privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஆசியாநஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !

நஷ்ட ஈடு வழங்க டி.என்.ஏ. சோதனை : பங்களாதேஷ் அவலம் !

-

ந்த ஆண்டின் ஏப்ரல் 24-ம் தேதி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவின் புறநகர் பகுதியில், ஆயத்த ஆடை தொழிலகக் கட்டடம் ராணா பிளாஸா நொறுங்கி தரை மட்டமானதில், ஆயிரத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டார்கள். ஐந்து மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் இப்போது வரை கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த தொழிலாளர்களின் உறவினர்கள் நஷ்ட ஈடு பெறுவதற்காக அலைந்து கொண்டிருக்கிறார்கள். பங்களாதேஷ் அரசும், ஆயத்த ஆடை நிறுவனங்களும் சாத்தியமான அனைத்து வழிகளிலும் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு தருவதை மறுத்து வருகின்றன.

பாபுல் சோயால்
பாபுல் சோயால்

மொத்தம் பலியானவர்கள் 1,133 பேர், காயமடைந்தவர்கள் மேலும் சில ஆயிரம் பேர். அதில் உறுப்புகளை இழந்தவர்கள், வாழ்நாள் முழுவதும் செயல்பட முடியாமல் முடமாக்கப்பட்டவர்கள் என அனைவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும், அரசு அறிவித்துள்ள நஷ்ட ஈடை பெறுவதற்கு, ராணா பிளாசாவில் பணிபுரிந்ததை நிருபித்தாக வேண்டும். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள், ‘நான் அவரது உறவினர்தான்’ என்பதை உரிய ஆதாரங்களுடன் உறுதி செய்ய வேண்டும். மகள்களை இழந்த அம்மாக்களும், மனைவியை இழந்த கணவன்களும், அம்மாவை இழந்த மகள்களும் ஒவ்வொரு நாளும் ஏக்கம் நிரம்பிய முகங்களுடன், உறவினர்களின் புகைப்படங்களை ஏந்தியபடி ராணா பிளாசா கட்டடம் இருந்த இடத்தில் குவிகின்றனர்.

பாபுல் சோயால், ஒவ்வொரு நாளும் ராணா பிளாசாவுக்குச் செல்கிறார். அவரது கையில் கத்தை கத்தையான காகிதங்களும், ஆவணங்களும் இருக்கின்றன. அனைத்தும் அவரது மனைவி ஷாகிதா, ராணா பிளாசாவில் பணி புரிந்ததற்கான ஆதாரங்கள். இப்போது வரை ஷாகிதா உயிருடன் வரவில்லை; அவரது உடலை சோயால் பார்க்கவும் இல்லை. அடையாளம் தெரியாமல் புதைக்கப்பட்ட 300 சடலங்களில் ஷாகிதாவின் உடலும் ஒன்றாக இருக்கலாம். தன் மனைவி கட்டட இடிபாடுகளுக்குள் இறந்துவிட்டதாக சோயால் நம்புகிறார். ஆனால் அதிகாரிகள் நம்பவில்லை. ‘உங்கள் மனைவி இறந்துபோனதை நிரூபித்தால்தான் நஷ்ட ஈடு’ என்கிறார்கள்.

சம்சுன் நஹார்
சம்சுன் நஹார்

ராணா பிளாசாவின் ஆயத்த ஆடை நிறுவனம் ஒன்றில் இருந்து, ஷாகிதா சம்பளம் பெற்றதற்கான பே-சிலிப் சோயாலிடம் இருக்கிறது. அதை அதிகாரிகள் ஏற்றுகொள்ள மறுக்கிறார்கள். அவர்களுக்கு டி.என்.ஏ. சோதனையின்படி உறுதி செய்யப்பட்ட முடிவு வேண்டும். இதற்காக சோயாலிடம் இருந்து மாதிரி திசு எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இறந்துபோனவர்களின் டி.என்.ஏ.வுடன், அதை பொருத்திப் பார்த்து இனம் காணும் கணினி மென்பொருள் பங்களாதேஷில் இல்லை. இதனால் நிலைமை மேலும் சிக்கலாகியிருக்கிறது.

‘‘என் மனவியை உயிருடன் வைத்துக்கொண்டு நஷ்ட ஈடு பெறுவதற்காக நான் பொய் சொல்வதாக அதிகாரிகள் நினைத்தால், அவர்கள் எப்போது வேண்டுமானாலும் நான் வசிக்கும் பகுதிக்கு வந்து பரிசோதித்துக்கொள்ளட்டும்’’ என்கிற சோயால், ‘‘எனக்கு 5 குழந்தைகள். இப்போது அவர்களுக்கு அம்மா இல்லை. அரசு ஏதேனும் உதவி செய்தால், என் பிள்ளைகளை காப்பாற்ற முடியும். ஆனால் என்ன நடக்கும் என்பது குறித்து என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை” என்கிறார்.

மிகச்சிறிய குடிசையில் வசிக்கும் சோயால், அதற்கான வாடகையைக் கூட தர முடியாத நிலையில்தான் இருக்கிறார். அவரது நண்பர்கள் சேர்ந்து வாடகையைத் தருகின்றனர். ஆனால் இது நீண்ட நாள் நீடிக்காது. ஒருவேளை டி.என்.ஏ. சோதனையில் இவரது மனைவி இறந்தது உறுதி செய்யப்பட்டால் சோயாலுக்கு சுமார் 12 லட்சம் ரூபாய் கிடைக்கும். இது பங்களாதேஷ் அரசு அறிவித்திருக்கும் நஷ்ட ஈடு தொகை. ராணா பிளாசாவில் உற்பத்தி செய்யப்பட்ட ஆடைகளை வாங்கி விற்ற மேற்குலக பிராண்டட் நிறுவனங்களான பிரைமார்க், மாடலான், பான்மார்ஷே போன்றவை, கட்டடம் இடிந்து விழுந்த பின்பு தொழிலாளர்களை கண்டு கொள்ளவில்லை. பிரைமார்க் நிறுவனம் மட்டும் தன்து பணி புரிந்த நிறுவன தொழிலாளர்களுக்கு தலா 200 டாலர் நஷ்ட ஈடு கொடுத்தது.

யாநூர்
யாநூர்

பாபு சோயால் போலவே, ஒவ்வொரு நாளும் ராணா பிளாசாவுக்கு வந்து குவிபவர்களில் சம்சுன் நஹாரும் ஒருவர். எதிர்ப் படும் ஒவ்வொருவரிடமும் ‘என் மகளுக்கு என்ன ஆச்சு? என் மகளைப் பார்த்தீர்களா?’ என்று கேட்கிறார். 18 வயதான அவரது மகள் ஈனி பேகம், கடந்த சில ஆண்டுகளாக ராணா பிளாசாவில்தான் பணிபுரிந்து வந்தார். ‘‘நாங்கள் மிகவும் ஏழைகள். என் மகளை பள்ளிக்கு அனுப்பாமல் ராணா பிளாசா அனுப்புவதற்கு எங்கள் ஏழ்மைதான் காரணம். இப்போது அவள் இல்லாமல் மிகவும் வெறுமையாக இருக்கிறது. ஒவ்வொரு நாளும், இங்கு எங்கேயோ அவள் நின்று கொண்டிருப்பாள் என்று நினைத்துக் கொண்டுதான் வருகிறேன்” என்று வலியுடன் பேசுகிறார்.

14 வயதான யாநூர், ராணா பிளாசா இடிபாடுகளில் சிக்கியவள். அவளது இரு கால் எலும்புகளும் உள்ளுக்குள் நொறுங்கியிருக்கின்றன. இந்த சிறுமிக்கும் நஷ்ட ஈடு இன்னும் கிடைக்கவில்லை. ‘‘விரைவில் நான் இங்கிருந்து கிளம்பி வேலைக்குப் போக வேண்டும். என் அப்பாவையும், ஆறு சகோதர, சகோதரிகளுக்காகவும் உழைக்க வேண்டும்” என்கிற யாநூரின் அம்மா, ராணா பிளாசாவில் சிக்கி கொல்லப்பட்டுவிட்டார்.

இந்த சிறுமியைப் போல விபத்தில் சிக்கிய ஏராளமானோர் வேலைக்குச் செல்ல துவங்கிவிட்டனர். கொல்லப்பட்ட தங்கள் உறவினர்களுக்காக கண்ணீர் விடவும், சோகம் மிகுந்த மனதின் உணர்வுகளை ஆற்றுப்படுத்தவும் அவர்களுக்கு அவகாசம் இல்லை. இருக்கும் உயிர்களை காப்பாற்றிக்கொள்ள உடனே உழைத்தாக வேண்டும். அவர்களிடம் எஞ்சியிருக்கும் கடைசித் துளி ரத்தத்தில் இருந்து, மேலும் ஒரு டாலர் சம்பாதிப்பதற்காக முதலாளித்துவம் வலைவிரித்து காத்திருக்கிறது.

படங்கள் : நன்றி பிபிசி

மேலும் படிக்க

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க