privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !

ஏழைகளை அம்பானிகளாக்கும் வறுமைக் கோடு !

-

ந்தியாவிலிருந்து வறுமை விரட்டியடிக்கப்பட்டு வருவதாகவும், தற்போதைய நிலவரப்படி வறுமையானது மன்மோகன் சிங், சிதம்பரம், அலுவாலியா, அதியமான் உள்ளிட்ட பொருளாதார மேதைகளுக்கு அஞ்சி அண்டார்டிக்கா பக்கத்தில் உயிருக்குப் பயந்து ஓடிக் கொண்டிருப்பதாகவும் முதலாளித்துவ ஊடகங்களில் சூடான விவாதங்கள் நடந்து வருகின்றன. 2004-2005 காலகட்டத்தில் வறுமைக்கோட்டுக்குக் கீழே இருந்தோரின் எண்ணிக்கை 37.2 சதவீதமாக இருந்ததாகவும், தற்போது அது 21.9 சதவீதமாக குறைந்திருப்பதாகவும் ‘புள்ளி’ விவரங்களின் அடிப்படையில் அள்ளி விடுகிறார்கள்.

வறுமைக் கோடுஉலகின் பிற பகுதிகளில், மக்களின் வாழ் நிலைமைகள் முன்னேறியுள்ளதா பின் தங்கியுள்ளதா என்பதை வைத்து வறுமை ஒழிப்பு அளவிடப்படுகிறது. ஆனால், இந்தியா மேலே குறிப்பிட்ட பொருளாதார மேதைகளால் ஆளப்படும் தேசமல்லவா, எனவே இங்கே வேறு வழி முறைகள் பின்பற்றப்படுகின்றன. சுரேஷ் டெண்டுல்கர் என்கிற வடநாட்டு அதியமான் ஒருவரின் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் ஒன்றின் அளவீட்டின் படியே இந்த வறுமை ஒழிப்பு சாத்தியமாகி உள்ளது. இந்த அரும் பெரும் கண்டுபிடிப்பை சமீபத்தில் மத்திய திட்ட கமிஷன் வெளியிட்டுள்ளது.

மேற்படியாரின் தலைமையிலான கமிஷனின் பரிந்துரைகளின் படி, நகரப் பகுதிகளில் தலைக்கு தினசரி 33 ரூபாய்களுக்கு மேல் நுகர்பவர்களும் கிராமப் புறங்களில் தலைக்கு 27 ரூபாய் நுகர்பவர்களும் பணக்காரர்கள் என்று அதாவது ஏழைகள் இல்லை என்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தக் காசுகளுக்குள் ஒரு மனிதன் வாழ்வதெப்படி என்பது பற்றிய விசேஷ வகுப்புகள் சென்னையில் கிழக்குப் பதிப்பகம் சார்பிலும், வடக்கே ராஜ் பாப்பர், பரூக் அப்துல்லா போன்றோராலும் நடத்தப்பட்டு வருகிறது. விலையில்லா அரிசி வாங்கி, பத்து ரூபாய்களுக்குள் மளிகை வாங்கி, வேலைக்கு கால் நடையாகச் சென்று, சருமத்துக்கு குளியல் சோப்பாக தேங்காய் நாறைப் பயன்படுத்தி, பல் விளக்க செங்கல் பொடியை உபயோகித்து, உடம்புக்கு வந்தால் தெருவோர பூசாரியிடம் பத்து ரூபாய்க்கு வேப்பிலை மந்திரித்து, காடாத் துணியில் அங்கி தைத்துப் போட்டு… ஏன் இழுக்க வேண்டும்? சுருங்கச் சொன்னால் 27 ரூபாய்க்குள் ‘ங’ப்போல் வளைந்து நெளிந்து வாழப் பழகி, பணக்காரர்களாகும் இந்தப் புத்தம் புதிய வித்தை தான் முதலாளித்துவ ஊடகங்களின் தற்போதைய பேசு பொருள்.

ராஜ் பப்பரும் பரூக் அப்துல்லாவும் பதிப்பகம் நடத்திக் கொண்டு அறிவுஜீவிகளாக இல்லாத காரணத்தால் அவர்களது கருத்துக்கள் வறுத்தெடுக்கப்பட்டு விட்டன. சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேசிய ராஜ் பாப்பர், மும்பையில் 12 ரூபாய்களுக்கு சாம்பார், ரசம், கூட்டு எல்லாம் சேர்ந்த ‘புல் மீல்ஸ்’ கிடைக்கிறது என்றும், மத்திய திட்ட கமிஷன் வெளியிட்டுள்ள வறுமைக்கோட்டு அளவீட்டின் படி ஒரு நபர் மும்பையில் சுகமாக வாழ்வது சாத்தியமே என்றும் தெரிவித்துள்ளார். காங்கிரசு கட்சி அல்லவா? கண்ணை மூடிக் கொண்டு பள்ளத்தில் பாய்வதற்கு ஆளிருந்தால் பாதாளத்தில் பாய்வதற்கும் ஆளிருக்க வேண்டுமே. ராஜ் பாப்பருக்கு போட்டியாக பாதாளத்தில் பாய்ந்தவர் தில்லியைச் சேர்ந்த காங்கிரசு தலைவர் ரஷீத் மசூத்.

“மும்பை பணக்கார நகரம் என்பதால் தான் அங்கே சாப்பாட்டின் விலை 12 ரூபாய்; எங்கள் தில்லியில் 5 ரூபாய்க்கே சாப்பிட்டு விடலாமே” என்று அறிவித்துள்ளார் ரஷீத் மசூத். இதற்கெல்லாம் பல படிகள் மேலே சென்ற பரூக் அப்துல்லா, ” 1 ரூபாயிலிருந்து 100 ரூபாய் வரை சாப்பாடு கிடைக்கிறது. எல்லாம் சாப்பிடுபவர்களின் விருப்பம் தான்” என்று சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டு காங்கிரசுகாரர்கள் எவரும் ’எங்கள் ஊரில் இலவசமாகவே உண்ட கட்டி கிடைக்கிறது எனவே 27 ரூபாயையும் அப்படியே மிச்சம் பிடித்து சீக்கிரம் அம்பானியாகும் வாய்ப்பு உள்ளது’ என்று சொல்லியிருக்கிறார்களா என்று ஏடுகளில் தேடிப் படித்து உறுதிப்படுத்திக் கொள்ளும் மன வலிமை இல்லாத காரணத்தால் தவிர்த்து விட்டு மேலே செல்கிறோம்.

தற்போது இந்த பொருளாதார மேதைகளின் கருத்துக்கள் துவைத்து தொங்கப் போடப்பட்டு விட்டதால் தங்களது அரும் பெரும் கண்டுபிடிப்புகளை வாபஸ் பெற்றுள்ளார்கள். ராஜ் பாப்பர், பரூக் அப்துல்லா, ரஷீத் உள்ளிட்டோர் தங்களது கருத்துக்களுக்காக வருத்தம் தெரிவித்துள்ளனர். இவர்கள் பதிப்பகம் நடத்தவில்லை, அரசியல் நடத்துகிறார்கள் – எனவே வேறு வழியில்லை. எதிர்பார்த்த அளவை விட அதிகமாக பெயர் நாறுவதை அவதானித்த காங்கிரசு சென்ற வார மத்தியில் திக் விஜய் சிங்கையும், கபில் சிபலையும் களமிறக்கியது.

கடந்த இருபது வருடங்களாக ஆழ்ந்த தூக்கத்திலிருந்து விட்டு அப்போது தான் விழித்தெழுந்த இவர்கள் இருவரும், மத்திய திட்ட கமிஷனின் பரிந்துரைகளின் மேல் சந்தேகம் தெரிவித்திருந்தனர். நிகழ்ச்சியொன்றில் பேசிய கபில் சிபல் “திட்ட கமிஷனின் முடிவுகளில் எங்கேயோ தவறு இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார். அது எங்கே என்பது தெரியாத அளவுக்கு சிபல் ஒரு அப்பாவி என்பதை நாங்கள் நம்புகிறோம்.

இதற்குப் பின்னும் தங்கள் மேல் வரும் விமரிசனங்கள் குறையாதிருப்பதை உணர்ந்த காங்கிரசு, கடந்த வார இறுதியில் மத்திய அமைச்சர் ராஜீவ் சுக்லாவை களமிறக்கி விட்டு ஒட்டு மொத்தமாக ஆட்டையைக் கலைத்து விட்டு முதலில் இருந்து புரோட்டா தின்னலாம் என்கிறது. ”மத்திய திட்ட கமிஷனால் முன்வைக்கப்பட்ட இந்த பரிந்துரைகள், டெண்டுல்கர் கமிட்டியின் அறிக்கையின் அடிப்படையிலானதே ஒழிய, அரசு இன்னும் வறுமைக் கோட்டைப் பற்றி எந்த முடிவையும் எடுக்கவில்லை” என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதைத் தான் “வேலை கள்ளிக்கு பிள்ளை சாக்கு” என்று ஊர்பக்கத்தில் சொல்வார்கள். கடந்த 2011ம் ஆண்டு ஜூன் மாதம் தனது 72-வது வயதில் மரணமடைந்த சுரேஷ் டெண்டுல்கர், யாரோ சாதாரண வழிப் போக்கர் அல்ல. கடந்த காலங்களில் மத்திய புள்ளியியல் கமிஷனின் தலைவர், பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் கமிட்டியின் உறுப்பினர், மத்திய ரிசர்வ் வங்கியின் இயக்குனர்களில் ஒருவர் என்று முக்கியமான அரசு பதவிகளை அலங்கரித்தவர். பாரதிய ஜனதா ஆட்சிக்காலத்தில் பொதுத்துறைகளை தனியாருக்கு விற்பது எப்படி என்பதற்கான வழிகாட்டுதல்களை அளித்த “முதலீட்டுக் குறைப்பு கமிஷனின்” (Disinvestment commision) உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

2009-ம் ஆண்டு வாக்கில் மத்திய காங்கிரசு அரசாங்கத்தால் வறுமைக் கோடு பற்றிய புதிய வரையறைகளை உருவாக்குவதற்கென்று அமைக்கப்பட்ட கமிட்டி இவர் தலைமையில் தான் அமைக்கப்பட்டது. தற்போதைய பரிந்துரைகள் மேற்படி கமிட்டியால் முன் வைக்கப்பட்டதே. விவகாரம் நாற்றமெடுக்கத் துவங்கியதும், தற்போது மத்திய அரசு ரெங்கராஜன் கமிட்டியிடம் வறுமைக் கோடு பற்றிய பரிந்துரைகளைக் கோரியிருப்பதாக அறிவித்துள்ள மத்திய அமைச்சர் சுக்லா, இதே காரணத்துக்காக இதே அரசால் முன்பு அமைக்கப்பட்ட சுரேஷ் டெண்டுல்கர் கமிட்டியின் செயல்பாடுகளையும், அதற்கு அரசு அளித்த நிதியுதவிகளையும் மூடி மறைத்துக் கைகழுவப் பார்க்கிறார்.

சுரேஷ் டெண்டுல்கரின் பரிந்துரைகளின் மேல் சாமியாடி வரும் பாரதிய ஜனதாவின் யோக்கியதையை நாம் புதிதாக சொல்லத் தேவையில்லை. எனினும், ஒரு ஒப்பீட்டுக்காக சொல்வதென்றால் பாரதிய ஜனதாவின் ஆட்சிக்காலத்தில் வறுமைக் கோடு பற்றிய அளவீடு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் முறையே 18 ரூபாய் மற்றும் 16 ரூபாய்களாகவே இருந்தது. பாரதிய ஜனதாவின் ‘ஏழைகள் பற்றிய அக்கறை’ குறித்து மேற்கொண்டு புதிதாக ஏதும் சொல்லத் தேவையில்லை என்றாலும் இந்த சாமியாட்டத்தின் பின்னும் அந்தக் கட்சி எழுப்பி வரும் அதீத கூச்சலின் பின்னும் வேறு காரணங்கள் உள்ளன.

வறுமைக் கோடு பற்றிய இந்த விவாதங்களும், எதிர்க்கட்சிகளின் கூச்சல்களும் ஊடகங்களை நிரப்பி வரும் இதே காலகட்டத்தில் தான் மத்திய அரசு உணவு பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றுவதில் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. காட் ஒப்பந்த ஷரத்துகளின் படி உணவு தானிய சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்குத் தடையாக பொது வினியோக முறையை கைவிட்டாக வேண்டும். இதன் பொருள், மத்திய அரசு குடிமக்களுக்கு உணவு தானியங்கள் கிடைக்கச் செய்யும் கடமையிலிருந்து கைகழுவியாக வேண்டும்.

மதிய உணவுத் திட்டம்பொது வினியோக முறையை ஒழித்துக் கட்டும் அரசின் திட்டங்கள் கட்டம் கட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நவதாராள பொருளாதாரக் கொள்கைகள் அமுலுக்கு வரும் முன், நடப்பிலிருந்த அனைவருக்குமான பொதுவினியோக முறை தொண்ணூறுகளின் இறுதியில் மாற்றியமைக்கப்பட்டு இலக்கு நோக்கிய பொதுவினியோக முறையாக அமுலாக்கப்பட்டது. இதன் படி, வறுமைக் கோட்டுக்குக் கீழ் இருப்போருக்கும், அதற்கு மேல் இருப்போருக்கும் வேறு வேறு வண்ண ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டன. தற்போது தமிழகம் உள்ளிட்டு ஒரு சில மாநிலங்கள் தவிர்த்து நாட்டின் பிற மாநிலங்களில் இலக்கு நோக்கிய பொது வினியோக முறை அமுலில் உள்ளது.

தற்போது பேசப்பட்டு வரும் உணவுப் பாதுகாப்புச் சட்டம் என்பது ஏழைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு உணவு தானியங்கள் சரியாக கிடைக்கச் செய்வதற்காகவே கொண்டு வரப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏழைகளைக் கணக்கிடுவதில் மோசடியான அளவீடுகளைக் கையாள்வதன் மூலம் ஒரு பக்கம் ஏழைகளைக் குறைவாக கணக்குக் காட்டி மக்களை மேலும் பட்டினியில் தள்ளுவது, இன்னொரு பக்கம் பெரும்பான்மையான மக்களைக் கொண்ட பெருத்த சந்தையை தனியார் உணவு தானிய முதலைகளின் பிடியில் ஒப்படைப்பது என்பதே அரசின் உள்நோக்கமாக உள்ளது.

விவாதங்கள் இந்த திசையை நோக்கித் திரும்பி விடாமல் இருப்பதை பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ஆளும் வர்க்க ஊடகங்களும் உறுதிப்படுத்திக் கொள்கின்றன. தங்களது நிருபர் படையை களமிறக்கி எந்த ஊரில் என்ன சாப்பாடு என்ன விலை என்று எல்லோருக்கும் தெரிந்த உண்மையை யாருக்குமே தெரியாத ரகசியத்தைக் கண்டுபிடித்துச் சொல்வது போல சொல்லி காங்கிரசு கட்சி தலைவர்களை வெறும் மூளையற்ற கோமாளிகள் என்று நகைச்சுவையாக நிறுவ முற்பட்டுள்ளனர்.

முதலாளித்துவ ஊடகங்களில் காங்கிரசையும் வறுமைக் கோட்டையும் முன்வைத்து நடந்து வரும் இந்த நகைச்சுவைக் காட்சிகளின் பின்னே பசிக் கொடுமையை எதிர்நோக்கியிருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்வதும் அம்பலப்படுத்துவதும் தான் ஆளும் கும்பலின் அயோக்கியத்தனமான திட்டங்களை முறியடிப்பதற்கான முன் தேவை.

– தமிழரசன்