Thursday, June 20, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் - திப்பு

அறிவும், ஆரோக்கியமும் செழிக்கச் செய்த ஆசான்கள் – திப்பு

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் 9 

றிவு செல்வத்தை ஒரு தலைமுறையிடமிருந்து அடுத்த தலைமுறைக்கு வளர்த்து எடுத்து கொண்டு செல்லும் உன்னதமான ஆசிரியப் பெருந்தகைகள் என்றென்றும் சமூகத்தால் போற்றப்படவேண்டியவர்கள்.ஆசிரிய பணிக்கு நியமனம் பெறுவதனாலேயே ஒருவர் அப்படி போற்றுதலுக்கு உரியவர் ஆகிவிடுவதில்லை.அந்த பணியை கடனுக்கு செய்யாமல் செவ்வனே நிறைவேற்றுபவர்கள் மட்டுமேஅப்படி ஒரு சிறப்பை பெறுகிறார்கள்.அந்த வகையில் ஆசிரிய பணியை உளமார செய்த நல்லாசிரியர்கள் வாய்க்கப் பெற்ற நல்வாய்ப்பாளர்களில் நானும் ஒருவன்.

தமிழ்வழிக் கல்விஎனது நினைவில் நீங்காத இடம் பெற்றுள்ள அப்படியான ஆசிரியர்கள் பற்றி எழுதுவது உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. முதலாவதாக உயர்நிலை வகுப்புகளில் தமிழ் ஆசிரியராக வந்த அய்யா மாதவன் அவர்கள். தமிழ் வகுப்பு என்றாலே ”bore” என்ற அசட்டுத்தனத்திலிருந்து எங்களை மீட்டவர் அவர். தமிழை சுவையாகவும் அழகாகவும் சொல்லித் தந்தவர். நகைச்சுவையாக பேச வல்லவர். அவரது வகுப்பு என்றாலே சிரிப்பும் கும்மாளமும் தூள் பறக்கும்.

பத்தாம் வகுப்பில் அணியிலக்கணம் நடத்தும் முன்பு, இதை புரிந்து கொள்ள முதலில் அடிப்படை இலக்கணத்தை நீங்கள் நன்கு புரிந்து கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லி பத்து பதினைந்து நாட்கள் அதற்காக வகுப்பு எடுத்தார்.எந்த மொழியில் நாம் கல்வி கற்கிறோமோ அந்த மொழியை கசடற கற்பதே கல்வியில் சிறந்து விளங்குவதற்கான அடிப்படை என்பார். நீங்கள் தமிழ் வழி மாணவர்கள் தமிழை இலக்கணப் பிழையின்றி எழுத கற்றுக்கொண்டால் பாடங்களை மனப்பாடம் செய்யாமலே புரிந்ததை வைத்து விடை எழுதி வெற்றி பெற முடியும் என்று சொல்லித் தந்தார். அய்யா மாதவன் காட்டிய வழியில் நாங்கள் சென்றதால் A, B, C என ஆறு பத்தாம் வகுப்பு பிரிவுகள் கொண்ட எங்கள் பள்ளியில் எங்கள் வகுப்பு கூடுதலான தேர்ச்சி விகிதம் பெற்றது.

அடுத்து பனிரெண்டாம் வகுப்புக்கு ஆங்கில ஆசிரியராக வந்த நாகராஜன் சார் அவர்கள். அதுவரை எனக்கு ஆங்கிலம் துப்புரவாக தெரியாது. ஆங்கிலம் அச்சடிக்கப்பட்ட தாளை நீட்டினால் படிப்பேன், அவ்வளவுதான். பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வை கடந்தது எல்லாம் வெறும் மொட்டை மனப்பாடத் திறனை வைத்துத்தான். பனிரெண்டாம் வகுப்பு கல்வி ஆண்டு துவங்கிய ஒரு வாரத்தில் ஆங்கிலம் முதல் தாள் பாடங்கள் எதையும் நடத்தாமல் இரண்டாம் தாள் பாடங்கள் சிலவற்றை நடத்தப் போவதாக அறிவித்தார் நாகராஜன் சார். அப்போது, “இந்த நான்கைந்து நாட்களுக்கு பாடங்களை கூர்ந்து கவனியுங்கள். அடுத்த வாரம் உங்களுக்கு ஆங்கிலம் அத்துப்படியாகி இருக்கும்” என்றார்.

முதலில் voice and tense நடத்தினார். present, past, future tense களை விளக்கினார். அந்தந்த காலத்துக்கான continuous tense களை விளக்கினார். அடுத்து perfect tense களை நடத்தும் முன் ஒவ்வொரு verb க்கும் மூன்று காலப் பதங்கள் இருப்பதை விளக்கி present tense, past tense, past participle பதங்களை விளக்கிச் சொன்னார். தொடர்ந்து முக்காலத்துக்குமான perfect tense, perfect continuous tense களை நடத்தினார். சற்றே ஆங்கிலம் புரிய ஆரம்பித்தது. அடுத்து active voice, passive voice களை புரியும்படி விளக்கி சொன்னார்.

ஆங்கிலப் பேச்சு
“இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு”

ஆகா, என்ன ஒரு ஆச்சரியம். ஆம், கடைசிச் சுழற்றில் cube-ன் ஒவ்வொரு பக்கமும் அதனதன் வண்ணக் கன சதுரங்கள் போய் உட்கார்ந்து கொள்வது போல் மூளையில் ஆங்கில இலக்கணம் போய் உட்கார்ந்து ஆங்கிலம் புரிந்து விட்டது. எழுவாய், பயனிலை, வினைச் சொல் என்ற வரிசையில் தமிழில் நாம் எழுதும் சொற்றொடர் சற்றே மாறி subject, verb, object என்ற வரிசையில் ஆங்கிலத்தில் அமைவதும், செய்வினையும் செயப்பாட்டு வினையும் active voice, passive voice ஆக மனதில் பதிந்து, “இவ்வளவுதாண்டா இங்கிலிபிசு” என்றது. இன்று பல ஆயிரம் கட்டணம் வாங்கிக் கொண்டு சொல்லித் தரப்படும் ஆங்கிலத்தை தான் வாங்கும் சில ஆயிரம் ஊதியத்திற்காக அல்லாமல் தனது மாணவர்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்ற நோக்கில் கடும் சிரத்தை எடுத்து சொல்லி தந்த எங்கள் நாகராஜன் சார் என்றென்றும் எமது நன்றிக்குரியவர்.

அடுத்து எங்கள் உடற்பயிற்சி கல்வி ஆசிரியர் தஸ்தகிர் சார் அவர்கள். விளையாட்டு வகுப்பில் ஒரு பந்தை கொடுத்து மாணவர்களை மைதானத்துக்கு துரத்தி விடுவதோடு தன கடமை முடிந்தது என நில்லாமல் உடற்பயிற்சிகள் பலவற்றை சொல்லித் தருவார். அதன் நன்மைகளை எடுத்துச் சொல்வார். ஆரோக்கியமான உடல் இருந்தால்தான் மூளை நன்கு செயல்படும். படிப்பும் நன்றாக வரும் என்பார். நன்றாக விளையாடுபவன் நன்கு படிக்க மாட்டான், நன்றாக படிப்பவன் நன்கு விளையாட மாட்டான் என்பதெல்லாம் மூட நம்பிக்கை என்பார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளச் சொல்லி உற்சாகமூட்டுவார். மாணவர்களை வரிசையாக வந்து pull ups, push ups எடுத்துக் காட்டச் சொல்வார். கூடுதலாக எடுக்கும் மாணவர்களை பாராட்டி கௌரவிப்பார். சாதாரணமாகவே விளையாட்டு வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். தஸ்தகிர் சார் எங்களுக்கு அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கி தந்தார்.

தஸ்தகிர் சார் ஊட்டிய ஆர்வத்தின் காரணமாக இன்றளவும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தை விடாமல் கடைப்பிடித்து வருகிறேன். குறிப்பாக தண்டால் [push ups] செய்யும்போதெல்லாம் தஸ்தகிர் சார் நினைவுக்கு வருகிறார். தொடர்ந்த உடற்பயிற்சியின் காரணமாக அசைவ உணவு உண்ணும் பழக்கம் இருந்தும் கூட, நடுத்தர வயதை கடந்த பின்னும் கூட குருதி அழுத்தம் , சர்க்கரை நோய் போன்றவை ஏதுமின்றி ஆரோக்கியமாக இருக்கிறேன்.

பள்ளிக்கல்வி முடித்து கல்லூரிக்கு சென்ற போது அந்தச் சூழலே மிகவும் பிடித்தமானதாக இருந்தது. முதன் முறையாக ஆசிரியர்கள் வாங்க போங்க என்று மரியாதை கொடுத்து பேசினார்கள். வகுப்பு துவங்கி சற்று தாமதமாக போனாலும் excuse me என்ற ஒற்றை சொல் yes என்ற பெருந்தன்மையை காட்டி உள்ளே சென்று அமர வைத்தது. இயல்பான விடலை பருவ சேட்டை காரணமாக சில ஆசிரியர்களிடம் ஏற்பட்ட பிணக்கு கூட அக மதிப்பீட்டு மதிப்பெண்களில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எனது கல்லூரி ஆசிரியர்களிடம் பாடங்கள் மூலம் கற்றுக் கொண்டதை விட பழகி கற்றுக் கொண்டது ஏராளம். குறிப்பாக மோகன்ராஜ் சார் அவர்களின் நகைச்சுவை ததும்பும் பேச்சும் கனிவும் கண்டிப்புமாக எங்களை சொந்த தம்பிகள் போல் நடத்திய பாங்கும் மறக்கவொண்ணாதவை. மொத்தத்தில் எனது இன்றைய ஆளுமையில் [அப்படி ஒன்று இருப்பதாக நான் நம்புகிறேன். தயவு செய்து நீங்களும் நம்புங்கள், உங்களுக்கு புண்ணியமா போகும்] கல்லூரி வாழ்க்கைக்கு கணிசமான பங்குண்டு.

நாடும் நாமும் செழிக்க இத்தகைய நல்லாசிரியர்கள் பெருகட்டும்.

– திப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க