Tuesday, July 27, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வறுமைக் கோடு உருவான வரலாறு !

வறுமைக் கோடு உருவான வரலாறு !

-

வஹர்லால் நேருவின் ‘சோசலிச’ பொருளாதாரத்திலிருந்து இந்திரா காந்தியின் “ஹரிபி ஹடாவோ” (வறுமையை ஒழிப்போம்) காலத்தைத் தாண்டி, ராஜீவ் காந்தியின் உலகமயமாக்கல், நரசிம்மராவ்-மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் தாராளமயமாக்கல், பாஜக தலைமையிலான அரசில் தனியார் மயமாக்கல் என்று இந்திய பொருளாதாரம் வெகு தூரம் வந்து விட்ட பிறகும் இன்றும் வறுமை குறித்து விரிவான விவாதங்கள் நடக்கின்றன.

சோசலிஸ்ட் நேரு
‘சோசலிஸ்ட்’ நேரு

“புள்ளிவிபரங்கள் எப்படி இருந்தாலும் 1980-களில் இருந்ததை விட வறுமை குறைந்துதான் இருக்கிறது, அப்போ எல்லாம் கிழிந்த சட்டை போட்டிருப்பாங்க, இப்போ எல்லோரும் நல்ல சட்டை போடுகிறார்கள்” என்று தனியார்மய, தாராளமய, உலகமய கொள்கைகளால் ஆதாயம் அடைந்த மேட்டுக்குடியினர் புகழ் பாடுகிறார்கள். அந்த நல்ல சட்டையை உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு சரியான ஊதியம், நிலையான வாழ்வாதாரங்களை மறுப்பதுதான் அவர்கள் பார்க்கத் தவறும் மறுபக்கம்.

‘ஏழைகள் இருக்கத்தான் செய்கிறார்கள், ஆனால் யாரும் பட்டினியால் சாகவில்லை. அதனால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உணவு பாதுகாப்பு என்று பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவழிப்பது முட்டாள்தனம். உயர்தர ஓட்ஸ் கஞ்சி குடித்தாலும் ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ 50-தான் செலவாகிறது, கிராமப் புறங்களில் சுமாரான ஏழைகள் தலைக்கு ரூ 12-க்கு ஒரு நாள் சாப்பாட்டை முடித்து விடுகிறார்கள்’ என்று புள்ளி விபரங்களை எடுத்து விடுகிறார்கள் பொருளாதார பார்வையாளர்கள்.

1997-ம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசில் நிதியமைச்சராக இருந்த போது ப சிதம்பரம் அளித்த பேட்டியில். தன்னுடைய குடும்பத்தில் எப்போதும் பட்ஜெட் போடத் தேவை இருந்ததில்லை எனவும், தேவைப்படும் பணத்தை தேவைப்படும் நேரத்தில் எடுத்து செலவழிப்பதுதான் நடைமுறை என்றும் குறிப்பிட்டிருக்கிறார் (இந்தப் பேட்டி கடந்த வார ஆனந்த விகடனில் வெளியாகியிருக்கிறது).

அன்றாட வாழ்க்கை போராட்டத்தின் மூலம் ஏழ்மையை எதிர் கொள்ளும் உழைக்கும் மக்களைப் போல் இல்லாமல் ப சிதம்பரம் போன்ற மேட்டுக்குடியினரும் வேறு ஒரு விதத்தில் வறுமை குறித்து கவலைப்படுகின்றனர்.

பிரெஞ்சுப் புரட்சி
பிரெஞ்சு மக்கள் புரட்சி

பிரெஞ்சு புரட்சியின் போது ‘ஏழைகள் சாப்பிடுவதற்கு ரொட்டி கிடைக்கவில்லை என்றால் கேக் சாப்பிடலாமே’ என்று சொன்னதாக வரலாற்றில் இடம் பிடித்தத பிரெஞ்சு ராணியின் கதியைப் பார்த்து பாடம் கற்றுக் கொண்டனர் பல நாடுகளின் முதலாளித்துவ ஆட்சியாளர்கள். அதனால் தம்மை வளப்படுத்தும் பொருளாதார அமைப்பை உருவாக்கும் ஏழைகள் அதிகம் கலகம் செய்து விடாமல் பார்த்துக் கொள்ள வறுமை நிவாரண பணிகளை மேற்கொள்ள ஆரம்பித்தார்கள்.

நவீன உலகில் தாம் தொண்டு செய்வதற்கு ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி சொன்ன அன்னை தெரசா போல உலகெங்கும் மக்களை சுரண்டி பணம் குவிக்கும் ‘இளகிய மனம்’ படைத்த பில் கேட்ஸ்களும், வாரன் பபெட்டுகளும் அறக்கட்டளைகள் ஏற்படுத்தி வறுமையை ஒழிக்க முயற்சிக்கிறார்கள்.

ஒரு பக்கம், உணவு வினியோகம், கல்வி, மருத்துவம் போன்ற துறைகளில் அரசு தலையிட்டு சந்தையின் செயல்பாட்டை சீர்குலைக்கக் கூடாது என்ற தாராளவாத முதலாளித்துவத்தின் அடிப்படைக் கோட்பாடு வறுமையை போக்குவதில் அரசின் தலையீட்டை தடுக்கிறது. இன்னொரு பக்கம், சமூகத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள் பாரிய பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. சந்தையில் பொருளாதார ரீதியாக சுரண்டப்படும் பெரும்பான்மை மக்களுக்கு ஏதோ கொஞ்சம் உணவு, சுமாரான கல்வி, ஒண்டுவதற்கு வாழ்விடம் ஏதாவது ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல் இவர்களது உழைப்பைச் சுரண்டி முதலாளிகள் ஆதாயம் அடைய முடியாது.

அதாவது பெரும்பான்மை மக்கள் சரிவர சாப்பிடக் கூட வழியில்லாமல், முறையான கல்வி பெற முடியாமல் போய் விட்டால் தொழிற்சாலைகளில், வணிக நிறுவனங்களில் வேலை செய்வதற்கு ஆரோக்கியமான, கல்வி கற்ற ஆட்கள் கிடைக்காமல் போய் விடுகிறார்கள்.

சந்தையில் தலையிடக் கூடாது, அதே நேரம் முதலாளித்துவ உற்பத்திக்கு தேவைப்படாதவர்கள் செத்து விடுவது வரை குறைந்த பட்சம் சோறு போட்டு பராமரிக்க வேண்டும். எனவே வறுமை என்பதற்கு ஒரு கட்-ஆப் கோடு வரைய வேண்டியிருக்கிறது. வருமானத்துக்கு ஒரு வரம்பு ஏற்படுத்தி அந்த வரம்புக்கு மேல் உள்ளவர்கள் சந்தையின் கருணையிலும், அதற்கு கீழ் உள்ளவர்கள் அரசு ஆதரவிலும் பிழைத்துக் கொள்ளலாம் என்று திட்டமிட வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட வறியவர்களுக்கு கஞ்சித் தொட்டியோ, பிரியாணி சென்டரோ அல்லது ரொட்டி வரிசைகளோ ஏற்படுத்தி வயிற்றுப் பசியை ஆற்றுவதற்கு ஏற்பாடு செய்ய முடியும். அந்த அளவுக்கு அரசு தலையீட்டை முதலாளித்துவ சிந்தனையாளர்கள் சகித்துக் கொள்வார்கள்.

தாதாபாய் நவ்ரோஜி
தாதாபாய் நவ்ரோஜி

இந்தியாவில் வறுமைக் கோட்டுக்கான அளவீடு முதன்முதலில் இந்தியாவின் முதுபெரும் தாத்தா என்று அழைக்கப்பட்ட தாதாபாய் நவ்ரோஜியால் “இந்தியாவில் வறுமையும் பிரிட்டிஷ் ஆட்சியும்” என்ற அறிக்கையில் 1876-ம் ஆண்டு முன் வைக்கப்பட்டது. 1867-68ம் ஆண்டின் விலைவாசியின் அடிப்படையில் இடம் பெயர்ந்த கூலித் தொழிலாளர் பயணம் செய்யும் போது ஓய்வில் இருக்கும் போது, ஒரு நபருக்கு ஆண்டிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் ரூ 16-லிருந்து ரூ 35 வரை வருமானம் கிடைக்கா விட்டால் அவரை வறியவர் என்று கணக்கிட்டிருந்தார். இந்த வருமானத்தில் உயிர் பிழைத்திருக்க முடியுமே தவிர வேலை செய்வதற்கான ஆற்றல் தேவைகளும், மற்ற அடிப்படை செலவினங்களும் இதில் அடங்காது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

1939-ம் ஆண்டு வறுமையை கணக்கிடுவதற்கு காங்கிரஸ் கட்சி “சோசலிச” நேரு தலைமையில் ஒரு குழு அமைத்தது. அந்தக் குழுவின் செயலாளரான கே டி ஷா அளித்த அறிக்கையில் வறுமைக் கோட்டின் அளவீடாக ஒரு மாதத்திற்கு தனிநபர் வருமானம் ரூ 15 லிருந்து ரூ 20 என மதிப்பிட்டிருந்தார். ஒரு வயது வந்த தொழிலாளிக்கு 2,400-லிருந்து 2,800 கலோரி வரை ஆற்றல் தேவை பூர்த்தி செய்ய முடிந்தால்தான் அவர் வறுமையிலிருந்து தப்பித்தவர் என்று கருத வேண்டும் என்று அறிக்கை குறிப்பிட்டது.

1960-61ல் திட்டக்கமிசன் தலைவர் திரு பிதம்பர் பந்த் என்பவரை உள்ளடக்கிய பணிக்குழு வறுமைக் கோட்டை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ 20 நகர்ப் புறங்களுக்கு ரூ 25 என நிர்ணயம் செய்தது. அதாவது 22 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகப் போரின் போதும், அதற்கு பின்னையதுமான பணவீக்கங்களுக்குப் பிறகு வறுமைக் கோட்டை கிட்டத்தட்ட அதே அளவில் முடிவு செய்திருந்தார்கள்.

1979-ல் வறுமையை கணக்கிட திட்டக்கமிசன் நியமித்த பணிக்குழு தனது அறிக்கையை அளித்தது. தேசிய மாதிரி கணக்கீடு துறையின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு ஒரு தனிநபருக்கு கிராமப்புறங்களில் 2,400 கலோரி, நகர்புறத்தில் 2,100 கலோரி ஆற்றல் தேவைப்படுவதாகவும் அது 1973-74 விலைவாசியின் அடிப்படையில் மாத நுகர்வு கிராமப்புறங்களுக்கு ரூ 49, நகர்புறங்களுக்கு ரூ 56 என்றும் அது முடிவு செய்திருந்தது. அன்றிலிருந்து 1973-74ம் ஆண்டின் விலைவாசிகளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் விலைக் குறியீட்டு எண் உயர்வின் (பணவீக்கத்தின்) அடிப்படையில் அதிகரித்து வறுமையின் அளவீடு நிர்ணயிக்கப்படுகிறது.

மேலும், 1973-1993 வரை தேசிய மாதிரி கணக்கீட்டின் ஆய்வு முடிவுகளுக்கும், தேசிய கணக்கியல் புள்ளிவிபரங்களின்  (NAS) முடிவுகளுக்குமிடையிலான வேறுபாட்டைக் கொண்டு திட்டக்கமிசன் வறுமையில் உள்ளவர் எண்ணிக்கையை சரிப்படுத்தி (Adjust) வந்தது. தேசிய மாதிரி கணக்கீட்டு ஆய்வில் மக்கள் பொருட்கள் நுகரும் அளவு மதிப்பிடப்படுகிறது. தேசிய கணக்கியல் புள்ளி விபரம் கணக்கிடும் நாட்டின் மொத்த நுகர்வை கணக்கிடுகிறது. மொத்த நுகர்வு, மாதிரி கணக்கீட்டு அளவை விட அதிகமாக இருந்ததால், மாதிரி கணக்கீட்டின் நுகர்வு மதிப்பீட்டை அந்த அளவுக்கு உயர்த்தி வந்தது.

உதாரணமாக 1977-78ன் சரிப்படுத்துதலுக்கு முன்பான வறியவர்களின் வீதம் 57.16%. NAS தரவுகளுக்கு சரிப்படுத்திய பிறகு வறியவர்களின் எண்ணிக்கையை முறையே 43%-மாகவும், 48%-மாகவும் குறைத்து காட்டி வந்தது.

1993-94-ல் தேசிய மாதிரி ஆய்வில் கிடைத்த தரவுகளை விட கணக்கியல் மதிப்பீடுகள் பெருமளவு அதிகரித்திருந்தன. அந்த அடிப்படையில் திட்டக் குழு 1987-88-ம் ஆண்டில் 25.5 சதவீதமாக இருந்த வறுமை 1993-94-ல் 19 சதவீதமாக குறைந்து விட்டதாக அறிவித்தது. 1990-களின் மத்தியில் திட்டக்குழு தலைவராக வந்த மது தண்டவதே இந்த மோசடியை அம்பலப்படுத்தி வறுமையை கணக்கிடும் இந்த போலியான வழிமுறையை தூக்கி எறிந்தார்.

வறுமைக் கோட்டின் வரலாறு
வறுமைக் கோட்டின் வரலாறு (படம் : நன்றி http://thealternative.in)

அர்ஜுன் சென்குப்தா தலைமையிலான மரபுசாரா தொழிலாளர்களுக்கான தேசிய ஆணையம் மொத்த மக்கட் தொகையில் 77% பேர் நாளொன்றுக்கு ரூ 20-க்கும் குறைவாக வருமானமீட்டுபவர்களாக வறுமையிலிருப்பதாக தெரிவித்திருக்கிறது. என்.சி.சக்சேனா குழுவோ இந்தியாவில் 50% மக்கள் வறுமையிலிருப்பவர்களாக கூறுகிறது.

சுரேஷ் டெண்டூல்கர் கமிட்டி வறுமைக் கோட்டின் அளவை தனிநபர் வருமானம் கிராமப்புறங்களுக்கு ரூ 356.30, நகர்ப்புறங்களுக்கு ரூ 538.6 என்று நிர்ணயித்தது. இது 1876-ல் நவ்ரோஜியின் மதிப்பீட்டிலிருந்து 188 மடங்காகும். இடைப்பட்ட 137 ஆண்டுகளின் சராசரி பணவீக்கம் 5%-க்கும் மேல், விலை உயர்வும் அதிகம். அதனால் 2004-05 ஆண்டு மதிப்பீடு நவ்ரோஜியின் மதிப்பீட்டை விட மிக மிகக் குறைவு. நவ்ரோஜியின் வார்த்தைகளில் சொல்வதானால் இந்த வருமானத்தைக் கொண்டு ஒருவர் உயிர் வாழக்கூட முடியாது.

இந்தியாவின் பெரும்பாலான மக்கள் 1,700 கலோரிக்கும் குறைவாகத் தான் உணவு உட்கொள்கிறார்கள், அதனால் 2,100, 2,400 கலோரிகள் மிக அதிகமென்று வறுமையின் அளவை கிராமப்புறங்களுக்கு 1,999 கலோரியாகவும் நகர்ப்புறங்களுக்கு 1,770 கலோரியாகவும் குறைத்து வரையறுத்தது டெண்டூல்கர் கமிட்டி. இதன் மூலம் 2004-05ல் 37.2 சதவீதமாக இருந்த வறுமையின் வீதம் 2009-10ல் 29.8 சதவீதமாக குறைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுரேஷ் டெண்டூல்கர்
சுரேஷ் டெண்டூல்கர் கமிட்டி (படம் : நன்றி தி ஹிந்து)

மருத்துவ அறிவியல் படி ஓய்வில் இருப்பவருக்கே உடலின் வளர்சிதை மாற்றத்திற்கு மட்டுமே 1,220 கலோரி தேவைப்படும். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் அறிக்கைப் படி மிதமான வேலை செய்யும் ஆணுக்கு 2,730 கலோரியும், பெண்ணுக்கு 2,230 கலோரி உணவும் தேவைப்படும். 10 வயதிலிருந்து 17 வயது சிறார்களுக்கு சராசரியாக 2,450 கலோரியும், 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு சராசரியாக 1360 கலோரியும் தேவைப்படும். கருத்தரித்திருக்கும் பெண்களுக்கு சராசரியை விட 350 கலோரிகள் அதிகமாகவும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு சராசரியை விட 600 கலோரிகள் அதிகமாகவும் தேவைப்படும்.

தமிழகத்திலிருக்கும் வீடில்லாத, குடும்பமில்லாத உழைக்கும் தொழிலாளி ஒருவர் மிகக்குறைவான செலவில் உணவு உட்கொள்வதாக இருந்தால், அவர் ‘அம்மா உணவகத்தை’ நாடலாம். ரூ 33-க்குள் வயிற்றை நிரப்பிக்கொள்வதாக இருந்தால் என்ன சாப்பிடுவார்?

காலை 10 ரூபாய்க்கு 10 இட்லி, மதியம் 10 ரூபாய்க்கு இரண்டு ஐந்து ரூபாய் சாத வகை, இரவு கையேந்தி பவனில் 12 ரூபாய்க்கு மூன்று புரோட்டா, ஆக ரூ.33. இந்த உணவு மெனுவில் அவருக்கு எவ்வளவு கலோரி கிடைக்கும்? 10 இட்லி – 1,000, 1/2 கப் சாம்பார் – 70, 2 கப் அரிசி சாதம் – 240, 3 பரோட்டா – 450 ஆக மொத்தம் 1760 கலோரிகள். 33 ரூபாய்க்கு டெண்டுல்கரின் 1,770 கலோரியை கூட இவரால் பெற முடியாது. ஆனால், அவரது ஒரு நாள் தேவை 3,000 கலோரியை விட அதிகம்.

ஏழ்மை
உழைப்பவரின் கையில் செல்வம் இருக்கும் போது தேவைக்கு பசியாறுவது ஒரு பிரச்சினை இல்லை.

2012 ஐ.நாவின் மனித வள மேம்பாட்டு குறியீட்டில் இந்தியா 136-வது இடம் வகிக்கிறது. 1992-ல் இது 122-வது இடமாக இருந்தது. உலக பசியிலுள்ளோர் குறியீட்டெண்ணில் இந்தியா 119-ம் இடம் வகிக்கிறது. உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியின் கணக்கீட்டின் படி உலகின் ஊட்டச்சத்து குறைபாடுள்ள, எடை குறைவான குழந்தைகளில் 49 சதவீதம் பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். இது ஆப்பிரிக்க நாடுகளை விட இரு மடங்காகும். இப்படி மெய்யுலகில் ஏழ்மை மக்களை அழுத்திக் கொண்டிருக்கும் போது இந்திய அரசின் அறிக்கைகளில் வறுமை காணாமல் போய்வருகிறது. விலைவாசி உயர்வை குறைத்து மதிப்பிட்டும், மக்களின் ஆற்றல் தேவைகளை குறைத்து மதிப்பிட்டும் வறுமை வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டு வருகிறது.

வறுமைக்கோடு குறித்த இந்த அளவுகோல் சரியானதா, ரூ.32-க்குள் ஒருவர் வாழ இயலுமா என்றும் வறுமைக் கோட்டைத் தீர்மானிக்கும் அளவை குறைத்து நிர்ணயித்திருப்பதுதான் பிரச்சனை என்பதாக முதலாளித்துவப் பத்திரிகைகளும், ஊடகங்களும் விவாதத்தை நடத்திக் கொண்டிருக்கின்றன, பல பொருளாதார மேதைகளும் அறிஞர்களும் அரசையும் திட்டக் கமிசனையும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

வறுமைக் கோட்டை நிர்ணயித்து, ஏழைகளுக்கு உதவும்படியான சூழலை உருவாக்கும் பொருளாதாரக் கொள்கையின் அபத்தத்தைப் பற்றி யாரும் விவாதிப்பதில்லை. 300 ஆண்டு முதலாளித்துவ வளர்ச்சிக்குப் பிறகும் முதலாளித்துவத்தின் பிறப்பிடமான இங்கிலாந்திலும், அதன் இப்போதைய தலைமையகமான அமெரிக்காவிலும் கூட ஏழ்மையை ஒழிக்க முடியாதிருப்பது ஏன் என்று முதலாளித்துவத்தை கேள்விக்கு உட்படுத்துவதில்லை.

பெரும்பான்மை மக்கள் இந்த கேள்விகளை எழுப்பி தம்மை அழுத்திக் கொண்டிருக்கும் ஆளும் அமைப்புகளை நிராகரித்து சோசலிச சமூகத்தை கட்டுவதுதான் ஏழ்மையை ஒழிப்பதற்கான ஒரே வழி. புள்ளி விவரங்களின் மோசடியால் ஏழைகளின் எண்ணிக்கையை ஒழித்து வறுமைக் கோட்டை குறைக்கும் வழி அத்தகைய சமூகத்தில் தேவையற்றுப் போகும். ஏனெனில் உழைப்பவரின் கையில் செல்வம் இருக்கும் போது தேவைக்கு பசியாறுவது ஒரு பிரச்சினை இல்லை. இதன்றி வறுமையையும், வறுமைக் கோட்டையும் ஒழிப்பதற்கு வேறு வழிகளோ இல்லை குறுக்கு வழிகளோ இல்லை.

– மார்ட்டின்

மேலும் படிக்க

 1. மதிப்பு மிக்க திரு அதியமான் அவர்களை இந்தக் கட்டுரையை மறுத்து ஆதாரங்களோடு அம்பலப்படுத்துமாறு கோருகிறேன்.

  • ம் செல்லாது செல்லாது…

   தேவதூதர் மன்மோகன் சிங் நாட்டின் கட்டுண்டுகிடந்த பொருளாதாரத்தை விடுவித்து 19 ஆண்டுகளுக்கு மேலாகிறது, நாட்டு பொருளாதாரம் கன்னாபின்னாவென்று முன்னேறிக்கொண்டிருக்கிறது. திட்டக்கமிசனும், ஏனைய பொருளாதார மேதைகளும் மன்மோகன்சிங்கின் பெயரை கெடுப்பதற்காகவும் இப்படி வறுமை பற்றிய தகவல்களை தேவையில்லாமல் கசியவிடுகிறார்கள்.

   நாட்டு பொருளாதாரம் தறிகெட்டு முன்னேறும் போதும் கூட, இத்தனை ஆண்டுகள் இத்தனை குழுக்கள் வறுமையை கணக்கிட்ட பின்பும் கூட வறுமை ஒழிக்கப்படவில்லை என்பதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

 2. நேற்று ஒரு தகவலை படித்தேன். தற்போது பதவியேற்ற திருவாளர் ரகுராம் அவர்கள் சொன்ன தகவல் இது.

  2027 ல் சீனாவும் அமெரிக்காவும் இந்தியாவிடம் கடன் வாங்கும் நிலையில் இருக்குமாம்.

  • ஜோதிஜி,

   இன்ஸ்யூரன்ஸ் முகவர்களிடம் நேரில் பேசும் போது பொதுவாக ஒரு விடயத்தை நாம் காணலாம் 5 ஆண்டுகளில் உங்களுடைய பணம் 3 மடங்கும், 10 ஆண்டுகளில் அது 5 மடங்கு என்று அளந்துவிடுவார்கள். அவர்களுக்கும் நன்றாகவே தெரியும் அப்படி எல்லாம் பெருகுவதற்கு வாய்ப்பில்லை என்று, ஆனாலும் அவ்வாறு சொல்லித்தான் தன்னுடைய வயிற்றை நிரப்பிக் கொள்வார்கள். விஷயம் ரொம்ப சிம்பிள்…. “5 வருடம் கழித்து நான் எங்க இருப்பேன்னு எனக்கே தெரியாது…… அப்படியே கண்டுபுடிச்சிட்டாலும் அப்போதைக்கு சொல்லி தப்பிக்க ஏதாவது சாக்கா கிடக்காது நமக்கு….. போய்யா இதுக்கெல்லாம் பயந்தா முடியுமா….” இதை அப்படியே ரகுராம் கூஜாவுக்கு பொருத்தி பாருங்க….

 3. அப்படியே அவர் சொல்வது போல நடந்துவிட்டாலும், கடன் கொடுப்பதும் வாங்குவதும் ஆண்டைகளின் நலனுக்காக எனும் போது அதனால் உழைக்கும் மக்களுக்கு என்ன கூரைய பிச்சுக்கிட்டா கொட்டப் போகுது….

 4. மக்களுக்குத் தேவை வசதிக் கோட்டின் அடிபடயிலான வருமானம். வ்றுமைக் கோட்டின் அடிபடையிலான வறுமை அல்ல. வெறும் கலோறிக் கணக்கும் கோமணமும் மனித வாழ்வாகி விடாது.

 5. சொகுசாக வாழ்பவர்களும் வறுமையின் கொடுமை என்னவென்று தெரியாதவர்களும் வறுமையின் அளவு கோலை எப்படிநிர்ணயிப்பார்கள் என்பது கேள்விக்குரிய் விஷய்ங்கள். மேட்டுக்குடியினர் நம் மக்களை அடிமை படுத்துவதில் குறியாய் இருக்கும் போது அவர்கள் சொல்லும் எந்த ஒரு அறிக்கை மற்றும் திட்டங்களிலும் உண்மை மற்றும்நியாயங்களை எதிர் பார்க்க முடியாது.

 6. ஜவஹர்லால் நேருவின் ‘சோசலிச’ பொருளாதாரத்திலிருந்து இந்திரா காந்தியின் “ஹரிபி ஹடாவோ” (வறுமையை ஒழிப்போம்) காலத்தைத் தாண்டி, ராஜீவ் காந்தியின் உலகமயமாக்கல், நரசிம்மராவ்-மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியில் தாராளமயமாக்கல், பாஜக தலைமையிலான அரசில் தனியார் மயமாக்கல் என்று இந்திய பொருளாதாரம் வெகு தூரம் வந்து விட்ட பிறகும் இன்றும் வறுமை குறித்து விரிவான விவாதங்கள் நடக்கின்றன- beautifully brought out!!! appreciate u!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க