privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஈழம்ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்! விசாரணை அதிகாரிகளைச் சிறையிலடை!

-

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள பேரறிவாளனது “வாக்குமூலம்” பொய் என்று அந்த வாக்குமூலத்தைப் பதிவு செய்த மையப் புலனாய்வுத் துறையின்(சி.பி.ஐ.) ஓய்வு பெற்ற எஸ்.பி. தியாகராசன், “உயிர்வலி” என்ற ஆவணப் படத்திலும் பின்னர் பல பேட்டிகளிலும் கூறியிருக்கிறார்.

பேரறிவாளன்
போலீசு மற்றும் நீதிமன்ற மோசடிகளால் தூக்கு மேடையில் நிறுத்தப்பட்டுள்ள பேரறிவாளன்.

“சிவராசனுக்கு பாட்டரிகள் வாங்கித் தந்தேன். ஆனால் அந்த பாட்டரிகளை எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று எனக்குத் தெரியாது” என பேரறிவாளன் தனது வாக்குமூலத்தில் கூறியதாகவும், அதை அப்படியே பதிவு செய்தால், வழக்கிற்குப் பாதகமாகப் போவிடும் என்பதால், “எதற்காக வாங்கி வரச் சோன்னார் என்று தெரியாது” என்ற பகுதியை நீக்கி விட்டு, பாட்டரி வாங்கித் தந்தேன்” என்பதை மட்டும் பதிவு செய்ததாகவும் அவர் கூறுகிறார். தனது இந்த “அறங்கொன்ற” செயல், பேரறிவாளனின் உயிரைப் பறிக்கப் போகிறது என்பதால், மனச்சான்றின் உறுத்தலால் தற்போது உண்மையை வெளியிடுவதாகவும் சொல்லியிருக்கிறார் தியாகராசன்.

கிரிமினல்களுக்கும் ஊரைக் கொள்ளையடித்த அரசியல்வாதிகளுக்கும் வயதான காலத்தில் சொல்லி வைத்தாற்போல மனச்சான்று விழித்துக் கொள்வதும், அவர்கள் வள்ளல்களாகவும், ஆன்மீகவாதிகளாகவும் புதுப்பிறவி எடுத்து, சமூக கௌரவத்தையும் மன ஆறுதலையும் தேடிக்கொள்வதும் புதிய விடயங்கள் அல்ல. கொடூரமாகச் சித்திரவதை செய்வதும், பொய்வழக்கிற்குத் தேவைப்படும் வாக்குமூலங்களை வரவழைப்பதும் போலீசார் வழக்கமாகச் செய்கின்ற வேலைதான் என்பதை தியாகராசனும் ஒப்புக்கொள்கிறார். ஆனால், தனது நடவடிக்கை காரணமாக நீதிப்பிழை ஏற்பட்டு, ஒரு உயிர் அநியாயமாகப் போகப்போகிறது என்பதால் உண்மையை வெளியிடுவதாகவும் கூறியிருக்கிறார்.

தியாகராசன் வெளியிட்டிருக்கும் இந்த உண்மை சி.பி.ஐ.யின் முன்னாள் இயக்குனர் கார்த்திகேயனை இம்மியளவும் அசைக்கவில்லை. “கென்னடி கொலை வழக்கு பற்றிக்கூட புதிய தகவல்கள் வெளிவருகின்றன. அதற்காக அவ்வழக்கை மீண்டும் விசாரிக்க முடியுமா?” என்று அவர் சீறுகிறார். முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ரகோத்தமனும் “நாங்கள் அவ்வாறுதான் செய்தோம்; தற்போது அதற்கென்ன?” என்கிற தோரணையில் திமிராகப் பேசியிருக்கிறார். இவர்கள் இருவரும் சமீபத்தில்தான் “ஞானஸ்நானம் பெற்று” மரணதண்டனை எதிர்ப்பாளர்களாக மாறியவர்கள் என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

பொய் வழக்குப் போடுவதும், குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சித்திரவதை செய்து வாக்குமுலம் வாங்குவதும், பொய் சாட்சிகளைத் தயார் செவதும், அதன் அடிப்படையில் அப்பாவிகளைச் சிறைக்கு அனுப்புவதும் போலீசாரின் அன்றாட நடவடிக்கைகள் என்பது ஊரறிந்த உண்மை. போலீசாரிடம் கொடுத்ததாகச் சொல்லப்படும் வாக்குமூலங்களை “கட்டாயப்படுத்திப் பெறப்பட்டவை” என்று கூறி நிராகரிக்கும் உரிமை குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு உண்டு.

இந்த உரிமையையே ரத்து செய்த “தடா” சட்டத்தின் கீழ்தான் ராஜீவ் கொலை வழக்கு விசாரிக்கப்பட்டது. அதனால்தான் தியாகராசன் எழுதிக் கொண்டதெல்லாம் பேரறிவாளனின் வாக்குமூலமாகச் சட்டரீதியாகவே எடுத்துக் கொள்ளப்பட்டது. பின்னாளில் “தடா” சட்டமே அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது. இருப்பினும், செல்லத்தகாத அந்த சட்டத்தின் கீழ்தான் வழக்கு விசாரணை நடந்து, அதில் பெறப்பட்ட வாக்குமூலத்தை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்ப்பும் வழங்கப்பட்டது.

அதுமட்டுமல்ல, “ராஜீவ் கொலை என்பது ஒரு பயங்கரவாத நடவடிக்கை அல்ல” என்று உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் கூறிய பின்னரும், பயங்கரவாதத் தடைச் சட்டமான “தடா”வின் கீழ் விசாரிக்கப்பட்ட இந்த வழக்கில், வழங்கப்பட்டிருக்கும் தண்டனைகள் சட்டரீதியில் செல்லத்தக்கதாகவே கருதப்படுகின்றன. தற்போதைய தியாகராசனின் “பரபரப்பு” பேட்டியைக் காட்டிலும் இவையெல்லாம் முக்கியத்துவம் வாந்தவை.

சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்
பேரறிவாளனின் வாக்குமூலத்தை உள்நோக்கத்தோடு வெட்டிச் சுருக்கியதை ஒப்புக் கொண்டுள்ள ஓய்வு பெற்ற சி.பி.ஐ. எஸ்.பி. தியாகராசன்.

மேலும், பேட்டியளித்திருக்கும் தியாகராசன் தனது கூற்றைப் பிரமாண வாக்குமூலமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. அதாவது, தான் இழைத்த அநீதிக்குக் கழுவாயாக பேரறிவாளனைச் சட்டரீதியாகக் குற்றத்திலிருந்து விடுவிக்கும் பொறுப்பை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை; அதேபோல, பொய் வாக்குமூலம் தயாரித்த தனது குற்றத்துக்குரிய தண்டனையை அனுபவிக்க அவர் தயாராக இருப்பதாகவும் தெரியவில்லை. இருப்பினும் அவரது இந்தக் கூற்று, ராஜீவ் கொலை வழக்கில் நடத்தப்பட்ட புலன் விசாரணை நாடகத்தை அம்பலப்படுத்துவது என்ற அளவில் பெரிதும் பயன்பட்டிருக்கிறது.

தியாகராசன் போன்றோருக்கு காலம் கடந்தாவது உண்மையை வெளியிடும் தைரியத்தை வழங்கியிருப்பது அவரது குற்றவுணர்ச்சி மட்டுமல்ல; மூவர் தூக்கிற்கு எதிராகத் தமிழகத்தில் நடைபெற்ற போராட்டமும், தமிழகத்தில் பரவலாக உருவாகியிருக்கும் பொதுக்கருத்தும்தான் உண்மையைப் பேசுவதற்கான புறத்தூண்டுதலை அவருக்குத் தந்திருக்கின்றன. அத்தகையதொரு புறச்சூழல் உருவாக்கப்படாமல், பாரதிய ஜனதா மற்றும் காங்கிரசின் பாக். எதிர்ப்பு தேசியவெறி அரசியல் அரங்கில் கோலோச்சியதன் காரணமாகத்தான் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டார். நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கின் உண்மைகள் நிரந்தரமாகப் புதைக்கப்பட்டுவிட்டன.

பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்டது ஒருவேளை மரண தண்டனையாக இல்லாமலிருந்தால், தியாகராசனின் மனச்சான்று விழித்திருக்காது. இதனை அவரது கூற்றிலிருந்தே புரிந்து கொள்ளலாம். அது ஆயுள் தண்டனையாக இருந்தாலும் அநீதி அநீதிதான்.

நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள், அவ்வாறு தண்டிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுடன் இப்பிரச்சினை முடிந்து விடுவதில்லை. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுபவர்கள் என்ற பெயரில், அரசு அதிகாரத்தையும் சமூக அங்கீகாரத்தையும் கேடாகப் பயன்படுத்தி, பொய் வழக்குகள், பொய் சாட்சிகள், போலி மோதல் கொலைகள் – என்று எல்லா கிரிமினல் வேலைகளையும் அரங்கேற்றும் போலீசு அதிகாரிகள், அதிகார வர்க்கத்தினர் மற்றும் ஓட்டுப் பொறுக்கிகளையும் தண்டிப்பதை நோக்கி நமது போராட்டங்கள் முன்னேற வேண்டும்.

– கதிர்
_____________________________________________
புதிய ஜனநாயகம் – ஜனவரி 2014

_____________________________________________