privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

-

தார்த்த நிலைகள் கன்னத்தில் அறைந்த போதும் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் உண்மைகளைக் காண மறுத்துக் குளிர்க் காய்ச்சல் வந்தவர்களைப் போல பிதற்றுகிறார்கள். குட்டி முதலாளியத் தன்னகங்காரம் (Ego) உண்மைகளைக் காண முடியாமல் அவர்களைத் தடுக்கிறது. மேலும், இவர்கள் அடிப்படையில் யதார்த்த உண்மைகளை எதிர்கொள்ள முடியாத கோழைகள் அல்லது ஏமாற்றுக்காரர்கள்.

வெலிவேரியா தண்ணீர் தனியார்மய எதிர்ப்பு போராட்டம்
இலங்கையின் மேற்கு மாகாணப் பகுதியில் அமைந்துள்ள வெலிவேரியாவில், தனியார் நிறுவனமொன்று நிலத்தடி நீரை மாசுபடுத்துவதை கண்டித்து நடந்த போராட்டத்தின் மீது சிங்கள ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயமுற்றனர்.

இவ்வாறு நாம் சொல்வதற்கு ஒரு சான்று, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நந்திக்கடலோரம் சிங்கள இராணுவத்திடம் பிடிபட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டு விட்டார் என்ற பட்டவர்த்தனமான உண்மையை இன்னமும் ஏற்க மறுக்கிறார்கள் அல்லது மறைக்கிறார்கள்.

இந்த உண்மையை ஒப்புக்கொண்டால், பிரபாகரனைச்  சுற்றித் தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் இவ்வளவு காலமும் பரப்பியுள்ள பல பொய்மைகளும் அம்பலப்பட்டுப் போகும் என்று அஞ்சுகிறார்கள். இந்த உண்மையிலிருந்து எழும் பல கேள்விகளுக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருக்கும், ஈழத்தின் இன்றைய நிலைக்குப் பொறுப்பேற்க வேண்டியிருக்கும். ஆனால், அதற்குரிய துணிவற்ற கோழைகளான அவர்கள், இந்த உண்மையை உரக்கச் சொல்லும் எம் மீது பாய்ந்து குதறுகிறார்கள்.

‘‘தலைவர் பிரபாகரனையோ புலிகளையோ உயிரோடு பிடிக்கவே முடியாது. அவர்கள் சயனைடுக் குப்பிகளைக் கழுத்தில் சுமந்து திரிகிறார்கள். ஒருநாளும் எதற்காகவும் யாரிடமும் சமரசம் செய்துகொள்ள மாட்டார்கள். அரசியல்,  இராணுவத் துறைகளில் நிகரற்ற திறமை மிக்கவர்கள்” என்று தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் முப்பது ஆண்டுகளாகக் கட்டமைத்து வந்த இந்தப் பிம்பங்கள் எல்லாம் இப்போது நொறுங்கி விட்டன.

பிரபாகரனைப் பற்றி எவ்வளவோ கதைத்துத் திரிந்தவர்கள், அதெப்படி ஒரு படித்தாக ஒரு சொல் கூடப் பேசாமல் இருக்கிறார்கள்! அவர்களில் யாருக்கும் இது உறுத்தாமலா போய் விட்டது! ஈழத்தின் வரலாற்றில் பிரபாகரன் என்ற பெயரைத் திடீரென்று தீண்டத்தகாததாக்கி விட்டார்களே! இதைவிடப் பெரிய துரோகம் வேறுண்டா!

எல்லாவற்றுக்கும் மேலாக, திடீரென்று அவர்களின் இருப்பே கேள்விக்குள்ளாகி, தாங்களே தன்னாளுமையுடன் பேசுவதற்கு ஒரு ”பொருள்”  இல்லாமல் போய்விட்டது.  அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்குப் புலம்பெயர்ந்த புலி ஆதரவாளர்களிடமிருந்து ”பொருள்” கிடைப்பதும் அரிதாகி வருகிறது. அதனால்தான் எல்லா தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் சீமானைப் போல, வைகோவைப் போல பொருளற்ற வெற்று உணர்ச்சிக் கூச்சல் போடுகிறார்கள்.

தமிழர்கள் உண்மைகளின் உணர்வாளர்களாக அல்லாமல், உணர்ச்சிக் கும்பலாக  இருக்க வேண்டும் என்றுதானே சினிமாக்காரர்களும் ”டாஸ்மாக்” வியாபாரிகளும் செயல்படுகிறார்கள். ஈழ இனச் சிக்கலில்  தமிழர்களை வெறும் உணர்ச்சிக் கும்பலாக வைக்கவே தமிழினவாதிகளும் புலி ஆதரவாளர்களும் எத்தனிக்கிறார்கள். அவ்வாறான முயற்சிகளில் ஒரு பகுதிதான் ஈழ இனச் சிக்கலில் எமது நிலைப்பாடுகள் மீதான ஆத்திரமும் அவதூறுகளும். இதற்கு முக்கியமான, அவசியமான காரணம் அவர்களின் பிழைப்புவாத அரசியலுக்கு நாம் தடையாக இருப்பதுதான்.

இவ்வாறு ம.க.இ.க.-வினர் மீது அவதூறு செய்வதற்கு அவர்கள் ஓர் எளிமையான வழியை, முதன்மையான  வழியை, முட்டாள்தனமான வழியைத் தெரிவுசெய்து கொண்டிருக்கிறார்கள். அது, ம.க.இ.க.-வினர் இவ்வளவு காலமும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி வரும் பார்ப்பன பாசிச  சக்திகளான சோ.சாமி, சு.சாமி மற்றும் இந்து ராம், சோனியா-மன்மோகன் கும்பல், போலி கம்யூனிசக் கட்சிகள் ஆகியவரோடு ம.க.இ.க.-வினரது நிலைப்பாடுகளை இணை வைத்து, அடையாளப்படுத்துவதுதான்!

இவ்வாறு செய்வது அடிப்படையிலேயே பித்தலாட்டம், அவதூறு என்று  பலமுறை தெளிவாக நாம் விளக்கிப் பேசியிருக்கிறோம், எழுதியிருக்கிறோம். தமிழ் நாட்டிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தமிழினவாதக் குழுக்களும் புலி ஆதரவுக் குழுக்களும் தனித்தனியாகவும் கூட்டுச் சேர்ந்தும் செய்ததை விடப் பன்மடங்கு அதிகமான மக்களிடம் ஈழ இனச் சிக்கலில் ம.க.இ.க.-வினரது ஈழ ஆதரவு மற்றும் நிலைப்பாடுகளை கொண்டு சென்றிருக்கிறோம். இருந்தாலும் அவர்கள் தமது அவதூறுகளைத் தொடர்கிறார்கள்.

பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம்
யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் மீது சிங்கள ராணுவத்தினர் நடத்திய தாக்குதலைக் கண்டித்து கண்டியிலுள்ள பேராதனை பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டம்; இனம் கடந்த ஒற்றுமையின் அடையாளம்.

அடிப்படை வேறுபாடுகளைக் காண மறுக்கும் அறிவுக் குருடர்கள்

ஈழ இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் பார்ப்பன  பாசிஸ்டுகள் மற்றும் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை, எதிரெதிரானவை, கறுப்பும் வெள்ளையும் போன்று தெளிவானவை. அறிவுக் குருடர்களுக்குத்தான் அவற்றுக்கிடையிலான  கீழ்வரும் வேறுபாடுகள் தெரியாது:

1)  இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்டுகளும் ஏற்பதில்லை. மொழிச் சிறுபான்மையினர் என்றே கருதுகின்றனர்.

ஆனால்,

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம் என்பதே எப்போதும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு.

2) ஈழத் தமிழர்களின், ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் தன்னுரிமையைப் பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும், ஒருபோதும் ஏற்று அங்கீகரித்ததே கிடையாது.

ஆனால்,

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன் தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்கு ஆதரவாகப் போராடி வந்திருக்கிறது.

3) தமிழீழத் தனியரசு என்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது; ஒன்றுபட்டுள்ள இலங்கை பிளவுபடாதவாறு, அதன் அரசியல் சட்டத்துக்கு உட்பட்டுத்தான் மாநில சுயாட்சி அல்லது அதிகாரப் பகிர்வு மூலம் ஈழத் தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வேண்டும் என்பதுதான் பார்ப்பன பாசிஸ்டுகள், போலி கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு.

ஆனால்,

ஈழத் தமிழ்த்தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒரு போதும் மறுக்காத போதும், எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்! ஈழத் தமிழ்த் தேசிய இனம் எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுகிறது என்பதைப் பொருத்துத்    தனியரசு அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனமே தீர்மானிக்கும். (நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பிறகு பார்ப்போம்)

4) ஈழச் சிக்கலுக்கு இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தம் சரியானதொரு தீர்வு. இந்திய ”அமைதிப் படை” படையெடுப்பு  உட்பட இந்திய அரசின் எல்லாத் தலையீடுகளும்  புலிகள் மீதான தடையும் சரியானது, அவசியமானது, இராஜபக்சேவை ஒரு போர்க்குற்றவாளி என்ற முறையிலான சர்வதேச விசாரணை – தண்டனையெல்லாம் கூடாது என்பது தான் பார்ப்பன  பாசிஸ்டுகள்,  போலிக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு. புலிகள், தமிழகத் தமிழினவாதிகள் கூட இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகள் எல்லாம் ஈழத் தமிழருக்கு நட்புச் சக்திகள்; ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளில் எல்லோரும் இல்லையானாலும் இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர்., வாஜ்பாய் போன்ற சில தலைவர்கள் ஈழத் தமிழர்கட்கு நட்புச் சக்திகள் என்றே நம்பினர்; இன்னமும் நம்புகின்றனர். இந்திய அரசும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளும் ஈழத்துக்கு எதிரி சக்திகள் என்று வைத்துப் போராட வேண்டும் என்று அமைதிப்படை ஆக்கிரமிப்புக் காலத்தில் இருந்து முள்ளிவாய்க்காலுக்கு முன்பு வரை புலிகளும் தமிழகத் தமிழினவாதிகளும் முன்வைக்கவேயில்லை. அமைதிப் படை ஆக்கிரமிப்புக் காலத்திலும் இவர்களின் இந்திய எதிர்ப்புக்குக் காரணம், புலிகளுக்கு எதிராக இந்தியா போர் தொடுத்ததுதானே தவிர, இவர்களாக இந்திய எதிர்ப்பு நிலை எடுக்கவில்லை. இதனைப் புலிகளே ஒப்புக் கொண்டுள்ளார்கள். மற்றபடி, இந்திய அரசு மற்றும் ஆளும் வர்க்க அரசியல் கட்சிகளைத் ”தாஜா” செய்து, ஈழத்தின் நட்புச் சக்திகளாக அவற்றை மாற்ற வேண்டும் என்றுதான் முள்ளிவாய்க்கால் முடியும் வரை அவர்கள் முயன்றார்கள். இப்படிச் செய்ததைத்தான் பிரபாகரனின் அரசியல் திறமை என்று இங்குள்ள தமிழினவாதிகள் போற்றிப் புகழ்ந்தனர்.

ஆனால்,

1983 கறுப்பு ஜூலை நாட்களில் இருந்து இலங்கை, ஈழச் சிக்கலில் இந்திய அரசின் தலையீடுகள், இந்தியா ஈழப் போராளிகளுக்கு போர்ப் பயிற்சியும் ஆயுதங்களும் நிதியும் வழங்கியது கூட உள்நோக்கங்கொண்டு, தெற்காசிய வல்லாதிக்கத் தன்னலன்கள் கருதி இந்தியா செய்தவைதாம்; இந்திய அரசு ஈழத் தமிழினத்தை வெளிப்படையாகவும் அரசியல் ரீதியிலும் அங்கீகரித்து ஆதரிப்பதற்கு மாறாக, சதித்தனமாக, தனது உளவுப்படையான ”ரா’’-வை ஏவி விட்டுப் போராளிக் குழுக்களிடையே  ஊடுருவி, அவர்களைப் பிளவுபடுத்தி மோதவிட்டு, இரத்தம் குடித்ததையும் ஈழத் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட  இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்தையும் முற்றிலும் தவறானவை என்று ம.க.இ.க. எதிர்த்தது. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய இராணுவத்தின் படையெடுப்புக்குப் பிறகு, அதை எதிர்த்து விடுதலைப் புலிகள் இந்திய இராணுவத்துக்கு எதிராகப் போரிட்டதும், அதற்காக பிரேமதாசா அரசுடன் புலிகள் கூட்டுச் சேர்ந்ததும் சரியானவை என்பதே ம.க.இ.க.வின் நிலைப்பாடு. இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தத்துக்கு முன்பிருந்து முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழினப் படுகொலைகளை முன்னின்று நடத்தியது உட்பட இந்திய அரசு மற்றும் அதன் ஆளும் வர்க்க கட்சிகளின் சதித்தனமான வல்லாதிக்கத் தலையீடுகளை ம.க.இ.க மட்டுமே முரணற்ற முறையில் எதிர்த்துப் போராடி வந்திருக்கிறது. அதன் பிறகும் இராஜபக்சேவைப் போர்க் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்க வேண்டுமெனவும் இதைத் தடுப்பதில் இந்திய அரசின் தில்லுமுல்லுகளையும் அம்பலப்படுத்திப் போராடி வந்திருக்கிறது.

ஆனால், முள்ளிவாய்க்காலில் புலித் தலைமையையும் பல்லாயிரம் ஈழத் தமிழரையும் பலி கொடுத்த பிறகு, இந்திய அரசின் ஈழ எதிர்ப்பு சதிகளையும்  தில்லுமுல்லுகளையும் உண்மைகளையும் தாமே கண்டுபிடித்ததைப் போலவும் தாம் எப்போதும் இந்திய எதிர்ப்பு நிலையிலிருந்ததைப் போலவும் திடீரென்று புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் இப்போது குதியாட்டம் போடுகிறார்கள். இந்திய அரசை எதிர்த்துப் போராடாத தவறை யாரோ செய்து விட்டதைப் போலவும் நாடகமாடுகிறார்கள். இப்போதும் காங்கிரசும் அதன் கூட்டாளிகளும் மட்டும்தாம் ஈழத்தின் எதிரிச் சக்திகள் என்றும் ஜெயலலிதாவும் அவரை ஆதரிப்பதன் மூலம் மோடியும் ஈழத்தின் நட்புச் சக்திகள் போலவும் பிழைப்புவாத அரசியல் நடத்துகிறார்கள்.

5) இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவை புலிகளின் பயங்கரவாதச் செயல் என்று பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் வெறித்தனமாகச் சாடினர். இராஜீவ் காந்தி கொலையைத் தமிழினவாதிகள் கூடக் கண்டித்தனர். தாங்கள் செய்த பல கொலைகளைப் புலிகளால் கூட நியாயப்படுத்த முடியவில்லை. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையை ஏவி விட்டது, புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்டது. பார்ப்பன பாசிஸ்டுகளும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளும் அதையெல்லாம் நியாயப்படுத்தினர்.

ஆனால்,

இராஜீவ் காந்தியும் சிங்கள பாசிச எதிரிகளும் ஈழத் தமிழ்த் துரோகிகளும் கொல்லப்பட்டபோது அவற்றை எதிர்த்தோ, கண்டித்தோ ம.க.இ.க. எழுதியதோ பேசியதோ இல்லை. கள்ள மௌனம் சாதித்ததும் இல்லை; இப்படிப்பட்ட நடவடிக்கைகள் ஏன் சரியானவை, அவசியமானவை என்றுதானே எழுதியது, பேசியது. இராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு வந்த நாட்களில் ஜெயா அரசு  ஈழத் தமிழர்களுக்கு எதிராகப் பாசிச வேட்டையைக்  கட்டவிழ்த்து விட்டபோது, இங்குள்ள தமிழினவாதிகள் கூண்டுக்குள் ஒளிந்து கொண்டு மௌனம் காத்தனர்.  ம.க.இ.க.வோ, புலிகள் தடை உட்பட அவற்றை எதிர்த்துப் போராடியது. அதற்காக ”தடா”, அரசு விரோதச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பல தோழர்கள் சிறைப்பட்டனர்.

இவ்வாறு அடிப்படையான பல பிரச்சனைகளில் ம.க.இ.க. யாரை எதிர்த்துப் போராடி வருகிறதோ, அந்தப் பார்ப்பன பாசிஸ்டுகளோடும் போலி கம்யூனிஸ்ட் கட்சிகளோடும் ம.க.இ.க.வை அடையாளப்படுத்தியும் இணை வைத்தும் புலி ஆதரவளர்களும் தமிழினவாதிகளும் அவதூறு செய்கிறார்கள். என்ன ஓர் அரசியல் நேர்மை! அறிவு நாணயம்!

‘‘ஈழத் தமிழர் இனச் சிக்கலில் ம.க.இ.க.-வின் நிலைப்பாடு  கம்யூனிஸ்டுகளுக்கே உரிய வறட்டுத்தனம் நிறைந்தவை என்று கூறிப் போலி கம்யூனிஸ்டுகளுடன் இணை வைத்தும் தமிழினவாதிகள் அவதூறு பரப்புகிறார்கள். ஆனால், போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளும் ம.க.இ.க.-வின் நிலைப்பாடுகளும் அடிப்படையிலேயே மாறுபாடானவை. ருசியாவில் ஸ்டாலினுக்குப் பிறகு குருச்சேவ் திருத்தல்வாதம் நிலைநாட்டப்பட்டதும் சி.பி.ஐ.யும், நக்சல்பாரிப் பேரெழுச்சிக்குப் பிறகு சி.பி.எம். கட்சியும் ”இனி உலகின் எல்லா நாடுகளிலும் தேசிய இனப் பிரச்சினைகள் முடிவுக்கு வந்து விட்டன. தேசிய இனங்கள் தன்னுரிமை கேட்பதே தவறானது, அவ்வாறான கோரிக்கையை ஆதரிக்க முடியாது”  என்று அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டன. ஆனால், ”தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகள் தவறானவை, திருத்தல்வாதமானவை” என்று ம.க.இ.க.- வினர் உட்பட புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் அவற்றை எதிர்த்து வருகின்றனர். அதைப் போலவே, சீனாவும் கியூபாவும் இராஜபக்சே அரசை ஆதரிப்பதைக் காட்டி அவற்றுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருப்பதாக இட்டுக் கட்டியும் அவதூறு செய்கிறார்கள் தமிழினவாதிகள். தேசிய இனச் சிக்கலில் மார்க்சிய – லெனினிய ஆசான்களின் போதனைகள் இப்போதும் பொருத்தமானவை என்று கருதும் புரட்சிகரப் பொதுடைமையாளர்கள் வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் நடக்கும் தன்னுரிமைப் போராட்டங்களை ஆரம்பம் முதலே ஆதரித்து வருகின்றனர். இப்போது கம்யூனிஸ்டு அல்லாத நாடுகள் செய்யும் தவறுகளுக்கு நாம் பொறுப்பாக முடியாது என்று தெரிந்தும் தமிழினவாதிகள், தமது அவதூறுகளைத் தொடருகின்றனர்.

அதே சமயம், தமிழினவாதிகள்தாம் இந்தியாவின் தேசிய இனச் சிக்கலில் போலி கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாடுகளுக்கு இணையான நிலைப்பாடுகளை எடுக்கின்றனர். வட கிழக்கு இந்தியாவிலும் காசுமீரத்திலும் தன்னுரிமை கோரும் போராட்டங்களை ஆதரிக்காதது மட்டுமல்ல, அவை அவசியமற்றவை என்று கூட பல சமயங்களில் எதிர்க்கவும் செய்கின்றனர். சி.பி.ஐ. கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு ஈழ விடுலைக்கு எதிரானது என்று தமிழினவாதிகளுக்குத் தெரியும்; இருந்தாலும், ஜெயலலிதாவின் அடிவருடியான தா.பாண்டியன் அவரது அருளைப் பெறுவதற்காகவே ஈழ ஆதரவு நாடகமாடுவதும் இவர்களுக்குத் தெரியும்; ஆனாலும் ஈழ ஆதரவு மேடைகளை அலங்கரிக்கும் விருந்தினராக தா.பாண்டியனை முன்நிறுத்த இவர்கள் தவறுவதில்லை. இதுதான் தமிழினவாதிகளின் அரசியல் நியாயம்!

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்பதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் முன்னெடுக்கின்றனர், ம.க.இ.க.-வினர். அதை அங்கீகரித்து, ம.க.இ.க.-வினரை ஈழத்தின் நட்பு சக்தியாகக் கருதாது, ஈழத்தின் எதிரி சக்தியாகக் கருதி, ம.க.இ.க.-வினர் மீது தமிழினவாதிகள் எப்போதும் பாய்கின்றனர். ஆனால், தமிழீழத் தனியரசை மட்டுமல்ல, ஈழத் தமிழரை ஒரு தேசிய இனமாகவே ஏற்காத இந்திய தேசியக் கட்சிகளின்  தனித்தனி தலைவர்களையும் உள்ளூர் பிரபலங்களையும் ஈழத்தின் நட்புச் சக்தியாகக் கருதி, அவர்களிடம் ஆதரவு தேடுகின்றனர்

எரிபொருள் விலை உயர்வை கண்டித்த மீனவர்கள் போராட்டம்
எரிபொருள் விலை உயர்வை கண்டித்து வடமேற்கு மாகாணத்திலுள்ள சிலா என்ற கிராமத்தை சேர்ந்த மீனவர்கள் ராஜபக்ஷே அரசுக்கு எதிராக நடத்திய போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார்; எட்டு பேர் படுகாயமுற்றனர்.

தமிழினவாதிகளின் பார்வையில் ஈழ இனச் சிக்கலுக்கு தமிழீழத் தனியரசு என்பது ஒரே தீர்வு என்பது மட்டுமல்ல; தமிழகத் தமிழினவாதிகளுக்கு ஈழ இனச் சிக்கல் ஒன்று மட்டுமே விவாதத்துக்கும் வினையாற்றுவதற்குமான ஒரே பிரச்சினை. இந்த நாட்டைச் செயற்களமாகக் கொண்டுள்ள ம.க.இ.க.வினர் தம்முன் உள்ள எல்லாப் பிரச்சினைகளில் ஈழ இனச் சிக்கலுக்கு அதற்குரிய முன்னுரிமை தருகின்றனர். இந்த உண்மையை அறிந்திருந்தும், ம.க.இ.க.வினர் ஈழத் தமிழருக்கு எதிரானவர்கள், அவர்களுக்கு ஈழத் தமிழர்  மீது அக்கறையில்லை, அதனால்தான் தமிழீழத் தனியரசு கோரிக்கைக்காக ம.க.இ.க.வினர் போராட மறுக்கிறார்கள் என்று அவதூறு செய்கிறார்கள்.

இலங்கையில் வாழும் ஈழத் தமிழர்கள் ஒரு தனித் தேசிய இனம்; அதற்குப் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமையை எப்போதும் ம.க.இ.க. ஏற்பதுடன், தன்னுடைய திட்டத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு அதை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைவதற்காகப் போராடி வந்திருக்கிறது.

ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய  தன்னுரிமை என்பதே தமிழீழத்  தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியது என்பதுதான் எப்போதும் ம.க.இ.க.-வின் நிலை. தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் உரிமையை மறுப்பது, ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையையே மறுப்பதாகும். ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின்  தன்னுரிமையை ஒருபோதும் மறுக்காத, எதிர்க்காத போதும், அதற்காகப் எப்போதும் போராடி வரும் ம.க.இ.க.வைத் தமிழீழத் தனியரசுக்கு எதிரியாகச் சித்தரிப்பது அவதூறுதான்! திட்டமிட்ட சதிதான்!

குழப்பம் எதிலே? ம.க.இ.க.-வினரின் நிலைப்பாடுகளிலா, தமிழினவாதிகளின் பார்வையிலா? 

‘‘தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கை 1976 வட்டுக்கோட்டை தீர்மானத்திலேயே முன்வைக்கப்பட்டு, அதைத்தாம் ஏற்பதாக 1977 தேர்தல்களிலேயே ஈழத் தமிழர்கள் ஒருமனதாக ஒப்புதல் கொடுத்து விட்டார்கள், பிறகு ஏன் ‘தமிழீழத் தனியரசு  அமைத்துக் கொள்வதா,  இல்லையா என ஈழத் தமிழ்த் தேசிய இனம் தீர்மானிக்கட்டும்’ என்று ம.க.இ.க. சொல்ல வேண்டும்? ஆகவே, ம.க.இ.க. தமிழீழத் தனியரசுக்கு எதிரானது” என்று தமிழினவாதிகள் பாய்கிறார்கள். மேலும், சிங்கள மக்கள் அனைவரும் ஈழத் தமிழர்க்கெதிரான சிங்களப் பேரின வெறியும், பௌத்த மதவெறியும் கொண்டுள்ளபோது, குறிப்பாக முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழர் இனப்படுகொலைக்குப் பிறகு தமிழீழத் தனியரசு தானே சரியானது, அவசியமானது என்று  தமிழினவாதிகள் வாதிடுகின்றனர்.

ஈழ இனச் சிக்கலுக்குத் தமிழீழத் தனியரசுதான் எல்லா நிலைகளிலும் எப்போதும் ஒரே தீர்வு என்று கூறுவதைத்தான் ம.க.இ.க.-வினர் ஏற்றுக்கொள்ளவில்லையே தவிர, தமிழீழத் தனியரசுக்கு எதிரானவர்கள் என்பது உண்மையில்லை. இது நாம் இப்போது எடுக்கும் முடிவல்ல. முன்பே எழுதியிருப்பதுதான். ”அப்படியானால், தமிழீழத் தனியரசுக்காக ஏன் போராடவில்லை, இனிமேலாவது அதற்காகப் போராடுவீர்களா” என்று கேட்டு ம.க.இ.க.-வை மடக்குவதாக எண்ணிக் கொண்டு தமிழினவாதிகள் வாதாடக் கூடும்.

தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கைக்காக இரண்டு காரணங்களுக்காக ம.க.இ.க.-வினர் போராடவில்லை. தமிழினவாதிகளின் பார்வையில் தமிழீழத் தனியரசு என்பதுதான் ஈழ இனச் சிக்கலுக்கு ஒரே கோரிக்கை, ஒரே தீர்வு; அதனால்தான் அதை மட்டுமே முன் வைக்க வேண்டும் என்கிறார்கள். அது குட்டி முதலாளிய வர்க்கத்தின் பகுத்தறிவுக்குப் புறம்பான, குறுந்தேசிய இனவாதப் பார்வையிலானது.

ம.க.இ.க. வினரின் பார்வையில் – இதுதான் அறிவியல்பூர்வமானது, பாட்டாளி வர்க்கப் பார்வையிலானது – தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்ளும் உரிமையையும் உள்ளடக்கியதாக ஈழத் தமிழ்த் தேசிய இனத்தின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமைக் கோரிக்கையையும், அதற்கான போராட்டத்தையும் நாம் முன்னெடுக்கிறோம். போலி கம்யூனிஸ்டு கட்சிகள் சொல்லுவதைப் போன்று, செய்வதைப் போன்று (இந்திய தேசியவாதிகளோடு சேர்ந்து கொண்டு, பிரிவினை கோரி காசுமீரத்திலும் வடகிழக்கிலும் நடக்கும் போராட்டங்களை எதிர்க்கிறோமா? போலி கம்யூனிஸ்டு கட்சிகளைப் போன்று எப்போதாவது இந்திய தேசிய ஐக்கியம் – ஒருமைப்பாடு, பிரிவினைவாத எதிர்ப்புக் கூச்சல் போடுகிறோமா?) பிரிந்து போகும் உரிமையை ஒதுக்கிவிட்டு, மறுத்துவிட்டு வெறுமனே தன்னுரிமைக்காக ம.க.இ.க.வினர் நிற்கவில்லை. ஆகவேதான் தமிழீழத் தனியரசு என்ற கோரிக்கையைத் தனியே முன்வைத்துப் போராட வேண்டியதன் அவசியம் இல்லை.

தமிழீழத் தனியரசு கோரிக்கையை மட்டுமே முன்வைத்து, அதையே இலக்காகக் கொண்டு செயல்பட வேண்டும் என்கிறார்கள், தமிழினவாதிகள். பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் அவ்வாறு செய்ய முடியாது, செய்யக் கூடாது, செய்யவுமில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட தேசிய இனங்கள் வாழும் ஒரு நாட்டில், ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு மட்டுமல்ல, ஒடுக்கும் பெருந்தேசிய இனத்துக்கும், அதன் பரந்துபட்ட மக்களுக்கும் கூட எதிரானதுதான்  அந்நாட்டை ஆளும் பாசிச அரசு. அதற்கு எதிராக ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் தனித்தனிப் பொதுவுடைமைக் கட்சி வைத்து, தனித்தனித் திட்டமும் இலக்கும் வைத்துப் புரட்சி செய்வது; அவ்வாறான தனித்தனி புரட்சிகளில் தேசிய இனங்கள் வெற்றிபெற்று, தனித்தனியே சோசலிசத்தைக் கட்டியமைத்த பின்னரோ, அதற்கு முன்னரோ  ஐக்கியப்படுவது என்று பேசுவது மார்க்சிய – லெனினியப் பார்வையே கிடையாது.

அந்நாட்டை ஆளும் பாசிச அரசுக்கு எதிராக ஒரே புரட்சிகரப் பொதுவுடைமைக் கட்சியைக் கட்டுவது; அக்கட்சி, எல்லா தேசிய இனங்களுக்கும் சமவுரிமையை மட்டுமல்ல, ஒடுக்கப்படும் தேசிய இனத்துக்குப் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை உறுதிப்படுத்துவது; அக்கட்சி ஒடுக்கும் (சிங்களத்) தேசிய இனத்தவரிடையே ஈழத் தமிழர்  தன்னுரிமையையும், ஒடுக்கப்படும் ஈழத் தமிழ் தேசிய இனத்தவரிடையே ஐக்கியத்தையும் பிரச்சாரம் செய்து, அதன் மூலம் அந்நாட்டுப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் தேசிய இனங்களை ஐக்கியப்படுத்திப் புதிய ஜனநாயகப் புரட்சியை முடிப்பதுதான் அக்கட்சியின் இலக்காகவும் திட்டமாகவும் இருக்கும் என்பதுதான் மார்க்சிய – லெனினியப் பார்வை.

இந்த மார்க்சிய-லெனினியப் பார்வையை மறுப்பதற்காகத் தமிழினவாதிகள் பலவாறு புளுகித் திரிகிறார்கள். ”சிங்களப் பெருந்தேசிய இனத்து மக்களுக்கும்  அவர்களை ஆளும் பாசிச அரசுக்கும் வேறுபாடே கிடையாது; பகை முரண்பாடும் கிடையாது; பெருந்தேசிய இனத்து மக்கள் அனைவரும் ஒடுக்கப்படும் சிறுபான்மை தேசிய இன மக்களுக்கு எதிரானவர்கள்; இலங்கையின் இரு தேசிய இனப் பாட்டாளி மக்களும் ஐக்கியப்பட மாட்டார்கள்; இலங்கையில் ஈழத் தமிழ் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் அமைப்புகள் எதுவும் சிங்களவர் மத்தியில் கிடையாது” ஆகிய தமிழினவாதிகளின் கருத்துக்களைப்  பொதுவுடைமையாளர்களான ம.க.இ.க.வினர் ஏற்கவில்லை. ஏனென்றால், தமிழினவாதிகள் கூறிவரும் மேற்கண்ட கருத்துகளில் உண்மையில்லை.

இந்தியாவின் ஈழ ஆக்கிரமிப்புப் படையை வெளியேற்றுவதற்கான போராட்டத்தில், நோக்கில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டு நின்றிருக்கிறார்கள். 1983-இல் இருந்து தொடர்ந்து நடந்து வந்த ஈழப்போர் காரணமாக இலங்கையில் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் முற்றியபோது   சிங்கள, தமிழ் மக்கள் அமைதியை வேண்டி நின்றபோது அதையே முன்வைத்து அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டார், சந்திரிகா  குமாரதுங்கே. அவரைத் தேர்ந்தெடுத்து அமைதி, போர்நிறுத்தம், பேச்சு வார்த்தையை ஆதரித்ததில் சிங்களரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள். சிங்கள இன வெறியர்களினால் அம்முயற்சி சிதறடிக்கப்பட்டது வேறு விடயம். 2004 சுனாமியின் பேரழிவுகளை எதிர்கொள்வதில் சிங்களவரும் ஈழத் தமிழரும் ஒன்றுபட்டிருந்தார்கள்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட புலிகளின் அரசியல்  பொறுப்பாளர் நடேசனின் மனைவியாகிய சிங்களப் பெண்ணைப் போன்று தமிழ்த் தேசிய இன மக்களின் தன்னுரிமையை ஏற்கும் சிங்களவர்களும், சிங்களவர் மற்றும் ஈழத் தமிழர்களைக் கொண்ட குழுக்களும் அங்குண்டு. தமிழ்த் தேசிய இன மக்களின் மனித உரிமைக்காகவும் இலங்கைப் பாசிச அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடிக் கொல்லப்பட்டவர்களும் பத்திரிக்கையாளர்களும் மனித உரிமைப் போராளிகளும் சிங்களவரிடையே உண்டு. ஈழ விடுதலைப் போராட்டங்கள் நடந்த அதே காலகட்டத்தில், இலங்கைப் பாசிச அரசால் ஈழத் தமிழர்கள் மட்டும் கொன்று குவிக்கப்படவில்லை. பல்லாயிரம் சிங்கள இளைஞர்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு எதிரான வெள்ளை வேன் வேட்டை இன்னமும் தொடர்கிறது. 75,000 சிங்கள இளைஞர்கள் இந்தக் காலத்தில் காணாமல் போயிருக்கிறார்கள் என்று சர்வதேச மனித உரிமை அமைப்பு இலங்கைப் பாசிச அரசுக்கு எதிராகக் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

ஆகவே, அரசியல் காரணங்களுக்காக சிங்களவரும் ஈழத் தமிழரும் ஐக்கியப்படுவது சாத்தியமே இல்லாதது அல்ல.

 தமிழினவாதிகளின் உருட்டல் மிரட்டல், பொய்மைகள் பலிக்காது

விடுதலைப் புலிகளே தமிழீழத் தனியரசு என்ற தீர்வை பல்வேறு சமயங்களில் மாற்றிக் கொண்டும் கைவிட்டும் உள்ளனர். தன்னலத்துக்காகத் தன்னுரிமைக் கோரிக்கையையே கைவிட்டதும் உண்டு. வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்ததும் உண்டு.

இராஜீவ் – ஜெயவர்த்தனே 1987 ஒப்பந்தப்படி வடக்கு, கிழக்கு இணைந்த நிர்வாகசபை அமைக்கும் ஏற்பாட்டை ஏற்றுக்கொண்ட போதும், இந்திய இராணுவத்தை வெளியேற்றுவதற்காக பிரேமதாசா அரசுடன் கூட்டுச் சேர்ந்த போதும், ரணில், சந்திரிகா அரசுகளுடன் சமாதானம், போர்நிறுத்தம், பேச்சுவார்த்தைகள் நடத்திய போதும் தன்னுரிமைக் கோரிக்கைக்குப் புலிகள் வெவ்வேறு வியாக்கியானங்களைக் கொடுத்து தமிழீழத் தனியரசு கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யவில்லையா? புலிகளின் இத்தகைய முன்னெடுப்புகளைத் தயக்கமின்றித் தமிழினவாதிகள் ஆதரித்தனர்.

ஆனால், ஈழத் தமிழர் நலனில் தமக்கு மட்டுமே அக்கறை இருப்பதைப் போன்று காட்டிக் கொள்ளும் தமிழினவாதிகள், ஈழ இனச் சிக்கலுக்குத் தீர்வு சொல்லவும் போராடவும்  தமக்கே ஏகபோக உரிமை கோரிக் குதிக்கிறார்கள். ஈழத் தமிழருக்கு ஆதரவாகப் போராடுவதாக கூறிக் கொண்டு தமிழினவாதிகள் ஏதாவது ஒரு முழக்கத்தை, திட்டத்தை முன்வைத்துப் பல பெயர்ப் பலகை அமைப்புகளுடன் கூட்டுச் சேர்ந்து அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள், அதை ஆதரிக்கும்படி நிர்ப்பந்திக்கிறார்கள்; இல்லையென்றால் ஈழத் தமிழர்க்கு  எதிரானவர்கள் என்றும் அவதூறு செய்கிறார்கள்.

ஈழத் தமிழர் இனச் சிக்கலுக்கு உடனடியான. விரைவான, நிச்சயமான தீர்வு என்ற பெயரில் அடுக்கடுக்கான பல பொய்மைகளை நம்பவைக்க தமிழினவாதிகள்  எத்தனிக்கிறார்கள். இன முரண்பாடு முதன்மையாகி  விட்ட நிலையில் தமிழ் – சிங்களப் பாட்டாளிகளை ஒன்றுபடுத்திப் புரட்சி செய்வது சாத்தியமேயில்லை; இன உணர்வுமிக்க தமிழர்களைத் திரட்டித் தேசிய விடுதலையை விரைவில் சாதிக்க முடியும்; இராணுவ ரீதியிலும் அரசியல்ரீதியிலும் நிகரற்ற பிரபாகரன் தலைமையில் ஈழ விடுதலை விரைவில் வெற்றிகரமாக முடிக்கப்படும் என்றவாறு எவ்வளவோ சொன்னார்கள். முள்ளிவாய்க்கால் கொலைக் களத்தில் எல்லாம் நொறுங்கிப் போயின.

தவறுகளில் இருந்து நேர்மையான முறையில் படிப்பினைகளைப் பெறுவதற்குப் பதிலாக, பன்னாட்டுச் சதியால்தான் இந்த நிலை என்று மழுப்பிச் சமாளிக்கிறார்கள். முள்ளிவாய்க்காலுக்கு ஐந்தாண்டுகளுக்கு முன்பே தீட்டப்பட்டதாகக் கூறப்படும் பன்னாட்டுச் சதியை எதிர்கொள்ள முடியாமல் போனதும் முல்லைத் தீவின் குறுகிய நிலப் பரப்பில் மூன்று லட்சம் ஈழத் தமிழரைக் குவித்துப் பல்லாயிரம் பேரைப் பலி கொடுத்ததும்தான் இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் நிகரற்ற  தலைமையா?

பலம் வாய்ந்த சிங்கள பாசிச இராணுவத்தையும் பகைமையான பன்னாட்டு சக்திகளையும் எதிர்கொண்டிருந்த ஈழ விடுதலைப் போரில் பிரபாகரன் தலைமை இராணுவ ரீதியிலும் அரசியல் ரீதியிலும் பாரிய தவறிழைத்து விட்டது. இராணுவ ரீதியில்  நீண்டகால மக்கள் யுத்தம் என்ற போர்த்தந்திரத் திட்டத்தை மேற்கொள்ளத் தவறியது. நீண்டகால மக்கள் யுத்தம் என்ற பாதையில் சாத்தியமான மக்கள் ஆதரவு முழுமையாகத் திரட்டப்பட வேண்டும். என்ன இலட்சியமோ அதற்குதான் மக்கள் ஆதரவைத் திரட்ட வேண்டுமே தவிர, யார் தலைவரோ அவர் மீதான வழிபாட்டுக்கு ஆள் திரட்டக் கூடாது.

சிங்கள பாசிச அரசுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையிலான முரண்பாட்டைப் பயன்படுத்திகொண்டு நட்புச் சக்திகளை வென்றெடுத்திருக்க வேண்டும். ஒருவேளை உடனடியாக அது சாத்தியமில்லாமல் போனாலும், மக்கள் யுத்தம் நீடிக்கும் நீண்டகாலப் போக்கில் இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகள் முற்றிவரும் சூழலில் அது சாத்தியமே. இலங்கையில் அவ்வாறான நிலைமைகள் கடந்த 30 ஆண்டுகளில் பல முறை வந்துள்ளன. ஆனால், விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் ஈழத் தமிழரின் ஆதரவையே குறுந்தேசிய இனவாத அடிப்படையில் கட்டமைத்துக் கொண்டிருந்தனர். சிங்கள பாசிச இராணுவத்துடன் கடும் போரில் ஈடுபட்டிருந்தபோது கூட மறுபுறம் ஈழத் தமிழரிடையே கூட சகோதரப் போரை நடத்திய விடுதலைப் புலிகளும் அதன் தலைமையும் நட்புச் சக்திகளை  வென்றெடுப்பதில் எங்ஙனம் அக்கறை கொண்டிருக்க முடியும்?

பிரபாகரனின், புலிகளின் வீரதீர சாகசங்களைச் சொல்லியே சினிமா நாயகத்தன வழிபாட்டை வைத்து பிழைப்பு நடத்துகிறார்கள், தமிழினவாதிகள். ஈழத் தமிழர் தன்னுரிமை பெறுவதற்கான அவசியமான, சரியான அரசியல் உத்திகளை முன்வைத்துப் போராடுகின்றன, ம.க.இ.க.வும் அதன் தோழமை அமைப்புகளும்.

ம.க.இ.க. தமிழீழத்துக்கு எதிரானது என்ற அவதூறு, ம.க.இ.க.-வின் பல்வேறு போரட்டங்களைப் பல ஆண்டுகளாக நேரில் காணும் தமிழக மக்களிடையே எடுபடாமல் போகவே, ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின் நிலைப்பாடு தமிழீழத் தனியரசுக்கு எதிரானது, சந்தர்ப்பவாதமானது, குழப்பமானது என்று ம.க.இ.க. மீது பலவாறாக அவதூறையும் அவநம்பிக்கையையும் தமிழினவாதிகள் பரப்புகிறார்கள்.

கொழும்புவில் நடந்த பத்திரிகையாளர்கள் ஆர்ப்பாட்டம்
இராஜபக்ஷே அரசின் ஊழல்கள், மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் லசந்தா விக்கிரமதுங்கே, ராஜபக்ஷே கும்பலால் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், பத்திரிக்கை சுதந்திரத்தை வலியுறுத்தியும் இலங்கை பத்திரிகையாளர்கள் கொழும்பு நகரில் நடத்திய ஆர்ப்பாட்டம் (உள்படம்) லசந்தா விக்கிரமதுங்கே.

ஆனால், ஈழத் தமிழர் இனச் சிக்கலில், ம.க.இ.க.-வின்  நிலைப்பாட்டில் குழப்பமோ, சந்தர்ப்பவாதமோ கிடையாது. மிகமிகத் தெளிவாகவே உள்ளது. அது தமிழினவாதிகளின் நிலைப்பாட்டிலிருந்து மாறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான்! தமிழினவாதிகளின் நிலைப்பாடுகளை ம.க.இ.க.-வினர் ஏற்கும் வரையும்  தமிழினவாதிகளின் தவறுகளையும் துரோகத்தையும் பிழைப்புவாதத்தையும் ம.க.இ.க.-வினர் எதிர்த்து அம்பலப்படுத்தும் வரை அவர்கள் இப்படித்தான் செய்வார்கள். உண்மையில் இப்படிச் செய்வது மற்றவர்களை உருட்டி மிரட்டி (பிளாக்மெயில் செய்து) தமது நிலைப்பாடுகளை ஏற்கச் செய்யும் ரௌடித்தனம்.

ஈழத் தமிழர் முன்புள்ள தெரிவுகள்

எப்போது, எப்படி, என்ன அரசியல் நிலைமைகளில் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஈழத் தமிழ்த் தேசிய இனம் அடைகிறது என்பதைப் பொருத்து  தமிழீழத் தனியரசு அமைத்துக் கொள்வதா, இல்லையா என ஈழத் தமிழ் தேசிய இனம் தீர்மானிக்கும். நாம் ஏன் இவ்வாறு கருதுகிறோம், அது ஏன் சரி என்பதைப் பலமுறை சொல்லியாகி விட்டது; மீண்டும் இங்கே ஒருமுறை  சொல்கிறோம்.

தமிழினவாதிகள் தங்கள் இலட்சியமாகச் சொல்லிக்கொள்ளும் ”தமிழீழத் தனியரசு” மீது அவர்களுக்கு உண்மையில் நம்பிக்கையோ, அக்கறையோ துளியும் கிடையாது. அதனால்தான் அதை அடையும் பாதையைப் பற்றியும், அதை அடைந்தாலும் தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பதைப் பற்றியும் பேச மறுக்கிறார்கள்.

ஒன்று, சிங்களப் பேரினத்துக்கு எதிராக ஆயதப் போராட்டத்தின் மூலம் பாசிச சிங்கள இராணுவத்தையும் அரசையும் வீழ்த்தி, தமிழீழத் தனியரசைப் பிரகடனம் செய்ய வேண்டும். பிரகடனம் செய்தால் மட்டும் போதாது; சர்வதேச சமூகம் இல்லையானாலும், பிற ஒரு சில நாடுகளாவது அதை அங்கீகரிக்க வேண்டும். இதற்காகத்தான் பிரபாகரன் தலைமையிலான விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் முப்பது ஆண்டுகளாக நடந்தது. அதன் முடிவும் அனுபவமும் என்னவென்று அனைவரும் அறிவோம். மீண்டும் ஒரு படை கட்டி தமிழீழத் தனியரசுக்கான போர் கனவிலும் நடைபெறாது என்று சொல்லத் தேவையில்லை. (புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் புளுகித் திரிவது போல,  தப்பித்துத் தலைமறைவாக உள்ள பிரபாகரனும் பிற புலிகளும் ஒருவேளை திரும்பி வந்து மீண்டும்  ஈழ விடுதலைப் போர் தொடுக்கலாமோ என்னவோ).

இரண்டு, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் திராவிடக் கட்சிகளும் முயற்சிக்கும் வகையில் இவர்கள் நடத்தும் போராட்டங்கள், விண்ணப்பங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இந்திய அரசோ அல்லது இவர்களில் ஒரு பிரிவினர் நம்புவது போன்று மோடி பிரதமராகியோ இந்திய ஆட்சியாளர்களிடம் ஈழ ஆதரவு நிலை உருவாகி அல்லது அமெரிக்கத் தலைமையிலுள்ள சர்வதேச சமூகம் ஈழத் தமிழர்களின் துயரம் கண்டு நெக்குருகி பொதுவாக்கெடுப்புக்கான, அதாவது ஈழத் தமிழருக்குத் தன்னுரிமைக்கான வாய்ப்புக் கிட்டலாம்; அதாவது,  இவர்கள் நடத்தும் வேட்டையில் கொம்புடன் கூடிய முயலைப்  பிடிக்கலாம் என்கிறார்கள்.

மூன்று, சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறி பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அது ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை ஏற்க வேண்டும். இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக நெருக்கடிகளும் வர்க்க முரண்பாடுகளும் மிகவேகமாக முற்றி வரும் சூழலில் புலிப் பூச்சாண்டியைக் காட்டியே சிங்களப் பேரினவாத, பௌத்த மதவெறியில் சிங்கள மக்களை நீண்ட காலத்துக்கு பாசிச இராஜபக்சே கும்பல் தனது அதிகார ஆதிக்கத்தில் இருத்தி வைத்திருக்க முடியாது என்பதையே அங்குள்ள நிலைமைகள் தெளிவாகக் காட்டுகின்றன. முப்பது ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரம் வீரர்களையும் துருப்பிடித்த ஆயுதங்களையும் கொண்டிருந்த சிங்கள இராணுவம் இன்று நான்கு இலட்சம்  வீரர்களையும் அதிநவீன ஆயுதங்களையும்  கொண்ட முப்படைகளையும் பெற்று, உலகின் பெரிய இராணுவங்களில் ஒன்றாகி விட்டது. சிங்கள இராணுவம் மட்டுமல்ல, இலங்கை அரசின் எல்லா உறுப்புகளிலும் பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பலின் ஆதிக்கம் நிறைந்து விட்டது. அதற்கு எதிராகப் பெரும்பான்மையான சிங்கள மக்கள் குமுறிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், அம்மக்கள் எவ்வளவு பெரிய மக்கள் சக்தியைத் திரட்டினாலும் ஈழத் தமிழர்கள், மலையகத் தமிழர்கள் மற்றும் இசுலாமிய மக்கள் ஆதரவின்றி பாசிச இராஜபக்சே கும்பலின் அதிகார ஆதிக்கத்தை வீழ்த்த முடியாது. அதே போல, சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவின்றி ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் என்னதான் போராடினாலும்  தமது உரிமைகளைப் பெறவும் முடியாது. இது யாருடைய விருப்பங்களுக்கும்  அப்பாற்பட்ட புறநிலை எதார்த்தம். நாம் கூறுவது ஆளும் வர்க்கங்கள் சொல்லுவதைப் போல சுரண்டலுக்கான, அம்மக்களை ஒடுக்கி வைப்பதற்கான சமனற்ற கட்டாய ”ஒற்றுமையல்ல’’. சம உரிமை அடிப்படையிலான, ஜனநாயக முறையிலான ஒற்றுமை. பாசிச இராஜபக்சே குடும்பக் கும்பல் ஆதிக்கத்தைத் தூக்கியெறிவதற்கான போராட்டத்தில் பங்குபற்றியதற்கு ஈடாகவும் முன்நிபந் தனையாகவும் ஈழத் தமிழர்களும், மலையகத் தமிழர்களும், இசுலாமியர்களும் தமது உரிமைகளாகக் கோர முடியும். இதைத்தான் ஈழத் தமிழர்கள் உட்பட இலங்கையின் அனைத்து முற்போக்கு, ஜனநாயக சக்திகள் (அவை சிறியவையானாலும்) தமது பாதையாகத் தெரிந்தெடுத்துக் கொண்டு, இயக்கங்களைக் கட்டமைத்து வருகிறார்கள். இவ்வாறான பாதையைத்தான்  ம.க.இ.க.-வினர் ஆதரிக்கின்றனர்.

ஆனால், இதெல்லாம் நடைமுறை சாத்தியமற்றவை, சிங்களவருக்குச் சாதகமானவை, தமிழீழத் தனியரசை நிராகரிப்பதற்குச் சொல்லப்படும் சாக்குப்போக்குகள் என்று தமிழினவாதிகள் வாதிடுகின்றனர். இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்பட்டுள்ள நிலையில், இத்தனைக்கும் பிறகு, சிங்கள அரசு ஈழத் தமிழர்களின்  உரிமைகளைச் சிறிதும் ஏற்க மறுக்கும் நிலையில், எஞ்சிய பல்லாயிரம் ஈழத் தமிழர்களும் முள்வேலி முகாமுக்குள், இராணுவக் கொடுங்கோன்மையின் கீழ் வதைபடும் நிலையில் தமிழீழத் தனியரசுக்கும் குறைவான எதையும் பேசுவது துரோகம் என்று குதிக்கிறார்கள்.

தமிழினவாதிகள் மேலே தொகுத்துச் சொல்லும் இதே நிலைமைகளின் காரணமாகத்தான், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து வீழ்த்தாமல் ஈழச் சிக்கலில் ஒரு அடி கூட முன்வைக்க முடியாது; அதைத் தூக்கி எறிந்து, சிங்கள-ஈழத் தமிழ் பாட்டாளி மக்களின் தலைமையில் இலங்கையில் ஒரு புதிய ஜனநாயக அரசு அமைப்பது; அதை நிறைவேற்றுவதன் மூலம் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையைப் பெறுவது என்ற பாதையைச் சரியானதென்று முன்வைக்கப்படுவதை ம.க.இ.க.- வினர்  ஏற்கின்றனர்.

ஆனால், இந்த நிலைமைகளில் தமிழீழத் தனியரசை அடைவதற்கானதென்று தமிழினவாதிகள் தெரிவு செய்துகொண்டுள்ள தீர்வும் பாதையும் அரசியல் ரீதியில் பாமரத்தனமானது, விடலைத்தனமானது. ஈழத் தமிழருக்கு இழைக்கப்படும் அநீதி, அவர்கள் மீதான இன ஒடுக்குமுறையின் கடுமை, அவர்களுக்கு ஏற்பட்ட பேரிழப்புகள், துன்ப துயரங்கள், இன்றைய அவலநிலைகள் ஆகியவற்றின் அடிப்படையில் மட்டுமே ஈழத் தமிழினச் சிக்கலுக்கான தீர்வையும் அதை அடைவதற்கான பாதையையும் தெரிவு செய்து  இயக்கத்தைக் கட்டமைத்து விட முடியாது. அப்படிச் செய்ய முயலுவது வெறும் கவர்ச்சிகரமான வாய்ச் சவடாலாகவே இருக்கும்.

போரில் வெற்றி பெற்ற எந்தவொரு அரசும் தோற்றுப் போனவர்களுக்கு (என்னதான் நியாயமானது என்றாலும்) சம உரிமைகளும் சலுகைகளும் வழங்கியதாக வரலாறே கிடையாது. போரில் தோற்றுப் போனவர்கள்தாம் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்கு ஈடாக உரிமைகளையும் சலுகைகளையும் தங்களையும் கொடுத்தாக வேண்டும். இவை நீதி, நியாயத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதில்லை. வென்றவருடைய பலத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதுதான் இன்றைய ஏகாதிபத்திய உலக நியதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது. உலக அரசியலைக் கரைத்துக் குடித்தவர்களைப் போல சண்டப் பிரசண்டமாகச் சவடாலடிக்கும் தமிழினவாதிகள் பின்வரும் இந்தச் சாதாரண உண்மையைக் கூட பார்க்கவும் ஏற்கவும் மறுக்கிறார்கள்.

இலங்கை பாசிச இராஜபக்சே அரசுக்கும் – தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்து முடிந்த போரில் வென்றுள்ளது, பாசிச இராஜபக்சே தரப்பு. தோற்றது, ஈழத் தமிழர் தரப்பில் நின்று போரிட்ட புலிகள். வென்ற பாசிச இராஜபக்சே தரப்பு, தோற்ற ஈழத் தமிழர் தரப்புக்கு சம உரிமைகளுக்கும் அதிகாரப் பகிர்வுகளுக்கும் ஒப்புக்கொள்ளும் என்று ஈழத் தமிழர்கள் எதற்காக, எப்படி எதிர்பார்க்கலாம்? சரணடைந்த புலிகளைப் படுகொலை செய்து குவித்த பாசிச இராஜபக்சே என்ன நீதிமானா? அவன் ஈழப் போர் வெற்றியின் ஆதாயங்களை அறுவடை செய்து கொள்ளவே செய்வான். பாசிச இராஜபக்சே கும்பலின் அரசு அதிகாரத்தை வீழ்த்தாமல் ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு, தமிழீழத் தனியரசு எதையும் அடையவே முடியாது. இந்திய அரசு உட்பட அமெரிக்கத் தலைமையிலான சர்வதேச சமூகத்துக்குத் தமது போராட்டங்கள் மூலம் அழுத்தம் கொடுத்து இவற்றை அடைய முடியும் என்று நம்பச் சொல்லுகிறார்கள் புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும். ஆனால், பாசிச இராஜபக்சே கும்பலை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிந்து இலங்கையில் ஒரு ஜனநாயக அரசு அமைந்து, அதன் மூலம்தான் ஈழத் தமிழர்களின் பிரிந்துபோகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமையை நிலைநாட்ட முடியும்; ஈழத் தமிழருக்கு சம உரிமை, அதிகாரப் பகிர்வு மட்டுமல்ல, அந்த நிலையிலும் அவசியமானால் தமிழீழத் தனியரசு அமைத்துக்கொள்ளும் பலத்தையும் அவர்கள் பெற முடியும்.

ஆகவே, புலி ஆதரவாளர்களும் தமிழினவாதிகளும் ஈழத் தமிழர் விடுதலைக்கு அடையவே முடியாத வழியை மீண்டும் முன்வைக்கிறார்கள் . ஆனால், ஈழத் தமிழர்களும், இந்தியத் தமிழர்களும் மீண்டும் ஒரு முறை இவர்களிடம் ஏமாற மாட்டர்கள்.

-ஆர்.கே.
_________________________________
புதிய ஜனநாயகம், நவம்பர் 2013
_________________________________