Thursday, September 24, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !

கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !

-

கல்வி என்பது சேவையே! வியாபாரப் பண்டமல்ல!
தமிழ் என்றால் தன்மானம்! 
ஆங்கிலம் என்றால் அடிமை புத்தி!

 • அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து!
 • அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுடைமையாக்கு!
 • பொதுப்பள்ளி – அருகமைப் பள்ளி முறையை அமுல்படுத்து!
 • அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு!

கருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம்!
தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!

ன்பார்ந்த மாணவர்களே – பெற்றோர்களே,

போதிய வகுப்பறை இல்லை, வாத்தியார் இல்லை, கழிவறை, குடிநீர் வசதிகள் எதுவுமே இல்லை. இதுதான் அரசுப்பள்ளிகளின் இன்றைய அவல நிலைமை. சுமார் 1 கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் புகலிடமாக இருக்கும் இந்த அரசுப்பள்ளிகளை அழியவிடாமல் காப்பது நம் அனைவரின் கடமை.

தரமான கல்வி, ஆங்கிலவழிப் பயிற்சி எனும் விளம்பரங்களைக் காட்டி தனியார் பள்ளிகள் புற்றீசல்போல பெருகுவதால், அரசுப் பள்ளிகள் புறக்கணிக்கப்படுகின்றன. ஆனால், உண்மை என்ன தெரியுமா? 2011 ம் ஆண்டு 10 – வது பொதுத்தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தவர்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் (ஆதாரம் :  மே,27-2011,  தினமணி ).

விளையாட்டுத்துறை, கலாச்சாரத்துறை, மொழி ஆளுமை, விசயங்களைப் புரிந்துகொள்வது, பிரச்சனைகளை எதிர்கொள்வது என எந்தக் கோணத்தில் பார்த்தாலும் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி வெற்றி பெற்று வருபவர்களும் அரசுப்பள்ளி மாணவர்கள்தான். எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத சூழலிலும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் – மாணவர்களின் கடுமையான உழைப்பினால் கீழ்நிலையில் உள்ள மாணவர்கள் தரம் உயர்வதோடு, முதல் மதிப்பெண்ணும் எடுக்கிறார்களே, இதுதான் உண்மையான சாதனை!

இத்தகைய அரசுப்பள்ளிகள் சீரழிவதற்கு யார் காரணம்? கல்வியைத் தனியார் மயமாக்கும் அரசின் கொள்கைதான். பள்ளிக் கல்வித் துறைக்கு வேண்டுமென்றே போதிய நிதி ஒதுக்குவதில்லை. இதன் காரணமாக சுமார் ஒரு கோடியே 30 லட்சம் ஏழை மாணவர்களின் ஒரே வாய்ப்பான அரசுப்பள்ளிகள் நாள்தோறும் இழுத்து மூடப்பட்டு வருகின்றன. இதைப் பற்றி சற்றும் கவலைப்படவில்லை தமிழக அரசு. மாறாக, தனியார் பள்ளிகள் கேட்கும் பணத்தைக் கட்டணமாக நிர்ணயித்து பகற்கொள்ளைக்கு காவல் நிற்கிறது.

சிறப்புப் பயிற்சிகள், ஸ்மார்ட் கிளாஸ் என்ற பெயரில் மோசடி, தரமற்ற ஆசிரியர்கள், 10 ஆம் வகுப்பு பாடங்களை 9-வதிலும், 12ஆம் வகுப்பு பாடங்களை 11-ம் வகுப்பிலும் நடத்துவது, அரசு பொதுத் தேர்வின்போது டிஜிட்டல் பிளக்ஸ் பேனரில் விடைகளை எழுதிப் பிடிப்பது, இதுதான் தனியார் பள்ளிகளுடைய தரத்தின் யோக்கியதை. அரசுப்பள்ளியில் நன்றாக படிக்கும் மாணவர்களை தேடிப்பிடித்து, தங்கள் பள்ளியில் சேர்த்துக்கொண்டு அவர்களை முதல் மதிப்பெண் எடுக்க வைக்கும் தில்லுமுல்லுக்குப் பெயர் சாதனையா? வெட்கக்கேடு. இது பெற்றோர்களை ஒட்டச் சுரண்டுவதற்கான கிரிமினல் வேலை.

கல்வியாளர்கள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த சமச்சீர் கல்விக்கான பாடத்திட்டத்தை அமுல்படுத்த விடாமல் முடக்க முயன்று தோற்றுப்போன பார்ப்பன பாசிச ’ஜெயா’, இன்று தமிழை மெல்ல மெல்ல அழிக்கும் சதித் திட்டத்துடன் ஆங்கிலவழிக் கல்வியை அரசுப்பள்ளிகளில் திணித்துள்ளார். ஆங்கிலவழியில் படித்தால் அறிவாளியாகலாம்; எங்கு போனாலும் வேலை கிடைக்கும் என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. கணிதமேதை ராமானுஜம், உச்ச நீதிமன்றத்தின் இன்றைய தலைமை நீதிபதி சதாசிவம் போன்றவர்கள் அரசுப்பள்ளியில் தழிழ்வழியில் படித்து புகழ் பெற்றவர்கள்தானே, இன்று அரசுத்துறையிலுள்ள அதிகாரிகள், பள்ளி – கல்லூரி ஆசிரியர்கள் போன்றோர் தமிழ் வழியில் படித்து வேலை பெறவில்லையா? ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்து, பொறியியல் பட்டம் பெற்ற லட்சக்கணக்கான மாணவர்கள் வேலையின்றி வீதிக்குத் தள்ளப்பட்டு வருகின்றனர் என்ற செய்திகளை பார்க்கவில்லையா? ஆங்கில வழியில் படித்தால்தான் வேலை என்பது ஒரு மாயை என்பதை புரிந்துகொள்வோம்.

ஆங்கிலம் கற்றுக் கொள்வது என்பது வேறு, ஆங்கில வழியில் கல்வி என்பது வேறு. ஒருபுறம் அமெரிக்கா மீதான அடிமை மோகத்தை பெருமையாக ஏற்றுக்கொள்ளச் செய்வது, மறுபுறம் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தேவையான ஆங்கிலம் படித்த தொழில் நுட்பக் கொத்தடிமைகளை அதிகமாக உருவாக்குவது, இப்படிப்பட்ட புதிய மெக்காலே கல்வித் திட்ட வழிகாட்டுதலின் கீழ் கல்வித்துறை இயக்கப்படுகின்றது. தாய் மொழியில் இன்றி ஆங்கில வழியில் கல்வி என்பது சுய சிந்தனை, நாட்டுப்பற்று, தாய்மொழிப் பற்று, சமூக உணர்வு ஆகியவற்றை அறுத்தெறியும் அபாயகரமானது என்பதை உணருவோம்.

பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறை வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, கனடா, பின்லாந்து என உலகில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்று நடைமுறையில் உள்ளது. ஆனால், வளர்ந்துகொண்டிருக்கின்ற, பல்வேறு சமூக, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த நம் நாட்டில் இவை கல்வியாளர்களின் கனவாகவே மட்டுமே உள்ளது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசங்கள் இன்றி அனைவரின் பிள்ளைகளும் ஒரே இடத்தில், ஒரே மாதிரியானக் கல்வி பெற பொதுப்பள்ளி – அருகமைப்பள்ளி முறைதான் சிறந்தது, அதுதான் நம் அனைவரின் தேவை. ஒரே பாடத்திட்டம், ஒரே பயிற்றுமுறை, ஒரே தேர்வுமுறை, ஒரே தரமான கட்டுமான வசதிகளைக் கொண்டு பொதுப்பள்ளி (அரசுப்பள்ளி) இயங்க வேண்டும். மாணவர்கள் சோர்வின்றி, விருப்பப் பூர்வமாக, பாதுகாப்பாகச் சென்று படிக்க ரேசன் கடையைப்போல் அந்தந்த வட்டாரத்திலேயே அருகமைப் பள்ளி முறையில் செயல்பட வேண்டும். இதனை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தான் நம் நாட்டில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கல்வியில் நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகளையும், வர்க்க வேறுபாடுகளையும் ஒழித்து சமத்துவமான கல்வியை அனைவருக்கும் வழங்க முடியும்.

ஆனால், கடந்த 20 ஆண்டுகளாக நம் நாட்டில் புகுத்தப்பட்டு வரும் மறுகாலனியாக்கக் கொள்கையின் விளைவாக இன்று கல்வி பண்டமாக்கப்பட்டுவிட்டது. இதன் விளைவு ஆரம்பக்கல்வி முதல் ஆராய்ச்சிக்கல்வி வரை அனைத்தும் தனியாருக்கு தாரை வார்க்கப்படுகிறது. கல்வி தனியார்மயம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. காசு உள்ளவனுக்கே கல்வி என்ற புதிய பார்ப்பனிய குலக்கல்வி முறை அமுலாக்கப்படுகிறது. அனைவருக்கும் இலவச – கட்டாயக் கல்வியை கொடுக்க வேண்டிய அரசு, தன் பொறுப்பில் இருந்து முழுமையாக விலகி வருகிறது. கல்வி தனியார்மயக் கொள்கையை வீழ்த்தாமல், ஏழை மாணவர்களின் இலவச கல்வி உரிமையை நிலைநாட்ட முடியாது. அனைத்துத் தனியார் பள்ளிகளையும் அரசுப் பள்ளிகளாக்கவும், அனைவருக்கும் இலவசமாக – கட்டாயமாக தாய்மொழியில், விஞ்ஞானப்பூர்வமான கல்வியைத் தரமாக அரசே கொடுக்கப் போராடுவோம். இதனை சாதிக்க மாணவர்கள்-பெற்றோர்கள்- ஆசிரியர்கள் ஓர் அணியில் திரள்வோம்!

தமிழக அரசே!

 • தமிழ் வழியில் பயின்றவர்களை மட்டுமே அரசுப் பணியில் அமர்த்து!
 • வழக்காடு மன்றங்கள் முதல் எல்லா அரசு அலுவலகங்களிலும் முற்றிலும் தமிழிலேயே அலுவல்களை நடத்து!
 • மாணவர் சங்கங்களை எல்லாப் பள்ளிகளிலும் இயங்க அனுமதி!
 • மாணவர்களுக்கு உரிய ஜனநாயக உரிமைகளை வழங்கு!
 • மாணவர்களின் கலை, இலக்கிய, விளையாட்டுத் திறமைகளை வெளிக்கொணரவும், ஊக்கப்படுத்தவும் உரிய வசதிகளை செய்துகொடு!
 • மறுகாலனிய அடிமை மோகத்தை திணிக்கின்ற புதிய மெக்காலே கல்வி முறையை தூக்கியெறி!
 • மனித மாண்புகளை உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களும், நாட்டுப் பற்றும் கொண்ட விஞ்ஞானபூர்வமான கல்வியை வழங்கு!

மாணவர்களே !

 • தனியார் கல்வி நிறுவனங்கள் என்றால் தரமானக் கல்வி என்ற பித்தலாட்டத்தை தோலுரிப்போம்!
 • ஆங்கிலவழிக் கல்வி பயின்றால் அறிவு வளரும், வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற மடமையை கொளுத்துவோம்!
 • மாணவர்கள், இளைஞர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள நுகர்வுவெறி, ஆபாசச் சீரழிவு கலாச்சாரம், டாஸ்மாக் போதை வெறி ஆகியவற்றை ஒழித்துக்கட்டுவோம்!
 • நாட்டுப்பற்று, சமூகப்பற்று, ஜனநாயக உணர்வு ஆகியவற்றை ஓங்கச் செய்வோம்!
 • மாணவர் – ஆசிரியர் – பெற்றோர்கள் ஓர் அணியில் திரள்வோம்!
 • கல்வி வியாபாரத்திற்கு முற்றுப்புள்ளி வைப்போம்!
 • அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்வி உரிமையை நிலைநாட்டுவோம் !

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

இவண்
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, தமிழ்நாடு.

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

 1. நான் தமிழ்வழிப் பள்ளியில் பள்ளி இறுதி வகுப்புவரை (12) பயின்றவன். பின்னர் ஆங்கில வழியில் கல்லூரியில் பட்டப்படிப்பு பயின்றவன், பின்னர் தொழில்நுட்பக் கொத்தடிமையாய் வேலை செய்து கொண்டிருப்பவன்.. அதன் பின்னர் அயல்நாடு சென்று பணிபுரிபவன். அங்கேயே மேற்படிப்பும் படிப்பவன்.. ஆனால் என் தாய்மொழியாம் தமிழில் ஒரு செய்தியை/புத்தகத்தை படிக்கும் போது ஏற்படுகின்ற தெளிவு ஆங்கிலத்தில் படித்தால் ஏற்படவில்லை

  தாய்மொழிக் கல்வியே தலைசிறந்தது என்பது என்போன்றவர்களுக்கு அனுபவப் பாடம்.

  தமிழனாக பிறந்து விட்டு, ஆங்கில வலிக்கல்வி மட்டுமே படித்துவிட்டு, தான் சொல்லவந்த/எழுதவந்த கருத்தை முழுமையாக தெளிவாக சொல்ல இயலாத எண்ணற்றோரை என் வாழ்வில் அனுதினமும் கண்டு வருகிறேன்

  தமிழர்களே, தமிழில் படியுங்கள், தமிழில் பேசுங்கள்.. தமிழை சாகடிக்கும் இந்த மானங்கெட்ட அரசாங்களை கண்டுகொள்ளுங்கள்

 2. ஹிப்ரு மொழியை சாவிலிருந்து காத பெருமை யூதனுக்கு உண்டு ………….. அனால் நம் மொழியை அழித்த பெருமை நமக்கே வந்துவிடும் போல் இருக்கிறது…… மொழிப்புலமை வேறு , தாய்மொழி பற்று வேறு என்பதை மக்கள் வேறுபடுத்தி பார்க்க இயலா நிலையில் இருக்கிறார்கள்….. எந்த மொழி சோறு போடுகிறதோ அது போதும் என முடிவெடுத்ததன் விளைவுதான் இன்றைய ஆங்கில வழி கல்வி மோகம்……….. அதிக அறிவியலாளர்கள் யூத இனத்தில் இருந்து வந்தாலும் தன் தாய்மொழி பற்றை அவன் விட்டுவவிடுவதில்லை…………

 3. தாய் மொழிக் கல்வியே சிறந்தது. ஆங்கிலம் படிக்க, பேச, எழுத சரளமாக வருகிறது என்று எனக்கு நினைப்பிருந்தாலும், ஒரு பொருளை தமிழில் படிக்கும் போது கிடைக்கும் புரிதலும், இதமும் ஆங்கில வழியில் படிக்கும் போது கிடைப்பதில்லை. எழுதுவதை பொருத்தவரை, கேள்வியே இல்லை! தமிழில் தான் இன்னும் கூர்மையாகவும், “நான் சரியாத்தான் பேசறனாயா” என்ற சந்தேகமின்றியும் எழுத முடிகிறது.

  எனினும் ஆங்கில அறிவு நிச்சயம் தேவை. இதை சொல்ல எனக்கு ஒரு காரணம் மட்டுமே போதுமானதாக இருக்கிறது. தமிழை விட ஆங்கிலத்தில் அறிவுக்கருவூலம் அதிகம். தமிழை விட ஆங்கிலத்தில் பரந்து பட்ட பொருள்களில் ஆழமான புத்தகங்கள் கிடைக்கின்றன. சமீபத்தில், பொதுஜனங்களுக்கான (laymen) சில அறிவியல் புத்தகங்கள் படித்துக் கொண்டிருந்தேன். உதாரணமாக, “Neutrino” என்றொரு புத்தகம். நியூட்ரினோ என்ற அணுத்துகள் கண்டுபிடிக்கப் பட்ட வரலாற்றை, சிறிது அறிவியலும் கலந்து சுவாரஸ்யமாக சொல்லும் புத்தகம். இது போன்ற புத்தகங்கள் தமிழில் எப்போது வெளி வரும்? இணையத்தில் கூட தமிழில் கிடைக்கும் செய்திகளுக்கும், ஆங்கிலத்தில் கிடைக்கும் செய்திகளுக்கும் மடுவுக்கும், மலைக்குமான வித்தியாசம். ஆங்கில அறிவின்றி வினவு கூட இவ்வளவு நல்ல கட்டுரைகளை படைக்க முடியுமா என்பது சந்தேகமே. ஆங்கில அறிவு ஒரு பெரிய அறிவுக்கருவூலத்துக்கு திறவுகோலாய் அமைகிறது. அந்த வகையில், ஆங்கிலம் நிச்சயமாக ஒரு மொழிப் பாடமாக இருக்க வேண்டும்.

  மேலும், தமிழில் அறிவியல், கணிதம், வரலாறு என இன்னும் பரந்து பட்ட பொருள்களில் புதிய புத்தகங்கள் எழுதப் பட வேண்டும். ஆங்கிலப் புத்தகங்கள் மொழியாக்கம் செய்யப்பட வேண்டும். இதில் இரண்டு வகை. கல்லூரியில் குறிப்பிட்ட துறையில் படிப்போருக்கான புத்தகங்கள் ஒரு வகை. இரண்டாவது, பொது மக்களுக்கு புரியும் வகையிலான புத்தங்கங்கள். இரண்டு வகையிலும் தமிழில் புத்தகங்கள் எழுதப் பட வேண்டும்.

  முதலாவது வகையை பொருத்தவரை, ஒரு முக்கிய விஷயம் உண்டு. உதாரணமாக, “Theory of relativity” என ஒரு குறிப்பிட்ட பொருளில், ஒருவர் புத்தகம் எழுகிறார் என்றால், அவருக்கு அதில் ஆழ்ந்த புலமை வேண்டும். இல்லாவிட்டால் அங்கிருந்து ஒரு பக்கம், இங்கிருந்து ஒரு பக்கம் என கட் அன்ட் பேஸ்ட் வேலையாக முடிந்து விடும். இப்படி பல தரப்பட்ட பொருள்களில் புலமை உள்ள தமிழக பேராசியர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என எனக்கு சந்தேகம் உண்டு. ஒரு புத்தகத்தை அதன் ஆசிரியரை கொண்டு மதிப்பிடலாம். மேலே சொன்ன வகை புத்தகத்த்தை எழுதுபவரின் திறனை அறிய ஒரு பொதுவான அளவுகோல் உண்டு. அவர் அந்த துறையில் ஆராய்ச்சி செய்துள்ளாரா, எந்த தரத்தில் என்ற வகையில். உதாரணமாக, Science, Nature போன்ற உயர்ந்த அறிவியல் ஏடுகளில் கடந்து ஐம்பது ஆண்டுகளில் தமிழக பேராசியர்களின் கட்டுரைகள் எத்தனை வெளியாகி உள்ளன? எனது கணிப்பு பூஜ்ஜியம் அல்லது ஒற்றைப் படை (இந்த கணிப்பு தவறாக இருந்தால் திருத்துங்கள்).

  ஆழமான அறிவியல், கணிதம் போன்ற துறை புத்தங்கள் வெளியிடுவதில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. காரணம் எளிமையானது. அங்கிருக்கும் பேராசிரியர்களின் தரம் அப்படி. சமீபத்திய உலக அளவிலான ஒரு தர வரிசையின் படி, முதல் இருபது பல்கலைக் கழகங்களில் பதினெட்டு அமெரிக்காவில் இருக்கின்றன. இந்தியாவில் இருந்து ஒன்று மட்டுமே முதல் ஐநூறு இடங்களுக்குள் உள்ளது (பெங்களூரு IISc).

  அடித்தளம் ஆசிரியர்கள் இடமிருந்து தொடங்குகிறது. முதலில் ஆழ்ந்த புலமையும், தமது துறையில் ஈடுபாடும் கொண்ட ஆசிரியர்கள் வேண்டும். மூலம், மொழியாக்கம் என்ற வகையில் அறிவியல், கணிதம், வரலாறு என பலதரப்பட்ட பொருள்களில் புத்தகங்கள் தமிழில் எழுதப் பட வேண்டும். அந்த அடித்தளத்தின் மீது தான் தமிழ் வழிக் கல்வி என்னும் கோவிலை கட்ட முடியும். இல்லாவிட்டால், பில்டிங் ஸ்டிராங்கு, பேஸ்‌மென்ட் வீக்கு என்றாகிவிடும்.

 4. பரப்புரை இயக்கமும் போராட்டங்களும் வெற்றியடைய வாழ்த்துக்கள்.
  கருத்தரங்கம் – பேரணி – ஆர்ப்பாட்டம் முதலியன நடைபெறும் நாட்களையும் இடங்களையும் குறித்து வினவில் அறிவிப்பு வெளியிட்டால் வாசகர்களும் கலந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க