முகப்புஉலகம்அமெரிக்காஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !

ஸ்னோடன் : சந்தி சிரித்தது அமெரிக்காவின் யோக்கியதை !

-

மெரிக்க அரசின் ஒட்டுக்கேட்பு மற்றும் இணையதளக் கண்காணிப்பு சதித் திட்டத்தை எட்வர்டு ஜோசப் ஸ்னோடென் என்னும் இளைஞர் தனது உயிரைப் பற்றிக்கூட கவலைப்படாமல் துணிவுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது ஏதோ அமெரிக்க மக்களின் மீதான கண்காணிப்பு மட்டுமல்ல, உலகெங்குமுள்ள மக்களையும் கண்காணிக்கும் அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பாசிச சதித் திட்டம்.

ஸ்னோடன்
தற்கொலைப்படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்து விட்டு பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராகத் துணிவுடன் போராடும் ஸ்னோடன்.

அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் (என்.எஸ்.ஏ.) இத்திட்டத்தின் மூலம் கடந்த மார்ச் 2013-ல் மட்டும் உலகெங்கிலும் ஏறத்தாழ 97 பில்லியன் (9700 கோடி) உளவுத் தகவல்களை அமெரிக்கா திரட்டியுள்ளது. அமெரிக்காவினுள் 3 பில்லியன் (300 கோடி) தகவல்கள் திரட்டப்பட்டிருப்பது மட்டுமின்றி, இரான், பாகிஸ்தான், ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் எனப் பல நாடுகளிலிருந்தும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. இதில் இந்தியாவிலிருந்து மட்டும் 6.3 பில்லியன் (630 கோடி) உளவுத் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன. அமெரிக்கக் கண்காணிப்பு வலையத்தில் இந்தியா ஐந்தாவது இடத்தில் இருக்கிறது.

ஏறத்தாழ 12 கோடி ரூபாய் அளவுக்கு சம்பளத்துடன், ஹவாய் தீவில் சொந்தமாகப் பண்ணை வீட்டுடன் வாழ்க்கையை நடத்தி வந்தவர்தான் கணினித் துறையில் வித்தகரான ஸ்னோடென் என்ற 29 வயதான இளைஞர். சிறிது காலம் அமெரிக்க கொலைகார உளவு நிறுவனமான சி.ஐ.ஏ.வில் இயங்கிவந்த அவர், பின்னர் சி.ஐ.ஏ.வுக்கான தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் பணியாற்றினார். அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் உளவு நடவடிக்கைகள் விரிவானதாகவும், அனைத்துலகையும் தழுவியதாகவும் இருப்பதைப் புரிந்து கொண்ட அவர், அமெரிக்க உளவுத்துறை உலகெங்கிலும் உள்ள மக்களை வேவுபார்ப்பது தொடர்பான ஆதாரங்களை ஊடகங்கள் மூலம் அம்பலப்படுத்தியுள்ளார்.

“எனக்குப் பணத்தாசை இருந்தால், இந்த ஆவணங்களைப் பல நாடுகளுக்கு விற்றுக் கோடிகோடியாக நான் சம்பாதித்திருக்க முடியும். ஆனால், இவற்றை மக்கள் முன் அம்பலப்படுத்துவதே எனது நோக்கம்” என்கிறார் ஸ்னோடென். கடந்த ஐந்தாண்டுகளில் அரசமைப்பின் ஊழல்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தியவர்களை ஒபாமா அரசு அடக்கியொடுக்கியதை ஏற்கெனவே பார்த்துள்ள ஸ்னோடன், தான் தெரிந்தே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இதனால் தனக்கும் தனது குடும்பத்துக்கும் ஏற்படப்போகும் தொல்லைகளை அறிந்துள்ளதாகவும் கூறுகிறார்.

அசாஞ்சே, பிராட்லி மேனிங்
விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய ஜூலியன் அசாஞ்சே. விக்கிலீக்சுக்கு தகவல்களைக் கொடுத்த்தாகக் குற்றம் சாட்டி சிறையில் வதைக்கப்படும் இராணுவ வீரர் பிராட்லி மேனிங்.

உலக மக்களுக்கு எதிரான அமெரிக்க அரசின் கிரிமினல் உளவு நடவடிக்கைகளை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஸ்னோடெனைத் தீவிரவாதியாகச் சித்தரிக்கிறது அமெரிக்கா. அரசு சொத்துக்களைத் திருடியது, தேசியப் பாதுகாப்புத் தகவல்களையும் இரகசிய உளவுத் தகவல்களையும் வெளியிட்டது முதலான குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் இந்தக் கண்காணிப்பையும் ஒட்டுக்கேட்டல்-உளவு பார்ப்பதையும் அமெரிக்க வல்லரசு நியாயப்படுத்துகிறது. அமெரிக்கா மட்டுமின்றி, அனைத்து ஏகாதிபத்திய நாடுகளும் மேலும் பாசிசமயமாகி வருவதன் வெளிப்பாடு இத்தகைய கண்காணிப்புகள். “கார்டியன்” நாளேட்டின் செய்தியின்படி, அமெரிக்க என்.எஸ்.ஏ.வுக்குப் போட்டியாக பிரிட்டிஷ் உளவுத்துறையானது, உலக மக்களையும் சொந்த நாட்டு மக்களையும் உளவு பார்த்துள்ள விவகாரம் அம்பலமாகியிருக்கிறது.

ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் முக்கியமான இணைய இணைப்புத் தடங்களை நிர்வகித்து வரும் ஹாங்காங்கிலுள்ள பேக்நெட் நிறுவனத்தின் கண்ணாடி இழை இணைய வலைப்பின்னலை அமெரிக்க அரசு சட்டவிரோதமாக ஊடுருவிப் பார்த்திருக்கிறது; சீனாவின் பிரபல சிங்ஹூவா பல்கலைக்கழகத்தின் முக்கியமான கணினிகளை ஊடுருவி, அவற்றிலுள்ள தகவல்களை அமெரிக்க உளவுத்துறை வேவு பார்த்துள்ளது; கைபேசிகள் வழியாக சீன மக்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொள்ளும் குறுஞ்செய்திகளைக் கூட அமெரிக்க உளவுத்துறை திரட்டியிருக்கிறது – என்று ஸ்னோடென் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். ஏற்கெனவே தனது நாட்டின் இணையங்களில் ஊடுருவதாகப் பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கும் அமெரிக்காவுக்கும் சீனாவுக்குமிடையிலான மோதல் இதனால் மூர்க்கமடைந்துள்ளது.

ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான கழுத்தறுப்புப் போட்டியும், மேலாதிக்கத்தை நிலைநாட்ட எதிர்ப்பு சக்திகளை முடமாக்குவதற்கும், மக்களின் அதிருப்திக்கு வடிகால் வெட்டுவதற்கும் உழைக்கும் மக்கள் மீதான இத்தகைய கண்காணிப்புகளும் உளவுபார்த்தலும் ஏகாதிபத்தியவாதிகளுக்கு அவசியமாகின்றன. அறிவியல்-தொழில்நுட்பப் புரட்சி இதனை எளிதாக்குவதால், இணையத்தின் வழியிலான கண்காணிப்பு தீவிரமடைந்து வருகிறது.

ஹாங்காங் ஆர்ப்பாட்டம்
ஸ்னோடனை ஆதரித்து ஹாங்காங்கிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டம்.

இந்தியாவிலோ, பயங்கரவாதத் தடுப்பு – கிரிமினல் குற்றத் தடுப்பு என்ற பொய் முகாந்திரங்களை வைத்து மக்கள் மீதான கண்காணிப்பை மத்திய-மாநில அரசுகள் அதிகரித்துவருகின்றன. மத்திய உளவுத் தரவுகளை ஒருங்கிணைக்கும் “நாட்-கிரிட்” என்ற தேசிய உளவு வலைப்பின்னல், “ஆதார்” அடையாள அட்டை, வீதிகளில் நிறுவப்படும் சி.சி.டி.வி. காமெராக்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் வடமாநிலத் தொழிலாளர்களின் தரவுகள் திரட்டப்படுதல் முதலானவை பாசிசம் வெகுவேகமாக நிறுவன மயமாகி வருவதை உணர்த்துகின்றன. இணையக் குற்றத் தடுப்புக்கான 66-ஏ பிரிவின் சட்டப்படி, சுதந்திரமாக இணையத்தில் கருத்து தெரிவித்தவர்கள் கைது செய்யப்படுகின்றனர். பாசிச ஜெயா அரசொ, இணையக் குற்றங்களில் ஈடுபட்டதாக ஒருவரைக் கைது செய்து சிறையிலடைக்கும் வகையில் குண்டர் சட்டத்தை விரிவுபடுத்தியுள்ளது. இவையனைத்தும் இணையத்தின் மூலம் சுதந்திரமாகக் கருத்துக்களை வெளியிட முடியும், அதன் மூலம் புரட்சியையே சாதிக்க முடியும் என்று கருதிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்க அறிவுத்துறையினரது மாயைகளைக் கீழறுத்துப் போடுகிறது.

இதற்கு முன் விக்கிலீக்ஸ் மூலம் அமெரிக்காவின் கோர முகத்தை அம்பலப்படுத்திய குற்றத்துக்காக ஜூலியன் அசாஞ்சேவைப் பயங்கரவாதியாகச் சித்தரித்து அவரைப் பிடிக்க பேயாய் அலைந்தது அமெரிக்கா. விக்கி லீக்சுக்கு தகவல்களைக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டி பிராட்லி மேனிங் என்ற இளம் இராணுவ வீரரைச் சிறையிலடைத்து வதைத்து வருகிறது. இப்போது ஸ்னோடெனைப் பிடிக்க வெறியோடு அலைகிறது. கடந்த மே முதல்நாளில் ஹவாயிலிருந்து ஹாங்காங்கிற்குத் தப்பிச் சென்ற ஸ்னோடென், ஜூன் 25 அன்று ஹாங்காங்கிலிருந்து ரஷ்யாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். அங்கிருந்து கியூபாவுக்குச் சென்று, பின்னர் ஈகுவடார் நாட்டில் அவர் தஞ்சமடைய முயற்சிப்பதாகச் செய்திகள் வருகின்றன. மிகக் கொடிய கிரிமினல் குற்றவாளியான அவரை நாடு கடத்தித் தன்னிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூச்சலிடுகிறது அமெரிக்கா. ஆனால், கிரிமினல்களை நாடு கடத்தும் ஒப்பந்தம் ஏதும் அமெரிக்காவுடன் எமது நாடு முறைப்படி போட்டுக்கொள்ளவில்லை என்று கூறி, அமெரிக்காவின் முகத்தில் கரிபூசியுள்ளது, ரஷ்யா.

ஜெனிவா ஒப்பந்தப்படி, தன்னிடம் அரசியல் தஞ்சம் கோருபவர்களுக்கு அடைக்கலமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு. அமெரிக்காகூடத் தனது உலக மேலாதிக்க நோக்கங்களுக்கு ஏற்ப பல நாடுகளின் சர்வாதிகாரிகளுக்குத் தஞ்சம் அளித்து, அவர்களை ஜனநாயகக் காவலர்களாகச் சித்தரித்துள்ளது. இத்தகைய மனிதகுல விரோதிகளுக்குத் தஞ்சம் அளிக்க அமெரிக்காவுக்கு உரிமை உண்டென்றால், அமெரிக்காவின் உலக மேலாதிக்கப் பயங்கரவாதச் சதிகளை அம்பலப்படுத்திப் போராடி வரும் ஸ்னோடெனுக்குத் தஞ்சமளிக்க எல்லா நாடுகளுக்கும் உரிமை உண்டு.

ஏகாதிபத்திய உலகின் கோரமுகத்தை உலகிற்கு அம்பலப்படுத்திக் காட்டியுள்ள ஸ்னோடென் ஒரு முன்னுதாரணமிக்க நாயகனாக உயர்ந்து நிற்கிறார். தற்கொலைப் படைத் தாக்குதலைப் போல, தனது வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுப் பயங்கரவாத அமெரிக்காவுக்கு எதிராக அவர் துணிவுடன் போராடுகிறார். ஜனநாயகம், மனித உரிமை, தனிநபர் சுதந்திரம் என்றெல்லாம் பசப்பிவரும் முதலாளித்துவ ஜனநாயகத்தின் மகிமையையும், அமெரிக்க பயங்கரவாத அரசின் கோரமுகத்தையும் புரிந்து கொண்டு உலகெங்கிலுமுள்ள உழைக்கும் மக்கள் போராட இன்னுமொரு வாய்ப்பை வழங்கியிருக்கின்றன, ஸ்னோடெனின் துணிச்சலான நடவடிக்கைகள்.

– குமார்.
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஜூலை 2013
________________________________________________________________________________

  1. முதலாளித்துவத்திற்கு எதிரான நாடுகளை அமேரிக்கா எதிர்க்கும்போது முன்வைக்கும் முக்கியமான காரணங்கள் ஜனநாயகம் மற்றும் மனித உரிமையை அந்நாடுகள் மதிப்பதில்லை என்பதாகும்…………… “right to life and personal liberty” அதாவது உயிவாழும் உரிமை மற்றும் தனிமனித சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் அடிப்படையான விசயமாகும்…………… அனால், பாதுகாப்பு என்றபெயரில் உலகம் முழுவதையும் கண்காணிப்பது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்………….. அமெரிக்காவைபோறுத்தவரை மனித உரிமை, ஜனநாயகம் என்ற வார்த்தைகள் எதிரி நாடுகளை உலக அரங்கில் தனிமைபடுத்த பயன்படுத்தும் ஆயுதங்களாகவே இருந்துவருகின்றன…….. இந்த திருட்டுதனதிற்கு Google, Facebook போன்றவை துணைநிற்பது என்பதும், அவை அமெரிக்க முதலாளிகளின் கைக்குள் இருப்பதும் தற்செயலாக நடந்ததல்ல………… இவை, இந்த காரணத்திற்காகவே கட்டமைக்கப்பட்டதுபோல் தோன்றுகிறது……….. அதனால்தான் சீனா தனக்கென தனியாக இணையதள கட்டமைப்பை உருவாக்கிகொண்டது………….. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா , ஸ்நோடன் அகதி அந்தஸ்து கேட்டபோது ” இந்தியா ஒன்றும் திறந்த வீடல்ல ” என்றுகூறி அமெரிக்காவின் காலை நக்கி பிழைக்கும் நாய் என காட்டிகொண்டதொடு அல்லாமல் தன் உண்மையான ஜனநாயகத்தையும் காத்துக்கொண்டது……..

  2. எல்லாம் கரெக்டு தான். ஆனா, அடுத்தவன் நாட்டு நெட்வொக்கை ஹேக் செஞ்சு உள்ளே போகும் சீனாவை எதிர்த்து தான் யாரும் வரமாட்டேங்குறாங்க… 😀

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க