Tuesday, April 7, 2020
முகப்பு உலகம் ஆசியா வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்

வங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர் போராட்டம்

-

ங்கதேச ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் தங்களுக்கு சம்பள உயர்வு வேண்டும் எனக் கோரி போராட்டம் ஆரம்பித்திருக்கிறார்கள்.

முழக்கமிடும் தொழிலாளர்கள்
போர்க்குணமிக்க தொழிலாளர் போராட்டம்

போராட்டத்தின் நான்காவது நாளில் செப்டம்பர் 21, 2013 அன்று வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தார்கள். அதில் சுமார் 50,000 தொழிலாளர்கள் கலந்து கொண்டு தங்கள் வர்க்க ஒற்றுமையை பறை சாற்றினார்கள். வங்கதேச தலைநகர் டாக்காவை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் மூடப்பட்டிருந்தன. டாக்காவையும் வடக்கு மாவட்டங்களையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 10,000-த்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களால் மறிக்கப்பட்டு தடுப்புகள் போடப்பட்டது.

போலீஸ், தொழிலாளர்கள் மீது இரப்பர் குண்டுகளையும், கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசித் தாக்கியது. இதில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காயமுற்றனர்.

தொழிலாளர்களுக்கு தற்போது மாதத்துக்கு $38 (இந்திய ரூபாய் சுமார் 2,500) கூலி கொடுக்கப்படுகிறது. வங்கதேச அரசு முதலாளிகளின் சார்பில் 20% ஊதிய உயர்வு தருவதாக அறிவித்திருக்கிறது. ஆனால் இது மனிதத் தன்மையற்றது தங்களை அவமதிப்பது எனக் கூறும் தொழிலாளர்கள் மாதத்திற்கு $103 (இந்திய ரூபாய் சுமார் 6,500) ஊதியம் வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடுகிறார்கள்.

வங்க தேச தொழிலாளர்கள் - பொதுக்கூட்டம்
பொதுக்கூட்டத்தில் கூடியிருக்கும் தொழிலாளர்கள்.

முதலாளிகள் தங்கள் மேற்கத்திய வாடிக்கையாளர்கள் மிக மலிவான விலையில் ஆயத்த  ஆடைகளை விரும்புவதாகவும் தொழிலாளர்கள் கோரும் கூலியை  கொடுத்தால தங்களுக்கு மேற்கத்திய வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்கள்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அனைத்து ஆடைத் தொழிலாளர் கூட்டமைப்பின் நஸ்மா அக்தர் “தொழிலாளர்கள் பசியோடு இருக்கிறார்கள். அந்நிய பிராண்டுகள் தான் இதற்கு பொறுப்பு. இங்கு மலிவான விலை கிடைக்கிறது என்று தான் அவர்கள் இங்கு வருகிறார்கள். அவர்கள் மலிவான விலையை விரும்புகிறார்கள், ஆனால் நியாயமான வியாபாரம் குறித்து பேசி திரிகிறார்கள். நாங்கள் தாங்க முடியாத எல்லையை அடைந்து விட்டோம், எங்கள் குரலை கடுமையாக உயர்த்துவதை தவிர வேறு வழியில்லை” என்கிறார். “எங்கள் கோரிக்கைகளை அடைவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறோம். நாங்கள் பரிதாபத்துக்குரிய பொருட்கள் அல்ல, பொருளாதாரமே எங்கள் உழைப்பில்தான் இயங்குகிறது” எனகிறார் நஸ்மா.

முழக்கமிடும் தொழிலாளர்கள்
கூலி உயர்வு கேட்டு முழக்கமிடும் தொழிலாளர்கள்.

ஆயத்த ஆடைகள் உற்பத்தியில் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது வங்கதேசம். 40 லட்சம் தொழிலாளர்கள் வேலை செய்யும் ஆயத்த ஆடை தொழில் நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 77 சதவீதமாகவும், ஆண்டுக்கு $24 பில்லியன் வருவாயை ஈட்டுவதாகவும் இருக்கிறது. வால்மார்ட் (Walmart), ப்ரிமார்க் (Primark), மதலன் (Matalan), சீயர்ஸ் (Sears), கேப் (Gap), டாமி கில்பிகர் (Tommy Hilfiger), பெனட்டன் (Benetton) உள்ளிட்ட பிரபல அமெரிக்க, ஐரோப்பிய பிராண்டுகள் பலவற்றின் ஆடைகள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே செல்லும் இந்த நிறுவனங்களின் இலாப இலக்கு உற்பத்திச் செலவை குறைக்குமாறு கோருகின்றது. இது மிகக் குறைந்த கூலி, அதிக நேர வேலை, பாதுகாப்பில்லாத பணிச் சூழல், தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் என தொழிலாளர்கள் மீது எதிரொலிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்களின் இலாபத்திற்காக தொழிலாளர்கள் கொத்தடிமைகளை விட மோசமாக சுரண்டப்படுகிறார்கள்.

தொழிற்சாலை இடிந்து விழுந்து நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் சாவு, தீ விபத்து ஏற்பட்டு  தொழிலாளர்கள் சாவு என்பது வங்கதேசத்தில் பழக்கப்பட்ட செய்தி ஆகி விட்ட்து.

ஏழை நாடுகளை சுரண்டி பிழைக்கும் இந்த பன்னாட்டு நிறுவனங்களையும் அவர்களுக்கு தரகு வேலை செய்து பிழைக்கும் வங்கதேச முதலாளிகளையும் எதிர்த்துப் போராடும் வங்கதேச தொழிலாளர்களுக்கு ஆதரவு கொடுப்பது நமது கடமையாகும்.

மேலும் படிக்க

சந்தா செலுத்துங்கள்

இணையத்தில் உழைக்கும் மக்களின் குரலாக பதினோரு ஆண்டுகளாக போராடும் வினவுடன் கை கோருங்கள். ஆதரியுங்கள்

  1. பையா வகையறாக்கள் இது போன்ற கட்டுரைகளின் பக்கம் எட்டிப் பார்க்காத மர்மம் என்னவோ?

  2. பையா வகையறாக்கள் இது போன்ற கட்டுரைகளின் பக்கமாகக்கூட வராததின் மர்மம் என்னவோ?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க