Thursday, May 30, 2024
முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து - HRPC பத்திரிகை செய்தி

இடிந்தகரை சுனாமி காலனி வெடிவிபத்து – HRPC பத்திரிகை செய்தி

-

மனித உரிமை பாதுகாப்பு மையம்தமிழ்நாடு

702/5 ஜங்சன் ரோடு, விருத்தாசலம், கடலூர் மாவட்டம்.
எண் 103, முதல் தளம், ஆர்மேனியன் தெரு, உயர்நீதிமன்றம் எதிரில், சென்னை-1
கைபேசி : 94432 60164, 9489235314,        mail : hrpctn@gmail.com


வழக்கறிஞர். சி.ராஜு,                                                                                                          நாள் :  28-11-13
மாநில ஒருங்கிணைப்பாளர்,

பத்திரிக்கை செய்தி

26.11.2013 அன்று இடிந்தகரை சுனாமி காலனியில்நடந்த வெடி விபத்தில் 5 பேர் இறந்துள்ளனர். இந்தவெடி விபத்துக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத அணு உலை எதிர்ப்பு போராட்டக் குழுவினர் மீது இந்த வெடி விபத்து தொடர்பாக வழக்கு போடுவதாக முதலில் காவல்துறை அறிவித்தது. பிறகு பின்வாங்கி, வெடி விபத்தில் இறந்தவர், காயமுற்றவர்கள் மீதே வழக்கு போட்டிருக்கிறது. தனது முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளுக்கு காவல்துறை இதுவரை விளக்கம் தரவில்லை.

இடிந்தகரை  வெடி விபத்து என்பது தாதுமணல் கொள்ளைப் பிரச்சனையின் தொடர்ச்சியே ஆகும். நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் நடந்து வரும் தாது மணல் கொள்ளைக்கு எதிராக கடந்த ஆகஸ்டு மாதம் முதல் மக்கள் காட்டி வரும் தீவிர எதிர்ப்புக்கு ஒரு எதிர் விளைவாகவே கடலோர கிராமங்களில் கலவரமும், பிரச்சனையும்,வெடிகுண்டு வீச்சும் நடந்து வருகிறது.

சுனாமி காலனி
குண்டு வெடிப்பு நடந்த சுனாமி காலனி (படம் : நன்றி thehindu.com)

குறிப்பாக நெல்லை மாவட்டம் கூத்தன்குழி கிராமம் கடந்த 4 மாதங்களாகவே கலவர கிராமமாக உள்ளது. இப்பகுதியில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் பல ஆண்டுகளாக தாது மணல் அள்ளி வருகிறார். வைகுண்டராஜனின் சட்டவிரோத மணல் கொள்ளையால் பாதிக்கப்பட்ட கூத்தன்குழி மக்களின் ஒரு பகுதியினர்  வைகுண்டராஜனுக்கு எதிராக போராடுகின்றனர். இதே கூத்தன்குழி கிராமத்தில் வைகுண்டராஜனின் மிகப்பெரிய அடியாட்கள் படையும் மிக நீண்ட நாட்களாகவே இயங்கி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு தாது மணல் ஆலைக்கு வேலைக்கு போகக் கூடாது என ஊர்க்கட்டுப்பாடு விதிக்கப் பட்டதை எதிர்த்து, வைகுண்டராஜனின் அடியாட்கள் ஊருக்குள் கலவரத்தை உருவாக்கி தாது மணல் கொள்ளையை எதிர்த்தவர்களின் வீடுகளில் நாட்டு வெடிகுண்டுகளை வீசி, தேவாலயத்தையும் அடித்து நொறுக்கி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். வைகுண்டராஜன் அடியாட்களின் வன்முறையை எதிர்கொள்ள முடியாத நூற்றுக்கணக்கான குடும்பத்தினர் ஊரைவிட்டு வெளியேறி இடிந்தகரை, கூட்டப்புளி, உவரி உள்ளிட்ட கிராமங்களில் தஞ்சம் புகுந்து அகதிகள் போல வாழ்ந்து வருகின்றனர். இக்கொடூர சம்பவத்திற்கு எதிராக கூத்தன்குழி அண்டன் உள்ளிட்ட பலர் புகார் அளித்தும் முதல் தகவல் அறிக்கை கூட பதியப் படவில்லை. இதனை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு, மதுரை உயர்நீதிமன்றமும் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது.

தற்போதைய  விபத்திற்கு அணு உலை எதிர்ப்பாளர்கள் மீது உடனே குற்றம் சுமத்திய காவல்துறை, நூற்றுக் கணக்கான வெடிகுண்டுகள் வீசப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவிற்குப் பின்பும் வைகுண்டராஜன் மீது வழக்கு பதியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் நடந்து வந்த கலவரத்திற்கும் வைகுண்டராஜன்தான் பின்னணி என மீனவ மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த 23.11.2013 அன்று தூத்துக்குடியில் மணற்கொள்ளைக்கு எதிராகவும், வைகுண்டராஜனை கைது செய்யக் கோரியும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சார்பில் நாங்கள் நடத்திய பொதுக்கூட்டத்திலும் சுமார் 200-க்கும் மேற்பட்ட வைகுண்டராஜனின் அடியாட்கள் கலவரம் செய்ய முயற்சித்தனர். சீரூடையில் இருந்த போலீசார் இதனை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க, சிவில் உடையில் இருந்த உளவுத்துறை அதிகாரிகள், கலவரக்காரர்களை வழிநடத்திக் கொண்டிருந்தனர். குறிப்பாக வைகுண்டராசனின் நெருங்கிய உறவினரான ரவி என்பவர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றுபவர். இவர்தான் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுபவர். அன்றையதினம் இவர் பொதுக்கூட்டம் நடைபெற்ற இடத்திற்கு நேரடியாக வந்திருந்து அவரின் கீழ் பணிபுரியும் அந்தோணி என்ற உளவுத்துறை காவலர் மூலம் வைகுண்டராசனின் ஆட்களுக்கு கூட்டத்தில் பிரச்சினை செய்வதற்கான வழிகாட்டுதல்களை நேரடியாக அளித்துள்ளார். மதுரையில் ஐ.ஜி.டி.ஐ.ஜி அலுவலகத்திற்கு நேரடியாக புகார் தெரிவித்த பிறகு தான் கூடுதலாக காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு நிலமை சீரடைந்தது. அது வரை எங்களது தொண்டர்கள் மூலம்தான் நாங்கள் நிலைமையை சமாளிக்க வேண்டியிருந்தது. பஞ்சல் அருகே பொன்னார்குளம் பிளாண்ட், கூட்டப்புளி அருகே கனகாபுரம் பிளாண்ட், கூத்தங்குழி, நாவலடி ஆகிய இடங்களில் வி.வி.மினரல்ஸ் தாது மணல் பிளாண்ட் இயங்கி கொண்டுதான் இருக்கிறது. கண்டெய்னரில் மணல் போகிறது. இது அதிகாரிகளுக்கு தெரியும். பேடி குழு வந்த போது கடற்கரையில் உள்ள போர்சாதனங்களை அப்புறப்படுத்திவிட்டு, தற்போது மீண்டும் இயக்கப்படுகிறது. மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உண்மை அறியும் குழு ஆய்வு செய்த போது உதவி செய்தவர்கள் கருத்து தெரிவித்தவர்களுக்கு வி.வி ஆட்களால் கொலை மிரட்டல் விடப்படுகிறது.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டக் கடலோரங்களில் சட்டத்தின் ஆட்சி நடைபெறவில்லை. வைகுண்டராஜனின் தனி அரசாங்கம் நடந்து வருகிறது என்பதே உண்மை. இந்த “தனி நாட்டை” தமிழக அரசும் அங்கீகரித்திருப்பதாகவே தெரிகிறது. கடலோர கிராமங்களில் அமைதி நிலவ வேண்டுமென்பது தமிழக அரசின் நோக்கமாக இருக்கும் பட்சத்தில், குண்டு வெடிப்புகள், வன்முறைகள் ஆகிய அனைத்துக்கும் காரணமாக இருக்கும் தாது மணல் கொள்ளைக்கு நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும். ககன்தீப்சிங் பேடி ஆய்வு குழு அறிக்கையை உடனடியாக தமிழக அரசு வெளியிட வேண்டும். தாது மணல் கொள்ளையர்களில் முதலிடம் வகிக்கும் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் உடனே கைது செய்ய வேண்டும் என்று கோருகிறோம்.

– (வழக்கறிஞர் சி.ராஜு)

பத்திரிகையாளர் சந்திப்பு படங்கள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க