழங்குடி மக்களின் வாழ்வுரிமைக்காக குரல் கொடுக்கும் மேதா பட்கர் முதலானோரும், பி.யு.சி.எல். போன்ற சிவில் உரிமை அமைப்புகளும் மாவோயிஸ்டுகளின் நடவடிக்கையை வன்முறை என்றே சாடுகின்றனர்.///
அப்ப அவங்களுக்கு சொந்த புத்தி, அறிவு நேர்மை, அறம் எதுவும் உங்க அளவுக்கு கிடையாது என்கிறீர்களா ? உங்களுக்கு மட்டும் ‘எல்லாம் தெரியும்’ ; மேற்சொன்னவர்கள் மடையர்கள் ? சரியான் ’மேட்டிமை திமிர்’ என்பது இதுதான்.
மாவோயிஸ்டுகள் பல்வேறு ரூபங்களில் / பெயரிகளில் 1967இல் இருந்து இந்தியாவில் இயங்குகிறார்கள். அன்று தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி எதுவும் இன்று போல் கிடையாது. எனவே அவர்களை உந்தும் காரணிகள் பற்றி இன்று உங்களை போன்றவர்கள் சொல்லும் காரணிகள் (அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்காக பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கும் செய்லகளுக்கு எதிராக) சும்மா சாக்குகள். மாவோயிஸ்டுகளின் ஒரே நோக்கம் இந்திய அரசை வீழ்த்தி, அந்த இடத்தில் ‘மக்கள் அரசு’ என்ற பெயரில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவது.
சரி, சமயத்தில் நீங்க அவர்களை ‘சாகசவாதிகள்’ என்று விமர்சிக்கும் கட்டுரைகளையும் பார்கிறேன். அப்ப என்ன தான் உங்க நிலைபாடு ?
//அப்ப அவங்களுக்கு சொந்த புத்தி, அறிவு நேர்மை, அறம் எதுவும் உங்க அளவுக்கு கிடையாது என்கிறீர்களா ? //
மெத்தப்படித்த மேதாவிகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுமான இவர்கள் அசட்டு முட்டாள்களா? அல்லது முட்டாள்களைப் போல நடிக்கிறார்களா? அங்கே பழங்குடி மக்களுக்கு எதிராகக் களத்தில் நிற்பவர்கள் டாடா, ஜிண்டால், வேதாந்தா, போஸ்கோ, ரியோ டின்டோ, எஸ்ஸார் போன்ற தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் என்பது இவர்கள் அறியாத இரகசியமா?
//உங்களை போன்றவர்கள் சொல்லும் காரணிகள் (அதாவது பன்னாட்டு நிறுவனங்களுக்காக பழங்குடியினரின் நிலங்களை அபகரிக்கும் செய்லகளுக்கு எதிராக) சும்மா சாக்குகள். மாவோயிஸ்டுகளின் ஒரே நோக்கம் இந்திய அரசை வீழ்த்தி, அந்த இடத்தில் ‘மக்கள் அரசு’ என்ற பெயரில் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவது//
“மத்திய, மாநில அரசுகள் அரசியல் சட்டத்தின்படி நடந்து கொண்டிருந்தால், முதலாளிகள் பேராசை கொள்ளாமல் இருந்திருந்தால், அதிகாரிகள் மனச்சாட்சியுடன் நடந்து கொண்டிருந்தால், நக்சல்களின் வலையில் பழங்குடி மக்கள் சிக்க நேர்ந்திருக்காது என்ற மாபெரும் உண்மை”யைத்தானே இவர்கள் திரும்பத் திரும்பக் கண்டுபிடிக்கிறார்கள்.
நீங்களாவது இந்த விஷயத்தை தெளிவாக உங்க அரசிடம் எடுத்து சொல்லி சரியா ஆட்சி பண்ண முயற்சி செய்யக்கூடாதோ?
// அப்ப என்ன தான் உங்க நிலைபாடு ?//
இங்கே விவாதங்களில் கரை கண்ட நீரே இப்படிக் கேட்டால் எப்படி?
Ganesh,
///மெத்தப்படித்த மேதாவிகளும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுமான ///
நான் குறிப்பிட்டது அவர்களை அல்ல. மேதா பட்கர் மற்றும் பி.யு.சி.எல் அமைப்பினரை பற்றி தான்.
அவர்களின் அறம், அறிவு நேர்மை, அர்பணிப்பு, மற்றும் நம்பகத்தனைமை பற்றி அறிந்தவர்கள் இப்படி உளரமாட்டார்கள். ஒழுங்கா படித்துவிட்டு பிறகு விவாதிக்கவும்.
மக்கள் மீதான அரசின் நெருக்கடிகள் அதிகரித்து அதற்கெதிரான மக்கள் போராட்டம் தீவிரமடையும் போது நடைபெறும் இத்தகைய தாக்குதல்களின் போதுதான் யார் மக்கள் பக்கம்? யார் அரசின் பக்கம்? இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது. நடு நிலையாளர்கள் என்று யாரும் கிடையாது என்பதற்கு இச்சம்பவம் ஒரு சாட்சி.
சமீபத்தில் நான் வாசித்த மிகச் சிறந்த தர்வாதங்களை முன்வைத்துள்ள கட்டுரை. பாராட்டுகள்!