Tuesday, August 9, 2022
முகப்பு மறுகாலனியாக்கம் கல்வி கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் - சிதம்பரம் பொதுக்கூட்டம்

கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்

-

21-9-13 சனிக்கிழமை மாலை 6-00 மணிக்கு சிதம்பரத்தில் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் சார்பில் “கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்களுக்கு என்ன தண்டனை?” என்ற தலைப்பில் விளக்கப் பொதுக்கூட்டமும் கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள் என்ற நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது.

தலைமை உரையாற்றிய சிதம்பரம் நகர தலைவர் ராமகிருஷ்ணன்

மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் தொடங்கி 3 ஆண்டுகளில் சிறப்பாக மூன்று மாநாடுகளை நடத்தியிருக்கிறோம். தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு எதிராக குறிப்பாக காமராஜ், வீனஸ் பள்ளிகளில் பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டிருக்கிறோம். மக்கள் எங்கள் பின்னாள் நின்றால் நாங்கள் எல்லா பள்ளிகளுக்கும் எதிராக போராட தயாராக இருக்கிறோம். காலாண்டு தேர்வில் காமராஜ் பள்ளியில் தேர்வு எழுத ஒரு வினாத்தாள், வீட்டுக்கு போகும் போது கையில் கொடுப்பது ஒரு வினாத்தாள் என அமல்படுத்துகின்றனர். பணம் கட்டாத மாணவர்களுக்கு தேர்வை எழுதிய பிறகு கேள்வித்தாளை திருப்பி வாங்கிக் கொண்டு அனுப்புகின்றனர். மாணவர்களுக்கு வருகை பதிவேட்டில் வரவில்லை, தேர்வு எழுதவில்லை என்று காண்பிக்கிறார்கள் தனியார் பள்ளிகள் தாங்கள் வைத்ததுதான் சட்டம் என செயல்படுவதற்கு எதிராக அனைவரும் பெற்றோர் சங்கத்தில் இணைந்து கடமையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

வரவேற்புரை ஆற்றிய சிதம்பரம் நகர செயலாளர் தஷ்ணா கலையரசன்

காசு இருந்தால்தான் படிக்கலாம் என்ற நிலை உள்ளது. தனியார் பள்ளிகளை வளர்க்கும் விதமாக அரசு பள்ளியை அழிக்கும் போக்கில் அரசின் கொள்கை உள்ளது. அரசு பள்ளி தரமான பள்ளி இல்லை என்ற எண்ணத்துடன் தனியார் பள்ளியில் பெற்றோர்கள் மாட்டிக் கொண்டுள்ளனர். நமது சங்கத்தின் தொடர் போராட்டத்தால் காமராஜ் பள்ளியில் அரசு கட்டணம் மட்டும் வாங்கப்படுகிறது. கூடுதலாக ரூ 2,500 முதல் ரூ 3,000 வரை வசூலிக்கின்றனர். வீனஸ் பள்ளியில் அரசு கட்டணம் செலுத்த முயன்றபோது அடியாட்கள் மூலம் பெற்றோர்கள் மிரட்டப்பட்டார்கள். 3,000 பேரில் 300 மாணவர்கள் அரசுக் கட்டணம் செலுத்தியுள்ளனர். இதனால் பல லட்சம் இழப்பு ஏற்பட்டது. கூடுதல் கட்டணம் தொடர்பாக கல்வித் துறை, காவல் துறை அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் தெரிவித்து போராடி வருகிறோம். நாங்கள் நடத்தும் தொடர் போராட்டம் மூலம் பெற்றோர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்பட்டு வருகிறது.

நடராஜன் சங்கத்தின் முன்னணி உறுப்பினர். கட்டணம் செலுத்த வில்லை என்தால் அவர் மகனை தேர்வு எழுத விடாமல் வெளியே நிற்க வைத்து விட்டனர். நடராசன் தந்தை இறந்ததன் காரணமாக பணம் கட்டவில்லை. மகனை தேர்வு எழுத அனுமதிக்குமாறு கேட்பதற்காக பள்ளிக்கு சென்று முதல்வரிடம் பேசிக் கொண்டிருந்தவரை உள் அறையிலிருந்து வெளியில் வந்த தாளாளர், “இவனிடம் என்ன பேச்சு? வெளியே போகச்சொல்லுங்கள்” என்று கெட்ட வார்த்தையில் திட்டி, அடித்து வெளியே தள்ளினர். உடன் இருந்த ஆசிரியர்களும் அவரை வயிற்றில் எட்டி உதைத்து கடுமையாக தாக்கினர். சங்கமும் வழக்கறிஞர்களும் தலையிட்டு போராடி பள்ளி தாளாளர் மீதும் வழக்கு பதிவு செய்யபட்டுள்ளது.கைது செய்ய கோரி நாம் முற்றுகை போராட்டம் நடத்தி கதானோம். அதை தொடர்ந்து இந்த பொது கூட்டத்தை நடத்துகிறோம்.

சேத்தியாதோப்பு தலைவர் தமிழரசன்

அரசுக் கட்டணத்தை மட்டுமே கட்டுவோம் என்று சேத்தியாதோப்பு எஸ்.டி.எஸ் பள்ளியில் மறியல் செய்தோம். பின்பு முத்தரப்பு கமிட்டி மூலம் பேச்சுவார்த்தை நடைபெற்ற பின் அரசு கட்டணம் மட்டும் செலுத்துவோம் என்று உறுதி தரப்பட்டு அதன்படியும் செய்துவருகிறாம். முறையாக ரசீதும் பெற்று வருகிறாம்.தற்போது மாணவர்களை பள்ளி கட்டிட வேலைக்கு பள்ளி நிர்வாகம் பயன்படுத்துகிறது. பணம் கட்டுவதற்கு பெற்றோர்தான் வரவேண்டும் என கட்டுப்பாடு விதிக்கின்றனர். அப்படி வரும் போது, “தனியே பேசி பிள்ளை படிப்பு என்னவாகும் அதனால் நாங்கள் சொல்லும் கட்டணத்தை கட்டி விடுங்கள்” என்று நிர்பந்திக்கின்றனர். இதையெல்லாம் நாங்கள் டி.எஸ்.பியிடம் புகார் தெரிவித்துள்ளோம். கல்வித் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன்.

வி.வி.சுவாமிநாதன், முன்னாள் அமைச்சர் பெற்றோர் சங்கம் மனித உரிமை பாது காப்பு மையத்துடன் இணைந்து நடத்திய பல் வேறு போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், கல்வி துறை அதிகாரிகளின் உத்தரவுகள், அரசாணைகள், பத்திரிக்கை செய்திகள், கட்டணக்கொள்ளையை எப்படி வீழ்த்துவது என்ற நடை முறை அனுபவங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய – “கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்” என்ற நூலை வெளியிட அண்ணாமலைப் பல்கலை கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் சி.மதியழகன் பெற்றுக்கொண்டார்.

கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்
கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்

வி.வி.சுவாமிநாதன் உரையிலிருந்து,

அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட நான்கு மடங்கு அதிகமாக வசுலிப்பதற்கும், ரசீது கொடுக்காததற்காகவும் அவர்களுக்கு என்ன தண்டனை என ராஜு தலைமையில் நடைபெறும் கூட்டத்திற்கு இந்த நூலை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். புனிதமான காமராஜ் பெயரில் நடத்தும் பள்ளியில், வீனசு பள்ளியில் எப்படி கட்டணக் கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளும் விஷயம் இந்த புத்தகத்தில் உள்ளது. ஆள்பலம், ஆட்சிபலம், படைபலம் இல்லாத ஒரு அமைப்பு இந்த புத்தகத்தை உருவாக்கியுள்ளது.

இலவசமாக பள்ளிக்கல்வி படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், முதலமைச்சர் அவர்கள் இப்புத்தகத்தை இலவசமாக கொடுக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அனைத்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், காவல்துறை அதிகாரிகளுக்கும் இந்த நூலை கொடுக்க வேண்டும். சிதம்பரத்தில் நாம் வாழ்கின்ற இடத்தில் நடக்கிற இந்த அக்கிரமத்தை நாம் இந்த புத்தகத்தை படித்துவிட்டு நாம் தனியார் பள்ளிகளுக்கு பாடம் புகட்ட வேண்டும். முதலமைச்சரை தனியார் பள்ளி தாளாளர்கள் குறைத்து மதிப்பிட வேண்டாம். முதலமைச்சர் என்ன வேண்டுமானாலும் செய்வார். அண்ணாமலை பல்கலைக்கழகம் என்ன நிலையில் இருந்தது. தமிழக அரசால் எடுக்கப்பட்டு இன்று பிரமாதமாக நிரவாகம் செய்யப்பட்டு வருகிறது. அதே நிலை முடிவை தனியார் பள்ளிகளிலும் முதலமைச்சர் எடுக்க தயங்க மாட்டார் என்பதைபள்ளி உரிமையாளர்கள் மறக்க வேண்டாம்.

துஷ்டன் அதிகமானால் ஆண்டவன் அவதாரம் எடுத்து அழிப்பான். ஆனால் அரசு அதிகாரிகள் எந்த அவதாரமும் இதுவரை எடுக்கவில்லை. கடவுள் அவதாரம் எடுத்து இரண்டு மனிதர்களை சந்தித்தார். ஆப்பிரிக்கா மனிதன் தங்கள் நாடு முன்னேற எவ்வளவு ஆண்டுகள் ஆகும் என கடவுளிடம் கேட்டான். 50 வருடம் ஆகும் என்றாராம் கடவுள். அதுவரை நான் உயிரோடு இருக்க மாட்டேன் என அழுதானாம் அந்த மனிதன். தமிழ்நாட்டு மனிதன் கடவுளிடம் எங்கள் நாடு எப்போது முன்னேறும் எனக் கேட்டான். கடவுள் அழுதாராம். ஏன் அழுகிறீர்கள் என கேட்டதற்கு நான் அதற்குள் இறந்துவிடுவேன் என்றாராம் கடவுள்.

இலவச கல்வி என்பது, தரமான இலவச கல்வியாகும். தபால்நிலையம் ஒவ்வொன்றாக மூடப்படுவது போல் ஒவ்வொரு அரசுப் பள்ளியும் மூடப்படுகிறது. அந்த காலத்தில் சொந்த காரன் போக அஞ்சிய நிலையிலும் தபால் காரர் நமது கடிதத்தை சைக்கிளில் கொண்டு போய் சேர்த்தார். ஒவ்வொரு அரசுப் பள்ளியும், நகராட்சி, மாநகராட்சி பள்ளி ஒவ்வொன்றாக மூடப்படுகிறது.

துப்புரவு தொழிலாளி ஐந்து வட்டிக்கு பணம் வாங்கியாவது தனது குழந்தையை மெட்ரிக் பள்ளியில் படிக்க வேண்டும் என்று நினைக்கிறான். அங்கு தரமான கல்வி இருப்பதாக அவன் நினைக்கிறான். நீதிபதிகள் சொல்லும் கட்டணத்தை தனியார் பள்ளிகள் வாங்க மறுப்பது என்ன நியாயம்? கட்டணம் வாங்க மறுக்கும் தனியார் பள்ளி மீது அவமதிப்பு தொடங்காததற்கு அரசு ஏன் தயங்குகிறது? ஏன் சிங்காரவேலனை டிஸ்மிஸ் செய்யக்கூடாது? ஏன் தனியார் பள்ளிகளை டிஸ்மிஸ் செய்யக்கூடாது?

மாணவர்கள், பெற்றோர்கள் வந்து முறையிடும்போது கண்டிப்பது நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறை அனுமதி கொடுக்காததற்கு என்ன காரணம்? பொதுமக்களிடம் பேசுவதற்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை? இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது சுடப்பட்டவன் ராசேந்திரன். சுடச் சொன்னவர் பக்தவத்சலம் இன்று அவரும் இல்லை, அவர் ஆட்சியும் இல்லை, இராசேந்திரன் இன்று சிலையாக நம்மிடையே வாழ்கிறான்.

எஸ்.ஐக்கு புகாரை பதிவுசெய்யவில்லை என்றால் 6 மாதம் தண்டனை என்பதை அறியவேண்டும். முற்றுகை போராட்டம் செய்ய வேண்டியது அவசியம்தான். கிராமத்தில் வசதிகள் செய்து தரவில்லை என்றால் சாலை மறியல் செய்கிறார்கள். அப்போதுதான் பிரச்சனை தீர்க்கப்படுகிறது. இது சட்டமன்றத்தில் இயற்றப்படும் கவன ஈர்ப்பு தீர்மானம் போன்றது. ஜனநாயக மரபுகளை கட்டிக்காக்க வேண்டும் என்று கூறினார். இந்த புத்தகத்தை வைத்துக்கொண்டு முதல்வருக்கு போலீசு தான் எடுத்து சொல்ல வேண்டும். குற்றம் சொல்ல புகார் கொடுக்க வருபவரை நீங்கள் அவமதிக்க கூடாது.

அதிக கட்டணம் வசூலிக்க சட்டம் இல்லை. இப்போது அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றால் அரசு புதிய சட்டம் இயற்ற வேண்டும். காமராஜ், வீனஸ் பள்ளியில் சொல்லமுடியாத அநியாயம், அக்கிரமம் நடப்பதால் சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் இதை அரசுக்கு எடுத்து சொல்ல வேண்டும். சிதம்பரம் எம்.எல்.ஏ. ஏன் வரவில்லை? சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினர் ஏன் வரவில்லை? ஏன் இவர்கள் இந்த கட்டண கொள்ளையை கண்டிக்கவில்லை? சர்வகட்சிகள் இந்த பிரச்சனைக்கு ஒன்று கூட வேண்டும். காவல்துறை ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.அரசின் நிலமைகள் மாறிக் கொண்டே இருக்கும் நீங்கள் தவறாக செயல் பட்டால் மாட்டிக் கொள்வீர்கள்.அதுவும் மனித உரிமை பாது காப்பு மையத்திடம் எச்சரிக்கையாக இருங்கள்.முற்றுகை போராட்டம் நடத்தினால் என்ன தவறு? அதை ஏன் தடுக்கிறீர்கள்.இந்த புத்தகத்தில் உள்ள விபரங்கள் ஏவுகணையாக செயல்படும். அனைத்து விபரங்களும் ஆதாரப்பூர்வமாக பதியப்பட்டிருக்கிறது. சென்னையிலிருந்து 87 வயதான நான் உடனே புறப்பட்டு இதற்காகவே வந்தேன். இந்த நூலை வெளியிட்டு பேசியதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

மதியழகன், அண்ணாமலை பல்கலை கழக ஊழியர்கள் சங்க தலைவர்

அண்ணாமலை பல்கலையில் மிகப்பெரிய போராட்டங்களை நடத்திய வரலாறு திரு. வி.வி.எஸ் அவர்களுக்கு உண்டு. முறையற்ற மாணவர் சேர்க்கையால் பல மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் வருகையால் சிதம்பரத்தில் கலாச்சார சீரழிவு ஏற்படுகிறது. கட்டணக் கொள்ளைக்கு எதிரான இந்த நிலைக்கு தமிழக முதலமைச்சர் சரியான நேரத்தில் செவிசாய்ப்பார். நீங்கள் நடத்தும் போராட்டம் ஒட்டுமொத்த தமிழகத்தை செவிசாய்க்க வைக்கிறது. இது சிதம்பரத்தில் உள்ள ஒரு சில பள்ளியை மட்டும் குறிவைத்த எடுக்கும் முயற்சி அல்ல. பல்லாயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம். ஆனால் இதை சாதியை வைத்து கொடுக்க வேண்டிய அவசியம் என்ன? A, B, C, D, என்று வைத்துக் கொண்டு அதன்படி இடஒதுக்கீடு கொடுக்கலாமே, அரசியல்வாதிகள் அதை ஏற்று கொள்ள மாட்டார்கள். சாதிக்கு எதிரான கருத்தை மக்களிடமிருந்தே உருவாக்கப்படவேண்டும். இந்தி ஒழிக்கவேண்டும் என்ற கொள்கைக்காக இன்று ஆங்கில கல்வியை நாம் ஏற்றுக்கொண்டு உள்ளாம். இதை மூலதனமாக வைத்து மெட்ரிக் பள்ளி கொள்ளை அடித்துகொண்டிருக்கிறது. புற்றீசல் போல் பரவிவரும் மெட்ரிக் பள்ளியை முடக்க வேண்டும், ஒழிக்க வேண்டும் என்ற காரணத்தால்தான் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வியை தற்போது அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த எண்ணம் அரசுக்கு உள்ளது. மெட்ரிக் பள்ளியில் படித்த ஒருவன் ஒரு மணிநேரம் உரையாற்ற முடியுமா?அரசுப்பள்ளியில் படித்த நாங்கள் ஆங்கிலத்தில் உரையாற்றும் ஆற்றல் உண்டு. ஆங்கிலம் அறிவு அல்ல அது மொழிதான் என புரிந்து கொள்ள வேண்டும்.

அரசின் கல்விக் கொள்கையில் மாற்றம் வரவேண்டும். ஆங்கிலம், இந்தியை ஒரு மொழிப் பாடமாக படிக்கலாம். ஆனால் இப்போது தமிழுக்கு பதிலாக ஆங்கிலம வளர்கிறது. மொழிப்புலமை என்பது வேறு. ஆங்கிலத்தில் புலமையை கற்றுக் கொடுக்க வேண்டும், இந்தியையும் கற்றுக்கொடுக்கலாம். ஆனால் எல்லா பாடங்களையும் தமிழில்தான் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அநீதிக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் நாம் எந்த பக்கம் என்பதை பதிவு செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களின் இந்த நியாயமான போராட்டத்திற்கு எங்கள் ஆதரவை பதிவு செய்யவே நான் கலந்து கொண்டு பேசுகிறேன். அதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

சி.ராஜு, மாநில ஒருங்கிணைப்பாளர், மனித உரிமை பாதுகாப்பு மையம்

கட்டணக் கொள்ளைக்கு எதிராக கல்வித்துறை நடவடிக்கை எடுத்திருந்தால், போராட்டம், பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டம் தேவை இருக்காது. தவறே நடக்காமல் பார்த்துகொள்வதுதான் ஒரு நல்ல அரசு நிர்வாகம். ஆனால் மீண்டும், மீண்டும் ஒரே தவறை இந்த பள்ளிகள் செய்துகொண்டிருக்கிறது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கல்விக்கூடம் என்பது அறிவை பெருக்குகிற ஒரு கூடம். தெய்வத்திற்கு ஈடாக ஆசிரியர்களை வைக்கிறார்கள். கல்வி என்பது சேவை.

ஆனால் கடந்த ஆண்டு நாங்கள் காமராஜ் பள்ளிக்கு நடத்திய தொடர் போராட்டத்தால் ஏன் உன் பள்ளி அங்கீகாரத்தை ரத்துசெய்ய கூடாது என்று ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்ப வைத்தோம். கல்வி துறை அதிகாரிகளின் விசாரணையின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்து உள்ளோம். அரசே இலவச கல்வியை அனைவருக்கும் வழங்கவேண்டும் என்றுதொடர்ந்து கல்வியாளர்களை வைத்து மாநாடுகள் நடத்தினோம்.

500 ருபாய் கொடுத்து அயன்பாக்ஸ் வாங்கினால், வேலை செய்யவில்லை என்றால் கேட்கலாம். ஆனால் 30,000 (அ) 40,000 ரூபாய் கட்டி பிள்ளைகளை படிக்க வைக்கும் நீங்கள் பள்ளி சென்று கேள்வி கேட்க முடியாது. நீங்கள் உங்களை பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் உங்கள் குழந்தைகளை பற்றி சிந்திக்க மறுக்கிறீர்கள். அவர்கள் எந்த துறையில் ஆர்வமாக உள்ளார்களோ அப்படி படிக்க வைக்கவேண்டும். மனப்பாடக் கல்வி தேவையில்லை. மாணவனை சரக்காக, பண்டமாக தனியார் பள்ளிகள் மாற்றுகின்றன. அரசுப் பள்ளியில் கட்டுப்பாடு இல்லாமல் மாணவர்கள் விடப்படுவதால் சீரழிவு, ஒழுங்கின்மை ஏற்படுகிறது. மாணவர்கள் பள்ளிகளில்தான் அதிக நேரம் ஆசிரியர் கண்காணிப்பில் இருக்கின்றனர். அது போல் தனியார் பள்ளியில் அதிக கட்டுப்பாடுகளால்,லாபத்தை முன்னிருத்துவதால் மாணவர்களிடையே திறமை முடமாக்கப்படுக்கிறது. காமராஜ் பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவனை தனிமைபடுத்தும், தேர்வை எழுதவிடாமல் தடுக்கும் அந்த பள்ளி முதல்வர் பாடம் நடத்த, பள்ளியை நிர்வாகிக்க தகுதி உள்ளவரா?

தனியார் பள்ளி கொடுமைக்கு எதிராக மாநிலம் முழுவதும் நாங்கள் போராடி வருகிறோம். புதியதாக பள்ளிக்கூடம் திறக்க அனுமதி வாங்க வேண்டாம். லேபர் பிரச்சனை கிடையாது. மார்க்கட்டிங் பிரச்சினை கிடையாது. ரூ 4000 சம்பளத்திற்கு வேலை செய்ய ஆசிரியர் ரெடி. அதனால் புற்றீசல் போல கல்வி வியாபாரம் பறக்கிறது. இந்த ஊரிலிருந்து வேன்கள் பக்கத்து ஊருக்கும் பக்கத்து ஊரிலிருந்து இங்கும் காலை மாலை பறக்கிறது.

தொழில் தொடங்க வணிகர்கள் படும் சிரமங்கள், பிரச்சினைகள் பள்ளிக்கூடம் நடத்துவதில் கிடையாது. கொத்தடிமைகளாக பணியாற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காகவும் சங்கம் போராடும். அரசுப் பள்ளியில் டி.இ.டி தேர்வு எழுதி தகுதி முடிவு செய்யபடுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்களின் தரம், தகுதி யார் பரிசோதித்கிறார்கள்? எவ்வாறு முடிவு செய்யபடுகிறது?

தேர்வு மையங்களை அரசு அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள். தேர்வுத்தாளை அரசு பள்ளி ஆசிரியர்கள்தான் திருத்துகிறார்கள். பாடத்திட்டம் அரசு கொடுக்கும், சமச்சீர் பாடம். பள்ளி நடத்த அங்கீகாரம் கொடுப்பது அரசு. எவ்வளவு கட்டணம் வாங்க வேண்டும் என முடிவு செய்வது அரசு. கல்வி சேவையாற்ற கட்டிடம் கட்டுவது பெற்றோர்கள் கொடுக்கும் பணத்தில். அதனால் வரிவிலக்கு பிற சலுகை.

ஆனால் தனியார் பள்ளி முதலாளிகள் எங்கள் பள்ளி நான் சொன்னதுதான் சட்டம் என எப்படி சொல்ல முடியும். கூடங்குளம் அணு உலையை யார் வேண்டுமாளாலும் பார்க்கலாம் என கூப்பிடுகிறார்கள். தனியார் மெட்ரிக் பள்ளியில் தன் பிள்ளை எந்த வகுப்பறையில் படிக்கிறான். மின் விசிறி, குடிநீர், கழிப்பறை காற்றோட்டம் இருக்கிறதா? என பார்க்க முடியுமா? ஏன் தடுக்கிறார்கள்.பெற்றோர்கள் பார்க்கலாம் என அரசு ஆணை போட்டிருக்கிறது. பெற்றோர்கள் விழிப்புணர்வு அடைந்து கேள்வி கேட்டால்தான் இதற்கு தீர்வு ஏற்படும்.

தனியார் பள்ளியில் ஸ்போக்கன் இங்கீலீஷ்-க்காக பணம் வாங்குகிறார்கள்? இது என்ன அநியாயம். பெற்றோர்களின் இத்தகைய அறியாமையை அகற்ற அச்சத்தை போக்கதான் நாங்கள் தொடர்ந்து போராடுகிறோம். நீங்கள் உங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டும். படிப்பறிவு இல்லாதவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு எவ்வாறு ஆங்கிலத்தில் பாடம் சொல்லிக்கொடுக்க முடியும். ஆசிரியர் தன்னுடைய அனுபவத்தை மாணவரின் அனுபவத்தோடு இணைத்து போதிக்கிறார். அப்போது மாணவன் மனதில் பதிகிறது. சிந்திக்க தூண்டுகிறது.

அம்பானியும், பிர்லாவும் இந்தியாவின் கல்விகொள்கையை உருவாக்கும் குழுவில் உள்ளனர். இன்போசிஸ் நாராயணமூர்த்தி உயர் கல்வியை கார்ப்பரேட்டிடம் விட வேண்டும் என்கிறார். கல்வியை தனியார் மயமாக்குவதில் அரசுக்கு ஒரு நோக்கம் உள்ளது, பணம் சம்பாதிப்பது மட்டும் அல்ல.

நாள் ஒன்றுக்கு 29 ரூபாய் வருமானத்தில் 80 கோடி மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நல்ல தண்ணீர் தரவேண்டும். அப்படி அல்லாமல் 10 ருபாய்க்கு அம்மா தண்ணீர் கொடுப்பது என்ன நியாயம்? சிறுவாணி, புழல்,சோழவரம் ஏரிகளை எல்லாம் கோக், பெப்சி-க்கு தாரை வார்த்து விட்டு மக்களுக்கு தண்ணீர் விற்பது என்ன நியாயம்? காசில்லாதவனுக்கு தண்ணீர் இல்லையா?

மருத்துவம் தனியாருக்கு. அதனால்தான் அரசு மருத்துவ மனைகள் புறக்கணிக்கப் படுகின்றன. தனியார் செல் வளருவதற்கு அரசு பிஎஸ்என்எல் முடமாக்கப்படுகிறது.

இதனால்தான் பெற்றோரை வயிற்றில் எட்டி உதைத்த பள்ளி தாளாளரை கைது செய்யாமல் காவல்துறை மௌனம் காக்கிறது. அரசு உத்தரவை, அதிகாரிகளை தனியார் பள்ளி முதலாளிகள் மதிப்பதில்லை. எங்களுக்கு வருகின்ற அந்த கோபம் ஏன் போலீசுக்கு வரவில்லை? ஏன் வட்டாட்சியருக்கு வரவில்லை? சப்-கலெக்டருக்கு ஏன் அந்த கோபம் வரவில்லை? தனியார்மயக் கொள்கை அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. பெற்றோர் சங்கம் நடத்திவரும் தொடர்ந்த போராட்டங்களின் வாயிலாகத்தான் பெற்றோர்களை இன்று மனிதனாக மதிக்கிறார்கள்.வாங்கும் பணத்திற்கு ரசீது தருகிறார்கள். அரசு கட்டணம் மட்டுமே வசூல் செய்வோம் என விருதையில் ஒரு மெட்ரிக் பள்ளி போஸ்டர் அடித்து ஒட்டியது. ஒவ்வொரு ஊரிலும் பெற்றோர் சங்கக் கிளையை ஆரம்பிக்க வேண்டும். அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். ஆசிரியர் சங்கங்கள் தனியார் பள்ளியின் தரத்திற்கு எதிராக பேச வேண்டும் அரசின் ஆங்கில வழிக்கல்வியை பற்றி பேச வேண்டும்.

கவரப்பட்டு உயர்நிலைப்பள்ளியில் இந்த ஆண்டு 96% மாணவர்கள் தேர்ச்சி. சிதம்பரம் பெண்கள் மேல் நிலைப்பள்ளி, நகராட்சி நடுநிலைப்பள்ளியில் தரமாக கல்வி அளிக்கிறார்கள். அவர்கள் தான் இந்த மாவட்டத்தின் கல்வித் துறை அதிகாரிகளிடம் அனைத்த பள்ளிகளையும் தரமாக மாற்றுங்கள் என ஏன் சொல்ல முடியாது?. சிறு சிறு குறைபாடுகளை நாம் சரி செய்து நம் பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்ப்பது தான் நிரந்தர தீர்வு.

அரசுப் பள்ளி நம்முடைய சொத்து என்ற நினைப்பு நமக்கு வரவேண்டும். பி.எஸ்.என்.எல் நம்முடைய சொத்து என்ற நினைப்பு இருக்க வேண்டும்.

ஆதார் அட்டை கட்டாயமில்லை. வேண்டும் என்பவர்கள் மட்டும் எடுத்துக்கொள்ளலாம் என நாங்கள் ஆதாருக்கு எதிராக போடபட்ட வழக்கில் மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் அரசாங்கம் மக்களை ஆதார் எடுக்க சொல்கிறது. மான்யங்கள் அப்போதுதான் கிடைக்கும் என பிரச்சாரம் செய்கிறது. கல்வி, மருத்துவம்,ரேசன் பொருட்கள் கேஸ் சிலிண்டர் மான்ய பணம் இனி பணமாக உங்கள் கணக்கில் தருகிறோம் என கூறுகிறார்கள். தற்போது இரண்டு லட்சம் மக்கள் அரிசி வாங்குகிறார்கள் என்று வெளியில் தெரியும். பணம் கொடுக்கும் போது ஒரு லட்சம் பேரை நீக்கி விடுவார்கள். இது தான் உலக வங்கி உத்தரவு.

தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை கல்வி கட்டணச்சட்டத்தை ஏற்க முடியாது என தனியார் பள்ளி முதலாளிகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று தோற்றுப் போனார்கள். இந்த சட்டத்திற்கு எதிராக அவர்கள் நடந்து கொண்டால் மூன்று ஆண்டுகள் ஜெயில் தண்டனை. இதற்கு வழக்கு போடுவதற்கு கல்வி துறை அதிகாரிகள் அரசிடம் அனுமதி பெற வேண்டும். தனியார் பள்ளி முதலாளிகளை அரசு பாதுகாக்கவே இந்த நடைமுறை.

தனியார்மயக் கொள்கையை அமல்படுத்துவது சட்டப்படியே நடக்கிறது. தண்ணீர் பாதுகாப்பு சட்டம் அதன் மூலம் மக்களுக்குதான் அதிக கட்டுபாடுகள். பன்னாட்டு கம்பனிகளுக்கு இல்லை. அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம். இதன் படி 25% மாணவர்களுக்குத்தான் இலவசக்கல்வி கிடைக்கும். அதற்குண்டான பணத்தை மக்கள் பணத்திலிருந்து தனியார் பள்ளிகளுக்கு அரசு கொடுக்கும்.

உணவு பாது காப்பு சட்டம் அதன் படி ஏழைகளுக்கு மட்டும்தான் ஆனால் ஏழை யார் என்பதை மத்திய அரசு முடிவு செய்யும். இதற்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற்று போராடுவதை தவிர வேறு வழியில்லை.

பெற்றோர்களே ஆங்கிலத்தில் படித்த லட்சக்கணக்கான பொறியியல் மாணவர்கள் வேலையில்லாமல் வீதியில் இருக்கிறார்கள்.  வேலைவாய்யப்பு உருவாவது அரசின் கொள்கையால்தான். குறைந்த கூலிக்கு இந்திய ஐ.டி மாணவர்களுக்கு வேலை வாய்ப்புதானே தவிர அமெரிக்க மாணவர்களை விட ஆங்கில அறிவு நமக்கு ஏற்பட்டு விட்டது என்று அர்த்தம் அல்ல. தாய்மொழிக் கல்விதான் சுய சிந்தனையை, தலைவர்களை உருவாக்குகிறது. நகராட்சி சொத்துவரியில் 2% நகராட்சி பள்ளிக்காக ஒதுக்கவேண்டும். இது போல் நாம் கண்காணித்து அரசுப் பள்ளிகளை பாதுகாக்க வேண்டும்.

குழந்தைகளை இயல்பாக வளரவிடுங்கள். ஆற்றல் மிகுந்தவராக, திறமை வாய்ந்தவராக வளரவிடுங்கள். நீங்கள் நினைப்பதை திணிக்காதீர்கள். கொஞ்சம் படியுங்கள். அதைபற்றி சிந்தனை செய்யுங்கள். அதுதான் அறிவு.

நமது போராட்டத்தில் நியாயம் இருப்பதால், உண்மை இருப்பதால், கல்வித்துறையும், காவல்துறையும் நமக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் சம்பளம் அரசு கொடுக்கிறது. பள்ளிக்கட்டிடம் தனியாருக்கு சொந்தமானது. அது போல் தனியார் பள்ளி ஆசரியர்களை அரசு ஊழியர்களாக மாற்றி அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசே ஏற்க வேண்டும். கட்டணக் கொள்ளைக்கு நிரந்தர தீர்வு அப்போதுதான் ஏற்படும். அதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம்.

நன்றியுரையாற்றிய செல்வகுமார், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தில் நாம் இணைந்து ஓர் அணியாக போராடுவதை தவிர வேறு ஒன்றும் வழி இல்லை. பயந்தால் நாம் எதையும் சாதிக்க முடியாது என பேசியதுடன் கூட்டம் இரவு 9-30 மணிக்கு நிறைவடைந்தது.

திரளான பொது மக்கள் ஆங்காங்கே நின்று கூட்டத்தை கவனித்தனர். இரண்டு நாட்கள் முன்பு இதே இடத்தில் நடந்த சினிமா பாட்டு டான்ஸ் போட்டு நடத்திய அ.தி.மு.க கூட்டத்தில் ஐம்பது பேர் கூட இல்லை. பெற்றோர் சங்க கூட்டத்திற்கு இவ்வளவு கூட்டமா அதுவும் யாரும் கடைசி வரையில் கலையாமல் என பொது மக்கள் ஆச்சரியபட்டனர். நம்பிக்கையும் அடைந்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

  1. வாழ்த்துக்கள்! போராட்டத்தை விரிவு படுத்துவோம், கோரிக்கையை வென்றெடுப்போம்

  2. ஆட்டோ கட்டணத்தை விளம்பரப்படுத்தி ப்ளக்ஸ், நோட்டீஸ் என பிரச்சாரம் செய்யும் அரசு நாளைய சமூகத்திற்கு அடிப்படையான கல்வியை தனியாரிடம் கொடுத்துவிட்டு அதற்கான கட்டணம் என்ற பெயரில் அங்கீகாரம் கொடுப்பதும், அதை கூட வாங்க மறுக்கும் தனியார் பள்ளிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்க மறுப்பதை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்போது தான் அரசின் தனியார்மய கொள்கையினை புரிந்து கொள்ள முடியும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க