Saturday, June 15, 2024
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட குரோம்பேட்டை மாணவர்கள்

மாவட்டக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்ட குரோம்பேட்டை மாணவர்கள்

-

மாவட்ட கல்வி அலுவலகம், செங்கல்பட்டு – குரோம்பேட்டை மாணவர்கள் RSYF தலைமையில் முற்றுகை.
அடிப்படை வசதிகள் கோரி மனு

மாணவர்கள் தனது பேராற்றலின் ஒரு சிறு அளவினை காட்டினாலே அது நினைத்ததை சாதிக்கும் என்பதை நிரூபிக்கும் அனுபவத்தைக் கொண்டது இந்த மனு கொடுக்கும் போராட்டம் .

குரோம்பேட்டை பள்ளியைச் சேர்ந்த 150 மாணவர்கள், அவர்களுக்கு நாங்களும் துணை நிற்போம் என்று பல்லாவரம், கோடம்பாக்கம், தாம்பரம், மதுரவாயல் என 50 மாணவர்கள் என ஏறக்குறைய 200 மாணவர்கள் அணி திரண்டு தங்கள் வர்க்க உணர்வினை வெளிப்படுத்திய நிகழ்வு.

குரோம்பேட்டை பள்ளி அடிப்படை வசதிகளுக்காக கடந்த 3 மாதங்கள் தொடர்ச்சியாக பல்வேறு வடிவங்களில் நாம் (RSYF) போராடி வருகிறோம்.

3 மாதங்களில் குரோம்பேட்டை பகுதியைச் சுற்றியுள்ள 5 பகுதிகளில் தொடர்ச்சியான பிரச்சாரம், சுவரொட்டி, கையெழுத்து இயக்கம், என வேலைகள் நடந்தன. அதேபோல், மாணவர்கள் மத்தியில் கையெழுத்து இயக்கம், பள்ளியின் பிரச்சினைகளில் உடனுக்குடன் தலையிடுவது, பிரச்சாரம், சுவரொட்டி என தொடர்ச்சியாக வேலைகள் நடந்தன.

முதலில் தலைமையாசிரியரிடம் மனு கொடுத்ததன் அடிப்படையில், நமது நெருக்குதல் மற்றும் அவரது சொந்த முயற்சியின் காரணமாக முதல் கட்டமாக 4 கழிவறைகள் ஏற்பாடு செய்துள்ளார்.

இதற்கு அடுத்த கட்டமாகவே இருக்கின்ற கழிவறைகளை பராமரிக்க பணியாள் நியமனம் செய்வது, கூடுதலாக கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் குழாய்கள் அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனே நிறைவேற்றக் கோரி இந்த மனு கொடுக்கும் போராட்டத்தை நடத்தினோம்.

நம்பிக்கை பெற்ற அம்மாணவர்கள் தன்னெழுச்சியாக அணிதிரண்ட நிகழ்வு இது. சில மாணவர்கள் தங்கள் வகுப்பில் உள்ள மொத்த மாணவர்களையும் கொண்டு வந்து நிறுத்தி விட்டனர். மாணவர்கள் அலைஅலையாக வருவதைப் பார்த்த மக்கள் அவர்களை வியப்புடன் பார்த்தனர். குரோம்பேட்டை ரயில்நிலையத்தில் மாணவர்களே மக்களுக்கு பிரசுரங்களை விநியோகித்து வேலைகள் செய்தனர்.

செங்கல்பட்டில் இறங்கி நீண்ட பேரணியாக சென்றோம். மாணவர்கள் இவ்வளவு பேர் வருவதை பார்த்த அப்பகுதி மக்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்களிடம் நமது நோக்கத்தைப் புரியவைப்பதற்காக நாம் அவர்களிடம் பிரசுரம் கொடுத்தோம்.

கல்வி அலுவலகத்தை நமது படை நெருங்குவதற்கு முன்பே போலீசு தகவலறிந்து ‘’சட்டம் ஒழுங்கை’’ நிலைநாட்ட வந்தது. மாணவர்கள் தம் சக்தியை உணர்ந்து கொள்ள தொடங்கியுள்ள இத்தருணத்தில், அதுவும் RSYF தலைமையில் அவர்கள் அணிதிரள்வது என்பதை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள் தானே.

நம்மிடம் வந்து, “இவ்வளவு மாணவர்களை கூட்டி வந்திருக்க கூடாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகி விடும்” என்று சப் – இன்ஸ்பெக்டர் பேசினார்.

“3300 பேர் படிக்கும் பள்ளியில் 4 கழிவறைகள்தான் நீண்ட நாட்களாக உள்ளது. இதனை சரிசெய்து கொடுக்காததால் தான் நாங்கள் வந்துள்ளோம். இதில் எங்கே சட்டம் ஒழுங்கு பிரச்சினை வரும். அவர்கள் தங்கள் பிரச்சினைகளை சொல்வதற்காகத்தான் இங்கே வந்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்சினையெல்லாம் வராது” என அவர்களுக்கு பதில் கொடுத்தோம்.

தகவலறிந்து பத்திரிக்கையாளர்கள், டி.வி. நிருபர்கள் என வந்து சேர்ந்தனர்.

DEO இல்லாததால் அதற்கு கீழ்நிலையில் உள்ள அதிகாரியிடம் மாணவர் தலைவர்களோடு சென்று பேசினோம். நாம் நமது கோரிக்கைகளை கூறினோம். மாணவர் படை திரண்டு வந்திருப்பதைக் கண்ட அவர், உடனே கலெக்டர், DEO, CEO என எல்லோருக்கும் தொடர்பு கொண்டு தகவல் சொன்னார்.

இந்த சூழலில் மாணவர்கள் நமது கோரிக்கை முழக்கங்களை அப்பகுதி அதிரும் வகையில் பு.மா.இ.மு. பேனர், கொடி, சகிதமாக, எழுப்பிக் கொண்டிருந்தனர்.

நமது கோரிக்கைகளை கேட்ட அதிகாரி, ஒரு வாரத்திற்குள் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்து, அரையாண்டு விடுமுறைக்குள் வேலைகளை தொடங்கி விடுவதாக வாக்குறுதி அளித்தார்.

இதனை மாணவர்கள் மத்தியில் அவரே பேச வேண்டும் என்று கூறினோம்.

மாணவர்கள் மத்தியில் வந்து அவர் இந்த விசயத்தை கூறினார். மேலும் நீங்கள் சென்று படியுங்கள். நாங்கள் செய்து கொடுக்க ஏற்பாடு செய்கிறோம் என அறிவுரை கூறினார்.

அதற்குப் பின் பேசிய பு.மா.இ.மு. மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் “அரசு முதலிலேயே செய்து கொடுத்திருந்தால் நாங்கள் வரவேண்டிய அவசியமில்லை. செய்யாததால் தான் நாம் வந்துள்ளோம்” என்று நிலைமையை உணர்த்தினார்.

பத்திரிக்கையாளர்களுக்கு தோழர்கள் பேட்டியளித்தனர்.

“எங்கள் பள்ளியின் நிலைமையை நாங்களே கூறுகிறோம்” என 4 மாணவர்களும் பேட்டியளித்தனர். பள்ளியில் உள்ள அடிப்படைப் பிரச்சினைகளை எதார்த்தமாக கூறினர். இதுவும் மாணவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. அதாவது, நமது கோரிக்கையை நாம் அணிதிரண்டு போராடினால் மக்களிடம் பரவலாக கொண்டு செல்ல முடியும் என்ற நம்பிக்கைதான் அது.

இந்த நிகழ்வு மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையினையும், தாங்கள் யார் என்பதை அறிவதற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்கள் இதனை உணர்ந்துள்ளனர்.

பக்கத்தில் உள்ள ITI-யில் படிக்கும் மாணவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அதில் ஒரு மாணவர் தங்கள் ITI யில் உள்ள பிரச்சினைகளிலும் தலையிடுவீர்களா? என்று கேட்டார்.

பல்லாவரம் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் நமது பள்ளியின் அடிப்படை பிரச்சினைகளுக்காகவும் நாம் உடனடியாக ஏதாவது செய்ய வேண்டும் என்று வெளிப்படுத்தியுள்ளனர்.

மறுபடியும் பேரணியாக செங்கல்பட்டு ரயில் நிலையத்தை நோக்கி புறப்பட்டோம். அமைப்பின் பேனர், கொடியோடு 200 மாணவர்களும் உணர்வோடு பேரணியில் நடந்து வந்தனர்.

இதனை நாம் எல்லா அரசுப்பள்ளி மாணவர்களின் மனநிலையாக மாற்றியமைப்பதற்கான காலம் வெகுதொலைவில் இல்லை.

மாற்றியமைப்போம்!

மனு

நோட்டிஸ்

படத் தொகுப்பு – 1

படத் தொகுப்பு – 2

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

  1. புகைப்படங்கள் ஒவ்வொன்றும் கவிதை போல் விரிகிறது. திங்கள் அன்று தோன்றிய திகைப்பையும், வியாழனன்று தோன்றிய கையறு நிலையையும் வெள்ளியன்று போக்கி எதிர்காலம் குறித்த நம்பிக்கை ஊட்டியமைக்காக நன்றி வினவு நண்பர்களே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க