privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விமையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

-

1985 -இல் புதிய கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக நவோதயா வித்யாலயா என்ற பெயரில் ராஜீவ் அரசாங்கம் இந்தியா முழுவதும் 600 பள்ளிகளைத் தொடங்கியது. இப்பள்ளிகள் தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்டே ஆரம்பிக்கப்பட்டன. தற்போது அதே நவோதயா வித்யாலயாவின் நவீன வடிவமான ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா என்ற பெயரிலான 2,500 மாதிரி பள்ளிகளை அரசு-தனியார் கூட்டில் நாடு முழுவதும் தொடங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் 356 பள்ளிகள் தமிழகத்தில் தொடங்கப்படவுள்ளன.

நவோதயா பள்ளிகள்
தாய் மொழிவழிக் கல்வியை ஒழித்துக்கட்டி, இந்தி-ஆங்கிலத்தைத் திணிப்பதை நோக்கமாகக் கொண்ட நவோதயா பள்ளிகள்.

இம்மாதிரிப் பள்ளிகளை அறக்கட்டளைகள், சங்கங்கள், தனியார் நிறுவனங்கள், ஏற்கனவே இயங்கும் தனியார் பள்ளிகள் போன்றவை ஆரம்பிக்கலாம். இந்த பள்ளிகளின் உள்கட்டமைப்புக்கு ஆகும் செலவில் 25 சதவீதத்தை ஆண்டுதோறும் 5 வருடங்களுக்கு மத்திய அரசும், அதன் பிறகு மாநில அரசும் அளிக்கும். இத்தொகை ஆண்டுக்கு 5 சதவீத அளவுக்கு உயர்த்தப்படும். இந்தப் பள்ளிகளில் 40 விழுக்காடு மாணவர்கள் அரசு நுழைவுத்தேர்வு மூலமும், 60 விழுக்காடு மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தின் வழியாகவும் சேர்த்துக்கொள்ளப்படுவர். இந்த 40 விழுக்காடு மாணவர்களின் கட்டணத்தை ஆண்டு தோறும் தலைக்கு 22,000 ரூபாய் என்கிற முறையில் அரசு செலுத்திவிடும். மீதி 60% மாணவர்களுக்கான கட்டணத்தை பள்ளி நிர்வாகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் – என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டண நிர்ணயத்திலும், நிர்வாகத்திலும் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்று முதலாளிகள் இழுத்தடித்ததால், இந்த திட்டம் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர், இப்போதுதான் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு தவிர மற்ற மாநிலங்களிலெல்லாம் நவோதயா வித்யாலயாக்களை எதிர்ப்பேயின்றி நடத்திவரும் மத்திய அரசு, இப்புதிய மாதிரிப் பள்ளிகளையும் மாநில அரசுகள் வரவேற்றுச் செயல்படுத்த வேண்டுமென்கிறது. ஆனால், ஜெயா அரசோ இதனை எதிர்க்காமல் மவுனம் சாதிக்கிறது.

அரசு – தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள். மாநில மொழியையே தடை செய்து, இந்தியையும் ஆங்கிலத்தையும் திணித்து, அரசுப் பள்ளிகளை ஒழித்து மறுகாலனியாக்கத்துக்கு ஏற்ப ஒரு புதிய தலைமுறையை உருவாக்குவதே இப்புதியவகை பள்ளிகளின் நோக்கம்.
______________________________________
புதிய ஜனநாயகம், 2013 டிசம்பர்
______________________________________