Tuesday, May 28, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்ரங்கநாதன் மாஸ்டர் - முருகேசன்

ரங்கநாதன் மாஸ்டர் – முருகேசன்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 7 – முருகேசன்

“இந்தப் பய கண்ணு ரெண்டையும் விட்டுப்புட்டு தொலிய உரிச்சிடிங்க சார். ஒரு சொல் பேச்சும் கேட்க மாட்டான். சரியான கல்லுளி மங்கன். கையால அடிக்காதீங்க சார்; நல்ல புளிய மிளாரு இருந்தா தான் இவனுக்கெல்லாம் சரிப்படும்”

இவ்வாறான புகழ் வார்த்தைகளோடு என்னை ரங்கநாதன் மாஸ்டரிடம் அறிமுகப்படுத்தினார் அப்பா. ரங்கநாதன் மாஸ்டர் ஆறடிக்கு இரண்டங்குலம் குறைவாக இருப்பார். நல்ல கம்பீரமான உடல்வாகு; இரண்டு பிச்சுவாக் கத்திகளின் பிடிகளை மூக்கு ஓட்டைகள் இரண்டுக்குள்ளும் சொருகி வைத்தது போலிருக்கும் முறுக்கிய மீசை. உருண்டை முகத்தில் அகண்டு உருண்ட கண்கள். நெற்றியின் இருபுறமும் மேலேறியிருக்க, காதோரங்களில் அடர்த்தியான மயிர்கள். பார்த்தாலே அடிவயிற்றைப் பிடித்து நாலைந்து கைகள் பிசைவது போன்ற உணர்வு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. அவர் அரசினர் உயர் நிலைப் பள்ளியில் வேலைபார்த்து வந்தார். நான் தனியார் மிஷனரி பள்ளி ஒன்றில் படித்து வந்தேன்.

ரங்கநாதன் மாஸ்டர்
ரங்கநாதன் மாஸ்டர் எனது நினைவுகளில் நீங்காத இடம் பிடிப்பதற்குக் காரணம், அவர் எனது அப்பாவின் நினைப்பை பொய்யாக்கியதே

நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ரங்கநாதன் மாஸ்டரை நண்பர் ஒருவர் மூலமாக அறிந்திருந்த அப்பா, எப்படியாவது என்னை ’உருப்பட்டாக’ வைக்க வேண்டுமென்று முடிவெடுத்து அவரிடம் ட்யூஷனுக்கு அனுப்பி வைத்தார். ”அடியாத மாடு படியாது” என்கிற கொள்கையில் உறுதியாக இருந்தவர் அப்பா. அந்த தத்துவத்தின் அடிப்படையில் அவர் எடுக்கும் முடிவுகள் எப்போதும் கோக்குமாக்காகவே இருந்திருக்கின்றன.

ஏன் தனியார் பள்ளி என்பதற்குக் கூட வினோதமான சில காரணங்களை வைத்திருந்தார்; அவையாவன – 1) புரியாத பாஷையில் பேசினால் தான் இவன் பயப்படுவான் 2) வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் தூரத்தில் இருந்தால் தான் பயப்படுவான் 3) பழக்கமில்லாத / தெரியாத ஆட்களிடம் தான் ஒழுங்காக நடந்து கொள்வான்…. இப்படியாக அடுக்கிக் கொண்டே செல்வார். சுருக்கமாக சொல்வதாக இருந்தால் அச்சமூட்டுவதற்கும் ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதற்குமே பள்ளிக்கூடம் என்பதில் தெளிவாக இருந்தார். அவர் எதிர்பார்த்த இரண்டும் வந்தது; படிப்பு வரவில்லை. ”அட, இதை யோசிக்கலையே” என்று மோட்டுவளையையும் நான் வாங்கி வரும் கோழி முட்டைகளையும் மாறி மாறிப் பார்த்து தாடையைச் சொரிந்து கொண்டிருந்த ஏதோவொரு தருணத்தில் தான் அவரது நண்பர் ரங்கநாதன் மாஸ்டரைப் பற்றி சொல்லியிருக்கிறார்.

“ஆஹா, ஒழுக்கம், பயம், படிப்பு – ஒரே கல்லில் மூன்று மாங்காய்களாச்சே” என்கிற எதிர்பார்ப்போடு தான் அப்பா அன்றைக்கு என்னை ரங்கநாதன் மாஸ்டரிடம் பிடித்துக் கொடுத்தார். என்றாலும்,  இந்த தொடரை எழுத வினவில் அழைப்பு வந்த போதும் சரி, எனது இத்தனையாண்டு கால வாழ்கையின் எண்ணற்ற சந்தர்பங்களிலும் சரி – ரங்கநாதன் மாஸ்டர் எனது நினைவுகளில் நீங்காத இடம் பிடிப்பதற்குக் காரணம், அவர் எனது அப்பாவின் நினைப்பை பொய்யாக்கியதே.

சொல்ல நிறைய உள்ளதால் விஷயத்தை எங்கேயிருந்து துவங்குவது என்று குழப்பமாகவே உள்ளது. எங்கள் ரங்கநாதன் மாஸ்டரின் பழைய லேம்ப்ரெட்டா ஸ்கூட்டரில் இருந்து துவங்கினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

லேம்ப்ரெட்டா எனப்படும் பிராணி யாதெனில், இரண்டு சக்கரங்களையும் சில உதிரி பாகங்களையும் பின்னிரு சக்கரங்களையும் இஞ்சினையும் அணைத்தவாறு மூடியிருக்கும் பெருத்த இரண்டு ஆமையோடுகளை ஒத்த இரும்பு கூடுகளையும் கொண்ட ஸ்கூட்டர். இத்தாலியில் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனையில் இருந்த லேம்ப்ரெட்டாவை பஜாஜின் தாத்தா என்று அழைக்கலாம். உற்பத்தியிலிருந்து நிறுத்தப்பட்ட அந்த ஸ்கூட்டரை விடாமல் பிடித்துக் கொண்டிருந்த ஓரிரு இந்தியர்களில் ரங்கநாதன் மாஸ்டரும் ஒருவர்.

அதில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அவரே சொந்த முறையில் சரி செய்து கொள்வார். அதன் சர்வீஸ் மேனுவலை இத்தாலியில் இருந்த அதன் தலைமை அலுவலகத்துக்கு எழுதிப் போட்டு வரவழைத்தார். ஐரோப்பிய மொழியில் இருந்த அதை எங்கெங்கோ திரிந்து யார்யாரையோ பார்த்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வைத்திருந்தார் ரங்கநாதன் மாஸ்டர். இதெல்லாம் நடந்தது இணையம் பரவலாகியிராத 1996ம் ஆண்டு – அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். இதுவரையில் கூட ஆச்சர்யமல்ல.

ஏதேனும் உதிரி பாகம் பழுதாகியிருந்தால், அதை அப்படியே வரைந்து (மேனுவலைப் பார்த்து அதன் துல்லியமான டைமென்ஷன்களைக் குறித்து) லேத்து பட்டறைக்கு இவரே சென்று செய்து வாங்கி வருவார். அந்த வண்டிக்கு இவரே சொந்தமாக ஒரு சர்வீஸ் ரெக்கார்டு வைத்திருந்தார்; அதில் ஒவ்வொரு சிறிய பாகங்களையும் (நட்டு போல்டுகள் உள்ளிட்டு) எப்போது மாற்றியது, ஏன் மாற்றியது என்பது வரை குறித்து வைத்திருந்தார். தகரத்தில் ஆணியால் கீறினால் எழும் சப்தத்தோடு கிளம்பும் அதை அந்தத் தெருவிலிருந்த மக்கள் வினோதமாக பார்ப்பதைக் கவனித்திருக்கிறேன்.

“சார், இதை தூக்கி பழைய இரும்புக்கு போட்டுட்டு புதுசா சேத்தக் இல்லாட்டி வெஸ்பா வாங்கிடலாமே சார்?” – சொல்ல மறந்து விட்டேனே, அவரது முரட்டுத் தோற்றத்துக்கும் தோழமையான பழக்கத்துக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது.

”டேய் முழியாங்கண்ணா, ஒரு பொருளை வாங்கினா அதுக்கு போட்ட காசை விட ரெண்டு மடங்கு வேலை வாங்கனும்டா.. நாளைக்கு நீ சம்பாதிச்சி எதுனா வாங்குவேயில்ல அப்ப தெரியும் பாரு நான் சொல்றதோட அர்த்தம்”

”சரி சார்.. சர்வீசுக்காவது வெளியே கொடுக்கலாமில்லே?”

“குடுக்கலாம் தான்… ஆனா, நாம பயன்படுத்தற பொருள் என்னா செய்யுது, ஏன் செய்யுதுன்னு தெரிஞ்சி வச்சிகிட வேணாமா? அதெல்லாம் நம்ம வேலையில்லையா? நம்ம வேலைய நாம தானே செய்யனும். முடியலை, தெரியலைன்னா வெளியே போகலாம். அதுவரைக்கும் நாமே பார்த்துக்கிடனும் தானே?”

இப்போது உங்களுக்கு ரங்கநாதன் மாஸ்டரைப் பற்றி ஓரளவுக்குப் புரிந்திருக்க வேண்டும். என் அப்பாவின் எதிர்பார்ப்பை எப்படிப் பொய்யாக்கினார் என்று அடுத்து சொல்கிறேன்.

”டேய் முழியாங்கண்ணா, கணக்குல எத்தினி மார்க்குடா எடுத்திருக்கே?”

“நுப்பது சார்”

“ம்ம்ம்… தமிழ்லே?”

”நுப்பத்தஞ்சி சார் ”

“சரி, அறிவியல்லே?”

“இருவத்திரெண்டு சார்”

“ஓக்கே. உன்னேட பரீட்சை பேப்பர்லாம் குடு பார்க்கலாம்”

படிக்கும் பழக்கம்
பின்னாட்களில் இந்தப் பழக்கம் தான் என்னைக் கரையேற்றியது என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்களை தயக்கத்தோடு நீட்டுவேன். வாங்கி ஒவ்வொன்றாகப் பொறுமையாகப் பார்ப்பார். நான் எழுதியிருந்த விடைகளின் சில பகுதிகளை வாய் விட்டுப் படித்துக் கொள்வார்.

“எல்லாம் சரியா தான் இருக்கு. சரி இன்னிக்கு படிக்க வேண்டிய பாடத்தை எடுத்துக்கோ” தாள்களை என்னிடமே திருப்பிக் கொடுத்து விடுவார்.

குழப்பமாக இருக்கிறதா? ரங்கநாதன் மாஸ்டர் எப்போதுமே அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டுமென்று சொன்னதேயில்லை. உதாரணமாக எட்டாம் வகுப்பு உயிரியலில் மனித செல்கள் பற்றி ஒரு பாடம் வருகிறது. அதைப் பற்றி அவர் ட்யூஷனில் விளக்குவார். மேலும் அவரது சேகரிப்பில் இருந்த அறிவியல் நூல்களில் இருந்து மனித செல்கள் பற்றிய குறிப்புக்கள் எடுத்து என்னை ஒரு முறை விளக்கச் சொல்லி கேட்டுக் கொள்வார். பரீட்சை எழுதச் செல்லும் போது பாட புத்தகத்தில் இருப்பதை அல்ல, எழுதப்படும் பொருள் குறித்து எனக்கு என்னவெல்லாம் புரிந்திருக்கிறதோ அதை எனது மொழியில் (பாட புத்தகத்தில் இருக்கும் மொழியில் அல்ல) எழுதி வரச் சொல்வார்.

ரங்கநாதன் மாஸ்டரின் நூலகத்தைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒரு தனிநபரின் சேகரிப்பில் மிக அதிகமான புத்தகங்களை நான் அங்கு மட்டுமே கண்டிருக்கிறேன். எங்கள் ஊர் கிளை நூலகத்தில் இருப்பதைக் காட்டிலும் அதிக புத்தகங்கள் அதில் இருக்கும். அனைத்தும் துறைசார்ந்த நூல்கள். எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது ஆங்கில் இரண்டாம் பாடத்தில் Mayor or Casterbridge என்ற ஆங்கில நாவல் ஒன்றின் சுருக்கப்பட்ட வடிவம் சேர்க்கப்பட்டிருந்தது. பள்ளியில் கொடுத்த புத்தகத்தை நான் ஒரு நாள் கூட திறந்து பார்த்திருக்க மாட்டேன். ரங்கநாதன் மாஸ்டரின் சேகரிப்பில் இருந்த விரிவான வடிவத்தைப் படித்து அதிலிருந்து தான் பரீட்சைக்குத் தயாரித்திருந்தேன். அதே போல் வரலாறில் நதிக்கரை நாகரீங்கள் என்றால், அதைப் பற்றித் தனிச்சிறப்பான நூல்களில் இருந்து குறிப்பெடுக்க வேண்டும்.

அனேகமாக நான் விடைத்தாள்களில் எழுதியவற்றுக்கும் பள்ளிப் பாட நூல்களில் இருந்தவற்றுக்கும் கடுகையொத்த அளவிற்கு தொடர்பிருந்திருக்கலாம்; மற்றவையெல்லாம் எனக்கு என்னெவெல்லாம் புரிந்திருந்ததோ அவை தான் – அதுவும் எனது சொந்த வார்த்தைகளில் எனது சொந்த வாக்கிய அமைப்பில். சரியாக இருக்கலாம் அல்லது தவறாக இருக்கலாம் – அது பிரச்சினையில்லை. மனப்பாடம் செய்து வாந்தியெடுக்க கூடாது என்பதில் அவர் தெளிவாக இருந்தார்.

“அப்படியே மக் அடிச்சி. அப்படியே பேப்பர்ல வாந்தி எடுக்கறதுக்கு நீ என்கிட்டே வந்திருக்க கூடாது. டெக்ஸ்ட் புக்லே இருக்கிறது அவனுக்கு புரிஞ்சது. நாம் எழுத வேண்டியது நமக்கு என்ன புரிஞ்சிருக்கோ அதை மட்டும் தான். மார்க்கு போட்டா போடறான், போடாட்டி போறான். பேப்பர் திருத்தறவன் பெரிய புடுங்கியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரியாதா அவுனுக பவுசு?” – இது தான் ரங்கநாதன் மாஸ்டர். இதனால் தான் அவரிடம் என்னைத் தவிர வேறு யாருமே ட்யூஷனுக்குச் சென்று நிலைத்ததில்லை. என் அப்பாவைச் சமாளிக்க வேறு உத்தியை வைத்திருந்தார்.

“இந்தா பாருங்க.. பய்யனை நம்ப விட்டாச்சில்லே கவலைய விடுங்க. அவன் உருப்படியா வளர்றது என்னோட பொறுப்பு. உங்களுக்கு என்னா வேணும்? பத்தாங் கிளாசுலயும் பண்ணெண்டாங் கிளாசுலயும் பர்ஸ்ட் கிளாசு. அவ்வளவு தானே? அதுக்கு நான் பொறுப்பு. சும்மா வீட்ல வச்சி படி படின்னு ரச்சை பண்ணிட்டு இருக்கக் கூடாது. என்னா புரியுதா? பய்யன் ஒழுங்க வளர்றானானு பாருங்க; படிப்பு மார்க்கெல்லாம் ரெண்டாவது தான். சரியா?”

என் அப்பாவிடம் பேசும் போது மட்டும் தான் அவரது மீசையை அனிச்சையாக தடவிக் கொள்வதை கவனித்திருக்கிறேன். மிக எளியவரான அப்பாவால் அதற்கு மேல் தர்க்கம் செய்து கொண்டிருக்க முடியாது. ”சரிங்க சார்வாள்” என்றவாறே பின்வாங்கி விடுவார். மேலும் அவரது பிரசங்கத்தின் இறுதி வாக்கியங்கள் மொத்தமாக அப்பாவின் வாயை அடைத்து விடும்.

எனது மதிப்பெண்கள் குறைவாக உள்ளது என்பதை அப்பா கவுரவக் குறைவாக கருதினார். ஆனால், பின்னாட்களில் இந்தப் பழக்கம் தான் என்னைக் கரையேற்றியது என்பது அவருக்கு இப்போது வரை தெரிந்திருக்க நியாயமில்லை.

பள்ளி முடிந்ததும் பாலிடெக்னிக். எனது விருப்ப பாடமான இயந்திரவியலின் அன்றைய சந்தை நிலவரப்படியான விலை 30 ஆயிரம். அப்பாவிடம் இருந்த 15 ஆயிரத்துக்கு மின்னணுவியல் பிரிவும் மீதம் 3 ஆயிரம் ரூபாயும் தான் கிடைத்தது. அந்த மூவாயிரத்தில் குமார் சர்ட்ஸில் 90 ரூபாய்க்கு ஆறு சட்டைகளும் 150 ரூபாய்களுக்கு மூன்று பேண்டுகளும் மிஞ்சிய காசை டிப்பாசிட்டாக கட்டி வீட்டுக்கு கேஸ் கனெக்சனும் வாங்கினார். அது வரை மண்ணெண்ணெய் பம்பு ஸ்டவ் தான். சரி அது கிடக்கட்டும்.. பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளின் தரக்குறைவைப் பற்றி இன்றைக்கு நாம் பேசிக்கொண்டிருக்கிறோம் அல்லவா? இதெல்லாம் இப்போது துவங்கியது என்றா நினைக்கிறீர்கள்? தொண்ணூறுகளின் இறுதியில் நிலைமை எப்படி இருந்தது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள எங்கள் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் விரிவுரையாளர் கோதண்டராமன் சார் சொன்னதைக் கேளுங்கள் –

”தோ பாருங்க.. நீங்கெல்லாம் ஆயிரக்கணக்கில் குடுத்து சேர்ந்திருக்கீங்க. ஒழுங்கா பாசாகி வேலைக்குப் போறது தான் உங்களுக்கு முக்கியம். என்னா புரியுதா? இந்த புக்குல மொத்தம் அஞ்சி யூனிட்டு இருக்கு. ஒரு யூனிட்ல இருந்து 20 மார்க்குக்கு செமஸ்டர்ல கொஸ்டின் வரும். மூணு யூனிட் எடுத்தா அறுபது மார்க்கு – பஸ்ட் கிளாஸ். அதுக்கு மேல யாருக்காச்சும் விருப்பம் இருந்தா என்கிட்டே அஞ்சி வருச கொஸ்டின் பேப்பர் டம்ப் இருக்கு. வாங்கி பிரிப்பேர் பண்ணிக்கங்க. டெர்ம் எக்ஸாம்ல பெயில் ஆகிறவன் எல்லாம் என்கிட்டே ஸ்பெஷல் ட்யூசன் வந்துடுங்க. என்னா.. புரியுதா?”

தொழில்நுட்ப அறிவு
மின்னணுவியல் ஆனாலும் சரி தற்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் கணினித் துறையானாலும் சரி – பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலையே படித்தவர்களோடு தொழில்நுட்ப அறிவில் சரிக்கு சமமாக போட்டியிட முடிகிறது.

கல்லூரியின் நூலகம் எனது வசிப்பிடமானது. ஒவ்வொரு யூனிட்டிலும் உள்ள தலைப்புகளையும் துணைத் தலைப்புகளையும் தனியே குறித்துக் கொள்வேன். ஒரு பவுண்டு நோட்டில் அத்தனை தலைப்புகளுக்கும் நூலத்தில் உள்ள நூல்களில் இருந்து குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். ட்யூஷனைத் தவிர்த்துக் கொண்டதால் செய்முறைத் தேர்வுகளில் 50 மார்க்குகளைத் தாண்டியதில்லை; அதே நேரம் எழுத்துத் தேர்வுகளில் 90-க்கு குறைந்ததில்லை.

மொத்தம் அறுபது மாணவர்களில் இறுதி வரை அரியர்ஸ் வைக்காமல் தேர்வானவர்கள் 8 பேர். அதில் இண்டர்னல் மார்க்குகளின் துணையின்றி, விரிவுரையாளர்களின் பகையைச் சம்பாதித்துக் கொண்டு இரண்டாவதாகத் தேர்வாகி வருவது சாதாரண சாதனையல்ல. அந்த மூன்றாண்டு கால அழுத்தத்தின் விளைவாக அக்கடமிக்கலான படிப்பின் மேலான நாட்டமே முற்றிலும் வடிந்து போனது. என்றாலும் இன்று வரையில் மின்னணுவியல் ஆனாலும் சரி தற்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் கணினித் துறையானாலும் சரி – பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலையே படித்தவர்களோடு தொழில்நுட்ப அறிவில் சரிக்கு சமமாக போட்டியிட முடிகிறது என்றால் அதற்கு ரங்கா மாஸ்டர் மட்டுமே காரணம்.

அறிதலில் இருந்து பொருள் நுகர்வு வரைக்கும் இன்றைக்கு எனது கண்ணோட்டம் நிறைய மாறியிருக்கிறது. வளர்ந்திருக்கிறது. என்றாலும், இன்றைய கண்ணோட்டங்கள் பலவற்றுக்குமான அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்தவர் ரங்கா மாஸ்டர் தான். வாசிப்பின் தேவையையும் நோக்கத்தையும் எனது வாழ்வின் கால் நூற்றாண்டுகளைக் கடந்த பின்னர் மிகத் தாமதமாகவே நான் கண்டடைந்தேன் என்றாலும் அதன் சுவையையும் அணுக வேண்டிய முறைமைகளையும் எனது பள்ளிப் பருவத்திலேயே அறிமுகம் செய்து வைத்த ரங்கா மாஸ்டரை என்றென்றைக்குமாக மறக்க முடியாது. இத்தனையாண்டுகள் கழிந்த பின்னும் இன்றும் தினசரி ஏதாவதொரு உரையாடலில், அல்லது எதையாவது புதிதாக கற்கும் போது, அல்லது சிக்கலான தொழில்நுட்ப புதிர் எதற்காவது விடை தேடி விழித்துக் கொண்டு நிற்கும் போது சட்டென்று தோன்றும் – “இதே நம்ம ரங்கா சாரா இருந்தா என்ன சொல்லியிருப்பாரு?”

எப்படித் துவக்குவது என்கிற குழப்பத்தைப் போலவே எங்கே முடிப்பது என்பதும் குழப்பமாகவே இருக்கிறது. சொல்ல நிறைய இருப்பினும், பழைய சம்பவங்களைச் சொல்கையில் அவற்றின் மீது ஏதோவொரு வகையில் பழையதை சிலாகித்து பின்திரும்பி நோக்கும் ’ஆட்டோகிராப்’ சாயல் படிந்து விடும் அபாயம் இருப்பதால் இந்த இடத்தில் நிறுத்திக் கொள்கிறேன்.

–     முருகேசன்

  1. very nice and interesting ….especially your ranga sirs advise of “பரீட்சை எழுதச் செல்லும் போது பாட புத்தகத்தில் இருப்பதை அல்ல, எழுதப்படும் பொருள் குறித்து எனக்கு என்னவெல்லாம் புரிந்திருக்கிறதோ அதை எனது மொழியில் (பாட புத்தகத்தில் இருக்கும் மொழியில் அல்ல) எழுதி வரச் சொல்வார்”………..அப்படியே மக் அடிச்சி. அப்படியே பேப்பர்ல வாந்தி எடுக்கறதுக்கு நீ என்கிட்டே வந்திருக்க கூடாது. டெக்ஸ்ட் புக்லே இருக்கிறது அவனுக்கு புரிஞ்சது. நாம் எழுத வேண்டியது நமக்கு என்ன புரிஞ்சிருக்கோ அதை மட்டும் தான்……….is very great advise………….that is what the student shall know and thats what the teachers must teach…………advise not just like “ஒரு யூனிட்ல இருந்து 20 மார்க்குக்கு செமஸ்டர்ல கொஸ்டின் வரும். மூணு யூனிட் எடுத்தா அறுபது மார்க்கு – பஸ்ட் கிளாஸ். அதுக்கு மேல யாருக்காச்சும் விருப்பம் இருந்தா என்கிட்டே அஞ்சி வருச கொஸ்டின் பேப்பர் டம்ப் இருக்கு. வாங்கி பிரிப்பேர் பண்ணிக்கங்க. டெர்ம் எக்ஸாம்ல பெயில் ஆகிறவன் எல்லாம் என்கிட்டே ஸ்பெஷல் ட்யூசன் வந்துடுங்க

  2. ………………என்றாலும் இன்று வரையில் மின்னணுவியல் ஆனாலும் சரி தற்போது குப்பை கொட்டிக் கொண்டிருக்கும் கணினித் துறையானாலும் சரி – பொறியியலில் இளங்கலை அல்லது முதுகலையே படித்தவர்களோடு தொழில்நுட்ப அறிவில் சரிக்கு சமமாக போட்டியிட முடிகிறது என்றால் அதற்கு ரங்கா மாஸ்டர் மட்டுமே காரணம்………….very Beautifully you have conveyed your credentials & expressed your thanks giving to your GURU………BEST WISHES……KUMAR ., DCE

  3. வாழ்த்துக்கள் முருகேசன். உங்கள் மாஸ்ட்டரைப்போல் நம் அடுத்த தலைமுறைக்கும் கிடைக்க உறுதி ஏற்போம்.

  4. “அப்படியே மக் அடிச்சி. அப்படியே பேப்பர்ல வாந்தி எடுக்கறதுக்கு நீ என்கிட்டே வந்திருக்க கூடாது. டெக்ஸ்ட் புக்லே இருக்கிறது அவனுக்கு புரிஞ்சது. நாம் எழுத வேண்டியது நமக்கு என்ன புரிஞ்சிருக்கோ அதை மட்டும் தான். மார்க்கு போட்டா போடறான், போடாட்டி போறான். பேப்பர் திருத்தறவன் பெரிய புடுங்கியெல்லாம் கிடையாது. எனக்குத் தெரியாதா அவுனுக பவுசு?”

    100 marks can be given to Sir Ranganathan for this sentence itself.

  5. நன்றாக இருந்தது. நானும் எனது அனுபவங்களை எழுதுகிறேன். படிப்பவர்களை வெறுமனே படிக்கின்ற நிலையிலேயே வைத்திருக்காமல் நீங்களும் எழுதுங்கள் என்று எங்களை உற்சாகப்படுத்தும் வினவு வாழ்க. என்ன இருந்தாதும் வினவு தளம் வினவு தளம் தான்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க