Thursday, August 11, 2022
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்

-

னைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்புச் சங்கத்தின் சார்பில் 26.11.2013 அன்று காலை 10 மணிக்கு சுருதி திருமண மகாலில் பொதுக்குழு கூட்டம் சங்கத்தின் தோழர்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் “மாநகராட்சியின் 65 வார்டுகளில் உள்ள சாலையோர தரைக் கடைகளை அப்புறப்படுத்தி விட்டு மாற்று இடம் தரும் திட்டம், தரைக் கடைகளை ஒழுங்கு படுத்தி வாழ விடுமா? அல்லது வியாபாரிகளையே ஒழித்திடும் சதித்தனமா?” என்ற தலைப்பில் உறுப்பினர்கள் தங்களுக்கு ஏற்படப் போகும் பாதிப்புகளை எடுத்து கூறியதோடு, தற்போது வியாபாரம் செய்யும் இடத்திலேயே தரைக் கடைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்றும், மீறி மாநகராட்சி தரைக் கடைகளை அப்புறப் படுத்த முயன்றால் மொத்த வியாபாரிகளையும் திரட்டி போராடலாம் என்றும் கருத்து தெரிவித்தனர்.

தரைக்கடை வியாபாரிகள் சங்கம்சிறப்புரையாற்றிய சங்கத்தின் சிறப்பு தலைவர் தோழர்.சேகர் தனது உரையில் தரைக்கடைகளால் போக்குவரத்து, பொதுமக்களின் நலனுக்கு பாதிப்பு என கூறி தரைக்கடைகளை அகற்ற நினைப்பது அநீதி என்றும், சாரதாஸ், மங்கள் போன்ற பெரிய முதலாளிகளை கொழுக்க வைக்கவும் சிறு தொழில்களையும் தரைக்கடை வியாபாரிகளையும் ஒழித்துக் கட்டும் தனியார்மயம், தாராளமயம், உலகமயக் கொள்கைகளை அமுல் படுத்த வேண்டும் என்ற சதித்திட்டமும் மாநகராட்சியின் நோக்கமாகும் என்றும் தனியார்மயக் கொள்கைகளை முறியடிக்க தேர்தல் பாதையை கைவிட்டு வீதியில் இறங்கி போராட வியாபாரிகள் முன் வரவேண்டும் என்று பேசினார்.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன. இறுதியாக சங்க உதவிச் செயலர் இலியாஸ் நன்றி கூறினார்.

26.11.2013 அன்று நடைப்பெற்ற தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்.

  1. திருச்சியில் காலம் காலமாக இயங்கிவரும் தரைக்கடைகளை அப்புறப்படுத்தி மக்கள் நடமாட்டம் இல்லாத இடங்களுக்கு அனுப்ப முடிவு செய்து மாநகராட்சி போட்ட தீர்மானத்தை இந்த கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. வாடிக்கையாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் உகந்த இடங்களை விட்டு வியாபாரிகளை விரட்டியடிக்கும் நோக்கில் மக்கள் நடமாட்டமில்லாத 80 இடங்களை அறிவித்து வியாபாரிகளையும் ஏழை, எளிய வாடிக்கையாளர்களையும் பிரிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மாநகராட்சி. இந்த நடைமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும். தற்போது உள்ள இடங்களிலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று இக்கூட்டம் கோருகிறது.
  2. தரைக்கடைகள்தான் போக்குவரத்துக்கு இடையூறு என்று மாநகராட்சியும் காவல்துறை மற்றும் பிற அரசுத் துறைகளும் திரும்பத்திரும்ப சித்தரிப்பது உண்மைக்குப் புறம்பானது. உண்மையில் சுவரண்சிங் அவர்கள் மாநகராட்சி ஆணையராக இருந்தபோது வருவாய்த் துறை ஆவணங்களின் அடிப்படையில் அளவெடுத்து பெரிய கடை முதலாளிகள்தான் சாலையை கணிசமாக ஆக்கிரமித்துள்ளனர் என்பதைக் கண்டறிந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு பெரிய கடைகள் ஆக்கரமித்துள்ள சாலைகளை மீட்டெடுக்க மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
  3. தரைக்கடை வியாபாரிகள் சங்கக் கூட்டம்மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘நகர்ப்புற தெருவோர வியாபாரிகள் தொடர்பான தேசிய கொள்கை 2009’-ன் படியும் அதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவின் அடிப்படையிலும் வியாபாரிகளின் வாழ்வுரிமையைப் பாதுகாக்க மாநகராட்சி நிர்வாகம் ஒத்துழைக்க வேண்டும். அந்த வகையில் பெரு முதலாளிகள் ஆக்கிரமித்துள்ள சாலைகளை உடனடியாக மீட்டு அதில் கிடைக்கும் கூடுதல் இடங்களையும் நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கித் தர வேண்டும். பல்லாயிரக் கணக்கானோர் புழங்கும் இத்தகைய இடங்களில் மக்களின் சுகாதாரம், அடிப்படைத் தேவைகளான கழிப்பிட வசதி, குடிநீர் வசதி போன்றவற்றை செய்து தர வேண்டும்.
  4. அரசிடம் வேலை கோராமல் தமது முயற்சியிலும் கந்து வட்டிக்கு வாங்கிய காசிலும் வியாபாரம் செய்து நேர்மையாக வாழும் வியாபாரிகளை கிரிமினல்கள் போல் நடத்தி விரட்டுவது, பொருட்களை அள்ளிச் செல்வது, தினசரி மாமூல் வாங்குவது, பொய் வழக்கு போட்டு தண்டம் கட்ட வைப்பது என தொல்லை கொடுத்து வரும் காவல் துறையின் நடவடிக்கைகளை இக்கூட்டம் கடுமையாக கண்டிக்கிறது. அத்துடன் வியாபாரிகளை தங்களுக்குள் மோத விட்டு ரசிப்பது, வியாபாரிகளின் ஒற்றுமையை குலைத்து தமது கேடான நோக்கத்தை ஈடேற்றிக் கொள்வது என்ற காவல் துறையின் போக்குகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கோருகிறது.
  5. மேற்கூறிய காவல்துறையின் அடாவடித்தனத்துக்கு ஊக்கம் தரும் வகையில் நீதிமன்றமும் தன் பங்குக்கு தரைக்கடை வியாபாரிகள் மீது பொய் வழக்கு போட்டு இத்தனை இலட்சம் தண்டத்தொகை கட்ட வைக்க வேண்டும் என்று ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் இலக்கு நிர்ணயித்து வசூலிக்க வழிகாட்டியதாக அறிகிறோம். ஏழை, எளிய மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் இருப்பதாக மக்கள் கருதும் நீதிமன்றமே இத்தகைய அடாவடித்தனத்திற்கு துணை போவது மேலும் கொடுமையான செயலாக உள்ளது. இந்த மாதத்தில், அதன் அடிப்படையில் வழக்கமான 8-10 வழக்கு என்பதைத் தாண்டி 70-80 பேர் மீது ஒவ்வொரு சாலையிலும் வழக்கு போட்டுள்ளது காவல்துறை. வழமையாக வழக்கு போடும் தரைக்கடை வியாபாரிகள் மீது மட்டுமின்றி நிரந்தரமான கட்டிடங்களில் கடை நடத்துவோர் மீதும் வழக்கு போட்டுள்ளது காவல்துறை. “கொடுமை கொடுமை என்று கோவிலுக்குப் போனா…” என்ற கதையாக உள்ள இத்தகைய நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று மாவட்ட நீதிபதியை இக்கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
  6. மாவட்ட ஆட்சியாரும் தமிழக அரசும் ஏழை, எளிய வியாபாரிகள் மீதான இத்தகைய நிர்வாக, நீதித்துறை அமைப்புகளின் அடக்கு முறைகளைத் தடுத்து நிறுத்த ஆவன செய்ய வேண்டுன் என இக்கூட்டம் கேட்டுக் கொள்கிறது.
  7. பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக உள்நாட்டு சிறு, குறு மற்றும் நடைபாதை வியாபாரிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் சில்லரை வணிகத்தில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கும் கொள்கையையும் அதற்கு அடிப்படையாக உள்ள தனியார்மய-தாராளமாய-உலகமயக் கொள்கையைக் கைவிட வேண்டும் என்றும் மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்கிறது.
  8. வியாபாரிகளுக்கெதிரான மேற்கூறிய அரசின் கொள்கைகளை முறியடிக்கும் நோக்கில் அனைத்து தரப்பு வியாபாரிகளும் சாதி, மதம், பகுதி என்ற குறுகிய கண்ணோட்டங்களை விட்டொழித்து எதிர் வரும் பொது அச்சுறுத்தலை முறியடிக்க ஓரணி திரள வேண்டுமென்று அனைத்து தரப்பு வியாபாரிகள் மற்றும் வியாபார சங்கங்களையும் அறைகூவி அழைக்கிறது.

இவண்,

அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம்,
(இணைப்பு) புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருச்சி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க