privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்வெங்காய விலை உயர்வும் கணக்குப் பிள்ளைகளின் சமாளிப்பும் !

வெங்காய விலை உயர்வும் கணக்குப் பிள்ளைகளின் சமாளிப்பும் !

-

நாடு முழுவதும் வெங்காயத்தின் விலை மீண்டும் ஏறத் துவங்கியிருக்கிறது. தலைநகர் தில்லி, பாட்னா, ஜம்முவில் வெங்காயத்தின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.100 ஐ தாண்டி விட்டது. நாட்டின் பெரும்பாலான நகரங்களில் சராசரியாக ரூ.80 வரை விற்பனையாகிறது. நவம்பர் கடைசி வாரம் துவங்கி டிசம்பர் முதல் வாரம் வரை நடக்கவுள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வருகையில் வெங்காய விலை உயர்வு தற்போது அம்மாநிலங்களில் ஆட்சியிலுள்ள கட்சிகளை வெகுவாக பயமுறுத்துகின்றன. 1998-ல் தில்லி சட்டமன்ற தேர்தலில் காங்கிரசிடம் ஆட்சியை பாஜக இதனால் தான் பறி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்காய மண்டிவெங்காய தட்டுப்பாட்டை களைய சீனா, ஈரான், எகிப்து மற்றும் ஆப்கானிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வது பற்றி பரிசீலித்து வருவதாக மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார் கூறியுள்ளார். தேசிய விவசாய கூட்டுறவு விற்பனை கூட்டமைப்பின் (NAFED) சார்பில் அக்டோபர் 24-ம் தேதி வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய அரசினால் டெண்டர் கோரப்பட்டுள்ளது. உலக அளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக அதிக வெங்காயத்தை உற்பத்தி செய்யும் இந்தியாவுக்கே இந்த நிலைமை.

“அடுத்த மூன்று வாரத்திற்கு விலை உயர்வை தவிர்க்க முடியாது” என்கிறார் சரத் பவார். “எனது விவசாயம் பற்றிய குறைந்தபட்ச அறிவினாலும், சொந்த மதிப்பீட்டினாலும் இதனை சொல்கிறேன்” என்று கூறிய அவர், “விலை குறையுமா எனக் கணிக்க தான் ஒரு ஜோதிடன் அல்ல” என்றும் எகத்தாளமாக கூறியுள்ளார்.

அக்டோபர் 25 அன்று டெல்லியில் நடந்த ஐந்து  மாநில உணவுத் துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் அதிக வெங்காய மகசூலை தரும் மாநிலங்களான மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், கர்நாடகம், ஆந்திரம் ஆகியவற்றின் சார்பில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம பேசிய மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ் ”இன்னும் பத்து நாட்களில் வெங்காயத்தின் விலை கட்டாயமாக குறையும்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரத் பவார்
சரத் பவார்

அவர் இறக்குமதியை கணக்கில் கொண்டே இப்படி கூறுகிறார். இக்கூட்டத்தில் உற்பத்தியை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி பேசி முடிவெடுக்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக ராபி (குளிர்) பருவத்தில் விளைந்து வரும் வெங்காயத்தை குளிர்பதன முறையில் பக்குவப்படுத்தி பாதுகாக்க ஏற்பாடுகளை அரசு இனி செய்ய வேண்டும் என்றும், இவற்றை பெரும்பான்மை மக்களின் அன்றாட உணவுப் பயன்பாட்டில் உள்ள வெங்காயம், உருளைக்கிழங்கு மற்றும் தக்காளி போன்றவற்றுக்கும் சேர்த்து செய்ய வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார். “கள்ளச் சந்தையில் வெங்காயத்தின் விலையை அதிகம் வைத்து விற்க வேண்டாம்” என வியாபாரிகளை கேட்டுக் கொண்டார் மத்திய உணவு அமைச்சர் கே.வி. தாமஸ். அவசரமாக ஆயிரம் டன்கள் வெங்காயம் தில்லிக்கு  நவம்பர் 4-ம் தேதிக்குள் வந்து சேரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

“வெங்காய விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பதுக்கல் ஆங்காங்கு நடைபெறுவதாகவும் தெரிகிறது. பதுக்கலை அரசு கண்டுபிடிக்க நேர்ந்தால் கடுமையான நடவடிக்கை இருக்கும்” என மத்திய அரசு எச்சரித்துள்ளது. மராட்டிய மாநிலம் லஸ்ஸன்காவ் என்ற ஊரில் உள்ள மொத்த வியாபார வெங்காய சந்தையை கண்காணிக்கும்படி மாநில முதல்வர் பி.வி. சவானிடம் மத்திய உணவு அமைச்சர் கே.வி தாமஸ் தொலைபேசியில் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு கிலோவுக்கு ரூ. 15 வரை வெங்காயத்தின் மொத்த விற்பனை விலை குறைந்தாலும் சில்லறை வியாபாரத்தில் விலை இன்னும் குறையவில்லை. அந்த ஊரில் உள்ள சந்தையில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் குவிண்டால் முதல் 16 ஆயிரம் குவிண்டால் வரை முன்னர் வந்து கொண்டிருந்த வெங்காயத்தின் வரத்து தற்போது எட்டாயிரம் குவிண்டாலாக குறைந்து விட்டது.

ஷீலா தீட்சித் - கே.வி.தாமஸ்
டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் – மத்திய உணவுத் துறை அமைச்சர் கே.வி.தாமஸ்

வியாபாரிகளால் கள்ளச் சந்தையில் வெங்காயம் பதுக்கி வைக்கப்பட்டு பிறகு மொத்தமாக அதிக விலை வைத்து விற்பனை செய்யப்படுவதாக அனைத்து ஊடகங்களும் கூறுகின்றன. தனியார்மயம் வந்த பிறகு கள்ளச் சந்தை என்ற ஒன்று இனி அவசியமே இல்லாமல் போய் விட்டதையும், பங்குச்சந்தையும் ஆன்லைன் வர்த்தகமும் இவற்றை காலாவதியாக்கி விட்டதையும் அவர்கள் மறைக்கிறார்கள். ஆன்லைன் வர்த்தகம் மூலமாகவும் செயற்கையாக வெங்காயத்தின் விலை தினந்தோறும் உயர்த்தப்படுகிறது. விலை உயர்வின் பலன் சூதாடிகளுக்கும், பாதிப்பு சாமான்ய மக்களுக்கும் தலையில் விடிகிறது.

தில்லியில் தினசரி வெங்காயத் தேவை 800 டன். அங்குள்ள ஆசாத்பூர் மொத்த வெங்காய சந்தையில் கிலோ ஒன்றுக்கு ரூ.25 முதல் 60 வரை வெங்காயம் விற்கப்படுகையில் சில்லறை விலை மட்டும் இன்னும் ரூ.100 ஐ விட்டு கீழே இறங்கவில்லை. நாடு முழுக்க மாதம் ஒன்றுக்கு தேவையான பத்து லட்சம் டன் வெங்காயத்தில் பாதி அளவு தான் தற்போது அறுவடையாகி சேமிக்கப்பட்டுள்ளது. வெங்காய வரத்து தற்போது குறைவானதற்கு அறுவடைக் காலத்தில் தென்மேற்கு பருவமழை காலம் ஆரம்பித்து நாசிக்கில் தொடர்ந்து பெய்த மழையை வியாபாரிகள் காரணம் காட்டுகிறார்கள். அத்துடன் போதுமான சேமிப்பு கிடங்குகளை அரசு அமைத்து தராமல் இருப்பதும் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணமாகும்.

ராபி பருவத்தில் அறுவடை செய்த வெங்காயத்தின் இருப்பு அக்டோபர் மாத இறுதி வரை இருந்திருக்க வேண்டும். ஆனால் தாராளமாக வெங்காயத்தை ஏற்றுமதிக்கு அனுமதித்த காரணத்தால் இப்போது உள்நாட்டுத் தேவையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால்தான் இந்த ஆண்டு விளைச்சல் நிலமும், உற்பத்தியும் கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ள போதும் உள்நாட்டு சந்தைக்கான வெங்காய வரத்து குறைந்துள்ளது. ஆப்கான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதியாகும் வெங்காயத்தில் காரத்தின் அளவு குறைவாக இருப்பதால் உணவில் அதனுடைய அளவை அதிகரிக்க வேண்டிய தேவையும் ஏற்படுகிறது. எனவே மக்களைப் பொறுத்த வரையில் இறக்குமதியாகும் வெங்காயத்தினால் எந்த விலைக் குறைப்பும் கிடைத்து விடாது. தற்போது மத்திய அரசு கோரியுள்ள டெண்டரில் கூட 45 மிமீ குறுக்களவு கொண்ட, சிவப்பு மற்றும் பிங்க் வண்ணத்தில் உள்ள உலர்ந்த மற்றும் ஈரப்பதமுள்ள வெங்காயம் தேவை எனக் கோரியுள்ளனர்.

வெங்காய மண்டிகாரி பருவத்திற்கான வெங்காய அறுவடையை நவம்பர் இரண்டாம் வாரத்திலிருந்து கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரத்திலிருந்து நாம் எதிர்பார்க்கலாம். ராஜஸ்தானில் தற்போது வெங்காயத்தை அறுவடை செய்ய வேண்டியுள்ளது. குஜராத் மற்றும் மத்திய பிரதேசத்தில் மழையால் கடும் சேதம் ஏற்பட்டு விட்டது. நீர் வற்றி ஓரளவு நிலம் காய்ந்த பிறகு ஓரளவு விளைச்சல் தேறும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர். மோடியின் குஜராத்திலும் தற்போது கிலோ ஒன்றுக்கு வெங்காயம் ரூ.80க்கு தான் விற்பனையாகிறது

உணவுப் பொருட்களின் விலைக் குறியீட்டு எண்ணின் உயர்வு விகிதம் 6.46 சதவீதமாக செப்டம்பரில் இருக்கையிலேயே வெங்காயத்திற்கு மட்டும் அது 18.4 சதவீதமாக இருந்தது. “வெங்காய தட்டுப்பாடு தற்காலிகமானது” என்று இப்போது சரத்பவார் கூறினாலும் அடுத்து அறுவடையாகி வரவுள்ள அதிக அளவு வெங்காயத்திற்கு நல்ல விலை கிடைக்காமல் போவதும், மீண்டும் சாலையில் கொட்டி விவசாயிகள் போராட வேண்டிய சூழலும் உருவாகும். இதுதான் தாராளமயமாக்கலின் விளைவு. விவசாயிகளையும், நுகர்வோரையும் ஒருசேர நாட்டளவில் பாதித்து விட்டு, மறுபுறம் பிற நாடுகளிலிருந்து வெங்காய இறக்குமதியை ஊக்குவிக்கும் திட்டம். இதனுடைய சைடு கேப்பில் மாநில தேர்தல்களை நடத்தி கிடைக்காத வெங்காயத்தை மக்களுக்கு தற்காலிகமாக கிடைக்க வைத்து ஆட்சியை தக்கவைக்க நினைக்கிறார்கள் ஆட்சியாளர்கள்.

வெங்காய விலை உயர்வு பிரச்சினையாக எழுந்த உடனேயே ஏற்றுமதிக்கு தடை விதித்தார் மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா. “இச்செயல் அரசியல் ரீதியாக சரி என்று ஒப்புக்கொண்டாலும் பொருளாதார ரீதியாக தவறானது” என்று கே.வி தாமஸ் கூறியுள்ளார். “உலக சந்தையில் வெங்காயம் டன் ஒன்றுக்கு 500 டாலர்கள் என இருக்கையில் இந்தியாவில் மட்டும்தான் 900 டாலராக இருக்கிறது. எனவே ஏற்றுமதிக்கு தடை விதிக்க அவசியமே இல்லை” என்று  கூறுகிறார் சர்க்கரை சிண்டிகேட் புகழ் சரத் பவார்.

ஆனந்த் ஷர்மா
மத்திய வர்த்தக அமைச்சர் ஆனந்த் ஷர்மா.

“நவம்பர் மாத மத்தியில் தென்னிந்தியாவில் ராபி பருவத்திற்கான வெங்காய அறுவடை முடிவடைவதால் வரத்து அதிகரிக்கும். அடுத்து வரும் தேர்தலில் கணிசமாக ஓட்டுக்களை பெறலாம்” என்ற கணக்கில் போலியாக கூட இந்த விவசாய மாஃபியாக்கள் வெங்காய தட்டுப்பாட்டை உருவாக்கி விட்டு, பல மொழிகளில் அதற்கு வியாக்கியானம் பேசுகிறார்களோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய வெங்காய விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க இறக்குமதிக்கான விதிமுறைகளை சற்று தளர்த்தி இருப்பதாகவும் சரத்பவார் கூறியுள்ளார். வரும் வெங்காய அறுவடைக்கு பிறகு தேசிய அளவில் விலை கணிசமாக குறையும் என்றும் கூறிய பவார் ”நாசிக்கிலும் புனேவிலும் விவசாயிகள் கிலோ ஒன்றுக்கு ரூ.40 முதல் 45 வரை மட்டுமே பெறுகையில் தில்லியில் மட்டும் ரூ.90 என விலை உயர்வதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது விலை உயர்வுக்கு காரணமே உள்நாட்டு வியாபாரிகளடம் தான் இருப்பதாக நிறுவ முனைகிறார். அதாவது உள்நாட்டு சில்லறை வியாபாரிகள்தான் இடைத்தரகர்களாக மாறி கொள்ளை அடித்து விட்டார்கள், அதனால் தான் வெங்காய விலை உயர்வு என நவ்வாப்பழம் ஜெயமோகனாக கூவுகிறார் சரத்பவார்.

தில்லி காங்கிரசு முதல்வர் ஷீவா தீட்சித்துக்கோ வெங்காயம் மிகவும் கவலைக்குரிய விசயமாக படுகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் நடைமுறை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. முன்னர் நடமாடும் வேன்களில் தில்லி அரசு நியாய விலையில் மக்களுக்கு விற்பனை செய்து வந்த வெங்காய விற்பனையை தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் நிறுத்த வேண்டியதாயிற்று. அவசியம் கருதி விற்பனையை மீண்டும் துவக்க தேர்தல் கமிசனிடம் அனுமதி கேட்டு கடிதம் எழுத உள்ளாராம். இது பற்றி தேர்தல் கமிசனிடம் பேச மத்திய அரசையும் ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார். மகாராஷ்டிர முதல்வரிடம் பேசிவிட்டு தனது அரசின் சில அதிகாரிகளை புனே மற்றும் நாசிக்கிற்கு நேரடியாக அனுப்பி மொத்தமாக வெங்காயத்தை கொள்முதல் செய்யவும் திட்டமிட்டுள்ளார். தேர்தல் அரசியலுக்காக மட்டும் ஒரு மாதம் விலை உயர்வை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சிக்கின்றனர் ஆட்சியாளர்கள். வெங்காயத்தை மத்திய பிரதேசத்தை ஆளும் பாஜக பதுக்குவதாகவும் தற்போது தில்லி காங்கிரசார் பிரச்சாரத்தை துவக்கி விட்டனர்.

இந்நிலையில் பொதுவாக வெங்காய விலை உயர்வை பாஜக, கம்யூனிஸ்டு போன்ற எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி கூட்டணியில் இருந்த திரிணாமூல் காங்கிரசு கட்சியும் கடுமையாக விமர்சித்துள்ளது. மும்பை போன்ற நகரங்களில் வெங்காய மண்டிகளில் வெங்காய மூட்டைகள் திருட்டும் துவங்கி விட்டது.

சென்னை போன்ற பெருநகரங்களில் கூட வெங்காயம், பால், காய்கறிகள் போன்வற்றின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. உருளைக் கிழங்கு கூட இங்கு கிலோ ஒன்றுக்கு ரூ.60 வரை விற்கப்படுகிறது. தீபாவளி நெருங்கி வருவதால் வெங்காயத்தின் விலை குறையும் என பலரும் எதிர்பார்த்தாலும் அது நடக்காது போலத்தான் தெரிகிறது. கூடவே பால் விலை உயர்வும் சாமான்ய மற்றும் நடுத்தர வர்க்கத்தின் மக்களையும், குறிப்பாக குழந்தைகளையும் கடுமையாக பாதிக்கின்றது. கூடவே பெட்ரோல், டீசல் விலைவாசி உயர்வும் சேர்ந்து எல்லா தரப்பு மக்களின் வாழ்வாதாரங்களை சூறையாட துவங்கி விட்டது.

பிரதமிரின் நிதி ஆலோகர்களில் ஒருவரான் சி.ரங்கராஜன் வெங்காய விலை உயர்வை மற்றும் தட்டுப்பாடு என்பதை வழங்குதல் துறையான விவசாயத்தில் உள்ள வரம்பாக மட்டுமே சுருக்கி பார்க்குமாறு நம்மை கோருகிறார். உள்நாட்டு சந்தையை அழித்து, தேவைக்கு கூட மிச்சம் வைக்காமல் ஏற்றுமதி செய்ய சொல்லி விட்டு, வெளிநாட்டு வெங்காயத்திற்கு சந்தையை இப்படி போலியாக உள்நாட்டில் உருவாக்கி, பின்னர் விளைந்து வரும் அதே உள்நாட்டு விவசாய உற்பத்தி பொருளுக்கு மதிப்பில்லாமல் ஆக்கி விவசாயத்தையும் நாசமாக்கும் புதிய பொருளாதார கொள்கையின் விளைவு இது என்பதை இவர்கள் மக்களிடமிருந்து இதன் மூலம் டெக்னிக்கலாக மறைக்கிறார்கள்.

காலம் காலமாக பண்ணையடிமைகளுக்கு குறைவாக கூலி அளப்பதற்கு மழையை, களையை என பல பித்தலாட்டங்களை காரணமாக சொல்லி ஏமாற்றினார்கள் பண்ணைகளின் கணக்குப் பிள்ளைகள். நவீன உலக வங்கியின் கணக்குப் பிள்ளைகளான இந்திய அமைச்சர்களோ ஏற்றுமதியை மறைத்து விட்டு, பதப்படுத்த வசதி செய்ய மறுத்து விட்டு விலைவாசி உயர்வுக்கு மக்களிடம் மீண்டும் மழையை காரணம் காட்டுகிறார்கள். நாமும் நம்பி விடுவோம் என்ற நம்பிக்கையில்.

– வசந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க