நவீன கொத்தடிமைக் கூடாரமான ஒசூரில் தொழிலாளர்களைத் திரட்டி பு.ஜ.தொ.மு. ஆர்ப்பாட்டம்!
“வேலைபறிப்பு – தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் – புதுச்சேரி மாநிலங்களில் செயல்படும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியால் மேற்கொள்ளப்பட்ட பிரச்சார இயக்கத்தின் இறுதியாக, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகள் மீது கிரிமினல் சட்டப்படி நடவடிக்கை எடு!” என்ற முழக்கத்தின் கீழ் தமிழகம் தழுவிய அளவில் பேரணி – ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் ஒருபகுதியாக, ஒசூரில் முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் தொழிலாளர்கள் ஆதரவுடன் எழுச்சிகரமாக நடைபெற்றது.
“நவீனத் தொழில்துறையானது தந்தைவழிக் குடும்ப ஆண்டானுடைய சிறிய தொழிற்கூடத்தைத் தொழில் முதலாளியினது பெரிய தொழிற்சாலையாய் மாற்றியுள்ளது. தொழிற்சாலையினுள் நெருக்கமாய்க் கூட்டப்பட்டிருக்கும் திரளான தொழிலாளர்கள் படையாட்களைப் போல் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள். தொழில் துறைச் சேனையின் படையாட்களாகிய இவர்கள், ஆபீசர்கள் என்றும் சார்ஜெண்டுகள் என்றும் முற்றும் படிநிலைக் கிரமத்தில் அமைந்த படைத் தலைமையின் கீழ் இருத்தப்பட்டிருக்கிறார்கள். இவர்கள் அடிமைகளாய் இருப்பது முதலாளித்துவ வர்க்கத்துக்கும் முதலாளித்துவ அரசுக்கும் மட்டுமல்ல; நாள் தோறும் மணிதோறும் இயந்திரத்தாலும், மேலாளர்களாலும், யாவருக்கும் முதலாய்த் தனித்தனி முதலாளித்துவ ஆலையதிபராலும் இவர்கள் அடிமைகளாக்கப்படுகிறார்கள். இந்தக் கொடுங்கோன்மை எவ்வளவுக்கு எவ்வளவு பகிரங்கமாய் இலாபத்தைத் தனது இறுதி முடிவாகவும் குறிக்கோளாகவும் பிரகடனம் செய்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அதிகமாய் இது இழிவானதாய், வெறுக்கத்தக்கதாய், கசப்பூட்டுவதாய் இருக்கிறது.” –
கம்யூனிஸ் கட்சி அறிக்கையில் மார்க்ஸ், எங்கெல்ஸ் குறிப்பிட்டிருக்கும் ஆலை உற்பத்தியில் தொழிலாளர்கள் அடிமைகளாக இருத்தப்பட்டிருக்கும் நிலைமை, இன்று நாம் காணும் சமகால தொழிலாளர் நிலைமைக்கும் பொருந்தும்.
கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எழுதப்பட்ட பின்னர் இந்த 160 ஆண்டுகளில் ஆலையதிபர்கள் இடத்தில் தற்போது கார்ப்பரேட் முதலாளிகள் வளர்ந்து வந்துள்ளனர். ஆபீசர்கள், சார்ஜெண்டுகள் இடத்தில் சூப்பர் வைசர், எக்சிகியூட்டிவ், எம்.டி., எச்.ஆர்., என்றும் இவர்கள் ஒவ்வொருவரிலும் பல உட்பிரிவுகளோடும் இந்த படைவரிசை மிக பிரம்மாண்டமாக வளர்ந்து தொழிலாளர்கள் மீது அமர்ந்து அவர்களது உழைப்பை ஒட்டச் சுரண்டிக் கொண்டிருக்கிறது. இலாபவெறி மேலும் மேலும் தலைக்கேறி வளர்ந்துள்ளது. தொழிலாளர்கள் அடிமையாக்கப்படுகிறர்கள் என்ற கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் வாசகங்கள் இன்றும் எதார்த்தமாக உள்ளது. முதலாளிகள் தொழிலாளர்கள் மீது செலுத்தி வந்த கொடுங்கோன்மை முதலாளித்துவ பயங்கரவாதமாக இன்று வளர்ந்து நிற்கிறது.
“தொழில் துறை சார்ந்த நகரங்கள் நவீன கொத்தடிமைக் கூடாரங்கள்” என்ற வகைப்படுத்தும் வகையில் ஒசூரும் உள்ளது. தொழிலாளர்கள் மீதான முதலாளித்துவ பயங்கரவாதம் பல வடிவங்களில் ஆழமாகவும் விரிவகற்சியாகவும் தோண்டத் தோண்ட வந்து கொண்டிருக்கும் நீண்ட தொடர் கதையாகவும் உள்ளது. ஒரு ஆலையில் உள்ள தொழிலாளர்களை ஒவ்வொருமுறை சென்று சந்திக்கும் போதும் தங்கள் மீது முதலாளிகள் தொடுத்துவரும் புதிய புதிய அடக்குமுறைகளை சொல்கின்றனர்.
இந்த பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்ட இந்த சில மாதங்களில் ஒசூரில் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள் மேலும் தீவிரமடைந்துள்ளன.
- அசோக் லேலாண்டு, லூக் இன்டியா, கேட்டர்பில்லர், ஆவ்டெக் போன்ற பல ஆலைகள், தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறை செலுத்தி வருகின்றன. குறிப்பாக, அசோக் லேலாண்டு தனக்கு தேவையான உற்பத்தியை எல்லாம் எடுத்துவிட்டது. இந்த ஆண்டுக்கான போனசை தொழிலாளர்களுக்கு வழங்கவில்லை. இது மட்டுமின்றி அடுத்த ஆண்டு 180 நாட்கள் லேஆப் விடுவதற்கான சதித்திட்டத்தை தீட்டிக்கொண்டிருக்கிறது. லேலாண்டை பின்பற்றி மேற்கண்ட ஆலைகளும் தொழிலாளர்கள் மீது லேஆப் அடக்குமுறையை செலுத்தி வருகின்றன.
- கார்போரண்டம், வென்ட் இண்டியா, லூக் இன்டியா போன்ற ஆலைகளில் நீண்ட நாட்கள் பணிபுரிந்த தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்யவில்லை. தொடர்ந்து தொழிலாளர்கள் வலியுறுத்தியும் பணிநிரந்தரம் செய்யாமல் ஸ்டாஃப் (Staff – ஆலை நிர்வாக ஊழியர்) ஆக மாற்றியுள்ளன. இதனால், தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை என்பது மட்டுமல்ல, எப்பொழுது வேண்டுமானாலும் வேலையைவிட்டு விரட்டியடிப்பதற்கான கத்தி தொழிலாளர்கள் மீது தொங்கவிடப்பட்டுள்ளது. மேலும், ஒரு நாளைக்கு எத்தனை மணிநேரம் வேலை என்பதை, அந்த ஆலையில் உள்ள எச்.ஆர். என்ற கங்காணி தீர்மானிப்பதுதான். கூலியும் அதே போலத்தான் வழங்கப்படுகிறது. இந்த வேலையைவிட்டால் அடுத்து என்ன செய்வது என்ற தொழிலாளர்களின் அவலவாழ்க்கை நிலைமை தான் இந்த ஸ்டாஃப் என்ற அடிமை வாழ்க்கையை ஏற்க வைத்துள்ளது.
- ஆவ்டெக், மிண்டா டூல்ஸ், பிரபா இஞ்ஜினியரிங் போன்ற ஆலைகளில் மட்டும் சுமார் 2000க்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் யாருக்கும் போனசு இல்லை. குறைந்த பட்ச கூலி என்பது நாளொன்றுக்கு ரூ.200 கூட கிடைப்பதில்லை. கட்டாயம் கூடுதல் நேரம் வேலை செய்தாலும் இந்த நிலைமை தான் என்று சொல்லி தொழிலாளர்கள் கவலைப்படுகின்றனர். இவ்வாலைகள் பெரும்பாலானவற்றில் மதிய உணவு கொடுப்பதில்லை. கேண்டீன் வசதியும் இல்லை.
- நகரிலும் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் உள்ள நூற்றுக்கும் அதிகமான கேஸ்டிங்க் ஆலைகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். நல்ல சோறு கிடைப்பதால்தான் இங்கு வேலைக்கு வந்துள்ளதாகக் கூறி ரேசன் அரிசியைக் காட்டுகின்றனர். 10அடிக்கு 10 அடி என்ற அளவில் உள்ள ஒரு அறையில் 20க்கும் அதிகமான தொழிலாளர்கள் தங்கியுள்ளனர். இவர்கள் எல்லோரும் 12 மணிநேர வேலை என்பதால் பகலில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது, இரவில் 10 பேர் அறையில் ஓய்வெடுப்பது என்று தங்கி தங்களது வாழ்வைக் கழித்து வருகின்றனர். அறை நிலைமையே இதுவென்றால் கழிப்பறை பற்றியோ, தண்ணீர் தேவைபற்றியோ சொல்லத் தேவையில்லை. அவை அறவே இல்லை. ஆலைக்குள்ளேயே குளிப்பது, ஆலையைவிட்டு வரும்போது கேனில் தண்ணீர் எடுத்து வருவது என்பனதான் பெரும்பாலான தொழிலாளர்களின் நிலை.
- மிண்டா ஆலையில் புதிதாக துவங்கப்பட்ட ஆலை. தருமபுரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து 10வது, +2 முடித்த இளம் பெண்களை தொழிலாளர்களாக வேலைக்கு அமர்த்தியுள்ளனர். இவ்வாலை நகரில் இருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு கிராமத்தில் உள்ளது. இங்கு அடிப்படை வசதிகள், நகருக்கு அடிக்கடி சென்றுவருவதற்கான போக்குவரத்து வசதிகள் குறைவு. இந்த இளம் பெண்களுக்கும் இங்கு பாதுகாப்பு குறைவு. என்ன நடந்தாலும் வெளி உலகிற்கு தெரியக் கூடாது என்ற கோணத்தில் திட்டமிட்டு இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது ஆலையா? இளந்தொழிலாளர்களுக்கான நவீன கொத்தடிமை கூடாரமா? என்பதுதான் நமது கேள்வி. ஏனென்றால், இந்த ஆலைக்கு பிரசுரத்தை வினியோகம் செய்ய தோழர்கள் சென்றனர். உயர்நிலைப்பள்ளிகளில் மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒழுங்காக, வரிசையாக வருகிறார்களா என்று கண்காணிக்க தலைமை ஆசிரியர் குச்சியுடன் வாயிலில் நின்று கண்காணிப்பது போல, தொழிலாளர்கள் ஆலைக்குள் நுழைவதை எச்.ஆர். அதிகாரியாக உள்ள பெண் கண்காணித்து வந்தார். தோழர்கள் பிரசுரம் வினியோகிக்கத் தொடங்கியவுடன் பதறியடித்துக்கொண்டு வந்து தொழிலாளர்களிடமிருந்து, “குடுங்கடி” என்று பிரசுரத்தை பிடிங்கினார். மேலும், தோழர்களை நோக்கி ஆத்திரத்துடன் சீறிக்கொண்டு வந்தார். “உங்களுக்கு இங்க நோட்டீசு கொடுக்க அனுமதி கொடுத்தது யார்?” என்று வானுக்கும் பூமிக்கும் தாவினார். இதனை தோழர்கள் முறியடித்து பிரசுர வினியோகம் செய்தனர். அப்போது, அவ்வாலைக்குள் செல்போன் பயன்படுத்தக் கூடாது என்ற பிரச்சனை இருப்பதாக ஒரு பெண் தொழிலாளி பேச முற்பட்டார். ஆனால், எச்.ஆர். அதிகாரிக்கு பயந்து பின்வாங்கினார்.
- ஒசூரிலேயே அதிக சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் என்ற அளவில் உள்ள பேட்டா ஆலையில் கூட சில காலமாக தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்தத் தொடங்கியுள்ளது. இங்கு தொழிலாளர்களுக்கு இயர்னிங் லீவு கொடுக்க மறுக்கிறது ஆலை நிர்வாகம்.
மின்வெட்டு அதிகரித்திருப்பதால் பல பட்டறைகள் மூடப்பட்டு வருகின்றன. தற்போது மிகவும் மோசமான நிலையில் பட்டறைகள் உள்ளன. அதிக உழைப்பை சுரண்டும் நிலைமை இங்கும் உருவாகியுள்ளது. தற்போது சில மாதங்களாக பட்டறைகளில் கேமரா வைத்து தொழிலாளர்களைக் கண்காணிக்கும் முறை அதிகரித்து வருகிறது. தான் உற்பத்தி செய்த பொருளுக்கான விலையை தீர்மானிக்கும் உரிமையற்ற இந்த சிறுமுதலாளிகள், தங்களுக்கு கீழ் உள்ள தொழிலாளர்கள் மீது அடக்குமுறை செலுத்துவதன் மூலம் தங்களது தொழிலை விரிவுப்படுத்திவிடலாம் என்று கருதுகின்றனர். தனியார்மயம் தாராளமயம் என்பது முற்றிலுமாக பட்டறை தொழிலையே ஒழித்துவிடும் என்பதை உணர்த்தும் வகையில் இவர்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
நகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. பு.ஜ.தொ.மு.வின் சுவரொட்டி மீது விளம்பர சுவரொட்டிகள் ஒட்டி மறைக்கும் வேலையை தொடர்ந்து மேற்கொண்டு வரும் ஒசூர் முதலாளிகள் சங்கம், இந்த முறையும் எதிர்ப்பார்த்தபடி சுவரொட்டிகள் மீது விளம்பர சுவரொட்டிகளை ஒட்டி தனது ஈனத்தனத்தைக் காட்டிக் கொண்டது. இதனை முறியடிக்கும் வகையில் சுவரொட்டிகள் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்கள் ஒட்டியதன் மூலம் பிரச்சாரம் மக்களிடம் கொண்டு செல்லப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
போலீசு தன் பங்கிற்கு பேரணிக்கு அனுமதி வழங்க மறுத்தது. கடந்த இரு மாதங்களில் இருமுறை ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்து தோழர்கள் கைதானதை கணக்கில் கொண்டு இந்த முறை ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் அனுமதி வழங்கி விட்டது போலும். போக்குவரத்து நெரிசல், போலீசு சட்டங்களைக் காரணம் காட்டியது போலீசு. பிரவீன் தொகாடியா என்ற இந்துமதவெறி பிடித்த ரவுடி ஒசூருக்கு வந்த பொழுது, அவனுக்காக போக்குவரத்தையே திருப்பிவிட்ட போலீசு, தொழிலாளர்கள் தங்களது உரிமைக்காக ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என்று அனுமதி கேட்கும் போது அனுமதி மறுத்து வருகிறது.
பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், மாலை 5 மணிக்கு ஒசூர் நகராட்சி முன்பாக எழுச்சிகரமாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. 150க்கும் அதிகமான தோழர்கள், தொழிலாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வந்து கலந்து கொண்டனர். முன்னதாக, தொழிலாளர்களை பரந்த அளவில் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வைக்கும் பொருட்டு, 40க்கும் மேற்பட்ட சங்கங்களுக்கு பு.ஜ.தொ.மு. சார்பாக அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் சில ஆலைகளில் இருந்து தொழிலாளர்கள் பார்வையாளர்களாகவும் சில ஆலைத் தொழிலாளர்கள் நேரடியாக ஆர்ப்பாட்டத்திலும் வந்து கலந்து கொண்டனர். மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள் பு.ஜ.தொ.மு.வின் பிரச்சாரத்தை பார்த்து வந்து கலந்து கொண்டனர். பேருந்து நிலையத்திற்கு வந்த பல தொழிலாளர்கள் ஒலிப்பெருக்கியின் சத்தம் கேட்டு ஆர்ப்பாட்டத்தை இறுதிவரை முழுமையாக நின்று கவனித்து ஆதரவளித்தனர்.
குறிப்பாக, உயர்ந்த இரு செங்கொடிகள் ஆர்ப்பாட்டத்தின் இருமருங்கிலும் உயர்த்திப் பிடிக்கப்பட்டன. இது ஆர்ப்பாட்டத்திற்கு கம்பீரத்தை கொடுத்தது. பார்க்கும் மக்களைக் கவரும் வண்ணம் அமைந்தது. செங்கொடிகள், முழக்க அட்டைகளுடன் ஆர்ப்பாட்டம் எழுச்சிகராக தொடங்கியது. தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் ஆர்ப்பாட்டத்தில் உணர்வுபூர்வமாக முழக்கமிட்டனர்.
மேலும், அம்பானி – டாடா போன்ற தரகு அதிகார வர்க்க முதலாளிகளை வீதியில் இறங்கி தண்டிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், அம்பானி, டாடா ஆகிய இருவரையும் கட்டி வைத்து அடிப்பது போன்ற காட்சி விளக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ஏன், இந்த இரு முதலாளிகளை அடிக்கிறீர்கள் என்று சிலர் விளக்கம் கேட்டு தெரிந்து கொண்டு ஆதரித்தனர்.
தோழர்.செந்தில் குமார், மாவட்ட செயற்குழு, பு.ஜ.தொ.மு. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்த இயக்கத்திற்காக மேற்கொண்ட பிரச்சார இயக்கத்தில் கிடைத்த அனுபவங்களை முன்வைத்து முதலாளிகள் சட்டத்தை மீறி அடக்குமுறை செலுத்தி வருவதை அம்பலப்படுத்தினார். மேலும், கமாஸ் வெக்ட்ரா ஆலையில் ஒட்டுமொத்தமாக சட்டவிரோத உற்பத்தி செய்யப்படுவது மட்டுமின்றி தொழிலாளர்கள் மீது 12 வகையான சட்டவிரோத அடக்குமுறைகள் செலுத்தப்படுவதையும் அம்பலப்படுத்தினார்.
இதன் பின்னர் பாகலூர் பகுதி பு.ஜ.தொ.மு பொறுப்பாளர் தோழர்.இரவிச்சந்திரன் தெலுங்கு மொழியில் இந்த ஆர்ப்பாட்டத்தின் நோக்கத்தை வலியுறுத்தி பேசினார்.
ஹரிதா ரப்பர் தொழிற்சாலையில் இடைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் சார்பாக திரு.கோபால், டி.வி.எஸ். நிர்வாகம் தங்கள் மீது செலுத்திவரும் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.
இதனை தொடர்ந்து தோழர்.பரசுராமன், மாவட்டத் தலைவர், பு.ஜ.தொ.மு. சிறப்புரையாற்றினார். இந்த ஒருவார காலத்தில் தொழிலாளர்கள், பிற ஆலை சங்க நிர்வாகிகளிடம் பேசியதிலிருந்து கிடைத்த அனுபவங்களை தொகுத்து முதலாளிகளின் சட்டவிரோத நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி பேசினார்.
இந்திய தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளில் வாங்கியக் கடனைக் கட்டாமல் இருப்பது மட்டுமல்ல, அதனை மறுசீரமைப்பது என்ற வகையில் ஆட்டோ மொபைல் துறையில் உள்ள தரகு முதலாளிகளுக்கு மட்டும் ரூ.3000 கோடி கடன் நிலுவையை மறுசீரமைப்பு செய்ததன் மூலம் தள்ளுபடி செய்ததையும் இதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ரூ.600 கோடி இத்துறையைச் சேர்ந்த தரகு முதலாளிகள் கோரியிருப்பதைச் சுட்டிக்காட்டி, ஆனால், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் தொழிலாளர்கள் நிலைமை மேலும் கீழ் நிலைக்குச் சென்றுள்ளதையும் ஒப்பிட்டுக்காட்டி இந்த அரசு முதலாளிகளுக்கு எந்த அளவிற்கு ஆதரவாக செயல்படுகிறது என்பதை சுட்டிகாட்டினார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக தோழர்.சங்கர், மாவட்ட செயலாளர், பு.ஜ.தொ.மு. நன்றியுரையாற்றினார்.
பு.ஜ.தொ.மு.வின் இந்த ஆர்ப்பாட்டம் ஒசூர் தொழிலாளர்களுக்கு முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிராக போராடமுடியும் என்ற நம்பிக்கையை வரவழைத்தது என்பது மிகையல்ல. இந்த ஆர்ப்பாட்டம் முடியும் தருவாயில், அசன் சர்க்யூட் என்ற ஆலையில் பணி புரிந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் தனது ஒரு கையை இழந்த தொழிலாளி, உடல்நலமின்றி போனதால் இறந்துவிட்டார் என்ற தகவல் தோழர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் வந்தது. அந்தத் தொழிலாளிக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், தொழிலாளர்களுக்கு பாதுகாப்புக்காகவும் அவர்கள் பு.ஜ.தொ.மு.வை நாடினர். அந்தத் தொழிலாளியின் உடலை கொண்டு ஒசூர் சிப்காட் காவல் நிலையத்திற்கு சென்று முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு எதிரான தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர் தோழர்கள்!
ஆர்ப்பாட்ட முழக்கங்கள்:
வாழ்க, வாழ்க, வாழ்கவே!
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
வாழ்க, வாழ்க, வாழ்கவே!
ஓங்குக, ஓங்குக
புதிய ஜனநாயகப் புரட்சி
ஓங்குக, ஓங்குக
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
தொழிலாளர் நலச் சட்டங்களை
மீறுகின்ற முதலாளிகள் மீது
கிரிமினல் சட்டப்படி
நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு!
மத்திய அரசே, மாநில அரசே
அமுல்படுத்து! அமுல்படுத்து!
தொழிலாளர் நலச் சட்டங்களை
கறாராக அமுல்படுத்து!
பதிவு செய்! பதிவு செய்!
புதிய சங்கம் துவங்குவதற்கு
30 நாட்களுக்குள் பதிவு செய்!
தடை செய்! தடை செய்!
ஒர்க்கர்ஸ் கமிட்டி என்ற பெயரில்
முதலாளிகள் கையாளுகின்ற
அடியாள் படையை தடை செய்!
நிர்ணயம் செய்! நிர்ணயம் செய்!
குறைந்த பட்ச ஊதியமாக
எல்லா தொழி லாளர்களுக்கும்
பதினைந்தாயிரம் நிர்ணயம் செய்!
சமத்துவம் வழங்கு! சமத்துவம் வழங்கு!
ஊதியத்திலும் பாதுகாப்பிலும்
பெண் தொழி லாளர்களுக்கு
சமத்துவம் வழங்கு! சமத்துவம் வழங்கு!
தொழிலாளர்களே! தொழிலாளர்களே!
முறியடிப்போம்! முறியடிப்போம்!
தனியார்மயம், தாராளமயம்
உலக மயம் என்கிற
மறுகாலனியாக்க சதிதிட்டத்தை
முறியடிப்போம்! முறியடிப்போம்!
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
***
ஐயோ கொடுமை, ஐயோ கொடுமை!
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளருக்கு நடப்பதெல்லாம்
கொடுமை, கொடுமை, ஐயோ கொடுமை!
நோக்கியா ஆலையின் அம்பிகா,
டிவிஎஸ் ஆலையின் முத்து,
குளோபல் கம்பெனியின் எல்லீசு,
பிரிமியர் மில்லில் கிருஷ்ணவேணி
ராஜ்சிரியாவில் நாகவேணி
இவர்கள் யார் உனக்குத் தெரியுமா?
வேலைக்கு வந்த பாவத்திற்காக
உயிரைவிட்ட தொழிலாளர்கள்?
மிசினிலே உடல்நசுங்கி,
பாய்லர் வெடித்து உடல்கருகி.
வேலை போனதால் தற்கொலை செய்து
இவர்களைப் போல இறந்தவர்கள்
எண்ணிக்கை சொல்லி மாளாது!
வேலைக்கு வந்த பாவத்திற்காக
விபத்துகளில் கை கால்களை
இழந்தி ஊனமாவும்
தொழிலாளர்களே தொழிலாளர்களே!
வேலூர், ஆம்புர், ஓசூர் என்று
நாடெங்கும் தொடர்கிறது
தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகள்!
12 மணிநேர வேலை நேரம்
ஓ.டி. என்பது கட்டாயம்,
குறைந்த கூலி, ஓய்வு இல்லை
போன்ற பல கொடுமைகளை
எதிர்த்துக் கேட்க சங்கம் அமைத்தால்
வேலை நீக்கம், இடமாற்றம்!
பயங்கரவாதம் பயங்கரவாதம்
தொழிற்சாலை என்ற பெயரில்
தொழிலாளர்களுக்கு இழைப்பதெல்லாம்
முதலாளித்துவ பயங்கரவாதம்!
காரணம் யார்? காரணம் யார்?
ஆலைக்குள்ளே இறப்பதற்கும்
தற்கொலை செய்துகொள்வதற்கும்
காரணம் யார்? காரணம் யார்?
சட்டப்படி கொடுக்க வேண்டிய
பாதுகாப்புகள் கொடுக்காமல்,
சட்டபடி இருக்கின்ற
பாதுகாப்புகளை நீக்கிவிட்டு
உற்பத்தியைப் பெருக்குகின்ற
லாபவெறி பிடித்தலையும்
முதலாளிகளே குற்றவாளிகள்?
விபத்து, தற்கொலை என்பதெல்லாம்
முதலாளிகளே திட்டமிட்டு
நடத்துகின்ற படுகொலைகள்!
அசோக் லேலாண்டு, டிவிஎஸ்
கமாஸ் வெக்ட்ரா, கார்போரண்டம்
போன்ற பல ஆலைகள்
சட்டவிரோதமாக தொழிலாளர்களை நடத்துது!
முதலாளிகளின் அடக்குமுறைகளை
ஏற்காத தொழிலாளர்களை
வேலை நீக்கம், இடைநீக்கம்,
வெளிமாநிலத்திற்கு இடமாற்றம்
என்று சொல்லி தண்டனை வழங்குது!
பிணந்திண்ணும் கழுகளைவிட
மலம் திண்ணும் பன்றிகளைவிட
பணந்திண்ணும் முதலாளிகளே
தொழிலாளர்களை கொலை செய்யும்
கொடியவர்கள்! கொடியவர்கள்!
சட்டத்தை மீறி உற்பத்தி செய்யும்
முதலாளிகளே கிரிமினல்கள்!
சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிக்காமல் காப்பது யார்?
தொழிற்சாலை ஆய்வாளர்,
தொழிலாளர் அலுவலர்,
போலீசும், நீதிமன்றமும்
முதலாளிகளின் அடியாள்படையே!
சட்டத்தை மீறும் முதலாளிகளுக்கு
வரிச்சலுகை, கடன் ரத்து
வரிக்குறைப்பு, மானியம்
என்ற பெயரில் பல ஆயிரம்கோடி
மக்கள் பணத்தை வாரி இறைப்பது
மத்திய மாநில அரசுகளே!
இயற்கைக்கு, மனித குலத்திற்கு
எதிரான முதலாளித்துவத்தை
தனியார்மயம் – தாராளமயம்
உலகமயம் என்ற பெயரில்
ஊட்டி வளர்ப்பதும் இந்த அரசுகளே!
தீர்வு என்ன? தீர்வு என்ன?
தொழிலாளர்கள் படுகின்ற
துன்பங்களுக்கு தீர்வு என்ன?
எப்படி? எப்படி?
சட்டத்தை மீறும் முதலாளிகளை
தண்டிப்பது எப்படி? எப்படி?
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
கட்டியமைப்போம்! கட்டியமைப்போம்!
முதலாளிகளை தண்டிக்க
இழந்த உரிமைகளை மீண்டும் பெற
வீதியில் இறங்கிப் போராடுவோம்!
ஓங்குக! ஓங்குக!
தொழிலாளர் வர்க்க ஒற்றுமை
ஓங்குக! ஓங்குக!
பிற ஆலைகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பு:
தோழர்களே!
ஒசூரில் தொழிலாளர்கள் மீது ஆலைக்குள் சட்டவிரோதமான அடக்குமுறைகள் அதிகரித்து வருகின்றன. அசோக் லேலாண்டில் தொழிலாளர்கள் மீது சட்டவிரோத அடக்குமுறைகள் (கடுமையாக வேலைபளு அதிகரித்தல், போதிய பாதுகாப்பு அம்சங்களை கொடுக்க மறுத்தல், பயிற்சி தொழிலாளர்களை உற்பத்தியில் ஈடுபடுத்துதல், ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தர உற்பத்தியில் ஈடுபடுத்துதல்,..) செலுத்தி நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வி.ஆர்.எஸ்.இல் (ஆட்குறைப்பு) வெளியேற்றுவதற்கு திட்டமிட்டு இயங்குகிறது. கமாஸ் ஆலையில் ஒப்பந்தத்தை மீறுதல், சங்க நிர்வாகிகள் வேலைநீக்கம், இடமாற்றம் போன்றவற்றை சட்டவிரோதமாக செய்கிறது. லேலாண்டு, கார்போரண்டம், எக்ஸைடு உள்ளிட்ட பல ஆலைகள் சட்டவிரோத ஒப்பந்தங்களை போட்டு தொழிலாளர்களை கசக்கி பிழிகின்றன. வெக் இன்டியா, டி.வி.எஸ். குழும நிறுவனங்கள், ராஜ்சிரியா போன்ற பல ஆலைகளில் சட்டவிரோதமான முறைகள் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. வெண்ட் இண்டியா, கார்போராண்டம் உள்ளிட்ட பல ஆலைகள் தொழிலாளர்களை ஸ்டாஃப் ஆக்குவதன் மூலம் சட்டபூர்வ உரிமைகளை பறிக்கின்றன.
தற்போது ஒசூரில் பெரும்பாலான ஆலைகள், மேற்கண்ட சட்டவிரோத முறைகளில் தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து, தங்களது சந்தைத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு, சட்டவிரோத லேஆப் விடுவது அதிகரித்து வருகின்றன. இவ்வாறான கொடுமைகளுக்கு ஒசூர் முதலாளிகளுக்கு லேலாண்டு நிர்வாகம் வழிகாட்டியாக உள்ளது.
இவற்றின் விளைவாக, தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்ளுதல், மன உளைச்சலுக்கு ஆளாகி பலவகை உடல் நோய்களுக்கு ஆளாகுதல், ஆலையில் விபத்துக்கள் என்ற பெயரில் தொழிலாளர்கள் கொல்லப்படுதல், உடலுறுப்புகளை இழத்தல், அற்ப கூலிக்கு வேலை செய்ய வேண்டி வருதல் போன்ற பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இவற்றின் ஒட்டுமொத்தத்தில், நிரந்தரத் தொழிலாளர்கள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு, தொழிலாளர்களின் வேலைமுறை நவீன கொத்தடிமை நிலைக்கு தாழ்ந்து வருகிறது.
இவற்றை எதிர்த்து, தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகளைக் காக்க, “தொழிலாளர் நலச்சட்டங்களை மீறுகின்ற முதலாளிகளை கிரிமினல் சட்டத்தின் கீழ் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் 21-12-2013 அன்று மாலை 5.00 மணிக்கு ஒசூரில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுத்துள்ளோம். ஒசூர் தொழிலாளர்கள் மத்தியில் ஒருங்கிணைப்பு – ஒற்றுமையைக் கட்டியமைக்க எடுத்துவரும் முயற்சிகளுக்கு ஏற்கனவே ஆதரித்து வருகிறீர்கள். அது போல இந்த எமது முயற்சிக்கும் நூற்றுக்கணக்கில் தொழிலாளர்களை திரட்டி வந்து பங்கேற்க கேட்டுக்கொள்கிறோம்.
நன்றி!
பேரணி தொடங்கும் இடம்: தாலுக்கா அலுவகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடக்கும் இடம்: நகராட்சி அலுவலகம் முன்பு
பிற ஆலைத் தொழிலாளர்களுக்கும், சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட செய்தி ஆங்கிலத்தில்:
Dear Comrades,
In Hosur, illegal oppressions are increased on the workers in factories. Ashok Leyland Company is planning to expel hundreds of workers under VRS (Retrenchment) by illegal oppressions on the workers like increasing the hard work, refused to give proper safety, using apprentice in production, using contract labour in regular production.
Kamas Vectra Company is also doing illegal oppressions like breaking the agreement, termination and transfer of the union bearers. The Management of Carborundum and Exide like companies oppress the workers who are in union by making agreement with traitors among workers.
Now, many industries in Hosur increased oppressions like illegal exploitations on workers by above methods, fulfill the demands in production for the market and illegal layoff. For all these cruelties, Leyland Management is the role model for Hosur capitalists.
Due to the above cruelties, workers are in many sufferings like suicides, deceases due to mental distortion, murder of workers in the name of accidents, loss of physical parts of the workers, accept to work for poor wages. On the whole, work nature is worsening as bonded labour due to the abolition of permanent workers.
Support the struggle under the slogan “Arrest the owners who break the labour laws under criminal act!” against all the above cruelties imposed on the workers and to secure legal rights of the workers.
செய்தி :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கிருஷ்ணகிரி – தருமபுரி – சேலம் மாவட்டங்கள்.
தொடர்புக்கு: 97880 11784.
தொடரட்டும் தொழிலாளர்கள் போராட்டம்.விரைவில் புரட்சியை எட்டட்டும்.