Thursday, June 20, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !

விவசாயிகளை ஏய்க்கும் அருட்செல்வரின் சக்தி சர்க்கரை ஆலை !

-

அடிக்கரும்பு முதலாளிகளுக்கு – திருடனுக்கு கடன் சலுகை
நுனிக்கரும்பு விவசாயிகளுக்கு – பறிகொடுத்தவனுக்குப் பட்டை நாமம்.
சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலையின் மோசடியும்  கரும்பு விவசாயிகளின் கசப்பான நிலையும்.

நா மகாலிங்கம், ப சிதம்பரம்
ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் சக்தி குழுமத்தின் உரிமையாளர்.

சிவகங்கை மாவட்டத்தில் பாரம்பரியமாக நெல் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயிகளில் பெரும்பாலோனரை ஆலைக்கரும்பு விவசாயத்திற்கு மாற்றியது படமாத்தூரில் அமைக்கப்பட்டுள்ள சக்தி சர்க்கரை ஆலை. ப.சிதம்பரத்துடன் நெருக்கமான உறவில் உள்ளவரும் பொய், ஃப்ராடு, பித்தலாட்டம், சட்டவிரோதம், மக்கள்விரோதம், வெளிவேஷம், ஆகியவற்றின் நவீன கால இந்தியத் திருடர்களின் பிரதிநிதியான அம்பானிக்கு இணையான தமிழகப் பிரதிநிதி பொள்ளாச்சி நா. மகாலிங்கம்தான் இந்த சக்தி குழுமத்தின் உரிமையாளர். பொருட்செல்வம் சேர்ந்ததால் அருட்செல்வரான இந்த ஆன்மீகச் செம்மலின் ஆலை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமை சொல்லில் அடங்காதது.

சரியான நேரத்தில் கரும்புக் கருனைகளை முழுமையாக வழங்காதது; கட்டிங் ஆர்டர் எனப்படும் வெட்டாணையை கரும்பு விளைச்சலுக்குப் பொருத்தமான நேரத்தில் வழங்காமல் ஆலையின் உற்பத்தி வசதிக்கேற்ப வழங்குவது; இதெல்லாம் போக, தொடங்கிய நாளிலிருந்து இன்று வரையில் கரும்பை எடைபோடும் மிஷினில் தில்லுமுல்லு செய்து அளவையைக் குறைத்துக் காண்பிக்கும் மகா மோசடி; விவசாயிகளை வஞ்சித்தே கொழுத்துப்போன இந்த ஆலை இப்போது அடிக்கும் கொள்ளை தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தின் பாணியில் அடிப்பதுதான்.

கரும்பு விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. விளைவிக்கப்பட்ட கரும்புகளை வெட்டி ஆலைக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்காக ஆலை கொடுக்க வேண்டிய பணத்தில் வங்கிக் கடனுக்கான பணத்தை பிடித்தம் செய்து கொள்கிறது. பின்னர் அதை வங்கியில் கட்டி விடுகிறது. விவசாயிகளின் மீது நம்பிக்கையில்லாமல் கடன்தொகையை வசூலிப்பதற்காக விவசாயிகளை இழிவுபடுத்தும் இப்படி ஒரு ஏற்பாட்டை வங்கிகளும் ஆலையும் சேர்ந்து ஆரம்பத்திலிருந்தே நடத்திக் கொண்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த நான்கு வருடங்களாக விவசாயிகளிடம் பிடித்தம் செய்த தொகையினை ஆலையானது வங்கியில் செலுத்தவில்லை. விவசாயிகளை நம்பாமல் ஆலையை நம்பிய வங்கிக்கு இப்போது ஆலை நாமம் சாத்தி வருகின்றது. விவசாயிகளும் தொடர்ச்சியாக இது குறித்து அரசிடம் முறையிட்டுக் கொண்டே வருகிறார்கள். அரசும் ஆலையோடு பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டே வருகின்றது. இந்த வருடம் வரை ஆலையானது வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 60 கோடி. வெறும் 6,000 ரூபாய் பாக்கிக்காக விவசாயிகளின் வீட்டிற்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பும் வங்கிகள் சக்தியிடம் 60 கோடியை வசூலிக்க முடியாமல் வெறும் வாயை மெல்லுகின்றன. ஆலையோ வங்கிகளின் நாக்கில் சர்க்கரையைத் தடவுகிறது.

சக்தி சர்க்கரை ஆலை
சக்தி சர்க்கரை ஆலை, சிவகங்கை

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் நடைபெறுகிற விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் எனும் மெகா சீரியல் நாடகத்தில் இப்பிரச்சினையை விவசாயிகள் எழுப்ப முடிவு செய்த போது, கூட்டம் நடைபெறுவதற்கு முன்னரே விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்த மாவட்ட ஆட்சியர் இந்தப் பிரச்சினையை இப்போது எழுப்ப வேண்டாம், அவர்கள் கடனைக் கட்டுவதாக உறுதி கூறியுள்ளதாகச் சொல்லித் தடுத்திருக்கிறார். இவர் மாவட்டக் கலெக்டரா? சக்தி சுகர்ஸ் மேனஜரா? காங்கிரஸ், சி.பி.ஐ. சி.பி.எம், சில உதிரிகள், மற்றும் ஆலையே சில அல்லக்கைகளை வைத்து நடத்தி வருகின்ற விவசாயிகள் சங்கங்களின் பிரநிதிகள் இந்த ஏமாற்று வேலைக்குத் துணை போயுள்ளனர்.

நீதி, போலீசு, வருவாய், வேளாண்மை பள்ளிக் கல்வி, நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் உயர் அதிகாரிகள் சிவகங்கைக்கு வரும் போதெல்லாம் ஆலையின் விருந்தினர் இல்லத்திற்குத்தான் வந்து ஓய்வெடுக்கிறார்கள். அங்கே சகலவிதமான சேவைகளும் அவர்களுக்கு செய்யப்படுகின்றன. எனவே எந்த அதிகாரியும் சக்திக்கு எதிராக வாயைத் திறப்பதில்லை. அவர்கள் வாயைத் திறந்து சொல்வதென்னவோ, வாழ்க வளமுடன் மட்டும்தான்.

இந்த நான்கு ஆண்டுகளில் இப்பகுதியின் கரும்பு உற்பத்தி 8 லட்சம் டன்னிலிருந்து 3 லட்சம் டன்னாகக் குறைந்து விட்டது. விவசாயிகள் தங்களது கரும்புகளை மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் அரசு ஆலைக்கு அனுப்ப முடிவு செய்து கலெக்டரிடம் அனுமதி கேட்டு கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையைக் கொடுப்பதற்காக சர்க்கரை ஆலைகளுக்கு வட்டியில்லாத கடனாக ரூபாய் 7,500 கோடியை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் கூறியிருக்கிறார்.

இதுதான் அரசின் முதலாளித்துவ விசுவாசம். பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு எதையும் செய்யாதது மட்டுமல்லாமல் இந்த ஆண்டிற்கான கரும்பின் கொள்முதல் விலையையும் குறைத்துள்ள அரசு விவசாயிகளின் பணத்தில் மஞ்சக்குளிக்கும் ஆலைகளுக்கோ வட்டியில்லாக் கடன் வழங்குகிறது, அதுவும் 7,500 கோடி ரூபாய்.

இப்போது விவசாயிகளுக்குத் தேவை ஒரு சரியான சங்கம்தான். ஓட்டுக் கட்சிகள் கட்சிகளாக தங்களுக்குள் எவ்வளவோ முரண்பாடு இருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் சங்கம் என்று வருகையில் கூட்டுப்பங்கு போடுவதுதான் அவைகளுக்குக் குறியாக உள்ளது. அதுவும் விவசாயிகளைப் பொறுத்த வரையில் போலிக்கம்யூனிஸ்டுகளின் சங்க ஆதிக்கம் அதிகமாக இருப்பதால் முன்னொரு காலத்திய சங்க நினைவுகளில் மூழ்கி அவர்களின் பின்னால் விவசாயிகள் நிற்கிறார்கள். இதனால்தான் விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் கேட்க நாதியற்றுப் போகின்றன. சிவகங்கை சக்தி சர்க்கரை ஆலைக்குக் கரும்பு வழங்கும் விவசாயிகளின் நிலையும் இதேதான். புதிய சங்கம் ஒன்றை விவசாயிகள் தேர்ந்தெடுக்காத வரையிலும் அவர்களின் கதியும் இதேதான்.

ஆலையையும், அதற்கு வாலாட்டும் போலிச்சங்கவாதிகளையும், அரசையும் அம்பலப்படுத்த புரட்சிகர சக்திகள் தயாராகி வருகின்றன. விரைவில் அவைகள் இப்பகுதியில் ஒரு போராட்டத்தைத் தொடங்கும். அதுவரை மட்டுமானால், ஆலையின் அருட்செல்வர் வாழ்க வளமுடன் என்று புலம்பிக் கொள்ளலாம்!

–    புஜ செய்தியாளர், சிவகங்கை.

 1. மகாலிங்கம் ஆப்பக்கூடலில் ஒரு
  சாராய நிறுவனம்…..
  பெயர்: சிவா டிஸ்டில்லரீஸ்
  பொருள்: சிவா’ஸ் ரீகல் விஸ்கி
  படிப்பது ராமாயணம் தப்பு.தப்பு மகா பாரரரதம்,இடிப்பது?
  சொல்லுங்கள் சிவா,இவருக்கு பாம்பு தோலில் ஒரு சட்டை
  தைத்து கொடுக்கலாமா?

 2. // கரும்பு விவசாயம் செய்வதற்காக விவசாயிகளுக்கு வங்கிகள் கடன் கொடுக்கின்றன. விளைவிக்கப்பட்ட கரும்புகளை வெட்டி ஆலைக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்காக ஆலை கொடுக்க வேண்டிய பணத்தில் வங்கிக் கடனுக்கான பணத்தை பிடித்தம் செய்து கொள்கிறது. பின்னர் அதை வங்கியில் கட்டி விடுகிறது. //

  நல்ல உஷார்தான். மல்லையா கிட்ட மட்டும் நெத்தியை காட்டிட்டு நிக்கறானுங்க!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க