“புரட்சிகரமான திட்டம் ஒண்ணு இருக்குங்க. நாம வாங்குற எந்தப் பொருளா இருந்தாலும், அது விநியோகஸ்தர், சில்லறை விற்பனையாளர் இப்படி விற்பனை சங்கிலியில பல கைகளைத் தாண்டி தானுங்க வருது. அதுனால பொருளோட விலை அடக்க விலைய விட ரொம்ப ஏறிடுதுங்க. நான் இப்ப சொல்லப் போற திட்டத்தில, பயன்படுத்தக்கூடிய பொருளை நேரடியாக நிறுவனத்திடமிருந்தே வாங்குறீங்க. அதனால் ’தரமான’ பொருள் மலிவா கிடைக்குது. அடுத்ததா அந்தப் பொருளை உங்க நண்பர்களிடம் அறிமுகப்படுத்தி அவர்களை வாங்க சொல்றீங்க. அவங்க வாங்குனா உங்களுக்கு அதுல ஒரு கமிசன் கிடைக்கும். உங்களுக்கு கீழே இருக்கிற விற்பனையாளர்கள் செய்யுற வியாபாரத்துல உங்களுக்கும் ஒரு கமிசன் வரும்.
உங்களுக்கு கீழே இருக்கிறவங்க, அவங்களுக்கு கீழே இப்படி அந்த வியாபார வலைப்பின்னல் வளர்ந்துச்சுன்னா சில்வர், கோல்டு, பிளாட்டினம் அப்புறம் ‘டைமண்ட்’ இப்படி உங்க தரமும் ஏறிக்கிட்டே போகும். எனக்கு தெரிஞ்ச டைமண்ட் தர உறுப்பினர் ஒருத்தர் மாசத்துக்கு ஒன்றரை லட்சம் சம்பாதிக்கிறார். இந்தியாவில் மட்டும் 5.5 லட்சம் பேர் இந்த நிறுவனத்தின் வணிகவலையில் இருக்காங்க. நான் சொல்ற நிறுவனமான ஆம்வே வருசத்துக்கு 11 பில்லியன் டாலர் அளவு வியாபாரம் செய்ற கம்பெனி. உலகம் முழுதும் 80 நாடுகள்ல இருக்கு.”
நம்மில் பலருக்கும் இப்படிப்பட்ட நேரடி விற்பனை – படிநிலை சந்தைப்படுத்துதல் (MLM அல்லது Multilevel Marketing) முயற்சியை எதிர்கொண்ட அனுபவங்கள் கிடைத்திருக்கும். இந்த நிறுவனங்களில் உலகிலேயே மிகப்பெரியதுதான் ஆம்வே.
2002-ம் ஆண்டு ஆம்வேயில் முதலீடு செய்து பணத்தை இழந்துள்ளதாகவும், அந்நிறுவனம் விலை குறைவான பொருளை மிக அதிக விலைக்கு விற்பனை செய்வதாகவும் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆம்வே இந்தியாவின் தலைவர் மற்றும் தலைமை செயல்பாட்டு அலுவலருமான அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் எஸ். பிங்க்னி என்பவரும், சஞ்சய் மல்ஹோத்ரா, அன்ஷூ புத்ராஜா ஆகிய இயக்குநர்களும் கடந்த மே மாதம் 27-ம் தேதி கேரள போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
உண்மையில் ஆம்வேயின் எம்.எல்.எம் திட்டங்கள் சட்டபூர்வமாக்கப்பட்ட, பொருள் விற்பனை சார்ந்த பிரமிடு மோசடித் திட்டங்களே! இத்தகைய விற்பனைத் திட்டத்தின் அடிப்படையில் மக்களை ஏமாற்றி வரும் ஆம்வே மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது தான் கேள்விக்குரியது. மேலும் தற்போது பிணையில் வந்துள்ள ஆம்வே நிர்வாகிகள் இந்த வழக்கை விரைவிலேயே ஒன்றுமில்லாமல் நீர்த்துப் போகச் செய்வதும் உறுதி.
1920களில் சார்லசு பொன்சி என்ற அமெரிக்க வாழ் இத்தாலியர் குறுகிய காலத்தில் பணக்காரராக மாறலாம் என்று மக்களுக்கு ஆசை காட்டி, ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தினார். முதலீடு செய்த 45 நாட்களுக்குள் 50% லாபமும், 90 நாட்களுக்குள் 100% லாபமும் பெற்றுத் தருவதாகக் கூறி மக்களிடம் பணம் திரட்டினார். 1920களிலேயே ஒரே வாரத்தில் அவர் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை திரட்டினார். அடுத்தடுத்த முதலீட்டாளர்களின் பணத்தைக்கொண்டு ஆரம்ப முதலீட்டாளர்களுக்கு வட்டி கொடுத்தார். இது தான் பொன்சி திட்டம் என்று அவர் பெயரால் செயல்படுத்தப்படும் பிரமிடு சந்தைப்படுத்தல் முறை.
ஆம்வே போன்ற பல் அடுக்கு நிறுவனங்களும் இது போன்று கீழ் படிநிலையில் இருப்பவர்களின் பணத்தை மேல் நிலை உறுப்பினர்களுக்கு சிறுபகுதி கொடுத்து பெரும் பகுதியை தாமே கொள்ளை அடிக்கின்றன. அடுக்குகளிலிருப்பவர்களுக்கும், நிறுவனத்திற்கும் லாபம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றால் பொருளின் விலை, அதன் உற்பத்திச் செலவை விட பல மடங்கு அதிகமாகி விடும். பெரும்பாலான பல் அடுக்கு விற்பனை நிறுவனங்களின் பொருட்கள் உள்ளூர் சந்தையில் கிடைக்கும் பொருட்களை விட அதிக விலையுடன் இருப்பதால் அவற்றை விநியோகப்பாளரிடம் மட்டுமே விற்க முடியும். ஆம்வேயின் 100 மிலி கிளிஸ்டர் பற்பசையின் விலை ரூ. 135, சந்தையில் விற்கப்படும் சாதாரண பற்பசையை விட மூன்று மடங்கு விலை அதிகம். 200 மிலி தேங்காய் எண்ணெயின் விலை ரூ.110, 200 கிராம் முகப்பவுடரின் விலையோ ரூ.128.
ஆம்வேயின் சொந்தக் கணக்கீட்டின் படியே மொத்தமுள்ள விநியோகிப்பாளர்களில் 40% பேர் மட்டுமே செயல்பாட்டில் இருக்கிறார்கள். மற்றவர்கள் ஆரம்ப கட்டத்தோடு தமது பணத்தை இழந்து விலகி விடுகிறார்கள். கீழ் படி நிலையிலிருக்கும் ஒரு உறுப்பினர் சில காலம் இந்த பொருட்களின் வர்த்தகத்தை செய்து வருமானம் ஈட்ட முயற்சிப்பார். தொடர்ந்து அவரால் வெற்றி பெற முடிவதில்லை. நிறுவனத்தின் சுய ஊக்குவிப்பு வகுப்புகளை, ஆலோசனையை, உதவியை நாடினால் அவர் சரியாக ஊக்கமுடன் செயலாற்றவில்லை என்பதே அங்கு பதிலாக கிடைக்கும். அவர் ஆயாசமும், சலிப்பும் அடைந்து திட்டத்தை விட்டு வெளியேறி விடுவார். கீழ் படி நிலையில் உள்ள மந்தைகள் வெளியேற, அந்த நிலைக்கு புதிய மந்தைகள் சேர்க்கப்படுவார்கள்.
செயல்பாட்டில் இருப்பவர்களில் 2% மட்டுமே நேரடி விநியோகிப்பாளர்களுக்கான ஊக்கத்தொகை பெறும் மட்டத்திலும், அந்த 2%-ல் 1.7% பேர் (அதாவது மொத்தத்தில் 0.034%) மட்டுமே ’டைமண்ட்’ தரம் ஆக வாய்ப்புள்ளதாகவும் ஒரு கள ஆய்வு தெரிவிக்கிறது. உலகெங்கிலும் பல் அடுக்கு விற்பனைத் திட்டங்களில் பங்கு பெறுபவர்களில் 99.7% பேர் பெரும்பாலும் இழப்பையே சந்தித்திக்கின்றனர். ஆம்வே விநியோகிப்பாளரின் வெற்றி வாய்ப்பானது காசினோ கிளப் – சூதாட்ட ஒற்றைச் சுழல் சக்கரங்களின் வெற்றி வாய்ப்பை விட 285 மடங்கு குறைவு. கீழ் நிலைகளிலிருப்பவர்கள் தமது சொந்தப் பயன்பாட்டிற்கு பொருட்களை வாங்கினால் அதற்கும் கமிசன் மேல் நிலையிருப்பவருக்கு போகும்.
இத்தகைய நிறுவனங்களையும் சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் என்பது 1990-களுக்குப் பிறகு செயல்படுத்தப்பட்ட புதிய பொருளாதார கொள்கையின் அடிநாதம். 1995-ல் ஆம்வே இந்திய நிறுவனங்கள் சட்டத்தின்படி உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தும் நிறுவனமாக தன்னைப் பதிவு செய்து கொண்டது. 1998-ல் இந்தியாவில் ரூ. 200 கோடிக்கும் மேல் முதலீடு செய்திருக்கிறது ஆம்வே. அதில் வெறும் ரூ. 22 கோடி மட்டுமே நேரடி அந்நிய முதலீடாகும்; மீதமிருக்கும் தொகை இந்திய நிறுவனங்களில் ஆம்வே செய்திருக்கும் முதலீடு. இந்த வகையில் ஆம்வே இந்திய தரகு முதலாளிகளுடன் கள்ளக்கூட்டு வைத்திருப்பதுடன், இந்திய முதலாளிகள் சங்கமான FICCI மற்றும் CII-ல் உறுப்பினராகவும் உள்ளது. இவ்வாறாக, இந்திய அரசு மற்றும் முதலாளிகள் கூட்டமைப்புகள் ஆம்வேயை நம்பகமான, மதிப்பு மிக்க நிறுவனமாக அங்கீகரித்துள்ளனர். உலகெங்கிலும் ஆம்வே உள்ளிட்ட எம்.எல்.எம் நிறுவனங்களின் கூட்டமைப்பு அரசு அமைப்புகளில் புகுந்து காக்காய் பிடித்து சட்டங்களை வளைத்துக் கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்தியாவிலும் இந்திய நேரடி விற்பனை நிறுவனங்களின் கூட்டமைப்பு (IDSA) உருவாக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் நடந்த கைதுகளைத் தொடர்ந்து நிறுவன விவகாரங்களுக்கான மத்திய அமைச்சர் சச்சின் பைலட், “இத்தகைய நிகழ்வுகள் நமது நாடு முதலீட்டாளர்களுக்கு சாதகமானது என்ற பிம்பத்தை சீர்குலைக்கும். பொன்சி திட்டங்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பெருமை வாய்ந்த, சட்டத்தை நேர்மையாக பின்பற்றும் நிறுவனங்களுக்கு பாதகமான சூழலை உருவாக்கக் கூடாது” என்று ஆம்வேக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டார்.
இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள பல்வேறு முதலாளித்துவ நாடுகளின் சட்டங்கள் ஆம்வேக்கு புனிதக் குளியல் நடத்தி அதன் நடவடிக்கைகளை அனுமதித்துள்ளன. 1959-ல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட ஆம்வே நிறுவனத்தின் 2012-ம் ஆண்டு விற்பனை வருவாய் மட்டும் சுமார் 11.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாயில் சுமார் 67,000 கோடி).
1989-ல் இருந்து 2012 வரை நடந்த அமெரிக்க செனட், காங்கிரசு மற்றும் அதிபர் தேர்தல்களில் மொத்தம் 97 லட்சம் டாலர்களை குடியரசுக் கட்சியின் வேட்பாளர்களுக்காக செலவழித்துள்ளதன் மூலம் ஆம்வே அமெரிக்க செனட், காங்கிரசு மற்றும் பிற அமைப்புகளில் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளன. அமெரிக்க முதலாளிகள் சங்கமான சேம்பர் ஆஃப் காமர்சிலும் ஆம்வே உறுப்பினராக உள்ளது.
1970-களில் அமெரிக்காவின் மத்திய வர்த்தக ஆணையத்தில் ஆம்வே நிறுவனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் ஆம்வே பிரமிட்-பொன்சி மோசடி நிறுவனம் அல்ல என்று ஆம்வேக்கு ஆதரவாக அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் தீர்ப்பளித்தது. 1999-ல் அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையம் உலக நாணய நிதியத்துக்கு அளித்த அறிக்கையில் பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சட்ட விரோத பிரமிட் திட்டங்கள் அல்ல என்று கூறியுள்ளது. வழமையான முதலாளித்துவ முறைகள் காலாவதியாகி வரும் நிலையில் இத்தகைய புதிய மோசடிகள் மக்களை ஏய்ப்பதற்கு பயன்படுவதை உணர்ந்து கொண்ட பன்னாட்டு நிறுவனங்கள் இவற்றை சட்டபூர்வமாக மாற்றுவதையும் செய்திருக்கின்றன.
தாராளமய கொள்கைகளால் உணவுப் பொருட்கள் முதலான அடிப்படைத் தேவைகளை மக்களுக்கு அளித்து வந்த பொது விநியோக திட்டம் படிப்படியாக கைவிடப்பட்டு, சந்தை விலை ஏற்றங்களின் சுழலில் மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். கல்வி, மருத்துவம் போன்ற துறைகள் தனியார் மயமாக்கப்பட்டு அவற்றுக்கான செலவுகள் பெருமளவு உயர்ந்துள்ளன. நடுத்தர வர்க்கத்தினருக்கான ஓய்வூதியத் திட்டங்கள் கைவிடப்பட்டு, பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் நிதியங்களில் பணத்தை சேமிக்கும்படி அவர்கள் தூண்டப்படுகின்றனர். வருங்கால வைப்பு நிதி, ஓய்வூதியம் போன்ற எதிர்கால சேமிப்புகளும் இன்று கேள்விக்குறியாகியுள்ளன.
இந்த நிலையில் நடுத்தர வர்க்கம் விரைவிலேயே பொருள் ஈட்டி, நிதிச் சுதந்திரத்தையும், செழிப்பான வாழ்க்கையையும் அமைத்துக் கொள்வதை தமது வாழ்க்கை லட்சியமாகக் கொண்டுள்ளது. இவர்களுக்கு ”செழிப்பான வாழ்க்கையை” அமைத்துக் கொடுப்பதாக ஆசை காட்டி வாக்களித்து இந்த வகை பல் அடுக்கு விற்பனை நிறுவனங்கள் கடை விரித்திருக்கின்றன.
ஒரு பொருளை சந்தைப்படுத்த, வாடிக்கையாளரை ஈர்க்க அந்தப் பொருளின் நன்மைகள், வாங்குவதால் வாடிக்கையாளருக்கு ஏற்படும் அனுகூலங்கள், குறைவான விலை போன்றவற்றைக் கொண்டு வாங்குதலை நியாயப்படுத்த வேண்டும். அனைத்து பல் அடுக்கு விற்பனை நிறுவனங்களும் பொருளின் அனுகூலங்கள், விலை போன்றவற்றை விட பொருட்களை வாங்குவதன் மூலம் திட்டத்தில் உறுப்பினராகலாம் என்பதையும், ஒரு உறுப்பினர் தனக்கு கீழ் உறுப்பினர்களை சேர்த்து ஒரு குறிப்பிட்ட படிநிலைக்கு உயரும் போது உழைக்காமலேயே வருமானத்தைப் பெற முடியும் என்பதையும் சொல்லியே மக்களைத் தன் பக்கம் ஈர்க்கின்றன. இங்கே பொருளை விட விற்பனையே ஆசை காட்டி அவர்களை விட்டில் பூச்சிகளாக ஈர்க்கிறது.
புது உறுப்பினர்களை ஈர்க்க மேல் நிலையிலிருக்கும் உறுப்பினர்களின் வருமானம், சாதனைகள் பட்டியலிடப்படும். உதாரணமாக ‘பஞ்சாபின் ஹர்பஜன் சிங் தம்பதியர் ஒன்பதே மாதங்களில் டைமண்ட் படிநிலையை அடைந்து ஆண்டுக்கு ரூபாய் ஒரு கோடிக்கும் மேல் சம்பாதிக்கிறார்கள்‘ என்று கதைகளைச் சொல்வார்கள்.
இந்த பல் அடுக்கு விற்பனை திட்டங்கள் சீட்டுக் கம்பெனி, ஈமு கோழி வளர்ப்பு, தேக்கு மரப் பண்ணைத் திட்டங்கள் போல மக்களை ஏமாற்றுவதோடு மட்டும் நில்லாமல் ஒரு படி மேலே போய் தமது உறுப்பினர்கள் மற்றவர்களை ஏமாற்றவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதைச் செய்வதற்கான சிறப்புப் பயிற்சிகளை அளிக்கின்றன. அடுத்த சுற்றில் ஏமாறுவதற்கு புதியவர்களை ஈர்க்க ஒவ்வொரு உறுப்பினருக்கும் தமது நட்பு, உறவினர் வட்டத்தில் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தவும், அவர்களது பலவீனத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவும் பயிற்சியளிக்கின்றன. பாதிக்கப்பட்ட பலரும் திட்டத்தின் கவர்ச்சியை விட நட்பு, உறவு அளித்த நம்பிக்கை தான் இத்திட்டத்தில் சேர அடிப்படையான காரணமாக இருப்பதாகக் கூறுகிறார்கள்.
அதிகமான கமிசன் பெற வேண்டுமானால் அதிகமான உறுப்பினர்களை தனக்கு கீழ் சேர்க்க வேண்டும். இதனால் ஒவ்வொரு உறுப்பினரும் தனக்கு கீழே உறுப்பினர் படிநிலைகளைப் பெருக்குவதற்கு முக்கியத்துவமளித்தால் மட்டும் போதுமெனவும், தமக்குக் கீழுள்ளவர்கள் பொருட்களை கட்டாயம் விற்பார்கள் எனவும் நம்புகின்றனர்.
சந்தை வரம்பற்றதாகவும்,தேக்க நிலையை எட்டாமலும் நீடிக்குமா? உதாரணத்திற்கு 1000 பேர் உள்ள சந்தையில் எத்தனை விநியோகிப்பாளர்கள் தேவைப்படுவார்கள்? ஒருவர் ஆம்வேயில் உறுப்பினராகி அவருக்கு கீழ் 4 பேர், அவர்கள் ஒவ்வொருவருக்கும் கீழ் மேலும் 4 பேர் சேர்ந்து என ஒரு 4 படிநிலைகளைத் தாண்டினாலே மொத்தம் 341 உறுப்பினர்கள் என்றாகிறது. 1000 பேருக்கு 340 விநியோகிப்பாளர்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் சராசரியாக 3 வாடிக்கையாளரே கிடைப்பார்கள். இதன் மூலம் நிறுவனம் நிர்ணயிக்கும் கமிசன் பெறத் தகுதியான விற்பனையை எவரும் எட்டவும் முடியாது, புதிதாக தங்களுக்கு கீழ் உறுப்பினர்களை சேர்க்கவும் முடியாது. இதன்படி ஒருவர் தனக்குக் கீழ் குறைந்தது நான்கு பேர்களைச் சேர்த்தாலே, பதினேழாவது படிநிலை வரும் போது இந்த திட்டத்தில் இருக்கும் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கை 1,700 கோடிகளைத் தாண்டி விடும். இன்றைய உலக மக்கள் தொகை சுமார் 700 கோடிகள் தான்.
உறுப்பினர்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதாகவும், பயிற்சியளிப்பதாகவும் கூறி, மத வழிபாட்டு – மூளைச் சலவை பாணியிலான சுய ஊக்குவிப்பு வகுப்புகளை நடத்துகின்றன இந்நிறுவனங்கள். பயிற்சியில் நிறுவனத்தின் உறுப்பினர்களை “நாம்” என்றும், உறுப்பினர் அல்லதோரை “அவர்கள் – தன்னம்பிக்கையற்ற சந்தேகப் பேர்வழிகள்” என்றும் பார்க்க அடிக்கடி அறிவுறுத்தப்படும். பயிற்சியில் கேள்விகள் கேட்க தொடர்ந்து உற்சாகமூட்டப்படும். அதன்படி பகுத்தறிவுடன் கேள்விகளைக் கேட்பவர் தன்னம்பிக்கையற்றவராகவும், சந்தேகமும், எதிர்மறை சிந்தனையுடையவராகவும் முத்திரை குத்தப்படுவார்.
ஆம்வே நிறுவனர்களால் அமெரிக்காவில் அமெரிக்க பாணி சங்கம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு அதுவே பின்னர் ’ஆம்வே-யாக’ பெயர் மாற்றம் செய்யப்பட்டது. மோசடி, பித்தலாட்டம், அரசு அமைப்புகளை வளைத்துப் போடுதல் இவை மட்டுமின்றி, மக்களை உழைப்பற்ற வருமானத்திற்காக ஊழல் படுத்துதல், மற்றவர்களை ஏமாற்றக் கற்றுக்கொடுத்தல் போன்ற இவர்களது செயல்களால் ”அமெரிக்கன் வே” என்பது இந்த நிறுவனத்துக்கு சந்தேகமின்றி பொருத்தமான பெயர் தான்.
– மார்ட்டின்
_______________________________________________
புதிய கலாச்சாரம், ஆகஸ்டு 2013
_______________________________________________
//மத வழிபாட்டு – மூளைச் சலவை பாணியிலான//
போச்சா.. சொல்லிட்டீங்களா.. இனிமே இந்து முஸ்லீம் கிறிஸ்துவம்னு வரிசை கட்டி வந்து ஒப்பாரி வைப்பாங்க பாருங்க!!! பின்னூட்டப் பெட்டி நிரம்பி வழியும். கட்டுரை தொடர்பான விபரங்களைத் தேடித் தேடித்தான் சேகரிக்கணும்.
சாதிக்க முடியாதவர்கலின் போதனை இது. ஆம்வே பட்ரி போதிக்கும் போது புரியாது. செய்யும் தொழிலில் பதிப்பு வரும் போதுதான் புரியும்.
சோம்பேறிகலை முதலாளிகளாவது ஆம்வே அல்ல. வருங்காலத்தின் மிதும் குடும்பதின் மிதும் அக்கரை உல்லவர்கலை கோடிசுவரன் ஆக்குவது ஆம்வே.
Multilevel marketing is proven ‘IDIOTIC’ by statistical theory. Why, neither the covernment nor the judicial system stops this non-sense. Are they mad enough to understand the concept. What the hell is going on here (as well as whole world). The foolishness of MLM is also applicable to stock market to some extend, where the stock prices are goes beyond the true value of the company.
I wrote against amway in our graffiti twice and our neighbour -dealer of Amway left that dealing due to my aggressive preach against it.
ஒரே ஒரு கேள்வி இந்த ஆம்வே பொருளுக்கு வரி விதிப்பு என்பது எங்கு கட்டபடுகின்றது ? நம்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பொருளுக்கு உற்ப்பத்தி வரி மற்றும் விற்பனை வரி மூலம் கிடைக்கும் வருவாய் நமேக்கே திரும்ம வரும், பல சலுகை மற்றும் உழியர்கள் சம்பளமாக ஆனால் இந்த பொருளுக்கு எங்கே யாரால் கட்டபடுகின்றாது.
துரதிர்ஷ்டமாக, இந்த அமைப்பு நமது காம்ரேடுகளையும் விலைக்கு வாங்கிவிட்டது போலும்! இல்லையென்றால் இதுபற்றி பாராளுமன்றத்தில் விவாதம் எழுந்திருக்காதா? அம்பானியையும் மாறனையும் எதிர்ப்பவர்கள், நடுத்தர மக்களை அச்சுறுத்தும் ஆம்வே அமைப்பைப் பற்றி மௌனம் சாதிப்பது ஏன்?
பாரளுமன்றத்தில் விவாதமா?
கோழிமுட்டையில் மேல் உள்ள மயிறை பிடுங்கலாமா/வேண்டாமா என்று
அடித்துகொண்டிருக்கும்போது இதுக்கெல்லாம் நேரம் ஏது தம்பி?
ஆம்வேயை பற்றி வரும் குற்றச்சாட்டுகளை வைத்து எல்லா நெட்வொர்க் கம்பெனிகளும் இப்படியே என்றும் சொல்லி விட முடியாதல்லவா. இதுவே ஒரு நிறுவனத்தில் நீங்கள் கொடுக்கும் பணத்துக்கு பொருள் கிடைக்கிறது. உங்களால் சந்தைப்படுத்த முடிந்தால் வெற்றி இல்லையெனில் வெற்றியில்லை. இதில் எங்கே தோல்வி
Read the article multiple times to understand
நிறுவனத்தில் சேர்ந்தாலே தோல்வி தான்..
http://kricons.blogspot.in/2013/04/mlm.html
பார்த்து சொல்லுங்க
ஆம்வே பற்பசை என்ன விலை?
இந்தியாவில் அதை தயாரிக்கும் நிறுவனத்துக்கு என்ன விலை கிடைக்கிறது?
ரூபாய் 15க்கு வாங்கி அதை 100 க்கும் மேலே விற்கும்…
ஆகா,மொல்லமாரித்தனத்துக்கு பெயர்,வியாபார உத்தி!
அருமையான பதிவு, அண்ணா இங்கு இலங்கையிலும் இந்த மோசடி சத்தமில்லாமல் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வருத்தம் என்னவெனில் இதில் அதிகம் சிக்குபவர்கள் எமக்கு பாடம் கற்றுத்தரும் ஆசிரியர்களே! சோலார் தட்டு,மின்சூள் மோசடிகள் பிரபலம், நாம் எவ்வளவு படித்து படித்து சொன்னாலும் சில பலியாடுகள் கேட்பதில்லை, என்னால் முடிந்தது என்னை தற்காத்து கொள்வதே , நன்றி
எங்கையா விடுறானுவோ…………? கடன் கொடுத்தவனை கண்டு ஒளிவதைவிட இந்த ஆம்வே ஆளுகளை பார்த்துதான் அதிகமாக ஓடவேண்டி இருக்கிறது.
பெருமுதலீட்டாளர்கள்=மனிதர்களை உறிஞ்சி கொழுக்கும்___________. அவர்களின் எச்சங்களைத் நுகர்ந்து வாழும் ஆட்சியாளர்கள், மக்கள் நலன் விடுத்து அவர்கள் நலன் காக்க அவர்களுடன் கூட்டு வைக்கும் கன்னக்கோல் திருடர்கள்.
பெருமுதலீட்டளர்கள்= கொள்ளையர்கள். நமது நாட்டில் அவர்கள் முதலீடு செய்ய சாதகமான சூழல் குலைந்து விட்டால் யாருடை நலன்கள் பாதிக்கப் படும்? நிச்சயம் கொள்ளையர்களுடையாதுதான். ஏனென்றால் அவர்கள் முதலீடு செய்யாமல் இருத்திக்கொண்டால் மூலதனம் பெருகாது. அந்த மூலதனம் உலக சந்தையில் பிணந்தின்னிக் கழுகுகளாக சுற்றக் கிளம்பி விடும்.
வணக்கம் நான் திருநெல்வேலி மாவட்டம் வல்லம் என்ற ஊரில் இருந்து எலுதுகிறேன் மக்களே ஆம்வே
தொந்தரவு தாங்க முடியாது. அவர்கள் உங்களிடம் பேச வந்தாலே ஓடி விடுங்கள்
ஒரு பொருளை நாம் காசு கொடுத்து வாங்கிய பிறகு அதை நாம் பயன் படுத்துவதோ அல்லது வேறு ஒருவருக்கு அதை லாபத்துக்கு விற்பதோ அதை விலை கொடுத்து வாங்கிய ஒருவருக்கு உரிமை உண்டு. அனால் AMWAY நிறுவனம் மட்டும் அதையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துள்ளது . அதை எதிர்த்து யாராவது வழக்கு தொடுக்க வேண்டும்?