Sunday, March 7, 2021
முகப்பு மறுகாலனியாக்கம் தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம் வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !

வேலைபறிப்பு, சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதம் !

-

முதலாளித்துவம் கொல்லும் ! கம்யூனிசமே வெல்லும் !!

வேலைபறிப்பு – தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!’

தமிழகம் – புதுச்சேரி தழுவிய பிரச்சார இயக்கம்
அக்டோபர் – நவம்பர் 2013

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி!

ன்பார்ந்த தொழிலாளர்களே,

capitalist-terror-3ஓசூர் குளோபல் ஃபார்மா டெக் என்கிற மருந்துக் கம்பெனியில் வேலை செய்து வந்த எல்லேஷ் குமார் என்கிற கண் பார்வையற்ற தொழிலாளி சமீபத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். 18 ஆண்டுகளாக விசுவாசமாக வேலை செய்து வந்த அவரை, நிர்வாகம் ஈவிரக்கமில்லாமல் வேலையை விட்டே விரட்டியது. இதனால் மனமுடைந்து தன்னையே மாய்த்துக் கொண்டார், அவர் தன்னுடைய மரண வாக்கு மூலத்தை செல்போனில் பதிவு செய்து வைத்ததால் இந்தக் கொடூரம் வெளி உலகுக்குத் தெரிய வந்தது. இல்லையெனில், முதலாளித்துவ பயங்கரவாதம் மறைத்து வருகின்றன பல படுகொலைகளைப் போலவே இதுவும் இருட்டில் புதைக்கப்பட்டிருக்கும். எல்லேஷ் குமார் போலவே பல்லாயிரம் தொழிலாளர்களது வேலையை தினம் தோறும் பறித்து வருகிறது, முதலாளித்துவம். புதுப் புது உத்திகளைக் கையாண்டு வேலை பறிப்பு, தற்கொலைகள் மற்றும் ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கி வருகின்றனர் முதலாளிகள்.

நிரந்தரத் தொழிலாளியை வைத்துக் கொண்டால் கொள்ளை லாபத்தைச் சுருட்ட முடியாது என்பதற்காக எல்லா வேலைகளிலும் காண்டிராக்ட், பயிற்சித் தொழிலாளர்களை புகுத்தி நிரந்தரத் தொழிலாளர்களை வேட்டையாடுகிறது முதலாளித்துவம். உதாரணமாக, ஓசூர் அசோக் லேலண்டில் ஒரே ஒரு கையெழுத்தில் 599 நிரந்தரத் தொழிலாளர்களை உபரித் தொழிலாளர்களாக அறிவித்து, வேறு இடத்துக்கு துரத்தி விட்டது நிர்வாகம். இனிமேல், இவர்களது வேலைச் சுமை அனைத்தையும் காண்டிராக்ட் தொழிலாளர்களும், ட்ரெய்னி தொழிலாளர்களும் தான் சுமந்தாக வேண்டும். மேலும், இந்த காண்டிராக்ட் – பயிற்சித் தொழிலாளர்களை 10-12 மணி நேரம் கசக்கிப் பிழிந்து தன்னுடைய லாபத்தை மேலும், மேலும் குவித்துக் கொண்டு, கொழுத்து வருகின்றனர் முதலாளிகள்.

லாபவெறி பிடித்தலையும் முதலாளித்துவம், தொழிலாளி வர்க்கத்தின் உயிரைப் பற்றி மயிரளவுக்கு கூட கவலைப்பட்டதில்லை. ஓடுகின்ற எந்திரத்தில் வைக்கப்படும் சென்சார் கருவியால் உற்பத்தி வேகம் குறைந்து விடும் என்று சொல்லி, சென்சாரை டம்மியாக்கி விடுகின்றனர். இதனால் உடல் நசுங்கி செத்தவர்கள் பலர். இப்படித்தான் சில ஆண்டுகளுக்கு முன்பாக நோக்கியா கம்பெனியில் தலை நசுங்கிச் செத்தார், அம்பிகா என்ற தொழிலாளி. சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள திருபுவனம் சிப்காட்டில், சூப்பர் ஃபீல்டு என்கிற ஆலையில் சென்சாரை நீக்கி, குணசேகரன் என்கிற தொழிலாளியின் உயிரைப் பறித்தான் முதலாளி. சில நாட்களுக்கு முன்பு கூட கும்மிடிப்பூண்டியில் உள்ள ‘துல்சியான்’ என்கிற இரும்பு உருக்கு ஆலையில் பாய்லர் வெடித்து 3 தொழிலாளர்கள் கொடூரமாக செத்தனர். ஆம்பூர் போன்ற பகுதிகளில் இருக்கும் எண்ணற்ற தோல் தொழிற்சாலைகளில் தோலை சுத்தம் செய்யும் அமிலத்தில் காலுறையோ, கையுறையோ இல்லாமல் வேலை செய்து வெந்து மடிகின்றனர் தொழிலாளர்கள். பலருக்கு புற்று நோய் வந்து தவிக்கின்றனர்.

பல ‘அம்பிகா’க்களை பலி வாங்கி செல்போன் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த நோக்கியா கம்பெனிக்கு நெருக்கடி வந்த போது ரூ 45,360 கோடிக்கு விலை வைத்து மைக்ரோசாஃப்ட் என்கிறா அமெரிக்க கம்பெனிக்கு விற்று விட்டான் முதலாளி. கம்பெனியை வாங்கிய மைக்ரோசாஃப்ட் முதலாளியோ, கம்பெனி கைமாறிய சில நாட்களிலேயே “நோக்கியா மியூசிக் ஸ்டோர்” கிளைகளை மூடி விட்டான். இதனால் பல தொழிலாளர்கள் வேலையை இழந்தனர். மேலும் நோக்கியாவுக்கு உதிரி பாகங்கள் சப்ளை செய்த பிஒய்டி (BYD) போன்ற கம்பெனிகளும் வேலை பறிப்பு வேட்டையைத் துவங்கி விட்டன. ஆட்குறைப்பு செய்து லாபத்தை காப்பாற்றிக் கொண்டன. லாபமோ அவனுக்கு; இழப்போ நமக்கு! இதுதான் முதலாளித்துவத்தின் நீதி!

வேலையைப் பறி கொடுத்த தொழிலாளர்கள் மீண்டும், எங்காவது ஒரு கம்பெனியில் காண்டிராக்ட் தொழிலாளியாகவோ, டிரெய்னி தொழிலாளியாகவோ பிழைப்பை ஓட்ட வேண்டியுள்ளது.

இவ்வாறு வேலைக்குப் போகும் காண்டிராக்ட் / டிரெய்னி தொழிலாளிக்கு வெறும் 6000,7000 ரூபாய் மட்டுமே சம்பளமாக தரப்படுகிறது. இந்த அற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு வீட்டு வாடகைக்கும், அரைகுறை சோத்துக்கும் திண்டாடி வருகின்றனர் தொழிலாளிகள். முதலாளிகளிடம் நியாயமான சம்பளம் கேட்டாலோ, வேலை நிரந்தரம் பற்றி கேட்டாலோ, வேலை பறிப்பு என்கிற கத்தியைச் சொருகுகிறான் முதலாளி.

வேறு வழியில்லாமல் இவ்வாறு கொத்தடிமை போல வேலை செய்தாலும் துன்பங்களிலிருந்து மீள முடியவில்லை. இதனால்தான் பள்ளிப்பாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள நெசவுத் தொழிலாளர்கள் முதலாளியிடம் சிறுகச் சிறுக வாங்கிய கடனை அடைக்க சிறுநீரகத்தையே விற்கின்றனர். இல்லையெனில் தங்களை  மாய்த்துக் கொள்கின்றனர்.

வேலையைக் கொடுப்பதல்ல முதலாளித்துவம்; மாறாக, தொழிலாளி வர்க்கத்தின் வேலையைப் பறித்து உயிர் வாழ்கிற பயங்கரவாதமே முதலாளித்துவம். “குறைவான ஆட்கள்; மலையளவு லாபம்.” என்பதுதான் முதலாளித்துவக் கொள்கை. பிரம்மாண்ட ஆலைகள்; பிரம்மாண்ட சந்தை; ஒவ்வொரு கார்ப்பரேட் முதலாளியும் எண்ணற்ற தொழில்களில் செய்துள்ள முதலீடு போன்றவைகள் முதலாளிகளது திறமையால் கிடைக்கப் பெற்ற வளர்ச்சி அல்ல. அவனது வளர்ச்ச்சிய்ன ஒவ்வொரு படிக்கட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் ரத்தம் கொட்டியிருக்கிறது.

முதலாளிகளுக்கு அரசு செய்து வரும் உதவிகள், அவர்களது அசுர வளர்ச்சியை மேலும், மேலும் துரிதப்படுத்துகிறது. இதற்கேற்பவே, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்கக் கொள்கைகளைத் தீவிரமாக்கி வருகிறது. மேலும், எண்ணற்ற வரிச்சலுகைகள்; வட்டியில்லாமலும், குறைந்த வட்டியிலும் தாராளமாகத் தரப்படும் கடன்கள்; தேசிய  நெடுஞ்சாலை – மேம்பாலங்கள் முதல் தங்கு தடையற்ற மின்சாரம் வரையிலான உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை நமது வரிப்பணத்தில் இருந்துதான் செய்து கொடுக்கிறது அரசு.

உதாரணமாக, கடந்த 8 ஆண்டுகளில் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கியுள்ளது. பத்தே முதலாளிகள் மட்டும் வாங்கியுள்ள கடன் தொகை 5.4 லட்சம் கோடி. எஞ்சிய முதலாளிகள் வாங்கியுள்ள கடன்களோ சொல்லி மாளாது. முதலாளிகள் இந்த கடன்களைத் திருப்பிக் கட்டா விட்டால் அதனை தள்ளுபடி செய்து அவர்களை கவுரவிக்கிறது, அரசு. கடந்த 3 மாதத்தில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக் கடன் ரூ 14,549 கோடிகள்.

இது மட்டுமல்லாமல், முதலாளிகளது தயாரிப்புகளை தங்கு  தடை இல்லாமல் எடுத்துச் செல்வதற்காக தங்க நாற்கர சாலைகள் மற்றும் மேம்பாலங்கள்  கட்டுவதற்காக ரூ 1,46,626 கோடிகளை வாரி இறைத்துள்ளது. முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக கடந்த 8 ஆண்டுகளில் அரசு செலவிட்ட தொகையானது ரூ 40 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது. இவை அனைத்தும் மக்களுடைய வரிப் பணம்தான்.

மக்களுடைய சொத்தைத் தின்று கொழுத்துள்ள ஈனப் பிறவிகளான இந்தியத் தரகு முதலாளிகளும், பன்னாட்டு முதலாளிகளும் உழைக்கும் மக்களுக்கு மட்டும் எந்த சலுகைகளையும் தராதே என்கின்றனர். அரசோ, உழைக்கும் மக்களாகிய நமக்கு வழங்கப்படும் அற்ப சலுகைகளையும், மானியங்களையும் பறித்து வருகிறது.

அரசானது,பன்னாட்டு முதலாளிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் ஏவல் நாய் தான் என்பதையும், ஒடுக்கும் வர்க்கத்தின் அடியாள்தான் என்பதையும் தினம் தோறும் நிரூபித்து வருகிறது. தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மறுகாலனியாக்க நடவடிக்கைகளைத் தீவிரமாக்கி, அதன் மூலம் இந்தியத் தரகு முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் கொழுத்து வருவதற்கு துணை நிற்கிறது. மறு புறத்திலோ, தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏனைய ஒடுக்கப்படும் வர்க்கங்களின் வாழ்வுரிமையைப் பறித்து அவர்களை மரணக் குழியில் தள்ளி வருகிறது.

நமக்கு வேண்டியது, கவுரவமான வாழ்க்கை. வறுமையும், வேலைப் பறிப்பும், தற்கொலைகளும், ஆலைச் சாவுகளும் இல்லாத நிறைவான வாழ்க்கை. இது, மறுகாலனியாக்கத்தையும் முதலாளித்துவ பயங்கரவாதத்தையும், அதற்கு அடியாள் வேலை செய்து வரும் அரசின் ஒடுக்கு முறையையும் முறியடிக்காமல் சாத்தியமில்லை. இதற்கு தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையைத் தவிர குறுக்கு வழி ஏதுமில்லை.

மத்திய – மாநில அரசுகளே,

  • பணிநிரந்தரச் சட்டம், காண்டிராக்ட் முறை ஒழிப்புச் சட்டம் உள்ளிட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை கறாராக அமல்படுத்து!
  • தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!
  • புதிய தொழிற்சங்கம் துவங்க விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் பதிவு செய்! முதலாளிகள் கையாளுகின்றன “ஒர்க்கர்ஸ் கமிட்டி” என்கிற சதியினை தடை செய்!
  • எல்லாத் தொழில்களிலும் குறைந்தபட்ச ஊதியமாக ரூ 15,000 நிர்ணயம் செய்!
  • பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பும், ஊதிய சமத்துவமும் வழங்கு!
  • தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்கிற மக்கள் விரோத மறுகாலனியாக்கம் கொள்கைகளை கைவிடு!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :

தோழர் அ. முகுந்தன்
110/63, மாநகராட்சி வணிக வளாகம், என்.எஸ்.கே. சாலை
கோடம்பாக்கம், சென்னை – 600 024
தொ.பே : 94448 34519

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க