1. கும்மிடிப்பூண்டி
சிவந்த கும்மிடிப்பூண்டியை பார்த்து கலங்கிய போலீசு.
வேலைப்பறிப்பு – தற்கொலைகள் ஆலை சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் கீழ் கடந்த மூன்று மாதமாக நடைபெற்று வந்த இயக்கத்தின் அடுத்த கட்டமான பேரணி, ஆர்ப்பாட்டம் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, திருவள்ளூர் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் அலுவலகத்தில் தொடங்கி பைபாஸ் சாலை வழியாக கடந்து ‘பாண்டியன் ஹோட்டல்’ அருகில் நிறைவுற்றது.
பேரணியில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் கே. எம். விகேந்தர் தலைமை உரையாற்றினார். தொழிலாளர்களின் உயிரை கிள்ளுக்கீரையாக மதிக்கும் முதலாளிகளுக்கு சவுக்கடி கொடுக்க தொழிலாளி வர்க்கமாய் நாம் அணிதிரள வேண்டிய அவசியத்தை உணர்த்தினார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் தலைவர் தோழர் அ. முகுந்தன் துவக்கி வைத்த பேரணி, செங்கொடிகளும் சிவப்பு பதாகைகளும், ஆசான்களின் படங்களும், தோழர்களின் ஆவேச முழக்கமும் காவல் துறையினரை கலக்கமடைய வைத்தது. “எங்கே எந்த வழியாக செல்கிறீர்கள், என்ன திட்டம் என தொடர்ச்சியாக மாவட்ட செயலாளரை அழைத்துக் கேட்டுக் கொண்டே இருந்தது போலீசு” பேரணி செல்கின்ற வழியை தெளிவாக தோழர் கூறிய பின்னும் கலக்கம் தெளியாத போலீசு பய பீதியுடனே பேரணி முழுக்க நம்முடனே வந்தது.
ஒரு 50 பேர்தான் வருவார்கள் என்று நினைத்து, எந்த ஏற்பாடும் செய்யாமல் வெறும் 5 போலீசு மட்டும் வந்திருந்தனர். பேரணி துவங்கி சாலைக்கு வந்ததும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. பேரணியின் முன்னரும் பக்கவாட்டிலும் பிரசுரம் விநியோகித்த தோழர்களிடம், “தம்பி, வேண்டாம்பா, ட்ராபிக் அதிகமாகுது, சமாளிக்க முடியல” என்று கெஞ்சியது போலீசு. ஆனால், 4 அடியில் சிவப்பு தடியுடன், செஞ்சட்டையணிந்த தொண்டர்களின் கட்டுப்பாட்டுக்குள்ளே நிகழ்ச்சி முழுதும் நடப்பதைக் கண்ட போலீசு ஓரமாக நின்று பேரணியை பார்த்துக் கொண்டிருந்தது.
பேரணி தொடங்குவதற்கு முன்னரே வந்த சிப்காட்டை சேர்ந்த முதலாளி ஒருவன் வேவு பார்க்கத் தொடங்கினான். முதலாளிகளைப் போல வேடமணிந்து, முதலாளிகளை இழிவுபடுத்தியதையும், தனக்கு ஆப்பறையவிருக்கும் தொழிலாளி வர்க்கத்தின் கட்டுக்கோப்பையும், முழக்கங்களையும் கண்டும் காணாதவன் போல பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நின்றுகொண்டிருந்தான்.
பேரணியின் முதல் வரிசையில் பிரச்சாரக் குழு தோழர்களின் நடனத்துடன் கூடிய பறை முழக்கமும், தொடர்ந்து ஆர்ப்பாட்ட பேனர், பு.ஜ.தொ.மு கொடி, பின்னர் கொள்ளையடிக்கும் முதலாளிகளை இழிவுபடுத்தும் மாறுவேடம் என அரை கிலோமீட்டர் தூரத்துக்கு பேரணி நீண்டது. வழி நெடுக நின்ற உழைக்கும் மக்கள் மற்றும் கடைவீதியில் இருந்த தொழிலாளர்கள், பயணிகள் என அனைவரும் பேரணியை வரவேற்றனர்.
2 கிலோமீட்டரை கடந்த பேரணி இறுதியாக பாண்டியன் ஹோட்டல் அருகே நிறைவுற்றது. தொடர்ந்து முழக்கமிட்டபடி இருந்ததால், அருகில் இருந்த கடைகளில் இருந்த மக்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம் நடக்கவிருக்கும் இடத்திற்கு வந்தனர். இதனால் சர்வீஸ் சாலையில் போக்குவரத்து மிகவும் இடையூறானது. போலீசு சமாளிக்க முடியாமல் திணறியதால், தொண்டர் படையைக் கொண்டு போக்குவரத்தை சீராக்கினோம்.
ஆவேச முழக்கங்களைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் ம. சி சுதேஷ்குமார் ஆர்ப்பாட்டத்தில் எழுச்சியுரையாற்றினார். தனது எழுச்சியுரையில், பகுதியில் நடந்த ஆலைச் சாவுகளைப் பட்டியலிட்டு, அதற்கு காரணமான முதலாளிகளைத் தண்டிக்க வேண்டிய போலீசு, அதை ஒரு வழக்காகக் கூட பதிவு செய்யாமல் முதலாளிகளின் ஏவல் நாயாக செயல்படுகிறது என்றும், சுதந்திர தினம் என்று சொல்லப்படுகின்றன ஆகஸ்டு 15 அன்று கூட ஒரு தொழிலாளி ஆலைக்குள்ளே இறந்துள்ளார்.அ தையும் கூட பதிவு செய்ய துப்பில்லாத இந்த போலீசு யாருக்காக எனக் கேள்வி எழுப்பினார். அரசின் தனியார்மய-தாராளமய-உலகமய கொள்கைகளினால், நாம் விரும்பினாலும் விரும்பா விட்டாலும், வீதியில் இறங்கி போராட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அத்தகையதொரு போராட்டங்களில் தொடர்ந்து களத்தில் நின்று தொழிலாளர்களின் நம்பிக்கைக்குரியதாக இருக்கும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியில் உங்களை இணைத்துக் கொண்டு போராட்டத்துக்கு அணி திரளுங்கள் என்று அறைகூவி தனது உரையை நிறைவு செய்தார்.
ஆர்ப்பாட்டத்தின் இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் திருவள்ளூர் மாவட்ட துணைத்தலைவர் தோழர் சதீஷ் நன்றியுரையாற்றினார்.
தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருவள்ளூர் மாவட்டம் – 9445389536
2. திருப்பெரும்புதூர்
”வேலை பறிப்பு-தற்கொலைகள் ஆலைச்சாவுகளை தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்!” என்ற முழக்கத்தை முன்வைத்து தொழிலாளி வர்க்கத்தை விழிப்புறச்செய்வது, உரிமை பறிப்புக்கு எதிராக கிளர்ந்தெழச் செய்வது என்ற நோக்கத்துடன் கடந்த 2 மாதங்களாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்டம்-ஆவடி அம்பத்தூர் பகுதி குழு தத்தம் பகுதிகளில் ஆலைவாயில் பிரச்சாரம், பகுதி பிரச்சாரம், பேருந்து-இரயில் பிரச்சாரங்கள் மேற்கொண்டு முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிக்கும் கருத்தினை தொழிலாளி வர்க்கத்திடம் கொண்டு செல்லப்பட்டது.
இருங்காட்டுக் கோட்டை சிப்காட், ஒரகடம் சிப்காட், திருப்பெரும்புதூர் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகிய பகுதிகளில் செயல்படும் பிரசித்திப்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களிலும், கார்ப்பரேட் நிறுவனங்களிலும் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு 21/12/2013 அன்று மாலை 4.30 மணிக்கு திருப்பெரும்புதூர் தேரடி பேருந்து நிறுத்தத்திலிருந்து பேரணி துவங்கி திருப்பெரும்புதூர் பேருந்து நிலையம் அருகே முடிவுற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இப்பேரணிக்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர், தோழர் சிவா தலைமையேற்று ’’பகுதியிலும், நாடு முழுதிலும் இன்று தொழிலாளி வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் தாக்குதலை அம்பலப்படுத்தி இதற்கெதிராக கிளர்ந்தெழுந்து போராட வேண்டிய அவசியத்தை உணர்த்தி” துவங்கிவைத்தார். பிறகு பேரணியானது திருப்பெரும்புதூர் பிரதான சாலையின் வழியாக செல்கையில் சாலையின் இருபுறமும் இருந்த கடைகள், அதில் பணிபுரியும் தொழிலாளர்கள்,வாடிக்கையாளர்கள் பலரையும் பேரணியும், முதலாளித்துவத்திற்கு எதிரான முழக்கங்களும் ஈர்த்தது. பேருந்து நிலையம் அருகே முடிவுற்ற பேரணி ஆர்ப்பாட்டமாக துவங்கியது. தோழர்கள் விண்ணதிர முழக்கமிட்டது பகுதி மக்களையும், தொழிலாளர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
அதைத் தொடர்ந்து புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின், மாநில அமைப்புச் செயலாளர் தோழர் சி.வெற்றிவேல் செழியன் அவர்கள் கண்டன உரையாற்றினார். தனது உரையில் “பன்னாட்டு நிறுவனங்கள் எல்லாம் வேலை கொடுக்க வந்தவை, நாட்டை முன்னேற்ற வந்தவை என்று எல்லா ஓட்டுப் பொறுக்கி கட்சிகளாலும், ஆளும் வர்க்கங்களாலும் சொல்லப்பட்டது. ஆனால் உண்மை நிலைமையில் இந்நிறுவனங்கள் அன்றாடம் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் உரிமைகளையும், வேலையையும் பறித்து வெறியாட்டம் போடுகின்றது. இக்கொடுமைகளுக்கு முடிவுக் கட்ட வர்க்க ஒற்றுமையைக் கட்டியமைப்பதுடன் – புதிய ஜனநாயக புரட்சியை நடத்த வேண்டியது தேவை” என்று அறைகூவல் விடுத்தார்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
சிவா.
(பு.ஜ.தொ.மு காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர்)
தொடர்புக்கு – 8807532859
3. திருச்சி
புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி சார்பாக வேலைபறிப்பு, தற்கொலைகள், ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்! என்ற மைய முழக்கத்தின் அடிப்படையில் கடந்த 3 மாதமாக பிரசார இயக்கம் மேற்கொண்டிருந்தனர்.
இம்மாதம் 21-ம் தேதி திருச்சி திருவரம்புரில் இதன் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இதற்கு திருச்சி பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியனின் பொதுச்செயலாளர் தோழர்.சுந்தர்ராசு தலைமை தாங்கினார்.
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனியின் மாநிலப் பொதுச்செயலாளர் தோழர். சுப.தங்கராசு
“மக்களின் அடிப்படை தேவைக்கு ரூ 3 லட்சம் கோடிதான் பட்ஜெட்டில் ஒதுக்கப்படுகிறது. கடந்த வருடம் வரை வங்கிகளின் வாரா கடன் ரூ 1,55,000 கோடியாக உள்ளது. சி.பி.ஐ இயக்குனர் ரஞ்சித் சின்ஹா இந்த மொத்த வாராக் கடனில் பெரும் பகுதி 30 நிறுவனங்களிடம் தேங்கியுள்ளது என்று கூறுகிறார். இந்த சூழலில் தான் வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் மானத்திற்கு அஞ்சி 2 லட்சத்திற்க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இப்படி வங்கியில் வாங்கிய கடனை கட்டாமல் ஏமாற்றியதில் தி.மு.கவின் T.R.பாலுவும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் அடக்கம். பெருநிறுவனங்கள் வங்கிக் கடனை ஏமாற்றியது மட்டுமல்லாமல் வரிகளையும் கட்டாமல் ஏமாற்றியுள்ளனர். அதன் விளைவு தான் இந்த விலைவாசி உயர்வு. தக்காளி முதல் வெங்காயம் வரை அனைத்திற்கும் சாதாரண உழைக்கும் மக்கள் வரி கட்டுகின்றனர், ஆனால் இந்நிறுவனங்கள் வரி கட்டுவதில்லை. இவர்களை வரி மற்றும் வாராக்கடனை கட்டும் படி நிற்பந்தித்தால் அவர்களின் ஊக்கம் குறைந்துவிடும் என்று நிதி அமைச்சர் பேசுகிறார். இது எப்படி உள்ளது என்றால் ஒரு திருடன் பல வீட்டில் பொருட்களை திருடி ரோட்டோரமாக போட்டு மலிவு விலையில் விற்கிறான் என்று வைத்துக் கொள்வோம். காவல்துறை அவனை கைது செய்ய வந்தால், ‘இவரை ஏன் கைது செய்கிறீர்கள் இவர் மலிவாக பொருட்களை விற்கிறார். நீங்கள் அவரது ஊக்கத்தை கெடுக்கும்படி நடந்துகொள்ளாதீர்கள்’ என்று கூறுவது எத்தனை அயோக்கியத்தனமானதோ அத்தனை அயோக்கியதனமானது நிதி அமைச்சரின் பேச்சு.
மேலும், நமது விளை நிலங்களையும் பறித்து இத்தகைய நிறுவனங்களுக்கு சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரில் வாரி வழங்குகின்றனர். இந்த சிறப்பு பொருளாதார மண்டலங்கள் இந்தியாவின் எந்த சட்டத்திற்க்கும் கட்டுப்படாமல் குட்டி சமஸ்தானமாக செயல்பட்டு வருகின்றன. நமது நாட்டு தொழிற்சங்க சட்டங்கள் எதுவும் இங்கு செல்லுபடியாகாது. 8 மணி நேரம்தான் வேலை என்பது மீறப்படுகிறது. பாதுகாப்பு கருவிகளுக்கு செலவு செய்ய மறுக்கின்றனர். இதனால் உயிர் இழப்பு ஏற்படுகிறது. அதற்கும் முறையான இழப்பீடு கிடையாது. குறைந்த பட்ச ஊதியம் கிடையாது. இது சிறப்பு பொருளாதார மட்டும் அல்லாது மற்ற நிறுவனங்களிலும் இதேயே நடைமுறைப்படுத்துகின்றனர். நோக்கியாவில் ஆயிரக்கனக்கான தொழிலாளிகளை எப்படி திடீரென விரட்டினானோ அதே போன்றே திருச்சி சித்தார் வெசல்சிலும் விரட்டினான். இந்தியாவில் 46 தொழிற்சங்க சட்டம் உள்ளது. இதை எந்த முதலாளிகளும் முழுமையாக கடைபிடிப்பதில்லை. இந்த சட்ட மீறல்களை நாளுக்கு நாள் மூர்க்கமாக மீறுகிறான்.
மார்க்ஸ் காலத்தில் ஒரு தொழிலாளியின் 8 மணி நேர உழைப்பில் 4 மணி நேர உழைப்பின் ஊதியம்தான் அவனுக்கு போய்ச் சேர்கிறது. மீதி 4மணி நேர உழைப்பு முதலாளியால் திருடப்படுகிறது என்றார். ஆனால் இன்றோ 1மணி நேர உழைப்புதான் தொழிலாளிக்கு வழங்கப்படுகிறது. மீதி 7மணி நேர அவனது உழைப்பு முதலாளியால் கொடூரமாகத் திருடப்படுகிறது. இப்படி கிரிமினல்தனமாக செயல்படும் எந்த ஒரு முதலாளியும் கூட இந்தியா சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து தண்டிக்கப்பட்டதில்லை. இந்த முதலாளிகளைத்தான் நாங்கள் பயங்கரவாதிகள் என்கின்றோம் . இவர்களால் நிகழ்த்தப்படும் பயங்கரவாத்தைதான் முதலாளித்துவ பயங்கர வாதம் என்கின்றோம். ஆனால் இந்த முதலாளிகளோ தங்களது சங்கத்தின் மூலமாக, ‘புதிய ஜனநாயகத் தொழிளாளர் முன்னணி ஒரு தீவிரவாத சங்கம் இதை தடை செய்ய வேண்டும்’ என்று முதலமைச்சரிடம் மனு கொடுத்தனர்.
உடனடியாக பு.ஜ.தொ.மு மீது எதுவும் கிரிமினல் வழக்குகள் உள்ளதா எனத்தேடிப்பார்த்தனர். ‘ஒரு வழக்குகூட எங்கள் மீது இல்லை. ஆனால் நாங்கள் இந்த முதலாளிகள் மீது கிரிமினல் வழக்கு தொடுத்துள்ளோம். அந்த வழக்குகள்தான் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை நீதிமன்றத்தில் மட்டும் தீர்க்க முடியாது. இதை மக்கள் மன்றத்தின் மூலமாக ஒரு புதிய ஜனநாயகப் புரட்சியின் மூலமே தீர்க்க முடியும். இவர்களின் இந்த சுரண்டலுக்கெல்லாம் அடிப்படையாக உள்ள தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற பொருளாதார கொள்கையையும் அதன் மூலமாகவே முறியடிக்க முடியும். அத்தகைய புரட்சிகரப் பாதையில் இங்குள்ள உழைக்கும் மக்களும் தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்து போராட எங்கள் அமைப்பில் இணைய வேண்டும்”
என்று சிறப்புரை ஆற்றினார்.
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைகுழுவினர் பாடிய புரட்சிகர பாடல்கள் தொழிலாளிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன. அவர்கள் பாடிய “மூஞ்சப்பாரு! மூஞ்சப்பாரு! முதலாளி வர்க்கம்” என்ற பாடலை அங்கு நின்றிருந்த தொழிலாளிகள் உற்ச்சாகமாக கைதட்டி ரசித்தனர்.
ஆர்ப்பாட்டத்தை பார்த்த தொழிலாளி ஒருவர், “நீங்கள் ஒருவர் மட்டும்தான் எங்களுக்காக போராடுகிறிர்கள்” என்றார். “அதை மற்றவர்களுக்கும் கேட்க்கும்படி சற்று உரக்க கூறுங்கள்” என்று தோழர்கள் கேட்டவுடன், “நான் நிச்சயமாக மற்ற தொழிலாளிகளிடம் இது பற்றி பேசுவேன்” என்று கூறினார்.
திருச்சி பகுதி பல தொழிற்சங்க போராட்டதிற்க்கு பெயர் பெற்ற பகுதி. பொன்மலை தொழிலாளர் போராட்டம், சிம்கோ மீட்டர் போராட்டம் என பல உதாரணங்கள் கூறலாம். பல ஆண்டுகளாக இந்த போராட்ட குணம் மழுங்கடிக்கப்பட்டு கிடந்ததை பு.ஜ.தொ.மு தோழர்கள் தங்களது வேர்வையை சிந்தி மீண்டும் சிவக்கச் செய்ய போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டத்தின் பொழுது கூட திடீர் என மேடை ஏற்பாடு செய்து நடத்தலாம் என முடிவு செய்தவுடன் சில மணி துளிகளில் ஒரு வாகனத்தை ஏற்பாடு செய்து மேடையாக மாற்றி காட்டினர். தொழிலாளித் தோழர்கள் தங்களது மெய்வருத்தி கைவண்ணத்தை காட்டினர்.
தங்களது கை வண்ணத்தில் புதிய உலகத்தை படைப்போம் என்ற உற்சாகத்துடன்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
செய்தி :
பு.ஜ.தொ.மு., திருச்சி
4. கோத்தகிரி
கோத்தகிரி பகுதி – நீலமலை அனைத்து தொழிலாளர் சங்கம் சார்பாக கோத்தகிரி – மார்க்கெட் ஜீப் நிலையத்தில் 21-12-2013 அன்று காலை 10.00 மணிக்கு “வேலை பறிப்பு – தற்கொலைகள் – ஆலைச்சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் ! “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் முதலாளித்துவ பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தியும் அதனை முறியடிக்க அறைகூவல் விடுத்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் தோழர் ஆனந்தராஜ் தலைமையேற்றார். தோழர் பாலன் உரையாற்றினார். தோழர் ராஜா நன்றியுரை கூறினார்.
முன்னதாக சுவரொட்டி மூலமும் கைபிரதி கொடுத்தும் மக்களிடம் பிரச்சாரம் செய்யப்பட்டது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல்
ராஜா
தி.அ.தொ. சங்கம்
கோத்தகிரி பகுதி
5. கோவை
21.12.2013 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு “வேலைப் பறிப்பு-தற்கொலைகள் ,ஆளைச்சாவுகளை தீவிரமாகும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம் “ என்ற முழக்கத்தின் அடிப்படையில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் சார்பாக பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்திட முடிவு செய்யப்பட்டது.
ஆனால் காவல் துறை அனுமதி மறுத்தது. இந்நிலையில் V.K.K மேனன் சாலையில் இருந்து காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கி பேரணி புறப்பட்டது . எழுர்ச்சி மிகு முழக்கங்களுடன் புறப்பட்ட பேரணியை காவல் துறை தடுத்து நிறுத்தியது. போலீசுடனான நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு காவல் துறை போராளியாக புறப்பட்ட எமது தோழர்களை கைது செய்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
6. சிவகங்கை
“வேலை பறிப்பு – தற்கொலைகள், ஆலைச் சாவுகளைத் தீவிரமாக்கும் முதலாளித்துவ பயங்கரவாதத்தை முறியடிப்போம்” எனும் தலைப்பில் தமிழகம் – புதுச்சேரி தழுவிய பிரச்சார இயக்கத்தின் நிறைவாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒரு பகுதியாக சிவகங்கையில் 27/12/2013 அன்று மாலை 4 மணிக்கு அரண்மனை வாசலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சிறந்த எடுத்துக்காட்டுகளாக இப்பகுதியில் திகழ்கின்ற பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சக்தி சர்க்கரை ஆலை மற்றும் முருகப்பா குழும ஈ.ஐ.டி பாரிக்குச் சொந்தமான சாராய ஆலையை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பு.ஜ.தொ.மு தோழர் சுரேஷ் கண்ணன் தலைமை வகித்தார்.
சிறப்புரையாற்றிய சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களின் பு.ஜ.தொ.மு மாவட்ட அமைப்பாளர் தோழர் நாகராசன், இந்தியா முழுவதும் முதலாளிகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு இழைக்கும் கொடூரங்களையும் சக்தி சர்க்கரை ஆலை முதலாளி பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தின் அப்பா கஞ்சா விற்று பணம் சம்பாதித்த கதையையும், மாவட்ட நிர்வாகமும் போலி விவசாய சங்கத் தலைவர்களும் நடத்தும் பித்தலாட்டத்தையும் தோலுரித்துக்காட்டியதோடு, சிவகங்கை மாவட்ட தொழிற்சாலைகள் ஆய்வாளரிடம் தகவல் கேட்டால், தட்டச்சர் இல்லை என்று பதில் கொடுத்த கேவலத்தையும் அம்பலப்படுத்தினார்.
கேப்டன் டி.வி செய்தியாளர் சுரேஷ் அனுப்பியதாகக் கூறி ஒருவர் முழு நிகழ்ச்சியையும் வீடியோ எடுத்தார். இடையில் வெளியே சென்ற அவர் ஒரு ஸ்டில் கேமராவைக் கொண்டுவந்து சில படங்களை எடுத்து பின்னர் அந்தக் கேமராவைக் கொண்டுபோய் இன்னொருவரிடம் கொடுத்தார். கேமராவை வாங்கிய அந்த நபர் உடனடியாக அருகிலிருந்த கம்ப்யூட்டர் சென்டரில் போய் படங்களை மெயில் செய்துவிட்டு வெளியேறி விட்டார். இந்த முருகப்பா குழும வேலைகளை உடனே அம்பலப்படுத்திப் பேசினார், அடுத்ததாகப் பேசிய தோழர் குருசாமி மயில்வாகனன், மேலும் சென்னையில் தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம் கொடுக்காமல் பிடிவாதம் பிடித்த முருகப்பா குழுமத்தின் வீம்பை ஒடுக்கிய பு.ஜ.தொ.முவின் போராட்டத்தை விளக்கியதோடு, முதலாளிகளுக்கு ஆதரவாக அவர்கள் கட்டிப்போட்டிருக்கும் நாயாக அரசு அதிகாரிகள் செயல்படுவதை அம்பலப்படுத்தினார்.
ஆர்ப்பாட்டத்தின் முடிவில் சாராய ஆலைப்பகுதிலிருந்து வந்திருந்த சில விவசாயிகள் தோழர்களைச் சந்தித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]
தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை