Tuesday, May 28, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம் கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை - ஆர். செந்தில்குமார்

கடும் கசப்பில் பள்ளி வாழ்க்கை – ஆர். செந்தில்குமார்

-

என்னைச் செதுக்கிய ஆசிரியர்கள் – 12

னது பள்ளி வாழ்க்கை பழைய புகைப்படம் போல சிற்சில காட்சிகளே நினைவுக்கு வருகின்றன. ஏனென்றால் பள்ளி வாழ்க்கை கடும் கசப்பாக தோன்றியதே காரணம்.

அடிமுதல் ஐந்து வகுப்பு ஆர்சி பள்ளி. அங்கே முதல் வகுப்பு சேரும்போதே கடுமையான தண்டனை முறைகள் நிறைய உண்டு என்ற பயமுறுத்தலோடு சேர்க்கப்பட்டேன். இப்போது நினைத்தாலும் சற்று வித்தியாசமான பள்ளியாகவே தோன்றுகிறது. காலை பிரேயரின் போது ஒரு தாய் மக்கள் நாம் என்போம் என்பது போன்ற எம் ஜி ஆர் பாடல் ஒலிக்கும், காசு கொடுத்து மதியம் பள்ளியிலேயே படம் பார்த்திருக்கிறேன்.

வருடந்தோரும் பசிபிணி காசு என்று ஒரு அட்டையை கொடுத்து பணம் வசூலித்து வரச் சொல்லுவார்கள். ஒரு அட்டைக்கு உண்டான பணம் நூறு ரூபாயை உடனே கொடுத்தால் அடுத்த அட்டை கையில் திணிக்கப்படும். ஆண்டு விழா மிகவும் கோலாகலமாக நடக்கும். ஆசிரியர்கள் நடிக்கும் நாடகம் கடைசியாக இடம் பெறும்.

தண்டனை முறைகளுக்கும் எந்த குறைவுமில்லை. வாய்ப்பாடை மனப்பாடம் செய்யா விட்டால் இரு கால்களிடையே ஸ்கேலை வைத்து மாறி மாறி அடிப்பது, சிமென்ட் தரையில் மணலை கொட்டி அதில் முட்டி போடச் சொல்வது பென்சிலை கை விரல்களுக்கு நடுவே வைத்து கையை பிடித்து நசுக்குவது இதனால் ஆசிரியர்கள் என்றாலே எனக்கு கைகால்கள் நடுங்கும். கடைசிவரை எந்த ஆசிரியரும் எனது பயத்தை போக்கவில்லை. நல்ல ஆசிரியர்களும் இருந்தார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. எனது நினைவில் இவைகளே மிஞ்சியிருக்கின்றன.

அடுத்து பார்ப்பன பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு வரை. முதலில் இருந்த பள்ளிக்கு நேர்மாறாக இருந்தது. வகுப்பறையில் தூங்கும் ஆசிரியர், கரும்பலகையில் பாடத்தை எழுதி விட்டு படிக்கச் சொல்லி விட்டு மாணவர்களை கவனிக்காமல் அமைதியாக வேடிக்கை பார்க்கும் ஆசிரியர், “உன்னால்70 மார்க்குக்கு மேல் வாங்க முடியாது” என்று கூறிய ஆசிரியர், “ஆங்கில பாடம் 40 மார்க்குக்கு எழுதினால் போதும்” என்ற ஆங்கில ஆசிரியர், “எனக்கு சரித்திரப் பாடம் மட்டும் தான் தெரியும். ஆனால் என்னை கணிதப் பாடம் நடத்தச் சொல்லியிருக்கிறார்கள். முடிந்த அளவு சொல்லித் தருகிறேன். படியங்கள்” என்ற ஆசிரியர் இவர்களுடன் ஆபாசமாக பேசும் இரு ஆசிரியர்களும் உண்டு.  அதில் ஒருவர் சக ஆசிரியை பற்றியே வர்ணித்தார்.

எல்லா ஆசிரியரும் பாஸ் செய்தாலே போதும் என்றே கூறினர் அப்படி பாஸ் செய்யாதவர்களை கடுமையாக திட்டுவார்கள். விளையாட்டு ஆசிரியரை வருடத்தின் முதல் நாளை தவிர பார்த்ததில்லை. அந்த பீரியடில் அருகே இருந்த நூலகத்திற்கு சென்று விடுவேன்.

இதன் நடுவே பத்தாம் வகுப்பில் பாலைவனச் சோலையாக வந்தவர் தமிழாசிரியர் திரு ஐ.முத்து. எனது மதிப்பிற்குரிய ஆசிரியர். அதுவரை கடினமாக இருந்த இலக்கணத்தை மிக எளிமையாக மாற்றினார். “பாடப்பகுதி படிக்கா விட்டாலும் பரவாயில்லை, இலக்கணம் நன்றாக படிக்க வேண்டும்” என்று கூறினார். இலக்கணம் படித்ததும் பாடப்பகுதி எளிமையாக இருந்தது.

மாணவர்களின் குறும்பை மென்மையாக கண்டிப்பார்.ஒருமுறை, “தமிழ்நாட்டின் நிதியமைச்சர் யார்” என்று கேட்டார். எங்களுக்கு தெரியவில்லை.  “கருணாநிதிதான்,  நான் எங்கேயும் போய் படித்து விட்டு வரவில்லை பேருந்தை விட்டு இறங்கும் போது வாழ்த்து சுவரொட்டியில் பார்த்தேன். தமிழகத்தின் நிதி அமைச்சரே என்று போட்டிருந்தது. நீங்களும் புத்தகத்தை மட்டும் நம்பாமல் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும்” என்று கூறுவார்.

தான் முதலில் வேலைக்கு சேர்ந்தபோது இடது கையால் எழுதுவதால் சற்றே கூச்சப்பட்டதை கூறுவார். ஒருநாள் காலை முதல் வகுப்பில் மாணவன் ஒருவன் எழுந்து,”சார் உறுதிமொழி எடுக்கும் போது இந்தியா எனது தாய் நாடு, இந்தியர் யாவரும் என் சகோதர, சகோதரிகள் என்று கூறுகிறோம் எல்லோருமே சகோதரிகள் என்றால் யாரை கல்யாணம் செய்வது” என்றான். “சகோதரியின் மகளைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும். பாடத்தில் சந்தேகம் கேளுங்கடா” என்றார். மிகவும் இனிமையான ஆசிரியர்.

இன்னொருவர் திரு ஏ.கிருஷ்ணமூர்த்தி. கணிதத்திற்கு இவரிடம் டியூஷன் சென்றேன். பாடம் நன்றாக நடத்துவார். கட்டணம் குறைவாகக் கொடுத்தாலும் ஒன்றும் சொல்லாமல் வாங்கிக் கொள்வார். நான் பொதுத்தேர்வில் கணிதத்தில்தான் அதிக மதிப்பெண் பெற்றேன். வேறு சில நல்ல ஆசிரியர்களின் முகங்களும் நினைவில் வருகின்றன.

வாசகர்கள் அனைவருக்கும் சமமான மரியாதை அளித்து எழுத வாய்ப்பளித்த வினவுக்கு நன்றிகள்.

– ஆர்.செந்தில்குமார்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க