சிதம்பரம் வீனஸ் மெட்ரிக் பள்ளி கட்டணக் கொள்ளைக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் 1-8-2013 அன்று சிதம்பரம் மேல வீதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. சிதம்பரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன், மாவட்டத்தலைவர் வெங்கடேசன், செயலாளர் கலையரசன், பாதிக்கப்பட்ட பெற்றோர் செல்வக்குமார், மனித உரிமை பாதுகாப்பு மைய செயலாளர்கள் வழக்றிஞர்கள் செந்தில், கடலூர் செந்தில் குமார் ஆகியோர் உரையாற்றினர்.
கடந்த மாதம் பள்ளி துவக்கத்தில் அரசு கட்டணம் செலுத்த முயன்ற பெற்றோர்களை பள்ளி முதலாளி அடியாட்களை வைத்து மிரட்டினார். அதில் அனைத்துக் கட்சியினரும் இருந்தனர். காவல்துறையினர் தலையீட்டால் சுமுக நிலை ஏற்பட்டது. அவ்வாறு அரசு கட்டணம் கட்டிய மாணவர்களுக்கு பாடப் புத்தகம் தராமல் இழுத்தடித்தது, பிள்ளைகளை தனி வகுப்பறையாக அமர வைத்து பாகு பாடு காட்டியது என அத்து மீறல் தொடர்ந்தது. பெற்றோர்களை தனித்தனியாக தெரிந்தவர்களை வைத்து நயமாக பேசுவது, தேவைப்பட்டால் மிரட்டுவது, கட்டணத்தை பார்த்தால் உங்கள் பிள்ளைகளின் கல்வி அவ்வளவுதான், அரசு கட்டணம் எல்லாம் நான் வாங்க முடியாது. அப்புறம் அதற்கேற்றாற் போல்தான் வகுப்பு நடக்கும், அதாவது அனைத்து பாடத்திற்கும் ஒரே ஆசிரியர்தான் என மன உளச்சல் தொடர்ந்தது. இது குறித்து கல்விதுறை காவல் துறை, கலெக்டர், இயக்குனர் என அனைவருக்கும் புகார் மனு அனுப்பினோம். இது வரை எந்த அதிகாரியும் என்ன என்று விசாரிக்கவரவில்லை.
பள்ளி நிர்வாகத்தை கண்டித்து உண்ணாநிலை போராட்டம் நடத்த இரு முறை விண்ணப்பித்தோம். அனுமதி மறுத்ததுடன், சிதம்பரம் காவல்துறை நாங்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேசி செட்டில் செய்கிறோம் என பல முறை முயன்று தோற்றுப் போனது. ஆய்வாளர் இருமுறை பள்ளிக்கே சென்றார். பலன் இல்லை. நாம் மாணவர்களை நேரடியாக டி.எஸ்பியிடம் அழைத்து சென்று புத்தகம் தர மறுப்பது, தனி வகுப்பறை என்பதை ஆதாரங்களுடன் நிருபித்தோம். இம்முறை பள்ளி தாளாளரையும் முதல்வரையும் காவல் நிலையம் வரவழைத்து பேசினர். “நான் அப்படி எதுவும் செய்யவில்லை, பெற்றோர் சங்கத்தினர் வேண்டு மென்றே எனக்கு எதிராக பேசுகின்றனர்” என விளக்கமளித்தார். சிதம்பரம் டி.எஸ்பி ”இவ்வளவு நாணயமற்று, மாணவர்கள் மீது அக்கறையில்லாத உன்னிடம் என் பிள்ளை படிக்க வேண்டிய அவசியம் இல்லை” என வீனஸ் முதலாளியிடம் கூறி அவர் பிள்ளையை டி.சி. வாங்கி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார். பெற்றோர் சங்கப் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்து விடுமோ என கருதி கடைசி வரை அனுமதி தரவில்லை. நாம் உயர் நீதிமன்றம் சென்று உத்திரவு பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
தலைவர் வெங்கடேசன் பேசும்போது ”பணம் சம்பாதிக்க பிச்சை எடுக்கலாம், கள்ள நோட்டு அடிக்கலாம், சாராயம் காய்ச்சி விக்கலாம், மாணவர்களை பணயக் கைதிகளாக்கி பணம் பறிப்பது தேவையா? அரசு கட்டணம் செலுத்தியதற்காக பிள்ளைகளுக்கு புத்தகம் தர மறுப்பது, தனியே அமர வைப்பது இவையெல்லாம் கல்வியாளர் செய்யக்கூடிய செயலா? பெற்றோர்களே நாம் ஒன்றிணைந்து போராட வேண்டும், கண்டிப்பாக கட்டணக் கொள்ளையர்களை வீழ்த்த முடியும்” என பேசினார்.
சிதம்பரம் தலைவர் ராமகிருஷ்ணன் “சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளியில் அனைத்து பெற்றோர்களும் ஓரணியில் பள்ளி முன்பு பல முறை முற்றுகை, உள்ளிருப்பு போராட்டம் என நடத்தி அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்தியிருக்கிறோம். சில நூறு மாணவர்கள் அடைந்த அரசு கட்டணம், இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசு கட்டணத்தை மட்டுமே செலுத்துகின்றனர். நம்முடைய போராட்டத்தால் பல பள்ளிகள் அவர்களாகவே அரசு கட்டணம் மட்டும் வசூலிக்கிறோம் என அறிவிப்பு பலகையில் ஒட்டியுள்ளனர். வீனஸ் பள்ளி பெற்றோர்கள் அச்சமில்லாமல் ஒன்று திரண்டு போராட்டத்திற்கு நேரடியாக களத்திற்கு வராததே இரு மாதங்களாக இந்த கட்டண பிரச்சினை இழுத்து வருகிறது. அதிகக் கட்டணம் செலுத்தியவர்கள் புகார் மனுவாக எங்களிடம் கொடுத்தால் நாங்கள் பள்ளி நிர்வாத்திடமிருந்து திருப்பிவாங்கி தருகிறோம். அச்சப்படாதீர்கள்” என பேசினார்.
செயலாளர் கலையரசன் ”சிதம்பரம் வீனஸ் பள்ளி அரசு கட்டணம் மட்டுமே வசூலிக்கும் வரை நாங்கள் விடமாட்டோம். மாணவர்களை துன்புறுத்துவது என்ன மனித செயலா? கல்வித்துறை அதிகாரிகள் மௌனம் காப்பது தான் பள்ளி முதலாளியின் அத்து மீறலுக்கு காரணம். நாம் இன்னும் அதிக எண்ணிக்கையில் சங்கமாக திரண்டு போராடுவதுதான் தீர்வுக்கு வழியாகும்.” என்று பேசினார்.
வீனஸ் பள்ளி பெற்றோர் செல்வக்குமார் ”என் குழந்தைகள் இருவர் 1 மற்றும் இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர். அரசுக்கட்டணம் கட்டியதற்காகவும், சங்கத்தில் அதிகம் ஈடுபடுவதால் எனது பிள்ளைகளுக்கு இன்று வரை புத்தகம் தரவில்லை. புத்தகத்திற்கான பணம் வாங்க மறுத்தார்கள். டி.எஸ்.பியிடம் சொன்னேன், பணம் வாங்கினார்கள்.புத்தகம் இருப்பு இல்லை என பொய் சொன்னார்கள். அதே நாளில் பள்ளி சொன்ன பணத்தை செலுத்திய பிற மாணவர்களுக்கு புத்தகம் வழங்கி யுள்ளனர். வகுப்பில் என்பிள்ளை மட்டும் புத்தகம் நோட்டு இல்லாமல் இருப்பது அவர்கள் மனது பாதிக்காதா? இதனால் குடும்பத்தில் பிரச்சினை உருவாகும் நிலை ஏற்படுகிறது. நான் குடியிருக்கும் வீட்டு உரிமையாளரிடம் நெருக்குதல் கொடுத்து காலி பண்ணச்சொல்லியுள்ளார்கள். கல்வியாளர் செய்யும் கூடிய செயலா? சங்கத்தோடு சேர்ந்து இறுதி வரை போராடுவேன். நான் பின்வாங்க மாட்டேன்.” என உருக்கமாக பேசினார் நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் நின்று கவனித்தனர்.
இறுதியாக பேசிய மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜுவின் உரை
”சிதம்பரம் வீனஸ் பள்ளி 10-ம் வகுப்பில் மாநிலத்தில் முதலிடம் பெற்றது. அது போல் அரசுக் கட்டணம் செலுத்த சென்ற பெற்றோர்களை அடியாட்களை வைத்து மிரட்டியதிலும் முதலிடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் எங்கும் நடக்காதது. கட்டணக் கொள்ளைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பெற்றோர்கள் பள்ளிகளை முற்றுகையிட்டு நடத்தும் போராட்டங்கள் நாள் தோறும் பத்திரிக்கையில் வந்து கொண்டுதான் இருக்கிறது. கல்வி கட்டணம் கட்ட இயலாத பெற்றோர்கள் போராடுவதை தவிர வேறுவழியில்லை. ஆட்டோ ஓட்டுநர் 10 ரூபாய் அதிகம் வாங்கினால் கொள்ளை அடிப்பதாக பேசும் நடுத்தர வர்க்கத்தினர், கண்டக்டர் 2 ரூபாய் சில்லறை பாக்கி வைத்து விட்டால் புகார் செய்வேன் என ரூல்ஸ் பேசும் நடுத்தர வர்க்கத்தினர், மளிகை சாமானில் ஒரு சோப்பு விடுபட்டால் பதறுபவர்கள், அரசுக் கட்டணத்தை விட நான்கு மடங்கு அதாவது ரூ 12,500 என்பதை ரூ 40,000 என வசூலிப்பதற்கு எதிராக ஏன் கேள்வி கேட்பதில்லை, போராட வருவதில்லை? வீனஸ் பள்ளியில் செல்வக்குமார் அரசுக்கட்டணம் கட்டினார், சங்கத்திற்காக முன்னின்று போராடுகிறார் என்பதற்காக 1,2 வகுப்பு படிக்கும் அவரது பிள்ளைகளுக்கு பாடப் புத்தகம் தரவில்லை. இப்படிபட்டவர் எப்படி பள்ளி முதல்வராக, தாளாளராக, கல்வி வள்ளலாக இருக்க முடியும். செல்வக்குமார் புத்தகம் கேட்டு பள்ளி முதல்வரோடு வாக்கு வாதம் செய்யும் போது, வாடா போடா, என இருவருக்கும் வார்த்தை தடிக்கிறது. வெளியே போடா என முதல்வர் பேசுகிறார். வேடிக்கை பார்க்கும் பெற்றோர்கள் ”புத்தகம் ஏன் கொடுக்கல, பணம் செலுத்தும் பெற்றோரை எப்படி வெளியே போகச் சொல்லலாம்” என ஒற்றுமையாக அன்றைக்கே கேட்டிருந்தால், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அவசியம் இருக்காது. குடியிருக்கும் வீட்டு உரிமையாளரை நிர்ப்பந்தப்படுத்தி காலி செய்ய சொல்கிறார் என்றால் சட்டம், நியாயம் என்ன இருக்கிறது. காவல்துறை துணைக் கண்காணிப்பாளரிடம் எத்தனை முறை செல்வக்குமாரும், பிற பெற்றோர்களும் சென்றிருப்பார்கள். பள்ளி தாளாளர், முதல்வரிடம் பேசி பார்த்துவிட்டு டி.எஸ்பி. வீனஸிலிருந்து அவர் பிள்ளைக்கு டி.சி. வாங்கி வேறு பள்ளியில் சேர்த்து விட்டார். நமக்கு தீர்வு ஏற்படவில்லை.
பயங்கரவாதம் என்றால் குண்டு வெடித்து இரண்டு பேர் இறப்பது, அதை காவல் துறையும் பத்திரிக்கைகளும் எப்படி வெளிப்படுத்துகின்றன. இரண்டு மாதமாக செல்வக்குமார் தன் பிள்ளைகளுக்கு அரசுக் கட்டணத்தை செலுத்திவிட்டு நாள் தோறும் புத்தகத்திற்காக தனியே அமர வைத்தற்காக, எத்தனை மனுக்கள், கல்வி துறை அதிகாரிகள் இயக்குனர் வரை கொடுக்கப்பட்டது. கலெக்டரிடம் வீனஸ் பள்ளி தொடர்பாக புகார் மனுவை நேரில் சந்தித்து பெற்றோர்கள் கொடுத்தார்கள். இது வரை எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. பெற்றோர்களுக்கு என்ன தீர்வு? தனியார் பள்ளி முதலாளி மீது நடவடிக்கை எடுக்க முடியாது, கட்டணக்கொள்ளையை தடுக்க முடியாது என்றால் உரிய அதிகாரிகள் பதவியை ராஜினாமா செய்யட்டும். அரசுக் கட்டணம் செலுத்தி விட்டு இன்று கடைசி வரை சரணடையாமல் செல்வக்குமார் நின்று போராடுகிறார். வீனஸ் பள்ளி பெற்றோர்கள் ஒன்று திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை. நாங்கள் பேசி முடிக்கிறோம் என காலம் தாழ்த்தி பெற்றோர்களின் போராட்ட வீரியத்தை குறைத்தது காவல் துறை. பள்ளி முதலாளி பெற்றோர்களை வெவ்வேறு வகைகளில் பேசி ஒன்று திரள விடாமல் செய்வதற்கு கல்வி துறை அதிகாரிகள் அமைதி நடவடிக்கை பயன்பட்டது.
நீதிபதி சிங்கார வேலிடம் கடந்த ஆண்டு வீனஸ் பள்ளி மீதும், காமராஜ் பள்ளி மீதும் முழுமையான ஆதாரங்களுடன் வழக்கு போட்டோம். நீதியரசர் கூடுதலாக வசூலித்த கல்வி கட்டணத்தை பெற்றோர்களுக்கு திருப்பி தர உத்திரவிட்டிருக்க வேண்டும். அல்லது நான் போட்ட உத்திரவை மீறியிருக்கிறாய் என பள்ளி அங்கீகாரத்தை ரத்து செய்து இருக்க வேண்டும். எதுவும் செய்யாமல் இருவரும் சமாதானமாக போங்கள் என வழக்கை முடித்து வைத்தார். எப்படி தனியார் பள்ளி முதலாளிகளுக்கு அச்சம் வரும். அன்று காமராஜ் பள்ளியில் பிரச்சினை தீரும் வரை இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என பெண்கள் உட்பட நள்ளிரவு 12 மணி வரை காமராஜ் பள்ளி முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினோம், உயர்நீதிமன்றத்தில் வழக்கு போட்டோம் வேறு வழியில்லாமல் கலெக்டர் தலையிட்டதால் தீர்வு கிடைத்தது.
தனியார்மயக் கல்வி மாணவர்கள் தரமானது என்ற விளம்பரத்தால் விட்டில் பூச்சிகளாய் பெற்றோர்கள் விழுகிறார்கள். ஆங்கில வழி தனியார் பள்ளிகளின் கல்வித்தரம், மாணவர்களின் சமத்துவத்திற்கு எதிரானது. பொதுப்பள்ளி, அருகமைப்பள்ளி என சுதந்திரம் அடைந்த நாள் முதல் கல்வியாளர்கள் பல அறிக்கைகளை கொடுத்து அதை பாராளுமன்றமும் ஏற்றுக்கொண்டு இன்று வரை நடைமுறைப்படுத்தவில்லை. நோபல் பரிசு பெற்ற பலருக்கு ஆங்கிலம் தெரியாது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட பலர் அரசுப் பள்ளியில் படித்தவர்கள்.
மாணவர்களின் ஆற்றல்களை வளர்ப்பதற்காக, அறிவை விசாலமாக்குவதற்காக தனியார் பள்ளிகள் கல்வி கற்பிக்கிறதா? இல்லை. தேர்ச்சி விகிதத்தை உயர்த்திக் காட்டி, லாபம் சம்பாதிக்க, மனப்பாடம் செய்து பன்னாட்டு கம்பெனிக்கு தேவைப்படும் உதிரி பாகங்களாக, பணம் சம்பாதிக்கும் எந்திரமாக நமது பிள்ளைகளை மாற்றுகிறார்கள். ஆயிரக்கணக்கான பள்ளிகளில் ஓராசிரியர், ஈராசிரியர், சில பள்ளிகளில் ஆசிரியர்களே இல்லை என்ற புள்ளி விபரங்களை அரசே வெளியிடுகிறது. ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் எப்படி படிப்பார்கள். பெற்றோர்கள் எப்படி பிள்ளைகளை சேர்ப்பார்கள்?. இது அரசுக்கு தெரியாதா? ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை.
சாக்கடை இருந்து நோய் பரப்பினால் தான் தனியார் மருத்துவமனைக்கும், தனியார் மருந்து கம்பெனிக்கும் லாபம். அரசுப்பள்ளி தரமாக நடந்தால் தனியார் பள்ளி எப்படி கொழுத்த லாபம் பெற முடியும்? நகராட்சி சுத்தமான குடிநீரை வழங்கினால் மினரல் வாட்டர் கம்பெனி எப்படி லாபமாக இயங்கும்? இத்தகைய வியாபாரங்களில் ஈடுபடாத அரசியல் வாதிகள் உண்டா? இத்தகைய முதலாளிகளிடம் பணம் வாங்காத அதிகாரிகள், அரசியல் கட்சிகள் உண்டா? பெற்றோர்கள் பாதிக்கப்பட்டால், பொதுமக்கள் பாதிக்கப்ட்டால் நமக்கு ஆதரவாக இவர்கள் எப்படி பேசுவார்கள்?. அனைத்து தனியார் மயக் கொள்கைகளும் சட்டமன்றம் பாராளுமன்றத்தில், அதிகாரிகளின் ஒப்புதலுடன்தான் சட்டப்படி அமல் படுத்தப்படுகிறது. அனைத்துக் கட்சிகளும் இதை ஏற்றுகொண்டுள்ளன.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வீனஸ் பள்ளி பிரச்சினை பேசி முடித்தாகி விட்டது என காவல்துறை அனுமதி அனுமதி மறுக்கிறது. நீதிமன்றத்திலும் அவ்வாறே தகவல் அளிக்கிறார்கள். நாங்கள் போராடி நீதிமன்ற உத்திரவு பெற்று இந்த ஆர்ப்பாட்டம் நடத்துகிறோம். அரசு உத்தரவை மதிக்கவில்லை என்றால் இ.த.ச.188பிரிவு, மாணவர்களை பெற்றோர்களை அச்சுறுத்தி பணம் பறித்தால் இ.த.ச.385 பிரிவு, பெற்றோர்களை மிரட்டினால் இ.த.ச.506 1 பிரிவு இருக்கிறது. கட்டாய இலவச கல்வி உரிமை சட்டத்தின் படி மனரீதியாக,உடல் ரீதியாக கொடுக்கப்படும் டார்ச்சர் குற்றம் என கூறப்பட்டுள்ளது. ஏன் வீனஸ் பள்ளி முதலாளி, முதல்வர் மீது வழக்கு பதிவு செய்யக் கூடாது. அரசுக்கட்டணம் கட்டுவேன் என சொன்னால் குற்றமா?.பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராடினால், போலீசு கல்வி துறை அதிகாரிகள் என்ன செய்ய முடியும்?
நாங்கள் அரசை எதிரத்து போராடுகிறோம். காவல் துறையை எதிர்த்து போராடுகிறோம். டாடா, பிர்லா, அம்பானியை எதிர்த்து போராடுகிறோம். இந்த தனியார் பள்ளி முதலாளிகளுக்காக பெற்றோர்களே அச்சப்படாதீர்கள். நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது. தனியார்மயம் என்றாலே முறைகேடு, பித்தலாட்டம், லாபவெறி மட்டுமே உந்து சக்தி. ஒழுக்கக்கேடு எத்தகைய படுபாதக செயலையும் செய்யத் தயங்காதது. பிள்ளைகளுக்கு புத்தகம் தராமல் இழுத்தடிப்பதை பொருத்தி பாருங்கள்.
சிதமபரம் எம்.எல்.ஏ பாலகிருஷ்ணன் நேர்மையானவர், அவர் ஒரு வார்த்தை தொலைபேசியில் கூப்பிட்டு போராட்டம் செய்வோம், அரசு கட்டணத்தை மட்டும் வாங்குங்கள் என சொன்னால் வீனஸ் குமார் கேட்க மாட்டாரா? தேர்தல் செலவுக்கு மார்க்சிஸ்ட் கட்சியும் வீனஸ் பள்ளியிடம் பணம் பெற்று உள்ளது. அதனால்தான் எதிர்த்து போராட மார்க்சிஸ்ட் கட்சி தயங்குகிறது என பெற்றோர்கள் சொல்லுகிறார்கள் நான் சொல்லவில்லை. பா.ம.க அன்புமணி ”தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக தேவைப்பட்டால் பள்ளி முன்பு இளைஞர் அணி போராடும் என அறிக்கை விடுகிறார்”.சிதம்பரம் வீனஸ் பள்ளிக்கு ஆதரவாக அடியாட்களுடன் பா.ம.க மாவட்ட செயலாளர் அரசு கட்டணம் செலுத்த வந்த பெற்றோர்களுக்கு எதிராக களத்தில் கச்சை கட்டி நின்றார்.
பொது மக்கள் அடிமைத்தனமாக என்ன செய்ய முடியும் என ஒதுங்குவதால் பயன் இல்லை. ஒரு முறை கட்டணக் கொள்ளைக்கு எதிராக போராடி வெற்றி பெற்று அதை சுவைத்து பாருங்கள். அதன் தாக்கம் விலை வாசி உயர்வுக்கு எதிராக, தண்ணீர் வியாபாரத்துக்கு எதிராக, மின்கட்டண உயர்வுக்கு எதிராக, மருத்துவம் தனியார் மயத்துக்கு எதிராக போராடச் சொல்லும். ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளை நம்பி பயனில்லை. நாம் சங்கமாக திரண்டு போராடுவதை தவிர வேறு வழியில்லை. நாளைக்குள் செல்வக்குமார் பிள்ளைக்கு புத்தகம் தரவில்லை என்றால், திங்கள் முதல் காலவரையற்ற உண்ணாநிலை போராட்டம் பள்ளி முன்பாக செய்வோம். இந்தியாவில் 1,2, கிளாஸ் பிள்ளைக்கு புத்தகம் கேட்டு போராட்டம் என்பது முதல் முறையாக இருக்கும். இந்த வாய்ப்பை வழங்கியவர்கள் கடலூர் கல்விதுறை, காவல்துறை மாவட்ட நிர்வாகமும்.
இந்த நிலை வெட்கப் படக்கூடியதாக இருந்தாலும், தனியர் பள்ளிகளின் ரவுடித்தனம் என்ற எதார்த்த உண்மை இதுதான். அப்படிபட்ட சூழலை அதிகாரிகள் ஏற்படுத்தி தரமாட்டார்கள் என நினைக்கிறோம். தனியார்மயக் கொள்கைதான் அரசின் கொள்கை, அதனால்தான் அதிகாரிகள் அமைதியாக இருக்கிறார்கள், சட்டம் சும்மா இருக்கிறது. நாம் சங்கமாக திரண்டு போராட வேண்டும்.”
செல்வக்குமார் பிள்ளைக்கு மறுநாள் சில புத்தகங்கள் கொடுக்கபட்டதால், போராட்டம் தள்ளி வைக்கபட்டது. ஆர்ப்பாட்டம் நடந்த கடைவீதியில் உள்ள வியாபாரிகள், கூட்டத்திற்கு வந்த பெற்றோர்கள் நமது சங்க நிர்வாகிகளை பார்த்து பலர் வணக்கம் வைத்தனர். கல்வி வள்ளலை கிழித்து தொங்க போட்டு விட்டீர்கள் என கருத்தும் சொன்னார்கள்.
தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்
இத்தகைய முதலாளிகளிடம் பணம் வாங்காத அதிகாரிகள், அரசியல் கட்சிகள் உண்டா?
— You have clearly given the reason for such atrocities. Unless we remove DMK and ADMK and their style of politics and administration, nothing good can happen in Tamilnadu.
பணம் கட்ட முடியாதுன்னா அரசு பள்ளியில் படிக்க வேண்டியதுதான…
என்னப்பா அக்கப்போர் பன்றிங்க.
Remove DMK,All the Ds and Ks ll go automatically.
We can have Congress/Communist/BJP and Muslim League.
//தலைவர் வெங்கடேசன் பேசும்போது ”பணம் சம்பாதிக்க பிச்சை எடுக்கலாம், கள்ள நோட்டு அடிக்கலாம், சாராயம் காய்ச்சி விக்கலாம்//- தலைவரே இப்படி பேசுறது சரியா?
பொதுக்கூட்டம் நாம் நினைத்தது போல மிக மிக அருமையாக இருந்தது.நமது மென்மேலும் தொடரட்டும்,வெல்லட்டும் கலந்து கொன்ட அனைவருக்கும் நன்ரி.