Tuesday, April 20, 2021
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் வடிவேலு கிணறு காமடி - காங்கிரசின் நிலக்கரி கோப்புகள் !

வடிவேலு கிணறு காமடி – காங்கிரசின் நிலக்கரி கோப்புகள் !

-

டிவேலு ஒரு திரைப்படத்தில் கிணற்றைக் காணோம் எனப் புகார் தெரிவிக்க காவல்நிலையத்திற்கு வருவார். இன்ஸ்பெக்டராக இருக்கும் அண்ணாச்சி இதைத் திரும்ப திரும்ப கேட்டு உறுதியான பிறகு நொந்து போய் வேலையை விட்டே போய்விடுவார். இந்த காமெடியை பார்த்து ரசிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. இப்போது அந்த இன்ஸ்பெக்டரின் பாத்திரத்தை நாட்டு மக்களுக்கு வழங்கியிருக்கிறார் மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால். 1993 முதல் 2004 வரையிலான துறையின் முக்கிய கோப்புகள் காணாமல் போயிருக்கின்றது என்றும் அதனை விசாரிக்க கூடுதல் செயலர் தலைமையிலான விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் கடந்த சனிக்கிழமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெய்ஸ்வால்
மத்திய நிலக்கரித் துறை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால்

அரசின் பொறுப்பற்றதனத்தை இது காட்டுவதாக ஜக்கிய ஜனதா தளத்தின் சரத் யாதவ் கூறியுள்ளார். பாஜக வின் வெங்கையா நாயுடு இது அரசின் வெட்கங்கெட்ட செயல் என்றும், இதற்கு யார் காரணம் என கண்டறிந்து மக்களுக்கு சொல்வது மத்திய அரசின் கடமை என்றும் கூறியுள்ளார். பாஜகவின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ராஜீவ் பிரதாப் ரூடி அமைச்சரது கூற்று நிலக்கரி ஊழலில் சம்பந்தப்பட்டுள்ள பிரதமரை பாதுகாக்கும் முயற்சியோ என சந்தேகமாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். சிபிஎம் கட்சியின் சீத்தாராம் யெச்சூரி கணிணி மயமான காலகட்டத்தில் எப்படி கோப்புகள் காணாமல் போகும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்க்கட்சிகளுக்கு இந்த நிலக்கரி ஒதுக்கீடு தொடர்பான கோப்புகள் ஏன் காணாமல் போயின என்பது தெரியாமல் எல்லாம் இல்லை. சில நிலக்கரி வயல்கள் பாஜக பிரமுகர்களுக்கும், பல்வேறு முதலாளிகளுக்கும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன என்பதால் இந்த காணாமல் பிரச்சினை இவர்களையும் கடைத்தேற வாய்ப்புக் கொடுத்திருக்கிறது என்பதே உண்மை.

ஏற்கெனவே ரூ 10 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட அளவில் நடைபெற்றுள்ள நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் 2006-க்கும் 2009-க்கும் இடைப்பட்ட காலகட்டத்திற்கான 5 முக்கிய கோப்புகள் தேவைப்படுகின்றன என்றும், அவை இன்னும் அமைச்சகத்திடமிருந்து கிடைக்கவில்லை என்றும் ஜூலை 31 அன்று சிபிஐ தெரிவித்திருந்தது. இந்த காலகட்டத்தில் முறைகேடாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் போலியான நிறுவனங்கள் பற்றி மட்டும் 13 வழக்குகளைத் தொடுத்துள்ள சிபிஐக்கு தேவையான கோப்புகளைத் தேடித் தரும்படி உச்சநீதி மன்றம் உத்திரவிட்டு இருந்த நிலைமையில் தற்போது வேறு சில கோப்புகள் காணாமல் போயிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது.

நிலக்கரி திருடர்கள்
நிலக்கரி திருடர்கள்

 

வரும் ஆகஸ்டு 27-க்குள் சிபிஐ விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி உச்சநீதி மன்றம் கூறியுள்ளது. கீழ் நீதிமன்றத்தில் 29-ம் தேதி விசாரணை துவங்குகிறது. தொலைந்து போன கோப்புகளின் எண்ணிக்கை 8 முதல் 10 வரை இருக்கும் என்கிறார் அமைச்சர். 768 கோப்புகளை தாங்கள் வைத்திருப்பதாகவும், காணமல் போனவற்றை அல்லது இடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பதை பிற அமைச்சகங்களிலிருந்து பெற முயற்சிப்பதாகவும் பாராளுமன்ற நிலைக்குழுவிடம் சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.

காணாமல் போயுள்ள கோப்புகளில் தான் 45 நிலக்கரி சுரங்கங்களை ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பங்கள் மற்றும் காங்கிரசு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் தத்ராவின் ஏ.எம்.ஆர். எஃகு ஆலைக்கான பரிந்துரைக் கடிதம், அதைத் தொடர்ந்த பிரதமரின் பரிந்துரைக் கடிதம் போன்ற முக்கிய ஆவணங்கள் எல்லாம் இருந்தன. 45 நிலக்கரி சுரங்கங்களுக்கு 157 நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. அதுபற்றிய கோப்புகள் மட்டுமின்றி, இதுபற்றி பரிசீலித்த நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டக்குறிப்புகளும் கூட காணாமல் போயிருக்கின்றன.

இப்போது கோப்புகள் காணாமல் போயிருப்பதால் சட்டப்படி யாரையும் குற்றவாளிகளாக நிரூபிக்க முடியாது. அதாவது கோப்புகள் காணாமல் போய் விட்டதால் மன்மோகன் சிங் குற்றமற்றவர் என சட்டப்படி விடுதலை செய்யப்பட்டு விடுவார். அதைவிட நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் ஊழல் நடக்கவே இல்லை என நீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

coal-workers

இதற்கிடையில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பகத்சிங்கை தியாகியாக அறிவித்துள்ளீர்களா என அரசிடம் கேட்கப்பட்டதற்கு உள்துறை அமைச்சகம் அப்படி தியாகியாக அறிவிப்பு செய்த ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இல்லை என்று தெரிவித்திருக்கிறது. அல்லது தியாகியாக ஏதும் அறிவிக்கவில்லை என்றும் பொருள் கொள்ளலாம். இதுபற்றி பல்வேறு விவாதங்கள் நடந்து வந்த நிலையில் ”ஆவணங்கள் இல்லை என்பதற்காக பகத்சிங் –ன் தியாகம் இல்லாமல் போய் விடாது” என்று கருத்து சொல்லியிருக்கிறார் மன்மோகன் சிங்.

அதன்படி கோப்புகள் காணாமல் போனாலும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் இல்லை என்றாகிவிடாது. ஆனால் ஊழல் குற்றச்சாட்டை நிரூபிக்க சான்றுகள் இல்லை. சான்றுகள் இல்லை என்பதால் காங்கிரஸ், பாஜக பிரமுகர்கள் மற்றும் முதலாளிகள் தவறே செய்யவில்லை என்று சட்டப்படியே தப்பிக்க முடியும். ஆகவே கிணறு காணவில்லை என்ற வடிவேலின் நகைச்சுவை இனி சிரிப்பதற்கு அல்ல, கோபம் கொள்வதற்கு உரியது.

மேலும் படிக்க

  1. யாராவது நிலக்கரி கோப்புகளை கண்டுபிடித்தால்,னிலக்கரியில் எரித்து விடவும்:

    (அன்னை சோனியாவின் அன்பு வேண்டுகோள்)

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க