privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபெண்களுக்கு அரசியல் தேவையா ? - வேணி, லட்சுமி

பெண்களுக்கு அரசியல் தேவையா ? – வேணி, லட்சுமி

-

என் பார்வையில் வினவு – 25 : வேணி

த்து இருவது ஆளுக்கும் ஒத்தாளா நின்னு சமைச்சு போட்டுடுவா. மலை போல வேலையிருந்தாலும் சளைக்காம பாத்துருவா. என்னதான் தாங்கமுடியாத கஷ்டம் வந்தாலும் வெளிய சொல்லாம மென்னு முழுங்கிடுவா.

இதெல்லாம் எம்மேல மத்தவங்க வச்சுருந்த அபிப்ராயம். எனக்கும் இதைத் தாண்டி வேற எதுவும் தெரியாது. ஒடம்பு வளஞ்சு வேல செய்யறத தப்புன்னு சொல்ல வரல. ஆனா கிராமத்துல இதுதான் பொண்ணுக்கு அழகு, இதத்தவிர பொம்பளைக்கு வேறெதுவும் வேண்டாம்னு அடக்கி வச்சர்ராங்க.

இளமையின் கீதம்
சீன அரசியலில் டாவொசிங் எனும் பெண் பங்கெடுக்கும் புதினம் ‘இளமையின் கீதம்’.

இரண்டு வருஷத்துக்கு முன்னால நகரத்துக்கு குடிபெயரும் சூழ்நிலை வந்தது. அப்போது தோழர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ம.க.இ.க.-வின் பாடல் சி.டிகளை கொடுத்து கேட்டுப்பாருங்க. கேட்டுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க என்றார்.

மீண்டும் அந்த தோழரைச் சந்தித்தபோது, “நீங்க கொடுத்த சி.டி நல்லாருக்கு. நாட்டுல உள்ள பிரச்சனையை கோபத்தோட சொல்றாங்க. ஆனா எல்லா அரசியல் கட்சியையும் திட்றாங்க. எல்லா மதத்தையும் திட்றாங்க. இவங்க யாரத்தான் ஆதரிக்கராங்க” என்றேன். அப்பதான், “வினவுன்னு ஒரு அரசியல் இணையதளம் இருக்கு, அதைப்படிங்க, நீங்க கேக்குற கேள்விக்கல்லாம் அதுல பதில் இருக்கு” என்றார்.

ஜூனியர் விகடன், துக்ளக்கு புத்தகமெல்லாம் பாக்கறதோட சரி, படிக்கறது கெடையாது. காரணம், அது அரசியல் சம்மந்தப்பட்டது, அரசியல் ஆண்களுக்கு சம்மந்தப்பட்டது. பெண்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை, இது நமக்கான புத்தகம் கிடையாதுன்னு ஒதுங்கிடுவேன். கிராமங்கள்ல பெண்கள் இப்படித்தான் இருப்பாங்க. “பொம்பளைக்கு அரசியல், இணையமெல்லாம் எதுக்கு, அதல்லாம் நீங்க படிங்க” என்றேன்.

“சமச்சீர் கல்விப் பிரச்சனை நடக்குதே, அதுக்காக போராட்டம் நடக்குதே கேள்விப் பட்டிங்களா? இது உங்க வாழ்க்கைய பாதிக்கலையா? உங்க வாழ்க்கையிலும், உங்க பிள்ளையோட வாழ்க்கையிலும் அரசியல் பாதிப்பு இருக்குங்கறது ஒங்களுக்கு தெரியலையா. இந்த ஒரு விசயத்த மட்டும் சொல்லி, ஒரு வரியில அரசியல புரியவைக்க முடியாது. கண்டிப்பா வினவு படிங்க” என்றார்.

இப்படிதான் எனக்கு வினவு அறிமுகம் ஆச்சு.

நான் ஒரு சாதாரண கிராமத்துப் பெண். ஒம்பதாம் வகுப்பு வரைக்கும் தான் படிச்சிருக்கேன். நான் விரும்பி படிக்கும் புத்தகம் ராணி வார இதழ். ராணி, ராணி முத்து, தேவி, தேவியின் கண்மணி, இதுதவிர வேறு எந்தப் புத்தகமும் தெரியாது. அந்த அளவுதான் எனக்கும் வெளி உலகத்துக்குமான தொடர்பு.

வினவு படிக்க ஆரம்பிச்சப்பா அதில் உள்ள பல வார்த்தைகளுக்கு அர்த்தமே புரியல. கம்யூனிசம், ஏகாதிபத்தியம், பாசிசம், மறுகாலனியாக்கம், தாராளமயம், இதுபோல சொல்லிக்கிட்டே போகலாம். பிறகு எனக்கு சுலபமா படிக்கும்படியும், புரியும்படியும் பெண்கள் தொடர்பாக உள்ள கட்டுரைகளை தேடி படித்தேன். போராட்ட செய்திகளை படித்தேன். துவக்கத்தில் இப்படியான கட்டுரைகளை தேடி படித்து, படிக்கும் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.

பத்திரிகையே சரியாக படிக்காத எனக்கு வினவின் கட்டுரையின் ஆழம் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தது. ஆனால் என்னதான் சொல்லியிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகமாக இருந்தது. ஒரு செய்தியின் தன்மையை வெளியில் இருந்து தெரிந்து கொள்ளும் போதும், அதற்கு அவர்கள் சொல்லும் தீர்வும் வேறு விதமாக இருந்தது. அதே செய்தியை வினவில் பார்க்கும் போது அதற்கு வினவு முன்வைக்கும் தீர்வு வேறு விதமாகவும் இருந்தது.

இணையம்னா பெரிய படிப்பாளிகள் தான் படிக்கனும், உலக இலக்கியம் தெரிந்தவர்கள் தான் எழுதணும், கிராமத்து மனிதர்கள், முக்கியமா பெண்கள் இதற்க்கெல்லாம் சரியானவர்கள் கிடையாது என்று நினைத்து கொண்டிருந்தேன். என் நினைவை மாற்றி, சாதாரண மக்களின் பிரச்சனைகளுக்காக போராடி வருவதுதான் வினவு என்பதை புரிந்து கொண்டேன்.

வினவு படிக்க தொடங்கிய சில நாட்களில் நான் படித்த ஒரு விசயம் (சரசம், சாடிஸம், சாரு நிவேதிதா) சாரு நிவேதிதா ஒரு பெண்ணிடம் இணையம் மூலமாக வக்ரப் புத்தியோடு பேசியதை படித்தேன். நேரில் பார்க்காமலே பெண்ணிடம் ஆபாசமாக பேசி குளிர் காயும் காம வெறியர்கள் இருப்பதை பார்த்து வியந்தேன். பெண்களிடம் எந்த மட்டத்திலும் பழகினாலும், சில ஆண்களுக்கு பாலியல் சம்மந்தமாக பார்க்கும் பார்வையை தாண்டி, பெண்களிடம் வேறு எதுவும் இல்லை என்பது போல் நடந்துக் கொள்பவர்களை சந்தித்திருக்கிறேன். அப்படி ஒரு பொறுக்கி நாய் எழுத்தாளனாய் இருப்பதை நினைத்து வேதனைப்பட்டேன்.

தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம் என்ற கட்டுரையை படித்துவிட்டு அழுதுவிட்டேன். பெண்களுக்கு எதிரான ஆணாதிக்க கொடுமைகளில் இது மிகவும் பயங்கரமானது. உயிரை வதைத்து  சிதைத்திருக்கிறார்கள். அறியாமையின் காரணமாக அந்த பெண் வெளியில் சொல்லாமல் துன்பத்தை அனுபவிக்கிறாள். நம் நாட்டில் பெண்களுக்கெதிறான கொடுமைகளைச் சொல்ல முடியாமல் சகித்துக் கொண்டு வாழ பழகியிருக்கிறோம்.

நாப்கின் என்ற கட்டுரை படித்தேன். மாதவிடாய் நாட்களை வெளிப்படையாக சொல்ல முடியாமல் வீட்டுக்கு தூரம், தலைக்கு குளிச்சேன், ஒதுங்கியிருக்கேன், என்று மறைமுகமா ஒழிவுமறைவாக பேசும் கிராமத்தில் இருந்து வந்த எனக்கு, வெளிப்படையாக எழுதப்பட்ட இந்த கட்டுரை பேரதிர்ச்சியை தந்தது என்றாலும். ஒட்டுமொத்த பெண்களின் அவஸ்தையை சொல்ல வேண்டிய தேவையை உணர்ந்தேன். மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இருக்கும் அவஸ்தையை ஆண்களின் மனதில் பதிய வைத்திருப்பதை பின்னுட்டத்தில் பார்த்து, கட்டுரையின் அவசியத்தை உணர்ந்தேன்.

மற்ற கட்டுரைகளையும் படிக்க தொடங்கினேன். இப்பொழுது பெண்களுக்கு அரசியல் தேவையென்பதை ஒத்துக்கொண்டும், கற்றுக்கொண்டும் வருகிறேன். பெண்களுக்கு நடக்கும் எந்த பிரச்சனைக்கும் காரணம் குடும்பமும், விதியும்தான், என்று நினைத்த என்னை, சமூக அமைப்பு முறைதான் பெண்களுக்கான எதிரி என்பதை உணர்த்தியது வினவு. பெண்களுக்கு எதிரான பிரச்சனைக்கு பெண்கள் தான் துணிந்து போராட வேண்டும் என்ற தைரியத்தை தந்ததும் வினவு.

எது நடந்தாலும் விதி விட்ட போக்குன்னு சகிச்சுக்கிட்டு வாழக்கூடாதுப் எதிர்த்து போராடணும் என்பதை கத்துக்கொடுத்தது. ஒரு நாள் எனக்கு பேருந்தில் நடந்த அசிங்கத்தை தட்டிக் கேட்க்கும் தைரியம் வந்தது. அதை வினவுக்கே எழுதும் அளவுக்கு துணிச்சலும் வந்தது.

படிக்கவே தயங்கிய நான் வினவைப் படிக்க ஆரம்பித்தப் பிறகு எழுதும் எண்ணம் வந்தது. டி.டி.பி இணையம் வழியாகவே கத்துக்கிட்டேன். என்னை பாதித்து கடந்து சென்ற பல சமூக நிகழ்வுகளை வினவு வாசகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைத்து சிலவற்றை எழுதுகிறேன்.

பிரச்சனையை எதிர்க்கும் தைரியத்தையும், போராட்ட குணத்தையும் வளர்த்துக்கொள்ள உதவியது வினவு தளத்துக்கு நன்றியும், வாழ்த்துக்களும்.

_______________________________________________________

என் பார்வையில் வினவு – 26 : லட்சுமி

றாவது வயதைத் தொடும் வினவுக்கு செவ்வணக்கம்

நம் குழந்தைகள் பார்க்கும் போதே வளர்ந்து விட்டதைக் கண்டு நாம் மலைப்பது போல, இருக்கிறது வினவின் வளர்ச்சி. சமூகம், அரசியல், கலாச்சாரம் என பல தளங்களில் வினவு வினையாற்றினாலும் எங்களைப் போன்ற பெண்களுக்கு வினவு ஊட்டிய அரசியல் அறிவு அதிக சிப்பு வாய்ந்ததாகத் தோன்றுகிறது.

உதாரணமாக, அடித்தட்டு குடும்பப் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் நடுத்தர வர்க்க பெண்கள் அனைவருக்கும் முதல் எதிரி ஆண்கள்தான் என்பது போல் நாடகமாடுகின்றன பத்திரிகைகளும்,  ஊடகங்களும். ஆனால் அவற்றையெல்லாம் தோலுரித்து பெண்களின் விடுதலை சமூகத்தின் விடுதலையில்தான் அடங்கியுள்ளது என்பதை உணர்த்தியது வினவுதான்.

நகை நட்டும், பட்டு பகட்டும் மட்டுமே பெண்களுக்கான அணிகலன்களாக சித்தரிக்கப்பட்டு அழகு பொம்மைகளாக மட்டுமே பார்க்க, பழக வைத்திருக்கும் சந்தை ஊடகங்களுக்கு மத்தியில் பெண்கள், வரலாற்றில் ஆற்றிய சிறப்புக்களையும், தற்போது வாழ்வாதார அடிப்படை தேவைகளுக்கு குடும்பத்துடன் போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தும் அரசியலை கற்றுத் தந்தது வினவு.

வினவை படிப்பதுடன் மட்டுமே நம்மை நிறுத்தி விடவில்லை. நாம் சந்திக்கும் ஒவ்வொரு பெண்ணுடனும் அரசியல் கண்ணோட்டத்துடன் பேச வைப்பது வினவு. நம்முடன் பயணிக்கும் 15 வயது சிறுமி முதல் 80 வயது பாட்டி வரை அவர்களின் பிரச்சினைகளை அரசியல் கண்ணோட்டத்துடன் பார்த்து, அதன் வேலை காட்ட முடிகிறது.

வினவைப் படிக்கும் பெண்கள் வார நாட்களில் வீட்டில் தொலைக்காட்சி முன் முடங்காமல், பெண்களின் வாழ்வாதாரப் போராட்டங்களில் நமது பங்களிப்பைச் செலுத்த உந்தித் தள்ளுவது வினவின் கட்டுரைகள்.

உதாரணத்திற்கு சாராயக் கடை ஒழிக்கும் போராட்டத்திலிருந்து வாழ்க்கையின் அடிப்படை தேவையான உணவு, கல்வி, சுகாதாரம் மற்றும் மக்களை காவு கேட்கும் இனம், ஜாதி, மதவெறி மற்றும் கூடங்குளம் அணு உலையை அகற்ற போராடும் மக்களுக்கு துணை நிற்பது வரை குறிப்பிடலாம்.

இப்போராட்டத்திற்காக வீடு வீடாகவும், வீதியிலும் பிரச்சாரம் மேற்கொள்ளும் போது பெண்கள் கேட்கும் பல கேள்விகளுக்கு அரசியல் ரீதியாக பதிலளிக்க வினவு எங்களுக்கு உதவுகிறது.

பெண்களுக்கேயுரிய குடும்பப் பொறுப்புகள் மற்றும் உடல் உபாதைகளுடன் நாங்கள் காலத்தை கடக்க வேண்டியுள்ளது. இதனால், வெளியில் சென்று வேலை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டாலும். அடுத்தவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று விட்டு விடாமல், மக்களுக்கான போராட்டத்தில் நம் பங்களிப்பு இருந்தே ஆக வேண்டும் என்று மனதைரியத்துடன் வெளியில் வரவழைப்பது வினவின் அரசியல்தான்.

ஆனாலும், உழைக்கும் பெண்கள் அனைவரும் வினவை நேரில் காண முடியாது. கம்ப்யூட்டர், நெட் வசதி இன்மையால் வினவை ஜெராக்ஸ் மூலம் அவர்களுக்கு படிக்க கொடுப்பது தேவையாக இருக்கிறது. வாய்ப்புள்ளவர்கள் இதை முறையாக செய்யும் போது வினவு இன்னும் எழுச்சி பெறும்.

ஓட்டுக் கட்சியில் இருந்து கொண்டு அரசியல் ஒரு சாக்கடை என்று மக்கள் மத்தியில் பிதற்றும் மூடர்களின் முன்னே பெண்கள் அரசியல் கற்றுக் புதிய ஜனநாயக சமூகத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்தை வினவு உணர்த்துகிறது.

இவ்வாறு எங்கள் சிந்தனையை, மாற்றியமைக்க தொடர்ந்து போராடும் வினவை, நாங்களும் மறுமொழி என்ற உணவு ஊட்டி மேலும் வளர்ப்போம்.

______________________________________________________