privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தொழிலாளர்கள்வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!

வென்றது தொழிலாளி வர்க்கம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!

-

வென்றது தொழிலாளர் போராட்டம்! தகர்ந்தது டால்மியா நிர்வாகத்தின் அடக்குமுறை!

தொழிலாளர்களின் உரிமையும் உயிரும் மயிருக்கு சமம்; கொள்ளை லாபம் ஒன்றே நோக்கம் என கும்மிடிப்பூண்டி சிப்காட்டில் இயங்கி வருகிறது டால்மியா லேமினேட்டர்ஸ் (M.L.டால்மியா குரூப்ஸ்) என்னும் சாக்குப்பை தயாரிக்கும் நிறுவனம்! கொல்கத்தாவைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இந்தக் கொத்தடிமைக் கூடாரத்தில் சுமார் 500 தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப்படுகின்றனர். இவர்களில் 450 பேர் வடமாநிலத் தொழிலாளிகள். 50பேர் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 50 பேரிலும் 30 பேர் மட்டுமே நிரந்தத் தொழிலாளிகள். மீதமுள்ள 20 பேருடன் வடமாநிலத் தொழிலாளர்கள் அனைவரையும் சேர்த்து 470பேரை, காண்டிராக்ட் வைத்துக் கொள்ள லைசென்ஸ் கூட வாங்காமலேயே காண்டிராக்ட் என்ற பெயரில் ஒட்டச்சுரண்டி வருகிறான் டால்மியா நிர்வாகம். இவர்களின் சம்பளமோ ரூ 5,000 – 6,500 வரைதான். அனைவரும் கட்டாயமாக தினந்தோறும் 4 மணி நேரம் ஓவர்டைம் பார்த்தாக வேண்டும். யார் அடிபட்டாலும், செத்தே போனாலும் ஆலை இயங்கிக் கொண்டேதான் இருக்கும். கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி 20 வயது கூட நிரம்பாத வடமாநிலத் தொழிலாளி மெஷினில் நசுங்கி செத்த போதும் மற்றவர்கள் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப் பட்டனர். இதற்குப் பெயர் கொத்தடிமைக் கூடாரம் இல்லாமல் வேறென்னவாம்….

‘தென்னிந்தியாவிலேயே சாக்குப்பை தயாரிக்கும் மிகப்பெரிய கம்பெனிகளில் தானும் ஒருவன், அருமையான பணிச்சூழல் நிலவுகிறது, தொழிலாளிகளை விழுந்து விழுந்து கவனிக்கிறோம்’ என தனது வலைத்தளத்தில் பீற்றிக்கொள்ளும் இவன், நடைமுறையில் அனைத்து வகையிலும் சட்டவிரோதமாக செயல்படும் கொடுங்கோல் பண்ணையார் போலவே இருக்கிறான்.

8 மணிநேர வேலை, ESI, PF, சீருடை, காலணி, அடையாள அட்டை, பாதுகாப்பு சாதனங்கள், குறைந்தபட்ச ஊதியம் என எந்த உரிமையும் இல்லாமல் பெரும்பான்மைத் தொழிலாளிகள் வாடி வதங்கிய போது, 30 நிரந்தரத் தொழிலாளிகளை மட்டுமே சேர்த்துக் கொண்டு செயல்பட்ட தி.மு.க.வின் தொ.மு.ச. சங்கம் நிர்வாகத்திற்குத் துணையாக நின்றது. மீதமிருந்த 20 தமிழகத் தொழிலாளிகளைக் கூட சேர்த்துக் கொள்ள மறுத்த தொ.மு.ச நிர்வாகிகள், சங்கத்தின் பேரால் இஷ்டம் போலக் கூத்தடித்து வந்தனர். நேர்மை என்பதே இவர்களுக்கு அறவே பிடிக்காத விசயம், அது சக நிர்வாகியாக இருந்தாலும் சரி.

தொழிலாளர் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய தொழிற்சங்கமே தொழிலாளர்களுக்குத் துரோகியாக மாறியதைக் கண்ட தொழிலாளிகள் சிலர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை நாடினர். பு.ஜ.தொ.மு நேர்மையாக இருப்பதற்கு அடிப்படையான அதன் நோக்கத்தையும், அரசியலையும் விளக்கியபோது, அதை ஏற்றுக் கொண்டு உறுப்பினராகினர். படிப்படியாக மற்றத் தொழிலாளிகளையும், தொ.மு.ச.வின் மீது அதிருப்தியாக இருந்தவர்களையும் உறுப்பினராக்கினர்.

நிரந்தரம், காண்டிராக்ட், வடமாநிலத் தொழிலாளி என்ற பேதமில்லாமல் அனைவரையும் சங்கத்தில் சேர்க்கத் தொடங்கினோம். இதை மோப்பம் பிடித்த நிர்வாகம் சங்க உறுப்பினர்களாக இருந்த பெண் தொழிலாளிகளை ஒவ்வொருவராக, ஏதாவது ஒரு பொய்க் காரணம் சொல்லி வேலையிலிருந்து விரட்டும் முயற்சியில் இறங்கவே, இனியும் காலதாமதம் செய்தால் அனைவரையும் வெளியேற்றி விடுவான் என்பதால் உடனடியாக சங்கத்தை அறிவித்து, நிர்வாகத்திற்கு முறைப்படி கடிதம் அனுப்பினோம்.. சங்கத்தை மதிக்காமல், தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்து தனது தொழிலாளார் விரோத நிலைப்பாட்டை அறிவித்தான் நிர்வாகம்.

மேலும் தொ.மு.ச. கைக்கூலிகள், சட்டவிரோதக் காண்டிராக்ட் முதலாளி போன்ற கழிசடைகள் மூலம் மிரட்டலும் விடுத்தான். வடமாநிலத் தொழிலாளிகள் மத்தியில் நமக்கு தொடர்பாக இருந்தவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. போலீசில் புகார் செய்த மறுநாளே அவர்களை மிரட்டி வேலைக்கு வரவிடாமலும், நம்மோடு தொடர்பு கொள்ள விடாமலும் தடுத்து அறைகளுக்குள் அடைத்து வைத்தனர். அவர்கள் இங்கிருந்தால் மற்ற தொழிலாளிகள் அனைவரையும் சங்கமாக்கி விடுவார்கள் என நடுங்கிய கோழைகள், தனியாக ஒருவனை நியமித்து, 8 தொழிலாளிகளை அவர்களின் சொந்த ஊருக்கே இழுத்துச் சென்று விட்டுவிட்டு வந்தனர்.

இவ்வாறாக சங்க உறுப்பினர்களை வேலைநீக்கம் செய்வது, ஊரை விட்டே விரட்டுவது என பெரும்பான்மை பலத்தைக் குறைக்க முயற்சி செய்தது நிர்வாகம். இந்நிலையில் ACL முன்னிலையில் 2K தொழிற்தாவா எழுப்பப்பட்டது. சங்கத்துடன் பேச்சு வார்த்தைக்கு வருமாறு அனுப்பிய கடிதத்தை வாங்காமலேயே திருப்பி அனுப்பினான்; மேலும், இனி எந்த கடிதமும் கொண்டு வரக் கூடாது, வந்தாலும் வாங்க மாட்டோமென தபால்காரரையும் மிரட்டியிருக்கிறான் நிர்வாகம். ரவுடிகளை வைத்து மிரட்டியதற்கெதிராகவும், தொழிலாளர் விரோதப் போக்கை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவனது தில்லுமுல்லுகள், சட்டவிரோதப் போக்குகளை தோலுரித்து, காவல்துறை, தொழிலாளர் நலத்துறை, தொழிற்சாலைகள் தொடர்பான பிற அனைத்துத் துறைகளுக்கும் புகார்கள் அனுப்பப்பட்டது. அனைத்தையும் பணத்தாலடித்து வாய்மூடச் செய்தான்.

“சங்கம் வைத்ததால் வேலை நீக்கம் செய்து பழிவாங்கக் கூடாது” என நீதிமன்றத்தில் நாம் பெற்ற தடையுத்தரவை மயிரளவுக்குக் கூட மதிக்காமல் காண்டிராக்ட் என்ற பெயரில் வேலைக்கு வைத்திருந்த 14 பேரை வேலையை விட்டே விரட்டி விட்டான். இதற்கிடையில் கம்பெனியின் நேரடிக் கட்டுப்பாட்டில் வேலை செய்தவர்களைப் போலியான காண்டிராக்ட் முதலாளி ஒருவன் கீழ் கொண்டு வந்த திருட்டு வேலையையும் நிர்வாகம் மேற்கொண்டான்.

தொ.மு.ச.வின் மாவட்டத்தலைவரான முன்னாள் எம்.எல்.ஏ வேணுவுக்குக் கார்க் கதவைத் திறந்து விடுவது, எச்சில் டப்பா தூக்குவது என நாயைவிடக் கேவலமாக நடந்து கொள்ளும் கம்பெனி V.P, வேணுவின் துணையுடன் தனது வீரத்தை நாளெல்லாம் உழைக்கும் தொழிலாளிகளிடம் காட்டினான். இவன் கொட்டத்தை இனியும் பொறுக்க முடியாது என்ற நிலையில் இம்மாதத் தொடக்கத்தில் ஒருமுறை ஆலை நுழைவுப் போராட்டம் ஒன்றை நடத்தினோம். செக்யூரிட்டிகளை வைத்து நம்மை வெளியேற்றி கதவடைத்தான். நமது சங்க உறுப்பினர்களைத் திரட்டி, அடுத்தகட்டமாக 26-ம் தேதி மீண்டும் ஆலைக்குள் நுழைந்தோம். அன்று முழுவதும் நமது தோழர்கள் அனைவரும் வேலை செய்துவிட்டு வந்தனர்.

அடுத்த நாளும் அனைவரும் ஆலையின் முன் கூடினோம். பு.ஜ.தொ.மு.மாவட்ட நிர்வாகக் குழுத்தோழர்கள் உடனிருந்து வழிகாட்ட, டால்மியா கிளைத் தோழர்கள் 20 பேர் மட்டுமே உறுதியோடு நின்று ஆலைக்கு உள்ளேயும், வெளியேயும் யாரும் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினர். நிர்வாகமோ வீம்புத்தனமாக, ஏற்கனவே 12 மணிநேரம் வேலை செய்து களைத்த தொழிலாளிகளை வைத்து தொடர்ந்து உற்பத்தியை நடத்த முயற்சி செய்தான். காலை உணவுகூட கொடுக்காமல் வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்ட அந்தத் தொழிலாளர்களையும் வேலை செய்ய விடாமல், உள்ளே இருந்த தோழர்கள் மூலம் தடுத்தி நிறுத்தியவுடன் உற்பத்தி முழுவதும் முடங்கியது. முதலாளிகளின் உயிர்நாடியான உற்பத்தியில் கைவைத்தவுடன்தான் நிர்வாகத்திற்கு வலிக்க ஆரம்பித்தது; பேச்சு வார்த்தைக்கும் முன்வந்தான்.

இதற்கிடையில், ஆலைக்குள் வரவிடாமல் தொழிலாளிகளைத் தடுக்கிறார்கள் என காவல்நிலையத்தில் நிர்வாகம் புகார் செய்துள்ளான். 21-ம் தேதி நடந்த பேரணி, கும்மிடிபூண்டி காவல்நிலையம் டால்மியா நிர்வாகத்திற்கு துணை போவது பற்றி எஸ்.பி.க்கு புகார் அனுப்பியது ஆகியவற்றின் விளைவாக, இன்ஸ்பெக்டர் பெரிதாக ஆர்வம் காட்டாமல், “NDLF-னா வில்லங்கம் பிடிச்சவங்கப்பா, சரிசரி அத்துமீறி நடந்துக்கறாங்கனு ஒரு கம்ப்ளெய்ண்ட் எழுதி கொடுத்துட்டு போ” என அனுப்பி விட்டார்.

‘போலீசில் புகார் சொல்லி விட்டோம், பெரிய படையே வந்து அனைவரையும் இழுத்து சென்று விடும்’ என நம்பி ஷிப்டுக்கு வரவேண்டிய எல்லா தொழிலாளிகளையும் வேலைக்கு வரச்சொல்லி இன்சார்ஜ் மூலம் தகவல் அனுப்பினான் நிர்வாகம். ஆனால், பெரும்படைக்கு பதிலாக ஒரே ஒரு போலீஸ்காரர் மட்டுமே வந்து தலையைக் காட்டிவிட்டு போகவே, அதுவரை இறுமாப்புடன் இருந்த நிர்வாகம் வேறுவழியில்லாமல் பணிந்தான். மாவட்ட நிர்வாகக் குழுத்தோழர்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்த சம்மதித்தான்.

இவன் நம்மைப்பற்றி விசாரித்த அடிப்படையில், ‘இவர்கள் மிகவும் பயங்கரமானவர்கள். லெனின் மூலம் ரஷ்யாவில் உருவாகி அங்கு கம்பெனிகளே இல்லாமல் செய்தவர்கள்’ என்றெல்லாம் யாரோ ஓதிவிட, அந்த பயத்திலேயே மிரண்டுபோய், வெடியோசைக்கு மிரண்டு ஓடும் மாட்டைப்போல தாறுமாறாகப் பாய்ந்திருக்கிறான். கடைசியாக போராட்டத்தைக் கைவிடும்படியும், ஜனவரி 5 – ம் தேதி பேச்சுவார்த்தை நடத்திப் பேசி தீர்த்துக் கொள்ளலாம் எனவும் எழுத்துபூர்வமாக உத்தரவாதம் கொடுத்தான்.

இத்தனை நாளாக அடங்க மறுத்து திமிராக நடந்த நிர்வாகம் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு கடிதம் கொடுத்ததும், ஒரு பெண் தோழர், தான் ஏற்கனவே தயாராகக் கொண்டு வந்திருந்த கேசரியை அனைவருக்கும் வழங்க, வெற்றி முழக்கமிட்டனர் சங்கத் தோழர்கள். பேச்சுவார்த்தைக்கும், பேச்சுவார்த்தை மூலம் தீராவிட்டால், அடுத்தகட்டப் போராட்டத்திற்கும் ஒட்டுமொத்தத் தொழிலாளிகளையும் திரட்டவும் தயாராகி வருகிறது பு.ஜ.தொ.மு.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல்
பு.ஜ.தொ.மு.,
திருவள்ளூர் மாவட்டம்.