privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

தனியார்மயக் கொள்ளையும் ஊழல் எதிர்ப்பு நாடகமும்

-

னியார் முதலாளிகளுக்கு  2004-2009 ஆம் ஆண்டுகளில் நிலக்கரி வயல்களை ஒதுக்கீடு செய்ததில் நடந்துள்ள முறைகேடுகளால் அரசுக்கு 1.86 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு  இழப்பு ஏற்பட்டுள்ளது என்று 2012-இல் மத்திய கணக்குத் தணிக்கை அலுவலகம் கூறிய பிறகு, இம்முறைகேடுகள் பற்றி உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் மையப் புலனாவுத் துறை (சி.பி.ஐ.)  விசாரித்து வருகிறது.

மன்மோகன் சிங் - பி.சி.பராக்
மன்மோகன் சிங் – பி.சி.பராக்

நிலக்கரி ஊழல் தொடர்பான கோப்புகள் காணவில்லை என்பதை எதிர்த்தும், இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் மன்மோகன் சிங்கைப் பதவி விலகக் கோரியும் கடந்த ஒரு மாத காலமாக நாடாளுமன்றத்தைக் கிட்டத்தட்ட முடக்கி வைத்து எதிர்க்கட்சிகள் குரலெழுப்பின. இந்நிலையில் ஒடிசா மாநிலத்தில் தலபிரா நிலக்கரிச் சுரங்கங்களுக்கான ஒதுக்கீட்டை ஆதித்ய பிர்லா குழுமத்தின் நிறுவனமான ஹிண்டால்கோ இன்டஸ்ட்ரீஸ் முறைகேடாகப் பெற்றுள்ளதாகக் குற்றம் சாட்டி, முன்னாள் நிலக்கரித் துறை செயலாளர் பி.சி. பரேக் மீதும், ஆதித்ய பிர்லா குழுமத் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் அவரது ஹிண்டால்கோ நிறுவன அதிகாரிகள் மீதும் முதல் தகவல் அறிக்கையைப்  பதிவு செதுள்ளது, சி.பி.ஐ.

சி.பி.ஐ.யின் விசாரணையை எதிர்நோக்கியுள்ள நிலக்கரித் துறையின் முன்னாள் செயலரான பி.சி. பரேக், ”நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டில் எந்த முறைகேடும் நடக்கவில்லை; அவ்வாறு முறைகேடு அல்லது சதி நடந்திருப்பதாக சி.பி.ஐ. கருதினால், இறுதி முடிவு எடுத்தவர் என்கிற முறையில் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்டு இதில் தொடர்புடைய அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

”நிலக்கரி மாஃபியாக்கள் அரசாங்கத்துக்கு வெளியில் இல்லை; அவர்கள் நிலக்கரி அமைச்சகத்திலேயே இருக்கின்றனர், என்னைப் பதவியிலிருந்து விரட்டியடிக்க முயற்சித்தனர்” என்று  அமைச்சரவைச் செயலாளர் சதுர்வேதிக்கு 2005-இல் பி.சி. பரேக் எழுதிய கடிதமும் இப்போது பரபரப்பாக வெளியாகியிருக்கிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நிலக்கரி வயல்களின் உரிமங்களை ஒதுக்கீடு செய்து முறைகேடுகளும் ஊழலும் நடந்துள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களின் அமைச்சர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ள நிலையில், ஒடிசா மாநிலத்தின் தலபிரா நிலக்கரி வயல் ஒதுக்கீட்டில் நடந்துள்ள முறைகேடு உள்ளிட்டு, வெறும் 14 முதல் தகவல் அறிக்கைகள் மட்டுமே இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ளன.

பரேக் இப்போது என்ன சோல்கிறாரோ, அதையேதான் 2ஜி அலைக்கற்றை ஊழலில் சிக்கவைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா நீண்ட நாட்களாகச் சொல்கிறார். ”அலைக்கற்றை ஏலத்தில் ஊழல் எதுவும் நடக்கவில்லை. அது ஒரு கொள்கை முடிவு. அலைக்கற்றை ஒதுக்கீடு செயப்பட்ட சமயத்தில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம், அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான அமைச்சரவைக் குழுவின் தலைவராக இருந்த பிரணாப் முகர்ஜி, மைய அரசின் சோலிசிட்டர் ஜெனரலாக இருந்த கூலம் வாகன்வாதி ஆகியோருடன் ஒதுக்கீடு தொடர்பாகக் கலந்து ஆலோசித்துதான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்பட்டன. இம்முடிவுகள் அனைத்தும் பிரதமர் மன்மோகனுக்குத் தெரிவிக்கப்பட்டு அவரின் ஒப்புதலோடுதான் நடைமுறைப்படுத்தப்பட்டன” என  ஆதாரங்களுடன் ராசா விளக்கமளித்தார்.

பரேக் மன்மோகனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியிருப்பதைக் காட்டித் துள்ளிக் குதிக்கும் பா.ஜ.க.விற்கு ஒன்றை நினைவுபடுத்த வேண்டும். மன்மோகனின் மீது வழக்குப் போட வேண்டும் என  பரேக்  கோரியிருப்பதைப் போல, குஜராத் அரசின் முன்னாள் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் டி.ஜ.ஜி. வன்சாரா ”பா.ஜ.க.வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலை” எனத் தனது பதவி விலகல் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அவர் அக்கடிதத்தில், ”2002 முதல் 2006 வரையிலான காலத்தில் நடந்துள்ள மோதல் படுகொலைகள் அனைத்தும் மோடி அரசிற்குத் தெரிந்து, அதன் வழிகாட்டுதலோடுதான் நடந்தன. மோதல் கொலைகளை நடத்திய போலீசார் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது நியாயமென்றால், இக்கொலைகளை வழிநடத்தி ஊக்குவித்த இந்த அரசாங்கம் இருக்க வேண்டிய இடம் சிறைச்சாலையாகும்” எனக் கூறியிருக்கிறார்.

மன்மோகனின் கரங்களில் படிந்திருப்பது ஊழல் கறை என்றால், பா.ஜ.க.வின் கரங்களில் இருப்பதோ இரத்தக் கறை. அதே சமயம் இந்த இரண்டு யோக்கியவான்களும் நிலக்கரி ஊழலில் குற்றஞ்சுமத்தப்பட்டுள்ள தரகு முதலாளி பிர்லாவிற்கு வக்காலத்து வாங்குவதில் ஈருடல் ஓர் உயிரென நடந்து கொள்கின்றனர்.

தனியார்மயமாக்கலுக்குப் பின்னர் கடந்த இருபது ஆண்டுகளில் பங்குச்சந்தை மோசடி தொடங்கி அலைக்கற்றை ஊழல், கோதாவரி எண்ணெய் வயல் ஊழல், ஆதர்ஷ், ஏர் இந்தியா ஊழல், இப்போதைய நிலக்கரி வயல் ஊழல் வரை நூற்றுக்கணக்கான ஊழல்கள் நடந்துள்ளன. தனியார்மயம் என்பதே பொதுச் சொத்துக்களை கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளையடிக்க வழங்கப்படும் உரிமம்தான். ஊழல் இல்லாத  தனியார்மயம் கிடையாது.  இருப்பினும், ஆளும் கட்சியும் எதிர்க்கட்சிகளும் ஒரே அரசியல் கட்டமைப்புக்குள் இருப்பதால், ஊழல் அம்பலமாகும்போது தமது அரசியல் நோக்கங்களுக்கு ஏற்ப இதில் ஒரு சில விவகாரங்களைச் சட்டவிரோதமானதென்று காட்டிச் சூடேற்றுவதும், ஆட்சியதிகாரத்திலுள்ள ஒரு சிலரின் தவறுகள் என்பதாக மட்டுமே இந்த விவகாரத்தைக் குறுக்கிச் சுருக்குவதும், தேர்ந்தெடுத்த ஒரு சில வழக்குகளை மட்டும் முதன்மைப்படுத்தி கவனத்தைத் திசைதிருப்புவதும்தான் நடக்கிறது.

-தலையங்கம்
_____________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_____________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க