privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா - ஆர்ப்பாட்டம் !

ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியா, சிறையா – ஆர்ப்பாட்டம் !

-

ஆவடி வேல் டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்தை முறியடிப்போம் ! ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆவடியில் உள்ள வேல் டெக் பொறியியல் கல்லூரியின் அராஜகத்துக்கு முடிவு கட்டும் வகையில்  புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய அமைப்புக்களின் சார்பில் ஆவடி பேருந்து நிலையம் அருகில் 28.12.2013 அன்று மாலை 4 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அக்கல்லூரியில் மாணவர்களைப் போலவே பேராசிரியர்களும் கொத்தடிமைகளாக நடத்தப்படுவதையும்  மேலும் கொத்தடிமைத்தனத்திற்கு எதிராக வேலையை விட்டு நிற்கும் உரிமை இல்லாமல் அவர்களின் சான்றிதழ்களையும் பறித்துக் கொள்ளும் கிரிமினல் தனத்திற்கும் எதிராகவும் புமாஇமு தொடர்ந்து சுவரொட்டி இயக்கத்தினை மேற்கொண்டது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட மாணவர்களும் பேராசிரியர்களும் புமாஇமுவை தொடர்பு கொண்டு வேல்டெக் என்ற கொள்ளைக் கூட்டத்தின் அயோக்கியத்தனங்களால் தாங்கள் பாதிக்கப்பட்டதை துணிவோடு வெளி உலகிற்கு கூற வந்தனர். அதன் ஒரு சிறு துளியே இந்த ஆர்ப்பாட்டம்.

முழக்கங்களோடு ஆர்ப்பாட்டம் தொடங்கியது. ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்த பு.மா.இ.மு.வின் மாநில அமைப்புக்குழு உறுப்பினர் தோழர். நெடுஞ்செழியன் “தமிழகத்தில் உள்ள அனைத்துப் பொறியியல் கல்லூரிகளும்  கல் குவாரிகளைப் போல இயங்குகின்றன. அங்கு உள்ள கொத்தடிமைகளுக்கு எவ்வித உரிமைகளும் இல்லாமல் அடக்கி ஒடுக்கப்பட்டு உள்ளார்களோ அதை விட இன்று பேராசிரியர்களும் மாணாவர்களும் அடக்கி ஒடுக்கப்படுகின்றனர். அதன் அயோக்கியத்தனத்தின் ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த வேல் டெக் பொறியியல் கல்லூரி. எப்போது கல்வியை கொடுக்க வேண்டிய அரசு தன் கடமையில் இருந்து விலகியதோ, அப்போது கல்வியை ஜேப்பியார், சாராய உடையார் போன்ற சாராய வியாபாரிகளும் பொறூக்கிகளும்  கல்வியை விற்க ஆரம்பித்தனர். அங்கு எப்படி உரிமைகள் கிடைக்கும். இதற்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயம் தற்போது ஏற்பட்டுள்ளது. இப்போது தவறினால் இனி எப்போதும் அதை பேச முடியாது என்ற நிலையும் ஏற்படும்” என்று கூ றினார்.

அடுத்தாக கண்டன உரையாற்றியற்றிய புஜ.தொ.முவின் மாநில இணைச்செயலர் சுதேஷ் குமார் “தனியார் கல்லூரிகளின் முதலாளிகள் தஙகளை எந்த சட்டமும் எதுவுமே செய்யமுடியாது என்ற திமிரில் தொழிலாளர்களை, பேராசிரியர்களை கொத்தடிமை போல பிழிந்து  சக்கையாக்கி பின்னர் தூக்கியெறிகின்றனர். 2008-ல் வேல்டெக் கல்லூரியில் பணியாற்றிய பேருந்து ஓட்டுனர்கள்131 பேர் சங்கம் அமைத்ததற்காக, தங்கள் உரிமைக்காக போராடியதற்காக இக்கல்லுரியின் நிர்வாக இயக்குனரால் வாய்மொழியாக வேலை நீக்கம் செய்யப்பட்டனர். இதற்கு எதிராக உயர் நீதிமன்றம் வரை புஜதொமு சென்று தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்த உத்தரவினை  பெற்ற போதும், தொழிலாளர்களை மீண்டும் பணிக்கு அமர்த்தாமல் அந்த உத்தரவினை தனது கழிப்பறை காகிதமாக பயன்படுத்தும் இந்த நிர்வாக இயக்குனரையும்  நிர்வாகத்தையும்  அதன் அயோக்கியத்தனத்தையும் தொழிலாளி வர்க்கம் கண்டிப்பாக முறியடிக்கும். அப்போது  போலீசு வைத்திருக்கும் தடைகள் எல்லாம் தூள்தூளாகும்” என்று கூறினார்.

இறுதியாக புமாஇமுவின் மாநில அமைப்பாளர் தோழர். கணேசன் ” வேல் டெக் என்பது பொறியியல் கல்லூரியா? இல்லை சிறையா?” என்று தனது உரையை தொடங்கி, “சிறையில் எவ்வாறு சாதாரண மனிதன் அவமானத்திற்கும் சித்திரவதைக்கும் உள்ளாகிறானோ அதை விட பல மடங்கு அவமானமும் சித்திரவதையும்தான் வேல்டெக் கல்லூரியில் பேராசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கிறது. பெயருக்கும் வேடெக், வேல் மல்டி டெக் என்று பல பெயர்களில் சீன் போட்டுக்கொண்டு திரிந்தாலும் அதன் உண்மை நிலையைப் பார்த்தால் அது கல்லூரிக்கூடம் அல்ல, அது பேராசிரியர்களில் உழைப்பினை தினமும் சுரண்டும் கொத்தடிமைக்கூடம், மாணவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பறிக்கும் வழிப்பறிக்கூடம், பேராசிரியர்களின் சான்றிதழ்களை திருடி வைத்து இருக்கும் கொள்ளைக்கூடமே” என்று வேல்டெக்கின் உண்மை முகத்தை தோலுரித்தார்.

“எவ்வித உள் கட்டுமான வசதியும் செய்யாமல் NAB,NACC,AICTE போன்ற நிறுவனங்களின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு அந்த நிறுவன அதிகாரிகளுக்கு சாராயம் முதல் பெண்களை கூட்டிக் கொடுப்பது வரை அத்தனை அயோக்கியத்தனமான வேலைகளை செய்து வரும் இக்கல்லூரியின்  முதலாளி ரங்கராஜன், நிர்வாக இயக்குனர் கிசோர் குமார், முதல்வர் ஆகியோர் இன்று பேராசிரியர்களை குற்றம் கூற என்ன உரிமை இருக்கிறது?

மாணவர்களுக்கு கல்வி சொல்லிக் கொடுக்க வேண்டிய பேராசிரியர்களை காலை எட்டு மணி முதல் இரவு 7 மணி வரை  அலுவலக வேலையை  செய்ய வைப்பதும் அரசுக்கு பொய்யாக அறிக்கை கொடுக்க பேராசிரியர்களை கட்டாயப்படுத்தியதையும் எடுத்துக்கூறி இதை இழிவென கருதி வேலையை விட்டு நிற்க நினைத்த  சாந்தி, ஜெனீபர், தீபிகா ஆகிய மூன்று பேராசிரியர்களை கல்லூரியிலிருந்து நீக்கியதையும்  இதற்கு எதிராகப் பேசிய சாந்தி என்ற பேராசிரியரைப் பற்றி அவதூறாக  “ஒழுக்கம் சரியிலாதவர் ” என்று அண்ணா பல்கலை கழகத்திற்கு கூறியதையும் அம்பலப்படுத்தினார்

“லட்சக்கணக்கில் பணத்தை கடன் வாங்கி கல்லூரிக்கு அனுப்பினால் அங்கு நம் பிள்ளை எப்படி அறிவாளியாக வரமுடியும்?  பணம் பறிப்பது மட்டுமே இக்கல்லூரியின் வேலை . நம் பிள்ளைகளை மக்குப்பிள்ளைகளாக மாற்றி அனுப்பும் இந்த கல்லூரியை, பேராசிரியர்களை, தொழிலாளிகளை சித்திரவதை செய்யும் இக்கல்லூரியை , இப்பகுதியில் இப்படி உள்ள இந்த கொள்ளைக் கூடாரத்தை துடைத்தெறிவது மக்களின் கடமை. இது போன்ற கல்லூரிகளை அரசுடமையாக்குவதுதான் ஒரே தீர்வு. அதற்கு மாணவர்களும் மக்களும் தனியார் கல்விக்கொள்ளைக்கு ஆதரவாக உள்ள இந்த அரசின் கல்வி தனியார்மயத்துக்கு எதிராகப் போராடும் போதுதான் அது சாத்தியம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.

மாணவர்கள், தொழிலாளர்கள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் வேல்டெக் கல்லூரியால் பாதிக்கப்பட்டு அதற்கு எதிராக சுயமரியாதையுடன் போராடிவரும் பேராசிரியை சாந்தி கலந்து கொண்டார். அக்கல்லூரியை சேர்ந்த பல மாணவர்கள், பேராசிரியர்கள், தொழிலாளிகள் , சிறுவியாபாரிகள் , மக்கள் என  அருகில் நின்ற படி கேட்டுக் கொண்டு இருந்தனர். ஊடகங்களிடம் பேசிய பேராசிரியர் சாந்தி “இக்கல்லூரியில் வேலை செய்த ஒரு பெண் பேராசிரியர் மகப்பேறு காலத்தில் கட்டாயமாக வேலை வாங்கப் பட்டதால் அவரின் குழந்தை இரு மாதங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த  கொடுமையையும் பெண் ஆசிரியர்களின் கழிவறை வாயிலில் கூட கேமரா வைத்து கண்காணிப்பதையும்” கூறினார்.

கொத்தடிமைத்தனத்திற்கு எதிராகப் போராடிய  பேராசிரியர் சாந்தியை ” பொம்பளை என்று பார்க்கிறேன், இல்லைன்னா நடக்குறதே வேற” என்றானாம் வேல்டெக் கல்லூரியின் நிர்வாக இயக்குனரான கிசோர். அவன் நடத்திக் காட்டினானோ இல்லையோ சாந்தி தன் சுயமரியாதையை இதோ  தெருவில் நிரூபித்துவிட்டார் புமாஇமு, புஜதொமுவின் துணையோடு. தனியார் கல்லூரிகளில் தன்மானத்தை இழந்து அடக்கப்பட்டு ஒடுக்கப்பட்டு இருக்கும் மாணவர்களே, பேராசிரியர்களே, தொழிலாளர்களே நமக்கு பாதுகப்பு என்பது அடங்கி கிடப்பது அல்ல, நாம் என்ன செய்யப்போகிறோம்?

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

செய்தி
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி