privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !

கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !

-

டந்த மார்ச் மாதம் பஞ்சாபிலுள்ள தரண்தரண் மாவட்டப் பகுதியில் நடந்த சம்பவம் இது. தனது தந்தையோடு சாலையில் சென்று கொண்டிருந்த 22 வயதான இளம் பெண், தன்னைச் சிலர் கேலி செய்வதைப் பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசாரிடம் சென்று முறையிட்டார். போலீசு பாய்ந்து சென்று அப்பெண்ணைக் கேலி செய்தவர்களைப் பிடிக்கவில்லை. மாறாக, அப்பெண்ணை நடுரோட்டிலேயே, பல பேர் கண்ணெதிரேயே, எவ்வித அச்சமோ, கூச்சநாச்சமோ இன்றி மிருகத்தனமாகத் தாக்கியது. இச்சம்பவம் தொலைக்காட்சிகளின் வழியே ஒளிபரப்பப்பட்டு நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியபோதும், அந்த போலீசு மிருகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அப்பால் தண்டிக்கப்படவில்லை.

கிரிமினல் போலீசு
தன்னை வக்கிரமாக சிலர் கேலி செய்வதாக புகார் சொன்ன பெண்ணை நடுத்தெருவிலேயே மிருகத்தனமாக தாக்கும் பஞ்சாப் போலீஸ்

”போலீசு உங்களின் நண்பன்” என ஆட்சியாளர்கள் கதைப்பதெல்லாம் வடிகட்டிய பொய் என்பதற்கு இந்தச் சம்பவம் இன்னொரு சான்று. ரவுடிகள், மாஃபியா குற்றக்கும்பல்களைக் கண்டு பொதுமக்கள் அச்சம் கொள்வது போலவே, போலீசைக் கண்டும் அவர்கள் மிரளுகிறார்கள். ஏதாவதொரு தேவைக்கு போலீசு நிலையத்திற்குச் செல்ல வேண்டுமென்றால் கூட, ஒரு வெறி பிடித்த மிருகத்தை நெருங்குவதைப் போலவே அச்சத்துடன் செல்கிறார்கள். கொட்டடிக் கொலை, சித்திரவதை, பாலியல் வன்முறை உள்ளிட்டு எந்தவொரு பஞ்சமா பாதகத்தையும் செய்யத் தயங்காத போலீசின் நடத்தை, பொதுமக்களைப் பெரும் பீதிக்குள்ளாக்கியிருக்கிறது.

பஞ்சாபில் நடந்த இந்தச் சம்பவத்தை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதி மன்றம், ”2006-இல் தான் அளித்த ஒரு தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த வழிகாட்டுதல்கள்படி எந்தெந்த மாநிலங்கள் போலீசு சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளன?” என்ற கேள்வியை எழுப்பியது. அத்தீர்ப்பு வெளியாகி ஏழு ஆண்டுகள் ஆகி விட்டாலும், தமிழ்நாடு உள்ளிட்டுப் பெரும்பாலான மாநிலங்கள் போலீசு சீர்திருத்தச் சட்டத்தை உருவாக்கவில்லை என்பதை அறிந்த உச்சநீதி மன்றம், இது குறித்த விசாரணையை அக்.20-க்குத் தள்ளி வைத்தது.

அவசர நிலை பாசிச காட்டாட்சிக்குப் பிறகு அமைந்த ஜனதா கட்சி கூட்டணி ஆட்சியில் போலீசு துறையில் கொண்டுவர வேண்டிய சீர்திருத்தங்கள் பற்றிப் பரிந்துரைகள் அளிக்க தேசிய போலீசு கமிசன் அமைக்கப்பட்டது. அக்கமிசன் அடுத்த மூன்றரை ஆண்டுகளில் இது குறித்து எட்டு அறிக்கைகளை அரசிடம் அளித்தாலும், ஜனதாவிற்குப் பின் வந்த எந்தவொரு அரசும் இப்பரிந்துரைகளை அமல்படுத்த முன்வரவில்லை. இந்நிலையில் பிரகாஷ் சிங், என்.கே.சிங் என்ற இரண்டு முன்னாள் போலீசு அதிகாரிகள் போலீசு கமிசனின் பரிந்துரைகளை அமல்படுத்த உத்தரவிடக் கோரி 1996-இல் உச்சநீதி மன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தனர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முகம்மது இத்தீஸ் என்ற உடல் ஊனமுற்ற இளைஞரை மிருகத்தனமாக அமுக்கிப் பிடிக்கும் போலீசு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முகம்மது இத்தீஸ் என்ற உடல் ஊனமுற்ற இளைஞரை மிருகத்தனமாக அமுக்கிப் பிடிக்கும் போலீசு

இவ்வழக்கை எடுத்துக்கொண்ட உச்சநீதி மன்றம் விசாரணையின் போக்கில் போலீசு சீர்திருத்தம் குறித்து ஆராய மேலும் மூன்று குழுக்களை அமைத்தது. இதற்கிடையே மைய அரசு புதிய போலீசு சட்டத்தை உருவாக்க சோலி சொரப்ஜி தலைமையில் குழுவொன்றை அமைத்தது. இக்குழுக்கள் அனைத்தும் கொடுத்த அறிக்கைகள் அடிப்படையில், ”மைய மற்றும் மாநில அரசுகள் புதிய போலீசு சட்டத்தை உருவாக்க வேண்டுமென்றும்; அதற்குக் காலதாமதம் ஆகும் என்பதால், போலீசு துறையில் உடனடியாகச் செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் குறித்து ஏழு வழிகாட்டுதல்களை” உருவாக்கி 2006-இல் தீர்ப்பளித்தது, உச்சநீதி மன்றம்.

போலீசு துறையை ஆளுங்கட்சியின் பிடியிலிருந்து விடுவித்து, அதனைச் சுதந்திரமானதாகவும், எவ்வித பாரபட்சமின்றி சட்டப்படி நடந்துகொள்ளும் பொறுப்புமிக்கதாகவும் சீர்திருத்துவதற்கு இந்த ஏழு வழிகாட்டுதலைகளைப் பிறப்பித்திருப்பதாகக் கூறியது, உச்சநீதி மன்றம். ”டி.ஜி.பி., எஸ்.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகளைப் பணியமர்த்துவது, அவர்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை நிர்வகிப்பதற்கு மாநில பாதுகாப்பு ஆணையம், போலீசு பணியமைப்பு வாரியம் ஆகியவற்றை அமைக்க வேண்டும்; சட்டம்-ஒழுங்கு மற்றும் குற்றப் புலனாவு ஆகிய இரண்டையும் தனித்தனியாகப் பிரிக்க வேண்டும்; போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் காவல் புகார் பிரிவுகளை அமைக்க வேண்டும்” ஆகியவை இந்த ஏழு வழிகாட்டுதல்களுள் முக்கியமானவை.

‘‘உச்சநீதி மன்றத்தின் ஏழு வழிகாட்டுதல்களின் சாராம்சமே காவல்துறையை அரசு, அரசியல்வாதிகள், அதிகாரிகள் பிடியிலிருந்து விடுவித்து தன்னாட்சி தருவதும், அப்படித் தன்னாட்சி பெறும் அமைப்பைக் கடும் கண்காணிப்புக்கு உட்படுத்த தன்னாட்சி பெற்ற இன்னோர் அமைப்பை உருவாக்குவதுமே ஆகும்” என வாதாடுகிறார் பத்திரிகையாளர் ஞானி.

போலீசைத் தமது ஏவல் நாயாக ஆளுங்கட்சி பயன்படுத்தி வருகிறது என்பது எவ்வளவு உண்மையோ, அந்தளவிற்கு போலீசும் தன்னிச்சையாகவே பாலியல் வன்முறை, கொட்டடிக் கொலைகள், சித்திரவதை உள்ளிட்ட பல்வேறு அத்துமீறல்களிலும்; திருட்டு உள்ளிட்ட பல்வேறு மோசடிகளிலும் ஈடுபட்டு வருகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. கீழ்நிலை போலீசார் மட்டுமின்றி, ஐ.பி.எஸ். அதிகார வர்க்கம் கூட பல்வேறு மனித உரிமை மீறல்களிலும் மோசடிகளிலும் ஈடுபட்டிருப்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இப்படிபட்ட அத்துமீறல்களில் ஈடுபடும் போலீசாரை, அரசியல் தலைமை மட்டுமின்றி, பல்வேறு சமயங்களில் உச்சநீதி மன்றமும் தண்டிக்காமல் காப்பாற்றியிருப்பதற்கு பல்வேறு உதாரணங்களை -கே.பி.எஸ். கில் வழக்கு, ரத்தோர் வழக்கு, பிரேம்குமார் வழக்கு – காட்டலாம்.05-criminal-police-4

ஒருவரைக் கைது செயும்பொழுது என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என உச்சநீதி மன்றம் ஏற்கெனவே பதினோரு கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறது. பெரும்பாலான கைதுகள் இந்தக் கட்டளைகளுக்குப் புறம்பாகத்தான் நடந்து வருகின்றன எனும்பொழுது, உச்ச நீதிமன்றத்தின் இப்புதிய வழிகாட்டுதல்களை போலீசு மதித்து நடந்து கொள்ளும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது? கைது தொடர்பான உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை அரசும் போலீசாரும் பின்பற்றுவதில்லை என்பது மட்டுமல்ல பிரச்சினை, கீழமை நீதிமன்றங்களே உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்வதில்லை என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது.

குண்டர் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைச் சட்டங்கள் போலீசின் அத்துமீறல்களை நிறுவனமயமாக்கி வைத்திருக்கும்பொழுது, அரசியல்வாதிகளின் பிடியிலிருந்து போலீசை விடுவித்து விட்டாலே போலீசார் பாரபட்சமின்றி நடந்து கொள்வார்கள் என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதமும் கிடையாது. இதுவொருபுறமிருக்க, தன்னாட்சி கொண்ட போலீசு அமைப்பைக் கண்காணிக்க அமைக்கப் பெறும் தன்னாட்சி பெற்ற அமைப்பு தவறே செயாத உத்தம ராசாக்களைக் கொண்டிருக்கும் என்பதற்கு ஏதாவது உத்தரவாதம் உண்டா? இந்த அமைப்பு தவறு செய்யும்பொழுது எங்கே போவது? நீதிமன்றத்திற்கு என்றால், கீழமை நீதிமன்றம், உயர்நீதி மன்றம், உச்சநீதி மன்றம் எனப் பல படிகளில் ஏறி இறங்குவதைத் தவிர வேறு வழியில்லை. போலீசு அமைப்பைச் சீர்திருத்துவது குறித்து உச்சநீதி மன்றம் அளித்துள்ள இந்த ஏழு கட்டளைகளும் அரைகுறையானவை; நடுத்தர வர்க்கத்தின் உபதேசத்தைத் தாண்டிச் செல்லவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

ஆனால், இந்த அரைகுறையான சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதைக் கூட எந்தவொரு ஓட்டுக் கட்சியும்/அரசும் விரும்பாமல், தேசிய போலீசு கமிசனின் பரிந்துரைகளை 35 ஆண்டுகளாகக் கிடப்பில் போட்டு வைத்துள்ளன. குறிப்பாக, தமிழ்நாடு அரசு இச்சீர்திருத்தங்களுக்கு எதிராக உச்சநீதி மன்றத்தில் வாதாடி தோற்றுப் போனது. போலீசு சீர்திருத்தம் குறித்த வழக்கு மீண்டும் அக்.20-இல் விசாரணைக்கு வரவிருந்ததால், உச்சநீதி மன்றத்தின் கண்டனத்திலிருந்து தப்பிக்கும் நோக்கத்தில் ஜெயா அரசு அவசரஅவசரமாக போலீசு சீர்திருத்தச் சட்டத்தை தற்பொழுது கொண்டு வந்திருக்கிறது.

இச்சட்டத்தை உருவாக்குவது குறித்து மனித உரிமை அமைப்புகள், எதிர்க்கட்சிகள், பொதுமக்கள் என யாருடைய கருத்தையும் கேட்காமல், ஆளுநரின் ஒப்புதலை மட்டும் பெற்று ஒரு அவசர மசோதாவாகக் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் அறிவித்தது ஜெயா அரசு. அதன் பின்னர் அக்டோபரில் நடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, விவாதத்திற்கு இடம்தரக் கூடாது என எதேச்சதிகாரத் தோரணையிலும் சதித்தனமாகவும் கூட்டத்தொடரின் கடைசி நாளன்று மசோதாவைச் சட்டமன்றத்தில் வைத்ததோடு, த.மு.மு.க. எம்.எல்.ஏ. ஜவாஹிருல்லா முன்வைத்த திருத்தங்களை முற்றிலுமாக ஒதுக்கித்தள்ளிவிட்டுச் சட்டமாக நிறைவேற்றி விட்டது. இச்சட்டம் உச்சநீதி மன்றத்தின் கட்டளைகளை முற்றிலுமாகப் புறக்கணித்திருப்பதோடு, அதற்கு நேர் எதிராகவும் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எடுத்துக்காட்டுக்குச் சொன்னால், மாநில காவல் புகார் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற உச்சநீதி மன்ற அல்லது உயர்நீதி மன்ற நீதிபதியை நியமிக்க வேண்டும். உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்துதான் தலைவரை மாநில அரசு தெரிந்தெடுத்து நியமிக்க வேண்டும். மாவட்ட காவல் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும். உயர்நீதி மன்றத் தலைமை நீதிபதி அல்லது உயர்நீதி மன்ற நீதிபதி பரிந்துரைக்கும் பட்டியலில் இருந்துதான் தலைவரை மாநில அரசு தெரிந்தேடுத்து நியமிக்க வேண்டும் என உச்சநீதி மன்றம் தெளிவாக வழிகாட்டியிருந்தது. ஆனால், ஜெயா இந்த வழிகாட்டுதல்களை ஒதுக்கித் தள்ளிவிட்டுச் சட்டத்தை உருவாக்கியிருக்கிறார்.

கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்
கூடங்குளம் அணு உலைக்கு எதிராகப் போராடும் இடிந்தகரை மக்கள் மீது போலீசு நடத்திய தாக்குதலில் படுகாயமடைந்தவர்

இக்கமிட்டிகளுக்குத் தலைவர்களையும் உறுப்பினர்களையும் பரிந்துரைக்கும் பொறுப்பை நீதிமன்றத்திடம் ஒப்படைக்காமல், அவர்களைத் தெரிந்தேடுப்பதைத் தன்வசமே எடுத்துக் கொண்டுள்ளது, பாசிச ஜெயா அரசு. மேலும், மாநில புகார் பிரிவின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதியை நியமிப்பதற்குப் பதிலாக உள்துறைச் செயலரும் அதன் உறுப்பினர்களாக டி.ஜி.பி., கூடுதல் டி.ஜி.பி. ஆகிய இருவரும் நியமிக்கப்படுவர்; மாவட்ட புகார் பிரிவின் தலைவராக மாவட்ட நீதிபதி அல்லது மாவட்ட ஆட்சியரும், அதன் உறுப்பினர்களாக எஸ்.பி., கூடுதல் எஸ்.பி. ஆகிய இருவரும் நியமிக்கப்படுவர் என இச்சட்டம் வரையறுக்கிறது.

இந்த இரண்டு புகார் பிரிவுகளையும் ஒப்பீட்டளவில் சுதந்திரமாகச் செயல்படக்கூடிய தன்மை கொண்டதாக உருவாக்க வேண்டும் என்ற உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதலுக்கு மாறாக, ஜெயா அரசு இரண்டு புதிய தலையாட்டி பொம்மை அமைப்புகளை உருவாக்க முயலுகிறது என்பது வெளிப்படை. ”போலீசால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் மட்டுமே இக்கமிட்டிகளிடம் புகார் அளிக்க முடியும்; புகார் கொடுப்பவர்கள் தமது சொந்தப் பெயரில் மட்டுமே புகார்களை அளிக்க வேண்டும்; மேலும், புகார் அளிப்பவர்கள் அரசின் அங்கீகாரம் பெற்ற நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் சான்றொப்பம் பெற்றுதான் புகார் அளிக்க வேண்டும்” என போலீசின் அத்துமீறல்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்ட புதிய விதிகளும் இச்சட்டத்தில் புகுத்தப்பட்டுள்ளன.

நோட்டரி பப்ளிக் ஒருவரிடம் சான்றொப்பம் வாங்கித்தான் போலீசுக்கு எதிரான மனுக்களை அளிக்க வேண்டுமென்பது, அப்புகார்களை முளையிலேயே முடக்கிவிடும் சதித்தனம் தவிர வேறில்லை.

2011-இல் ஜெயா ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் தமிழகத்தில் 29 கொட்டடிக் கொலைகள் நடந்துள்ளன. தேனி மாவட்டத்தின் போடிக்கு அருகிலுள்ள ஒரு சிற்றூரில் பேருந்துக்காக காத்திருந்த ஒரு பெண்ணை, போலீசு நிலையத்திற்கு இழுத்துச் சென்ற போலீசார், அவரைப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு, அதனை மறைக்க அவர் மீது திருட்டுப் பட்டம் கட்டிச் சிறைக்குள் தள்ளினர். இவை போன்ற மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், தமக்கு இழைக்கப்பட்ட அநீதியை அச்சத்தின் காரணமாகவும், மான -மரியாதைக்கும் பயந்தும் எதிர்த்துப் போராடாமல் இருந்து விடுகிறார்கள் என்பதுதான் எதார்த்தம். இவை போன்ற வழக்குகளைப் பொதுநலன் கருதி மனித உரிமை அமைப்புகள்தான் நீதிமன்றத்திற்கும், மனித உரிமை கமிசனின் விசாரணைக்கும் எடுத்துச் செல்லுகின்றன.

பாசிச ஜெயா கொண்டு வந்துள்ள சட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அவர்களது உறவினர்கள் மட்டும்தான் புகாரே கொடுக்க முடியும் என விதிகளை உருவாக்கி வைத்திருப்பதன் மூலம், போலீசின் அத்துமீறல்களுக்கு எதிராகப் போராடி வரும் மனித உரிமை அமைப்புகளின் செயல்பாடுகளைச் சதித்தனமான முறையில் முடக்க முயலுவதோடு, குற்றமிழைத்த போலீசாரைக் கடும் தண்டனையிலிருந்து பாதுகாப்பதையும் உத்தரவாதப்படுத்தியிருக்கிறார், ஜெயா.

‘‘போலீசின் அத்துமீறல்களை விசாரிக்க அரசு ஏற்கெனவே சில நடைமுறைகளை-விசாரணை கமிசன்கள், ஆர்.டி.ஓ. விசாரணை போன்றவற்றைப் பின்பற்றி வருவதால், நீதிபதிகளின் தலைமையில் புகார் கமிட்டிகளை அமைக்க வேண்டிய அவசியமில்லை” எனச் சட்டமன்றத்திலேயே பதிலளித்து, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களை அகங்காரத்தோடு புறக்கணித்திருக்கிறார், ஜெயா. விசாரணை கமிசன்களும், ஆர்.டி.ஓ. விசாரணையும் போலீசின் குற்றங்களை மூடிமறைக்கும் மோசடிகள் என்பது பல வழக்குகளில் அம்பலமான பிறகும், துணிந்து பொய் சொல்கிறார் அவர்.

முன்னெப்போதும் இல்லாத வகையில் போலீசின் அத்துமீறல்களும் கிரிமினல் குற்றங்களும் பெருகி வரும் நிலையில், கொஞ்சத்துக்குக் கொஞ்சமாவது பொதுமக்களை போலீசின் அத்துமீறல்களிலிருந்து பாதுகாக்க வேண்டும்; போலீசைப் பொதுமக்களுக்குப் பொறுப்புமிக்கதாக நடந்துகொள்ளும்படி மாற்ற வேண்டும் என்ற நோக்கில் உச்சநீதி மன்றம் இந்த வழிகாட்டுதல்களை அளித்திருக்கிறது. ஆனால் ஜெயாவோ, மனித உரிமை மீறல் குற்றங்களுக்காக போலீசு தண்டிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கத்தோடும், அதற்கு மேலும் மேலும் அதிகாரங்களை வழங்கும் வகையிலும் சட்டத்தைக் கொண்டு வந்து, உச்சநீதி மன்றத்தின் வழிகாட்டுதல்களைத் தனக்கேயுரிய தன்னகங்காரம், பாசிச வழிமுறைகளின் மூலம் தோற்கடித்திருக்கிறார்.

-குப்பன்
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க