privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் !

மாருதி தொழிலாளருக்கு ஆதரவாக திருச்சி, சென்னை, தஞ்சாவூர் ஆர்ப்பாட்டங்கள் !

-

திருச்சி

மாருதி நிறுவனத்திற்கு எதிராக தொடர்கிறது தொழிலாளர்கள் போராட்டம்! போராடும் மாருதி தொழிலாளர்களுக்கு தோள் கொடுப்போம்! – திருச்சியில் ஆர்ப்பாட்டம்.

18-07-2013 அன்று மாலை 6 மணியளவில் ஜங்சன் காதிகிராப்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய எமது தோழமை அமைப்புகளுடன் இணைந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி மாருதி சுசுகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

மாருதி சுசுகி தொழிலாளர்கள் 147 பேரை சிறைப்படுத்தி ஓராண்டாகியும் அவர்களுக்கு பிணை வழங்கவில்லை. இத்தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்ட கொலை வழக்கின் மீது எவ்வித விசாரணையும் இல்லை. இதனை கண்டித்து தொழிலாளி வர்க்கத்தின் உரிமையை நிலைநாட்டும் வகையில் ‘ஜூலை-18’ மானேசர் செல்வோம் என்ற முழக்கத்தின் கீழ் முற்றுகைப் போராட்டத்தை நடத்தப்போவதாக மாருதி தொழிலாளர்கள் அறிவித்திருந்தனர். அவர்களின் போராட்டத்தை ஆதரித்து எமது அமைப்பின் தலைமையில் தொழிலாளி வர்க்க ஒற்றுமையை கட்டியமைப்போம்! முதலாளித்துவ பயங்கர வாதத்தை முறியடிப்போம்! என்ற முழக்கத்தின் கீழ் 130க்கும் மேற்பட்ட தொழிலாளிகளும், தோழர்களும் ஒன்றிணைந்து முதலாளித்துவத்துக்கு எதிரான நமது பதாகைகளை உயர்த்தி பிடித்து, செங்கொடிகளை ஏந்தி குவிந்து நின்றனர்.

இந்த ஆர்ப்பாட்டதிற்கு பாய்லர் பிளான்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொருளாளர் தோழர்.ராமசாமி தலைமை தாங்கினார். தொடர்ந்து தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு எதிராகவும், பொய் வழக்குகளுக்கு எதிராகவும் போராடினால்தான் தொழிலாளர்களின் உரிமையை நிலைநாட்ட முடியும். மாருதி சுசுகி தொழிலாளர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகள் அனைத்தையும் உடைத்தெறிய முடியும் என அறைகூவினார்.

அடுத்து சிறப்புரையாற்றிய புதுக்கோட்டை மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் மாவட்ட அமைப்பாளார் வழக்குரைஞர் தோழர்.ராமலிங்கம் பேசும்போது எங்கோ நடைபெற்ற மாருதி தொழிலாளர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக இங்கு போராட்டம் நடத்த காரணம் சட்டத்துக்கு அப்பாற்பட்டு சிறை வைக்கப்பட்ட தொழிலாளர்களை சட்டத்துக்கு அப்பாற்பட்டு போராடுவதன் மூலம் தான் விடுவிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் இவ்வார்ப்பாட்டம் நடத்தப்படுகின்றது.

தொழிற்சாலை சட்டப்படி எந்த முதலாளியும் இயங்குவதில்லை. தொழிற்தாவா சட்டப்படி நிரந்தர தொழிலுக்கு நிரந்தர தொழிலாளியைத்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அவனை வேலையை விட்டு நீக்கினால் அதற்க்கான காரணத்தை ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்க வேண்டும் இச்சட்டப்படி எந்த முதலாளியாவது நடக்கிறானா? இல்லை தொழிலாளர் நலச்சட்டத்தை அமுல்படுத்த மறுக்கிறான். ஒரு ஆண்டில் 240 நாள் வேலை செய்தால் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் எந்த முதலாளி அப்படி செய்கிறான்? பல பெயர்களை வைத்துக் கொண்டு தொழிலாளியை சுரண்டுகின்றான். குறைந்த பட்ச கூலி சட்டத்தை குப்பையில் தூக்கிபோட்டு விட்டு, உத்திரவாத சம்பளம், நிபந்தனைக்கு உட்பட்ட சம்பளம் என விதவிதமான பெயர்களில் தொழிலாளர்கள் சுரண்டப்படுகின்றனர். இப்பிரச்சினைகளை எதிர்த்து கேட்டால் போலீசை வைத்து அடிக்கிறான். மாருதி தொழிலாளிகள் போராடிய போது அவர்களை நீரில் அழுத்தி மூச்சு திணற திணற கொடுமை படுத்தினான், சிறையில் அடைத்தான். உரிமைகளை கேட்பதும் சட்டத்தை அமுல்படுத்த சொல்வதும் குற்றம் என அறிவிக்கும் இந்த நீதிமன்றம் தான் ‘ மாருதி தொழிலாளர்கள் போராட்டம் உலக அரங்கில் இந்தியாவே தலைகுனிய வைத்து விட்டது.’ என அறிவித்தது.

பல ஊழல்களிலும், முறைகேடுகளிலும் ஈடுபட்ட அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு உடனே ‘ஜாமின்’ கொடுக்கும் இந்த நீதிமன்றம் அப்பாவிகளான தொழிலாளிக்கு ஜாமின் கொடுக்க மறுக்கின்றது. விசாரணை செய்யவும் மறுக்கின்றது. தொழிலாளியின் குடும்பத்தினர் சிறையில் சென்று சந்திக்கவும் அனுமதிப்பதில்லை. குடும்பத்தில் உள்ள மனைவியோ, பிள்ளையோ, அம்மா, அப்பாவோ இறந்துவிட்டால் கூட ‘பரோலில்’ விட மறுக்கின்றது. இவ்வளவு கொடுமைக்கும் பின்னால் தான் மாருதி நிறுவனத்தின் கொள்ளை லாபம் ஒழிந்து கிடக்கின்றது. ஆண்டுக்கு ரூ 900 கோடி லாபம் என தொடங்கிய உற்பத்தி இன்று ஆண்டுக்கு ரூ 2200 கோடிக்கும் மேல் போகின்றது. இவை அனைத்தும் தொழிலாளியின் மேல் தொடுக்கப்பட்டிருக்கும் பயங்கரவாத நடவடிக்கை. இதனை எதில்கொள்ள வேண்டும் எனில் தொழிலாளி வர்க்கம் தன்னை ஒரு வர்க்க அமைப்பாய், சங்கமாய் திரட்டிக் கொள்ள வேண்டும். முதலாளிகள் சங்கம் வைத்துக் கொள்ளலாம் என்றால் நாமும் சங்கம் வைத்துக் கொள்ள உரிமையுள்ளது. இதனை உணரும் போது மாருதி ஆலை முதலாளி சொன்னது போல் ‘ ஒரு வர்க்கத் தாக்குதலை’ எதிரிகள் மீது நடத்தி பாட்டாளி வர்க்கம் விடுதலை பெற வேண்டும் எனில் புரட்சிகர அமைப்பில் இணைய வேண்டும் என தனது உரையை முடித்தார்.

இறுதியாக சிறப்புரையாற்றிய ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் சிறப்புத் தலைவர் தோழர். தர்மராஜ் பேசும்போது இந்தியாவில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகள் அனைவரும் கண்காணிப்புக்குள்ளேயே வைத்து ஒடுக்கப்படும் அவலநிலை பற்றியும், நோக்கியா, CVL , ஹூண்டாய், சுசுகி போன்ற எண்ணற்ற தனியார் நிறுவனத்தில் கண்காணிப்பு கேமரா, கக்கூசுக்கு முன் செக்யூரிட்டி காவல், ஒன்னுக்கு போக இரண்டு முறை, இரண்டுக்கு போக நேரம் இல்லை. உணவிற்கு 30 நிமிடம், கூடுதல் நேர கட்டாய உழைப்பு, பணி நிரந்தரமின்மை, PF பணம் திருட்டு, இப்படி தொழிலாளிகளின் உரிமையை பறிக்கும் முதலாளி எவனாவது ஒருவன் தண்டிக்கப்பட்டானா? இல்லை.

இவர்களின் சட்டவிரோத நடவடிக்கையை பாதுகாக்க ACL, DCL என அதிகாரிகள் கூட்டம் ஒருபுறம். இதனால்தான் பல வருடம் போராடியும் மனுக் கொடுத்தும் எந்த பயனும் இல்லை என்பதால் திருப்பித்தாக்க தொடங்கினர் மாருதி தொழிலாளர்கள். தாக்குதலை தாங்க முடியாத முதலாளிகள் அலறுகின்றார்கள். இவனது சொத்தையா தொழிலாளர்கள் கேட்டார்கள்? இல்லை. உரிமையை கேட்டார்கள் இதனை எந்த அரசாவது ஆதரித்ததா? இல்லை. பொதுதுறை, சில்லறை வணிகம், ஆலைகள், சாலைகள் என அனைத்தும் தனியாருக்கு விற்க்கப்படுகின்றது. யாரு சொத்தை யாரு விற்பது. அடுத்தவர் சொத்த ஆட்டைய போடுறவன் பொறுக்கி, நீ செய்யுற வேலை அதுதானே. இது மக்களுக்கான அரசா? முதலாளிக்கான அரசா?

மணப்பாறை மாட்டு சந்தையில் மடிய பாத்து விலைபேசுவான் அதுபோல முதலாளிகள் திடகாத்திரமான தொழிலாளிகளை மட்டும் வேலைக்கு எடுத்துக் கொள்கின்றனர். ரத்தத்தை உறிஞ்சி சக்கையாக தொழிலாளிகள் வெளியேற்றப் படுகின்றனர். நிரந்தர தொழிலாளி அப்ரன்டீஸ் தொழிலாளி, காண்ட்ராக்ட் தொழிலாளி அதிலும் மெயின் காண்ட்ராக்ட், சப்காண்ராக்ட் என விதவிதமாக சுரண்டப்படுகின்றனர். திருச்சி BHEL தொழிற்சாலையில் வெல்டிங் ராடுகளின் கதிர்வீச்சின் விளைவால் தொழிலாளிக்கு புற்றுநோய் வருவதற்கான அபாயம் உள்ளது என்பதை அம்பலப்படுத்தினால் உடனே சார்ஜ் சீட் கொடுக்கின்றார்கள். இப்படி தொழிலில் தங்களுடைய உரிமையை கேட்டால் தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்படுகின்றார்கள். நீதிமன்றத்துக்கு போனால் அங்கேயும் துரோகம் தான் இழைக்கப்படுகிறது. இப்படி தொழிலாளிகள் பிரச்சனை மட்டுமல்ல, விவசாயிகள், சிறுகடை வியாரிகள், நெசவாளர்கள் என அனைவரின் மீதும் மறுகாலனியாக்க தாக்குதல் தினிக்கப்படுகின்றது. இதற்கு எதிராக போராட வேண்டும். எதிரியின் சட்டையை கோத்து பிடித்து கேள்வி கேட்க வேண்டும். அதற்கான தைரியத்தை கொடுப்பது பு.ஜ.தொ.மு மட்டும் தான். அப்படிப்பட்ட நக்சல்பாரி அமைப்பில் அணிதிரள வேண்டும். அதுதான் மாருதி தொழிலாளிக்கு மட்டுமல்ல உழைக்கும் மக்கள் அனைவருக்குமான விடுதலையை பெற்று தரும் என தனது உரையை முடித்தார்.

ஆர்ப்பாட்டத்தின் இடை இடையே மாருதி சுசுகி நிறுவனத்திற்கு ஆதரவாக வேலை செய்யும் அரசுக்கு எதிராகவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முதலாளித்துவ பயங்கரவாதத்தை விளக்கும் வகையில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக்கலைக்குழு தோழர்கள் புரட்சிகர பாடல்கள் பாடினர். இது கூடியிருந்த மக்களுக்கு புரட்சிகர உணர்வையும் போராட வேண்டிய அவசியத்தையும் ஊட்டியது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி
: பு.ஜ.தொ.மு., திருச்சி.

சென்னை அம்பத்தூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

தஞ்சாவூர்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
: புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க